Free Space

கொள்கைக்காக போர்கள் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் War Dogs ..



-கலையரசன் தர்மலிங்கம்-
யுத்தம் ஒரு பொருளாதாரம். இதை மறுப்பவன் ஒன்றில் அறிவிலி அல்லது முட்டாள்!" ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களுக்கு பின்னால் உள்ள ஆயுத பேர ஊழலை சொல்லும் ஹாலிவூட் திரைப்படம் "War Dogs". 

மியாமியில் வாழும் இரண்டு நண்பர்கள், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கு பெரேட்டா கைத்துப்பாக்கிகள் விநியோகிக்கும் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக் கொள்கின்றனர். 

அதில் ஒரு பிரச்சினை. பெரேட்டா துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனம் உள்ள இத்தாலி, ஈராக்கிற்கு ஆயுதங்களை அனுப்பத் தடை போட்டுள்ளது. 

அதனால் நேரடியாக ஈராக் அனுப்பாமல் ஜோர்டான் ஊடாக அனுப்பமுயற்சிக்கின்றனர்.எதிர்பாராத விதமாக, துப்பாக்கிகள் நிறைந்த கெண்டைனர் ஜோர்டான் சுங்கத் துறையில் மாட்டிக் கொள்கிறது. 

இரண்டு நண்பர்களும் ஜோர்டான் சென்று லஞ்சம் கொடுத்து, சட்டவிரோதமாக ஈராக்கினுள் கடத்திச் சென்று துப்பாக்கிகளை ஒப்படைக்கின்றனர். அதனால் அவர்களது AEY நிறுவனம் பெரிதாக வளர்ந்து விடுகின்றது. 

அதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவத் தலைமையகத்துடன், ஆப்கானிஸ்தானுக்கான ஆயுத விநியோகத்திற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள். அல்பேனியாவில் பழைய சோவியத் ஆயுதங்களை குறைந்த விலைக்கு வாங்கி, ஆப்கானிஸ்தான் அனுப்புவது அவர்களது திட்டம். 

எதிர்பாராத விதமாக திரும்பவும் ஒரு பிரச்சினை. அல்பேனியாவில் இருப்பவை சீனத் தயாரிப்புகள். அமெரிக்க சட்டப்படி சீன ஆயுதங்கள் வாங்குவது சட்டவிரோதம். அதனால், சீன எழுத்துக்கள் உள்ள பெட்டியை எடுத்து விட்டு, புதிய பெட்டிக்குள் ஒளித்து வைத்து அனுப்ப முயற்சிக்கிறார்கள். 

பணக் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் தகராறு, நண்பர்களுக்கு இடையிலான பிளவு என்பனவற்றால், இறுதியில் எல்லாமே பிழைத்து விடுகின்றது. ஊழல் வெளிவருகின்றது. கம்பனி நடத்துவதற்கு தயாரித்த போலிக் கணக்குகள் அம்பலத்திற்கு வருகின்றன. இறுதியில் FBI இருவரையும், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்கின்றது.

உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் திரைப்படம். யதார்த்தமான கதையை நகைச்சுவையாக நகர்த்திச் செல்வது இரசிக்க வைக்கின்றது. 

அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", அமெரிக்க பொருளாதாரத்தை வளர்க்க உதவியது. ஆக்கிரமிப்புக்கான அரசு செலவினங்கள், அதைப் பிடிக்க போட்டி போடும் தனியார் நிறுவனங்களின் செயல்கள், போர் என்பது ஒரு வர்த்தகம் என்பதை நிறுவுகின்றன. 

இன்றைக்கும் கொள்கைக்காக போர்கள் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
கொள்கைக்காக போர்கள் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் War Dogs .. கொள்கைக்காக போர்கள் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் War Dogs .. Reviewed by Madawala News on 9/14/2016 07:24:00 AM Rating: 5