Wednesday, August 31, 2016

கால விசித்திரம்.

Published by Madawala News on Wednesday, August 31, 2016  | - முகம்மது தம்பி மரைக்கார் -

'உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்' என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள். எதிராளிகளை அயோக்கியர்களாகக் காட்டும் வகையில், நமது சித்திரங்களை வரையத் தொடங்குகின்றபோது, அதற்கு வெளியே, நமது எதிராளி உத்தமனாகவும், நாம் அயோக்கியர்களாகவும் மாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

அரசியல் என்பது ஆச்சரியமானதொர் உலகு. அங்கு எல்லோரும் நல்லவர்களாகவும், எல்லோரும் அயோக்கியர்களாகவும் ஒரே நேரத்தில் இருந்து தொலைத்து விடுகின்றனர். அசாத்தியமான இந்த உலகினை எட்டிப் பார்க்கும் பாமர மனிதர்கள்தான் பாவம். கடைசியில் அவர்கள்தான் குழம்பிப் போய்விடுகின்றனர். மக்களைக் குழப்பி விடுவதில் அரசியல்வாதிகள் - மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் நடந்தவைதான் முஸ்லிம் அரசியல் அரங்கில் இன்றுவரையிலான பேசுபொருளாகும்.

நாகரீகமான அரசியல் கட்சியின் உயர்சபைக் கூட்டமொன்று எப்படி நடந்திருக்கக் கூடாதோ, அப்படி - அந்தக் கூட்டம் நடந்து முடிந்ததாக, அந்தக் கட்சியிலுள்ள நடுநிலைவாதிகளே கூறுகின்றார்கள். அந்தக் கூட்டத்தில், சிலர் தமது முகமூடிகளைக் கழற்றி வீசி விட்டு, நிஜ முகங்களோடு வந்து நின்றனர்.

அவை அருவருப்பானவையாகும். கூச்சலோடும் குழப்பத்தோடும் அவர்கள் அங்கு ஆடிய நடனத்தில் சிக்குண்டு, ஜனநாயகம் - செத்துப் போனது.
முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும், தவிசாளரும் - அந்தக் கட்சியின் தலைவருடன் கடுமையான முரண்பாடுகளோடு உள்ளமை குறித்து நாம் அறிவோம். இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் எனும் பெயருடைய கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்களிலும் அவற்றின் உரித்துக்களிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக, மு.காங்கிரசின் இரண்டாம் நிலைத் தலைவரான தவிசாளர் பசீர் சேகுதாவூத் குற்றம் சுமந்தியுள்ளார்.

அத்தோடு தனது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறும், கட்சியின் தலைவருக்கு கடிதமொன்றினை அவர் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு மிக நீண்டநாட்களாக எதுவித பதிலினையும் மு.கா. தலைவர் வழங்கியிருக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த வாரம், கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் பேசப்படவுள்ளதாக, ஏற்கனவே கூட்டத்துக்கான அழைப்புக் கடிதத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆயினும், இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் மற்றும் தவிசாளர் கலந்துகொள்வார்களா என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. அவர்கள் அந்தக் கூட்டத்துக்குச் செல்வார்களாயின் அங்கு பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அனுமானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பசீரும் - ஹசனலியும் கடந்த வாரம் நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்துக்குச் சமூகமளித்திருந்தனர்.


அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வாசகர்களில் கணிசமானோர் அறிந்திருப்பீர்கள். ஊடகங்கள் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் அங்கு நடந்தவற்றினை வெளிப்படுத்தியிருந்தன. ஆயினும், பல தடவை அரைக்கப்பட்ட அந்த மாவினை, இந்தப் பத்தியினை வாசிக்கின்றவர்களின் இலகுவான புரிதலுக்காக, கொஞ்சம் அரைக்க வேண்டியிருக்கிறது.
மு.காங்கிரசின் மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் - அந்தக் கட்சியின் சொத்துக்கள், அவற்றிலிருந்து பெற்றுக் கொண்ட வருமானங்கள், அதற்கான செலவுகள் மற்றும் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் ஆகியவை தொடர்பில், தனதுபக்க விளக்கமொன்றினை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வைத்தார். அத்தோடு, தான் வழங்கிய தகவல்களில் யாருக்காவது சந்தேகமிருப்பின், அவை தொடர்பில் கேள்விகளை முன்வைக்கலாம் என்றும் கூறினார்.

தான் அங்கத்துவம் வகிக்கும் கட்சியொன்றின் சொத்துக்கள் மற்றும் அதன் வருமானங்கள், அதற்குரிய செலவுகள் குறித்து, நபரொருவர் தெரிந்திருப்பது அவரின் உரிமையாகும். அவை தொடர்பில் ஒருவர் சந்தேகங்களைக் கேட்பதை யாரும் தடுக்கலாகாது.

புகழ்பெற்ற மற்றும் சர்வதேச ரீதியாக அடையாளம் கொண்ட சில உணவு விற்பனை நிலையங்களில் - உணவுகளைக் கொள்வனவு செய்கின்றவர்கள் விரும்பினால், அந்த நிறுவனத்தின் சமையலறைப் பகுதி அல்லது உணவு தயாரிக்கப்படும் இடத்தினைச் சென்று பார்க்க முடியும். தமது நிறுவனத்தில் உணவு தயாரிக்கப்படும் இடத்தினைப் பார்க்க வேண்மென, நுகர்வோர் அனுமதியினைக் கோரும்போது, அவர்களை அழைத்துச் சென்று, உணவு தயாரிக்கப்படும் இடத்தினை அந்த நிறுவனத்தினர் காண்பிப்பார்கள். தாம் பணம் கொடுத்து வாங்குகின்ற உணவு - சுத்தமான சூழலில், சுகாதாரமான முறைப்படி தயாரிக்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை, நுகர்வோருக்கு உள்ளது. ஆனால், நமது உள்ளுர் ஹோட்டல்களில் நுகர்வோரை - சமயலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவும் விடமாட்டார்கள். அப்படிப் பார்க்க விட்டால், அந்த ஹோட்டல்காரர்களின் அசிங்கம் அம்பலமாகி விடும். ஊத்தைகள் ஊருக்குத் தெரிந்து விடும்.

மு.காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில் அதன் தலைவர் விளக்கமளித்தமையினைத் தொடந்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுந்தார். மு.கா.வின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்திருக்கும் எந்தக் கேள்விகளுக்கும் தலைவரின் விளக்கத்தில் பதில்கள் இல்லை என்றார். அப்படி அவர் சொன்னதுதான் தாமதம், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐந்து நபர்கள் எழுந்து, பசீர் சேகுதாவூத்துக்கு எதிராகக் கூச்சலிட்டு, குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். பசீர் சேகுதாவூத்தை பேச முடியாதவாறு இடையூறு செய்தனர். தவிசாளர் பதவியிலிருந்து பசீர் விலக வேண்டுமென்று சத்தமிட்டார்கள். பசீரால் அந்தக் கூச்சலுக்கிடையில் பேச முடியவில்லை.

பசீரைப் பேசவிடுமாறு மு.கா. தலைவர் கூறினார். ஆனால், குழப்படிக்காரர்கள் தமது கூத்துக்களை நிறுத்தவேயில்லை. இதனால், கூட்டம் கலைவதாகக் கூறிவிட்டு, மு.கா. தலைவர் எழுந்து சென்று விட்டார். அத்துடன் மு.கா.வின் அந்த உயர்பீடக் கூட்டம் 'இனிதே' முடிவுற்றது.

மு.காங்கிரசின் உயர்பீடத்தில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தவிசாளர் பசீரை அந்த உயர்பீடக் கூட்டத்தில், 05 பேர் மட்டுமே எதிர்த்துக் கூச்சலிட்டனர். இதன்போது உறுப்பினர்களில் ஒரு தொகையினர், கூச்சலிட்டவர்களை அமைதியாகுமாறு வேண்டினார்கள்.

இன்னும் ஒரு பகுதியினர், பசீரைப் பேச விடுமாறு கூறினார்கள். ஆனால், அங்கு எதுவும் எடுபடவில்லை.

மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கூச்சலிட்டவர்கள், மு.கா. தலைவரின் ஆசிர்வாதமின்றி அதனைச் செய்திருக்க முடியாது என்கிறதொரு விமர்சனம் பரவலாக உள்ளது. இன்னொருபுறம், மு.கா. தலைவரின் ஆசிர்வாதத்தினைப் பெறுவதற்காக, குறித்த நபர்கள் அப்படி நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மு.காங்கிரசின் இரண்டாம் நிலைத் தலைமைப் பதவியினை வகிக்கும் தவிசாளரை, அவரின் கருத்துக்களை முன்வைக்க முடியாதவாறு, அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறைமையானது ஒழுக்கம் தவறிய ஆபத்தான செயற்பாடாகும்.
மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தொடர்பில், கட்சிக்குள் கணிசமான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் உள்ளன.

அவர் ஒன்றும் கேள்விக்குட்படுத்த முடியாத புனிதரல்லர். ஆனால், ஒரு காலத்தில் கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் பசீருடன் இப்படி யாரும் நடந்து கொண்டதில்லை. காரணம், மு.கா. தலைவருக்கும் - தவிசாளர் பசீருக்குமிடையிலிருந்த - ஊகிப்புகளுக்கு அப்பாற்பட்ட அந்தரங்க உறவாகும். பசீரைச் சீண்டினால், தலைவரினூடாகத் தண்டிக்கப்படலாம் என்கிற பயம் - கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இருந்தது. அதனால், ஒரு காலத்தில் கட்சிக்குள் - பசீர் தொடர்பாக யாரும் வெளிப்படையான விமர்சனங்களை வெளியிட்டதில்லை. ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்புகளாக, தம்மைக் கற்பனை செய்து கொள்கின்றவர்கள், பசீரின் முன்பாக சீற்றத்துடன் படமெடுத்தாடத் தொடங்கியுள்ளனர். கால விசித்திரம் என்பது இதுதான்.

பசீர் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் அநேகமானவையோடு, அந்தக் கட்சியின் தலைவரின் பெயரும் தொடர்பு படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த வாரம் நடந்த உயர்பீடக் கூட்டத்தில், வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சிலாபத்தில் வசிப்பவருமான எம்.ரி. தமீம் என்பவர், தவிசாளர் பசீரைப் பார்த்துளூ 'மாகாண சபை தேர்தல் காலத்தில், வன்னியிலுள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்களைப் பிரித்துக்கொண்டுபோய், மஹிந்த ராஜபக்ஷவிடம் மு.காங்கிரசை அடகு வைத்தவர்தானே நீங்கள்' என்று கூறினார்.

பசீர் சேகுதாவூத் குறித்து கட்சிக்குள்ளும், வெளியிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இது பிரதானமானதாகும். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தோடு, முஸ்லிம் காங்கிரசை அடாத்தாகக் கொண்டு சென்று சேர்த்து விட்டவர், பசீர் சேகுதாவூத்தான் என்கிற குற்றச்சாட்டொன்று உள்ளது. அதனால், கட்சியைக் காட்டிக்கொடுத்தவர் அல்லது அடகு வைத்தவர் என்று, பசீர் விமர்சிக்கப்படுகின்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கும், விமர்சனத்துக்கும் கடந்த வாரம் நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் பசீர் மிகவும் வலுவான பதிலொன்றினை வழங்கியிருந்தார். வன்னியைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர் தமீம் என்பவர், இது தொடர்பில் மேற்கண்டவாறு கேட்டபோது, மிகவும் ஆவேசமடைந்த பசீர்ளூ 'நான் மஹிந்தவிடம் ஏன் போனேன் என்று தலைவரிடம் கேளுங்கள். யார் சொல்லிப் போனேன் என்று (ரவூப் ஹக்கீமை விரல் நீட்டிக்காட்டி) இவரிடம் கேளுங்கள். எல்லாம் இவருக்கு தெரியும். இவரைக் கேளுங்கள். யாருடைய மானத்தை காப்பாற்ற போனேன் என்று இவரிடம் கேளுங்கள். எந்தக் கட்சியையும், தலைவரையும் காப்பாற்றுவதற்கு போனேன் என்று இவரிடம் கேளுங்கள்'. என்று, மு.கா. தலைவர் ஹக்கீமை விரல் நீட்டிக் காட்டி, பசீர் கூறிக் கொண்டிருந்தார். அப்போது, ஹக்கீம் எதுவும் பேசாமல் தலை குனிந்து மௌனமாக இருந்ததாக, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர்பீட உறுப்பினர் ஒருவர் கூறினார்.


பசீரின் மேற்படி பதில் மூலம், அவர் கூறவருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 'மஹிந்தவிடம், ஏன் போனேன் என்றும், எந்தக் கட்சியையும் - தலைவரையும் காப்பாற்றப் போனேன் என்றும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் கேளுங்கள்' என்று, அந்த உயர்பீடக் கூட்டத்தில் பசீர் சேகுதாவூத் கூறியபோதும், யாரும் ஹக்கீமிடம் அதுகுறித்துக் கேட்கவில்லை. இது - உயர்பீட உறுப்பினர்களின் இயலாமையினையே வெளிக்காட்டி நிற்கிறது. 'தலைவரைக் கேள்வி கேட்கக் கூடாது, தலைவரின் குற்றங்கள் குறித்து ஆராயக் கூடாது. அப்படிச் செய்தால், தலைவரின் கோபத்துக்குள்ளாக வேண்டிவரும். தலைவரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டால், தமது அரசியல் வாழ்வு சூனியமாகி விடும்' என்கிற மனப்பதிவின் இயலாமைதான், ஹக்கீமை கேள்வி கேட்க முடியாமல் உயர்பீட உறுப்பினர்களைத் தடுத்து வருகிறது.

எவ்வாறாயினும், ஒரு காலத்தில் கிசு கிசுக்களாகவும், வதந்திபோலவும் மு.கா. தொடர்பில் உலவி வந்த பல செய்திகளின் உண்மைத் தன்மைகள் தொடர்பில் - பொதுமக்கள் இப்போது தெரிந்தும், தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளது. அதற்கு, மு.காங்கிரசினுள் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் உதவியாக அமைந்துள்ளன.

இதுகூட கால விசித்திரம்தான்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top