Free Space

​வைத்தியர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பிரபல பாடசாலைகளில் அனுமதி கேட்க முடியாது - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார



கல்வி என்பது சகல தரப்பினர்க்கும் சமமான விதத்தில் கிடைக்க வேண்டிய ஒரு சிறப்புரிமையாகும். அதனை வழங்குவதற்காக பதவி, சமூக அந்தஸ்து, குல பேதங்களைப் பார்க்க முடியாது. ஆனால் வைத்திய சங்கத்தினர் இன்று தமது பதவியைப் பயன்படுத்தி தங்களுடைய பிள்ளைகளைப் பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்காக எடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அரச சேவைக்கு உள்வாங்கும் போது சகல அரச ஊழியரும் வழங்கும் ஒரு உறுதி மொழிதான், "இலங்கையின் சகல பிரதேசங்களிலும் என்னுடைய சேவையினை வழங்குவதற்காகத் தயார் நிலையில் இருக்கிறேன்" என்று. அவ்வேளையில் யாரும் சொல்வதில்லை, தான் இடமாற்றம் அடைந்தால், தனது பிள்ளைக்குப் பிரபல பாடசாலையொன்றில் அனுமதி கிடைக்க வேண்டுமென்று. அவ்வாறு இருக்கையில் வைத்தியர் மட்டும் இவ்வாறு கோரிக்கை விடுப்பது அசாதாரணமானது.

அவ்வாறு பார்க்கையில், இதைப்போன்று ஏறத்தாள 14 இலட்சம் அரச ஊழியர்களும் நாட்டிற்குச் செய்வது பாரிய சமூக சேவையாகும். அதனால் அவர்களுக்கும் வைத்தியர்களைப் போன்று அதே சலுகைகளைப் பெற முடியும். தொழிற்சங்கத்தின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி அவர்களது பிள்ளைகளுக்கு மாத்திரம் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்குவதற்காக கல்வியமைச்சர் நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் பாரிய எண்ணிக்கையானவர்களுக்கு அநீதி இழைக்கப்படும். அப்படி நடைபெற்றால், 14 இலட்சம் அரச ஊழியர்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நானும் அவர்களது பிள்ளைகளுக்குப் பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைப்பதற்காக வேண்டுகோள் விடுப்பேன். ஏனெனில் இவ்வாறான ஒன்று, ஒரு தரப்பினர்க்கு மாத்திரம் கிடைப்பது மனித உரிமை மீறலாகும்.

நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் சகல தரப்பினரும் சமமாக நடாத்தப்படவேண்டும் என்ற கொள்கையில் இருக்கிறோம். அவ்வாறான ஒரு கொள்கையில் இருந்து கொண்டு வைத்தியர்களுக்கு ஒரு வகையிலும், நாட்டிலுள்ள ஏனைய இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு இன்னொரு வகையிலும் சலுகை அளிக்க முடியாது. இன்று வைத்தியர்கள் விடுக்கும் அதே கோரிக்கையை நாளைய தினம் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கேட்கும் பட்சத்தில் அதனை எம்மால் மறுக்க முடியாது போய்விடும். அதே போன்று அவர்களும் அதற்காகப் போராட்டத்தில் இறங்கினால் நாட்டினது பாதுகாப்பின் நிலை என்னவாகும். இந்த வைத்திய சங்கம், வெவ்வேறு அரசியல் நோக்கங்களுக்காகத் தமது பதவிகளைப் பாவிக்கின்றமை புலப்படுகின்றது.

சில சந்தர்ப்பங்களில் அரசின் கொள்கைகளைத் தகர்ப்பதற்காக, மோசமான வழிகளைப் பாவித்து பிணக்குகளை ஏற்படுத்துகின்றனர். அது போன்றே வைத்தியர் சங்கமும் செயற்படுதாக உணர்கிறேன். சகல பிரஜைகளுக்கும் அரசியல் தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் உரிமை உண்டு. அதற்காக அவ்வுரிமைகளுடன் தமது பதவியின் பொறுப்புக்களையும், உரிமைகளையும் குழப்பிக்கொண்டு ஒரு சாரார் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் சகல ஊழியர்களுக்கும், தகுந்த மரியாதையை வழங்குவதற்காக எச்சந்தர்ப்பத்திலும் பின்வாங்க மாட்டோம். இந்த நாட்டின் சகல பிரஜைகளையும் சமமாக மதிப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

இதனால் தங்களது பதவிகளைத் தனிப்பட்ட சலுகைகளை வென்றெடுப்பதற்காகப் பாவிக்காமல், தமது சேவைகளை நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செய்து, சகலரும் கௌரவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
​வைத்தியர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பிரபல பாடசாலைகளில் அனுமதி கேட்க முடியாது - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ​வைத்தியர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பிரபல பாடசாலைகளில் அனுமதி கேட்க முடியாது - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார Reviewed by Madawala News on 9/22/2016 11:37:00 AM Rating: 5