ஒக்டோபர் 30 நினைவு நிகழ்வு குறித்த வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தின் விளக்கமும், பொது அழைப்பும்..


“1990 ஒக்டோபர் 30” நினைவு நிகழ்வு குறித்து வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் பொது அழைப்பொன்றினையும், விளக்கமொன்றினையும் ஒரு விஷேட ஊடக அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றது. 

ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஜனாப் எம்.எம்.எம்.றமீஸ் மற்றும் ஜனாபா ஜென்ஸிலா மஜீத் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

1990 ஒக்டோபர் 30 வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் நினைவு நாள் நிகழ்வுகள், கொழும்பு 07ல் விஜயராம வீதியில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அராய்ச்சி மத்திய நிலைய கேபோர் கூடத்தில் 2016 ஒக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 9;30 மணிமுதல் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி விஷேட நினைவு நிகழ்விற்கு பொதுவாக அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் அன்போடு வரவேற்று நிற்கின்றோம். இந்நிகழ்வானது வெறுமனே ஒரு நினைவு நிகழ்வாக, அல்லது ஒரு கண்டன நிகழ்வாக ஏற்பாடு செய்யப்படவில்லை, மாற்றமாக வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களில் ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்கும், வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களை கையாளும் சிவில் சமூக செயற்பாடுகளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதற்குமென ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கு முஸ்லிம்களுடைய விவகாரங்கள் பல்தொகுதிகளைக் கொண்டிருக்கின்றது. இதனை முழுமையாகப் புரிந்துகொள்வதும், அதற்கேற்ற திட்டமிடல்களையும் நகர்வுகளையும் முன்னெடுப்பது காலத்தின் தேவையுமாகும். வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களில் பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவேண்டியிருக்கின்றது. 


வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் அனைவரும் வடக்கின் பூர்வீகக் குடிமக்களாகும், அவர்களும் அவர்களது சந்ததியினரும் தம்மை வடக்கின் குடிமக்களாகப் பதிவு செய்தல் அவசியமாகும். அத்தோடு அவர்கள் அனைவரும் வடக்கின் வாக்களார்களாகவும் இருக்கின்றார்கள், தற்காலிக இருப்பிடங்களின் அடிப்படையில் வாக்களார்களாக இவர்களை வெளி மாவட்டங்களில் பதிவு செய்யுமாறு நிர்ப்பந்திப்பது இவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும். எனவே இவர்கள் அனைவரும் வடக்கில் வாக்காளர்கள் என்றே கருதப்படல் வேண்டும்.


1990களிலே வடக்கிலே வாழ்விடக் காணிகளை, வாழ்வாதாரக் காணிகளை, விவசாயக் காணிகளை, பொதுத்தேவைக்கான காணிகளைக் கொண்டிருந்த வடக்கு முஸ்லிம்கள் அனைவரும் தம்முடைய காணிகளை நிலத்தை மீளவும் பெற்றுக்கொள்தல் அவசியமாகும், அதேபோன்று வடக்கின் அரச காணிகள் இத்தகைய மக்களின் சந்ததியினர்க்கும், காணியற்றோர்க்கும் பகிர்ந்தளிக்கபப்டுதல் அவசியமாகும்.


1990களிலே எம்மீது ஒரு பலவந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது எமது உடமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன, எமது வாழ்வாதாரம் அபகரிக்கப்பட்டது, எமது வாய்ப்புகள் இல்லாமலாக்கப்பட்டன, அந்தவகையில் எமக்கான இழப்பீடுகளை உறுதி செய்தல் அவசியமாகும் மீள்குடியேற்ற உதவித்திட்டங்கள் அனைத்திலும் மீள்குடியேறுகின்ற முஸ்லிம் மக்கள் முழுமையாக உள்வாங்கப்படுதல் அவசியமாகும். வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் குறிப்பாக கவனம்செலுத்தப்படடுதல் அவசியமாகும். 


சமூக நல்லிணக்கம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும், வடக்கின் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் அல்ல, நிரையவே உடன்பாடுகளைக் கொண்டிருந்த சமூகங்களாகும், தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பலமான பரஸ்பரப் புரிந்துணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் நிலைமைகளைச் சீர்செய்தல் சாத்தியமே


மேற்படி விவகாரங்களை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர் அரசியலுக்கு அப்பால் பொதுநோக்கோடு உடன்பாடு காணுதலும், ஒருமித்து செயற்படுதலும் அவசியமாகின்றது ஆரம்பமாக இதற்கான ஒரு பொறிமுறை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகமட்டத்தில் உருவாக்கப்படுதல் அவசியமாகின்றது. மேற்சொல்லப்பட்ட ஒழுங்கில் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் முதன்மையாக வடக்கு முஸ்லிம் சமூகமட்டத்திலும், அடுத்து வடக்கின் தமிழ் மக்கள் மத்தியிலும், இலங்கை அரசாங்கத்தோடும், சர்வதேச சமூகத்தோடும் விரிவாக கலந்துரையாடப்பட்டு, வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் சீரான புரிதலை அனைத்துத் தரப்பினரிடையேயும் ஏற்படுத்துதல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையினூடாக, உள்ளூராட்சி மன்றங்களினூடாக, மத்திய அரச நிறுவனங்களினூடாக, தொண்டு நிறுவனங்களினூடாக என பல்வேறு தளங்களில் வடக்கு முஸ்லிம்களுக்கான ஒரு விஷேட மீள்குடியேற்றப் பொறிமுறையினை செயற்படுத்த முடியும்.  இவ்வாறான ஒரு பொறிமுறை உருவாகின்றபோது வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் எவருக்கும் பாதிப்பில்லாத வகையிலும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும் கையாளப்பட முடியும்.


இவ்வாறான ஒரு விரிவான பின்புலத்தோடுதான் எமது நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, எனவே சமூக ரீதியான, அரசியல் ரீதியான கருத்து ரீதியான எல்லா முரண்பாடுகளுக்கும் அப்பால் வடக்கு முஸ்லிம்களின் நலன்கள் குறித்து சிந்திக்கும் அனைத்து வடக்கு முஸ்லிம் சமூக ஆர்வலர்களையும் இந்நிக்ழவில் கலந்து சிறப்பிக்குமாறும் பங்களிப்பு நல்குமாறும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். என்றும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ.இரா சமந்தன், மற்றும் முன்னணி தமிழ் முஸ்லிம், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுத்தூதுவர்கள், இலங்கையின் முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வடக்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

 

தகவல்; கலாபூஷனம் எம்.எல்.லாபிர்

ஒக்டோபர் 30 நினைவு நிகழ்வு குறித்த வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தின் விளக்கமும், பொது அழைப்பும்.. ஒக்டோபர் 30 நினைவு நிகழ்வு குறித்த வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தின் விளக்கமும், பொது அழைப்பும்.. Reviewed by Madawala News on 10/26/2016 02:41:00 PM Rating: 5