Ad Space Available here

நாட்டிலுள்ள பாடசாலைகளில் இன்னும் 23,000 கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.இன்று எமது நாட்டிலுள்ள குடும்பங்களுக்கு அதிக செலவாக அமைவது, குழந்தைகளின் கல்விக்கான செலவாகும். அதற்கான காரணம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கும் பிரபல பாடசாலைகளில் தமது பிள்ளைகளை ​சேர்ப்பதாகும். அதற்கான காரணம் அங்குள்ள வளங்களாகும். அதற்காக முயல்வது பிழை அல்ல. ஏனென்றால் இன்னும் இந்நாட்டிலுள்ள பாடசாலைகளில் 23,000 கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. தொழில் நுட்பத்தை எடுத்துக்கொண்டால் 5,000 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. அதற்கான காரணம் சென்ற காலங்களில் போதுமான நிதி கல்விக்காக ஒதுக்கப்படாமையாகும். இந்நிலைமையை மாற்றுவதற்காக எமது அரசு 5,000 ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.

இந்த அரசின் கீழே நாங்கள் "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 2 பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யவிருக்கிறோம். அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் 121 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளின் அளவுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மாளிகாதன்னை மகா வித்தியாலயமும் அதில் ஒன்று. இந்த வருடத்திற்காக மாத்திரம் நாங்கள் 548 இலட்சம் ரூபாவினை இப்பாடசாலைக்கு ஒதுக்கியுள்ளோம். எங்களுடைய நோக்கம், கல்விமான்களால் நிறைந்த தேசம் ஒன்றை உருவாக்குவதாகும்." என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கடந்த 10 ஆம் திகதி படல்கும்புறை, மாளிகாதன்னை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "பின்னிலையிலுள்ள எமது நாட்டினை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு காலமும் கட்சிகளாகப் பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சித்தோம். என்றாலும் அதனால் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், பிரதமர் அவர்கள் தனித்து வெற்றி பெற்ற அரசாங்கத்துடன் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துக்கொண்டது. நாங்கள் அரசு என்ற வகையில், நாட்டில் இட வேண்டிய முக்கியமான முதலீடு கல்வி என்பதை விளங்கி வைத்துள்ளோம். அதனாலேயே வரலாற்றில் முதன் முதலாக கல்விக்கு பட்ஜட்டில் 6 வீதத்தினை ஒதுக்கியுள்ளோம். உலகில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் கல்விக்காக 8 - 10 வரையான நிதியை ஒதுக்குகின்றன. என்றாலும் சென்ற அரசாங்கம் கல்விக்காக 1.9 வீதமான நிதியையே ஒதுக்கியது. எமது அரசின் ஒதுக்கீட்டை மாகாண அடிப்படையில் நோக்கினால், ஊவா மாகாணத்திற்கு மாத்திரம் கல்விக்காக 42 000 இலட்ச ரூபா ஒதுக்கியுள்ளோம். ஆனாலும் மாகாண சபையினர், இது அவர்களது ஒதுக்கீடு போல் காட்டுகின்றனர். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இது மாகாண சபையின் நிதியல்ல. மத்திய அரசினது நிதி. நாங்கள் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் 20 பாடசாலைகளை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கிறோம்.

அரசாங்க நிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் எனக்குத் தெரியும் அரச சேவை இன்று சிறந்த நிலைக்கு வந்துள்ளது என்று. வருடாந்தம் 24,000 பேர் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றனர். அதிகமானவர்கள் ஒரு அலுவலக உதவியலாளராக, முகாமைத்துவ உதவியாளராக, நூலக உதவியாளராக வர எதிர்பார்க்கின்றனர். இந்நிலைமை தொடரக்கூடாது. இன்றைய தொழிற்சந்தையில் சாதாரண தரம், உயர் தரம் மாத்திரம் கற்றவர்களுக்கு தொழில் பெறுவது கடினம். இதனால் அதற்கும் அப்பாலான ஒரு கல்வியினை வழங்குவது அவசியம். அதற்காகவே நாங்கள் தொழில் நுட்ப பாடத்திற்காக 5000 ஆசிரிய நியமனங்களை வழங்கினோம்.எங்களது தேவை வெறுமனே அரச சேவையை நோக்காகக் கொண்ட கல்வி முறைமைக்குப் பதிலாக உற்பத்திப் பொருளாதாரத்திற்கு சக்தியை வழங்கும் கல்வியை நாட்டினுள் கட்டியெழுப்புவதாகும். எதிர்காலத்தில் நாட்டில் இரண்டாவது நிலை தொழில் நுட்ப பிரதேசங்களாக மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டையை கட்டியெழுப்பவுள்ளோம். தற்போதும் அதற்கு அவசியமான இடத்தை இனங்கண்டுள்ளோம். இவை அனைத்தும் ஆரவாரமில்லாமல் நாங்கள் நாட்டுக்காக செய்யும் சேவையாகும்" என்றார்.

இவ்வேலைத்திட்டத்தின் மூலம் மாளிகாதன்னை பாடசாலைக்கு 200 இலட்ச ரூபா  செலவில் பிரதான மண்டபம் புனரமைக்கப்படவுள்ளதுடன், 50 இலட்ச ரூபா செலவில் மற்றொரு கட்டிடமும் புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் 40 இலட்ச ரூபா செலவில் மலசல கூடத் தொடர் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாகாண சபை பிரதிநிதிகள், மாகாண சபை ஊழியர்கள், பாடசாலை அதிபர், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

நாட்டிலுள்ள பாடசாலைகளில் இன்னும் 23,000 கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. நாட்டிலுள்ள பாடசாலைகளில் இன்னும் 23,000 கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. Reviewed by Madawala News on 10/19/2016 01:37:00 PM Rating: 5