Friday, September 2, 2016

முஹம்மட் பாஸிர் இன் துரோகம்... ஷாகிப் சுலைமான் கொலையில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்....

Published by Madawala News on Friday, September 2, 2016  | 


இரண்டு கோடி ரூபா கப்பம் பெரும் நோக்கில்  கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமானின் கடத்தல் சம்பவம் தொடர்பான புலன் விசாரனை தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வர்த்தகர் ஷாகிப் சுலைமான் அவருடைய வர்த்தக பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு நம்பிக்கையின் நிமித்தம் அருகில் வைத்திருந்த பாகிர் அஸ்லம் முஹம்மட் பாசிர் என்பவர் மூலமே இந்த கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது.

மொஹமட் பாசிர் என்ற வாலிபர் 08 ஆண்டுகளாக வர்த்தகர் ஷாகிப் சுலைமானிடம் பணி புரிந்துவந்துள்ள நிலையில் நம்பிக்கையின் நிமித்தம் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை கவனிக்கும் பணியில் அவரை ஈடுபடுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் வகையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த தகவல்களை வெளியிட்டார்.

பாரிய அளவான நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை அறிந்திருந்த பாசிர் தனது முதலாளியை கடத்தி கப்பம் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலன் விசாரனைமூலம் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த கடத்தலுடன் சம்பந்தப்பட்ட மேலும் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் மொத்தமாக கைது செய்யப்பட்ட 8 பேரில் 6 முஸ்லீம்களும் ஒரு தமிழர் ஒரு சிங்களவரும் அடங்குவதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பாசிர்  குடும்பத்தின் வீட்டை திருத்தும் நடவடிக்கைகளுக்கு வர்த்தகர் ஷாகிப் சுலைமான் 05 இலட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளதுடன்,அவரின் மனைவியும் அவர் பங்குக்கு 50,000 ரூபா பணம் வழங்கியுள்ளார்.

ஷாகிப் சுலைமானை கடத்துவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கடத்தல் திட்டமிடப்பட்டுள்ளதுடன்,அதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் இரண்டு தினங்களுக்கு முன்னர் 43,000 பணம் செலுத்தி வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் கடத்தல் சம்பத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவரின் மனைவியுடைய தங்க ஆபரணம் ஒன்றை அடகு வைத்து வாகனத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் கடத்தல் காரர்களின் நோக்கம் இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவது என்பதுடன், கடத்தப்பட்ட போது  மீன் வெட்டும் மண்னை ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால் ஷாகிப் சுலைமான் உயிரிழந்ததை கடத்தல்காரர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கடத்தி கொண்டு செல்லும் இடைநடுவிலே ஷகிப் சுலைமான் உயிரிழந்துள்ளமையை கடத்தல் கும்பல் அறிந்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதன் பின்னரே சடலத்தை மாவனல்லை பிரதேசத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.

வெளிநாடு சென்றிருந்த ஷாகிப் சுலைமானின் தந்தை மறுநாள் நாடு திரும்பியதால், மகனை காப்பாற்றுவதற்காக குறித்த பணத்தொகையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன், ஷாகிப் சுலைமான் கடத்தப்பட்ட மறுதினம் பிரதான சந்தேகநபர் பாஸிர் வழமை போன்று வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார்.

விசாரனைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் ஒரு சில தினங்களில் சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும், சந்தேக நபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

எமக்கு  கிடைத்த  மேலதிக  தகவல்களின்  படி  ..

சந்தேக நபர் பாசிர் கடத்தல் இடம்பெற்ற மறுதினம் ஒன்றுமே அறியாதவர் போல பணிக்கு சென்றுள்ளதுடன். தனது மகன் கடத்தப்பட்ட விடயம் மர்ஹூம் ஷகீப் இன் தந்தைக்கு தெரியவந்தவுடன் அவருக்கு  ஆறுதலும் கூறியுள்ளார்.

மேலும் ஷகீப் குடும்பத்துடன் சேர்ந்து  தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பூதவுடல் கிடைத்தவுடன் அங்கேயே  தங்கி  இருந்து ஷகீப் குடும்பத்துக்கு ஆறுதலாகவும் இருந்துள்ளார் (மூன்றாம்  கத்தமும்  அங்குதான்). "என் மகன்  போய்  விட்டான்  இனிமேல் நீதான்" என மர்ஹூம் ஷகீப் இன் தந்தை சந்தேக நபரிடம்  கூறி  ஆறுதல் பட்டுள்ளதாகவும் ஷகீப் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் மூலம் 
தெரியவருகிறது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top