Yahya

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை?எம்.எம்.ஏ.ஸமட்

இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் வருடங்களைக் கொண்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இம்முப்பது நூற்றாண்டு வராலாற்றக் கொண்ட இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லது மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஆய்வுகள் இதுவரை தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், பல்லாண்டு காலமாக சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் அவரவருக்குரிய இன மத, கலை காலாசார பண்பாட்டு விழுமிங்களோடு இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


எல்லோரும் இலங்கையர் என்றாலும் ஒவ்வொரு இனமும் தமக்குரிய தனித்துவத்துடனும் சுயநிர்ணைய உரிமையுடனும் வாழவே விரும்புகின்றனர். ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வினத்திற்குரிய மத, கலை,கலாசார பண்பாட்டு விழும்பியங்களோடும் உரிமைகளோடும் தனித்துவமாக ஏனைய இனங்களினது அபிலாஷைகளுக்கும் உரிமைகளுக்கும் பங்கமேற்படுத்தாது வாழ்வதற்கு வழிவிடப்படுவது ஆட்சியாளர்களினதும் இதர இனங்களினதும் கடப்பாடாகும்.
ஓரினத்தின் தனித்துவப் பண்புகள், சுயநிர்ணைய உரிமைகள் பிரிதொரு இனத்தினால் அல்லது ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்படுகின்றபோது, மதிப்பளிக்கப்படாது விடப்படுகின்றபோது அல்லது அவை மறுக்கப்படுகின்றபோது அவை குறித்த இனத்தின் மீதான அடக்கு முறைக்கு இட்டுச் செல்கிறது.

சுதந்திரம் பெற்ற பிற்பாடு இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள்  கரைபடிந்த வரலாற்றை இந்நாட்டில் தோற்றுவித்தது. சிறுபான்மை இனங்களை அடக்கி ஆள முற்பட்டதன் விளைவே 1980களில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் பேராட்டம் கோர யுத்தமாக உருவெடுத்து 30 ஆண்டுகளாக அழிவுகள் மீது நகர்ந்து சென்ற வரலாறாகும். இதனை இலகுவில் மறந்துவிட முடியாது.
ஒரு சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட அடக்கு முறையின் விளைவு சகல சமூகங்களிலும்  உயிர் இழப்புக்களையும், சொத்தழிவுகளையும், இடம்பெயர்வுகளையும் சந்திக்கச் செய்தது. அவ்வாறான கரைபடிந்த      வரலாற்றிலிருந்து மேலெழுந்த பிரச்சினைகள் ஒவ்வொரு சமூகத்தையும் ஒவ்வொரு பிரதேசத்தையும் வௌ;வேறு வகையில் பாதித்துள்ளன.  ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு பிரதேசமும் வௌ;வேறு கோணங்களில் இப்பிரச்சினைகளின் வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் இதுவரை எட்டப்பாடது காணப்படுகிறது


அத்தோடு, ஒவ்வொரு சமூகமும் அச்சமூகங்கள் வாழும் பிரதேசங்களும்  பொதுவான பல பிரச்சினைகளையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. சிங்கள மக்களும் அம்மக்கள் வாழும் பிரதேசங்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் வடிவமானது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலும்  முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிலும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் வடிவங்களிலிருந்து மாறுபட்டவை. அவ்வாறே தமிழ் மக்கள் செறிந்தும், செறிவு குறைந்தும் வாழும் பிரதேசங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் முஸ்லிம்கள் அடர்த்தியாகவும் சிதறியும்  வாழும்  பிரதேசங்களில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளிலிருந்தும் வேறுபட்டவை என்பதை அவதானிக்க முடிகிறது.


இலங்கையில் முஸ்லிம்கள்
2011ஆம் ஆண்டில் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 9.7 வீதமாக வாழ்கிறார்கள் இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிலங்கைப் பிரதேசப் பகுதிகளிலும் மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களிலும் வாழ்கின்றனர்.


மொத்த சனத்தொகையில் மூன்றாவது இன எண்ணிக்கையினரான முஸ்லிம்கள் இலங்கயின் சகல மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்தாலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலேயே அதிகப்படியாக வாழ்கின்றனர். இதனால்தான,; தேர்தல் காலங்களில் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகள் இம்மாவட்டங்களில் போட்டியிட்டு பிரதிநிதித்துவ அங்கத்துவத்தை பெற முயற்சித்திருப்பதைக் கடந்த காலங்களில் இம்மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களின் வரலாறுகளைப் புரட்டிப்பார்க்கின்றபோது புரிந்துகொள்ள முடிகிறது.


மாவட்ட சனத்தொகையில் இரண்டாவது இனப் பெரும்பான்மையினராக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய 14 மாவட்டங்ளிலும், மாவட்ட மட்ட சனத்தொகையில் மூன்றாவது இனப் பெரும்பான்மையினராக மாத்தளை யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களிலும் வாழ்வதோடு நுவரெலியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் நான்காவது பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.


இவ்வாறு இலங்கையின் சகல மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு காரணிகளினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அன்று முதல் இன்று வiர் முகம்கொடுத்து வருகின்றனர், காலத்திற்குக் காலம் அப்பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படுகின்றபோதிலும் அவற்றில் பலவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகள் உரிய தரப்புக்களினால் முன்னெடுக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினையுள்ளது என்றவாறு அத்தரப்புக்கள் இரு முகங்களுடன் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது.

முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படுகின்ற, முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை காலத்திற்குக் காலம் வருகின்ற தேர்தல்;களின்போது ஆறாத புண்னைக்காட்டி யாசகம் செய்வோரைப்; போன்று  மக்கள் மத்தியில் முன் வைத்து, அவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று  வாக்குறுதியளித்து, தேர்தல்களில் இம்மக்கள் அளிக்கும் வாக்குகளைக்  கொண்டு  அரசியல் அதிகாரங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகள்  பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால்,  வெற்றிபெற்ற பின்னர்; அப்பிரச்சினைகளைத் தீர்க்க, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள்; மறந்து விடுகின்றனர். அக்கறை காட்டாது உள்ளனர் என்பது இம்மக்களின் பெரும் ஆதங்கமாகும். உரிய நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளாது மக்களை ஏமாற்றி வருகின்ற ஏமாற்றுப் பாடங்களையே முஸ்லிம் தலைமைகளிலிருந்து இச்சமூகம் இன்று வரை கற்றுக்கொண்டு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

அரசியல் தலைமைகள்தான் இவ்வாறு ஏமாற்று அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள் என்றால் முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புக்கள் முஸ்லிம் அரசியலை தீவிரமாக விமர்சிப்பதுடன் நின்றுவிடுவதாக அல்லது காலத்திற்குக் காலம் கூடி அவ்வப்போது இடம்பெறுகின்ற சமகால விடயங்கள் குறித்து பேசிவிட்டு அது தொடர்பில் அறிக்கைகள் அல்லது பிரகடனங்களை வெளியிட்டுவிட்டு ஓய்ந்து விடுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 பிரச்சினைகளும் தீர்வுக்கான நடவடிக்கைகளும்

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றபோது முஸ்லிம்களும் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது அவசியாகும். எந்தவொரு தேசிய இனமும் பாதிக்கப்படாத வகையில் அரசியல் தீர்வுகள் அமையப் பெற வேண்டும் என்பதும் ஒவ்வொரு இனத்தினதும் எதிர்பார்ப்பாகும்.
அவை ஒருபுறம் இருக்க, இந்நாட்டின் 25 மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பிரதேச ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வகையான பிரச்சினைகளை இந்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்புகுகிறார்கள் என்பது குறித்த ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பது தொடர்பில் அறியப்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் .

ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் ஏனைய பல மாவட்டங்களில் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.
அத்தோடு, முஸ்லிம்கள் செறிந்தும் சிதறியும் வாழும் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வை யார் மூலம் பெற்றுக்கொள்ளவது. அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகள்  ஒன்றுபட்ட ரீதியில், ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு முன்னெடுக்க்ப்பட்டிருப்பின் அதற்கான தீர்வு கிடைகப்பெற்றுள்ளதா என்ற கேள்விகளையும் சம்பந்தபட்ட தரப்புக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாவட்ட ரீதியாக நீண்டகாலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் தலைநகர் கொழும்பு மாவட்டத்தை நோக்குகையில் இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள்; பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சமூகத்தின் மன அமைதியான வாழ்வு கல்வி முன்னேற்றம், ஆரோக்கியமான இளைஞர் சமூகம், சமூக நல்லிணக்கம் அனைத்தும் அதன் வாழிடத்தோடு தொடர்புபடுகின்றது. கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் சமூகவியல் அவர்களது கல்வி, தொழில், அரசியல், கலாசாரம் அனைத்திலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத நகரமயமாக்கல் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. இடநெருக்கடி, வீட்டுப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, பாடசாலைகளில் இடநெக்கடி, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர்.

அதுதவிர, இரவுநேர விடுதிகள், உணவகங்கள், மற்றும் களியாட்ட இடங்கள் போன்ற நகர்புறங்களுக்குரிய பண்புகளால் கொழும்பு பிரதேச முஸ்லிம்களின் சமூகவியல் பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்களினூடாக நாகரியமயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பிரதேசங்களில் விழுமியங்கள், பண்பாட்டுப் பெறுமானங்கள், கலாசார அடையாளங்கள் என்பவற்றை பாதுகாப்பதிலும் முஸ்லிம்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

ஒரு சமூகத்தின் சமூகவியலின்; விருத்தியில் அதிகளவு செல்வாக்குச் செலுத்துவது கல்வியாகும். கொழும்பு மாவட்ட முஸ்லிகளின் கல்வி நிலை பல சவால்களை முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. குறிபாக கொழும்பு மாநகரப் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தாலும் இங்குள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது இரண்டு தேசிய பாடசாலைகளே காணப்படுகிறது.

சனத்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப முஸ்லிம் பாடசாலைகள் இல்லை. இதனால் சிங்கள மொழிப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெற வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்க்ள. இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்கு சிங்கள மொழிப் பாடசாலைகளிலும் அனுமதி கிடைப்பதில்லை.
அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் இடைவிலகள், புற்றீசல்போல் அதிகரித்து வரும் சர்வதேச பாடசாலைகள், போதிய அனுபவமும் பயிற்சியும் அற்ற சர்வதேச பாடசாலை ஆசிரியர்கள், சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று உயர் தரத்துடன் கல்வியைக் கைவிடும் நிலை, சிங்கள மொழிப் பாடசாலைகளில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் என கல்வி தொடர்பான பல பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்;.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையாகவும்
பெரும்பான்மையாகவும் வாழும் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றபோதிலும், அப்பிரச்சினைகள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படுவதில்லை. இதனால,; இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை. அவர்கள் எவ்வித பிரச்சினைகளுமில்லாமலே வாழ்ந்து வருகின்றனர் என்றதொரு தோற்றப்பாடு பலர் மத்தியில் காணப்படுவதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.


முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்திலும் பல பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாது தொடர்கதையாகக் காணப்படுகிறது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பயிர் செய்கை, காணிப்பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் காலத்திற்குக் காலம் மேற் கொள்ளப்படுகின்றபோதிலும் இதுவரை அவற்றிற்கான நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.


கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலும் பல பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாது தொடர்கின்றன. பொத்துவில் தொடரும் காணிப்பிரச்சினை, அக்கறைப்பற்று வட்டமடுப் பிரதேசத்தில்  இழுபறி நிலையிலுள்ள மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிக்கு தீர்வு எட்டப்படாமை, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இதுவரை வழங்கப்படாமை, ஒலிவில் பிரதேசத்தின் கடலரிப்பு, காணி சுவிகரிப்பு, அட்டாளைச்சேனை அஷ்;ரப் நகர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். சம்மாந்துறை விவசாயிகள் எதிநோக்குகின்ற பிரச்சனைகள், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தடைகள் என ஒவ்வொரு பிரதேசத்திலும் தொடரும் பிரச்சினைகளுக்கு அப்பிரதேச முஸ்லிம்கள் முகம்கொடுத்தவரோ உள்ளனர்.
அத்தோடு, வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் உட்ப வாழ்வியலில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை இவ்வாறு மாவட்ட, மாகாண ரீதியாகவும் தேசிய மட்டத்திலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது அசியமாகும்.


அத்துடன், முஸ்லிம்களின் வளர்ச்சியில் காழ்ப்புணர்ச்சிகொண்ட பெரும்பான்மை இன கடும்போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கின்றன எதிர்ப்பு நடவடிக்கைகள் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை பல்வேறு ரீதியாகப் பாதித்துள்ளது. முஸ்லிம்கள் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு எதிராக கடந்த ஆட்சியிலும் இந்த நல்லாட்சியிலும் கடும்போக்களார்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
2012ஆம் ஆண்டு முதல் இன்று வரை பொதுபலசேனை போன்ற கடும்போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுகின்ற செயற்பாடுகள் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், மத வழிபாடுகள், வாழ்விடம் போன்ற பல விடயங்களைப் பாதித்துள்ளன. இத்தகையவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன இனவிரோதச் செயற்பாடுகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து அவ்வப்போது முறைப்பாடுகளை முன்வைத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோதிலும் அவை இன்னும் முற்றுப்பெறவில்லை.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும், அரசியல், சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பட வேண்டுமாயின் எந்தப் பிரச்சினையினை எவ்வழியில் தீர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வழியில் தீர்த்துக்கொள்வதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அதற்கான குரல் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் ஒலிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் மூடிமறைக்கப்படுகின்றன. அவை வெளியுலகத்திற்கு தெரிவதில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய மற்றும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வெளியுலகிற்கு தெரியப்படுத்தப்பட்டதன் விளைவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று சர்வதேசம் பேசிக்கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எவர் இலங்கை வந்தாலும் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் சென்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அம்மக்களிடம் கலந்துரையாடுகின்றனர். இதற்குக் காரணம் அம்மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்பட்டமையாகும்.
அந்த அடிப்படையில், ஐ.நா. அமைப்பின் செயலாளர் நாயகம் பாங்கீ மூனின் வருகையின்போதும் அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அம்மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறியவுள்ளார். பல தரப்புக்களைச் சந்திக்கவுள்ளார். முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் அவரது நிகழ்ச்சி நிரலில்லை. இது பெரும் அதிர்வலைகளை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் போக்கும் காரணமெனக் கருதப்படுகிறது. இந்நிலையில், இலங்கை வரும் அரபுலக அரச தலைவர்கள் கூட  இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அம்மக்களைச் சந்தித்தித்து கேட்டறிவதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமைகள் பெற்றுக்கொடுக்காமல் இருப்பது வேதனையளிக்கும் விடயமாகும்.


தங்களது அரசியல் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக, கட்சி அரசியலை வளர்ப்பதற்காக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம்கள் அரசியல் தலைமைகள் பிரமுவர்களிடம் பிரசாபித்தாலும் அவை தொடர்பில் உரிய பயனை முஸ்லிம் சமூக அடைந்ததாக இல்லை.
முஸ்லிம்கள் காலம் காலமாக எதிர்நோக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகள், நீண்டகாலப் பிரச்சினைகள்  பிரதேச ரீயிலான பிரச்சினைகள் அவற்றின் பாதிப்புக்கள், சமகாலத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அவற்றின் தாக்கங்கள் என்பன மாவட்ட ரீதியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் தலைமைகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு சமூகத்திற்குள்ள புத்திஜீவிகளும் துறைசார்ந்தோரும் வேடிக்கை பார்க்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

இந்நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான  முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்;த்து வைப்பது குறித்து உள்ளுரிலும் சர்வதேசத்திலும் பேசப்பட வேண்டுமாயின் கட்சி அரசியல் ஆன்மீகக் கொள்கைகளுக்கு அப்பால் ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசிமாகிறது. இல்லையேல் ஆளுக்காள் அமைப்புக்கு அமைப்பு,  கட்சிக்குக் கட்சி இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும். அச்சு. வானொலி தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களிலும்; அறிக்கைகளையும் கருத்துக்களையும் விட்டுகொண்டு இருப்பதைத் தவிர எவ்வித பயனையும் முஸ்லிம் சமூகம் அடைப்போவதில்லை என்பதே நிதர்சனமாகும்.

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? Reviewed by Madawala News on 9/01/2016 11:39:00 AM Rating: 5