கிழக்கு முதலீடு என்ற போர்வையில் கிழக்கு முதலமைச்சர், 6 மில்லியன் நிதியினை ஏப்பமிட்டார் .



கிழக்கு முதலீடு என்ற போர்வையில் கிழக்கு மாகாண சபையின் சுமார் 6 மில்லியன் ரூபா நிதி பிரயோசனமற்ற வகையில் நாசம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதியொதுக்கீட்டின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி காரியாலய தளபாடங்களை ஏறாவூர் அல்-முனீரா பாலிகா வித்தியாலயத்திற்கு கையளிக்கும் நிகழ்வு  நேற்று (24) பாடசாலை அதிபர் எஸ்.ஏ றசாக் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஒரு பாடசாலையினுடைய முன்னேற்றம் அப்பாடசாலையின் நிருவாக செயற்பாட்டிலே தங்கியுள்ளது. அல்-முனீரா பாலிகா வித்தியாலயம் உயர் தரம் கலைப் பிரிவினை மாத்திரம் கொண்ட ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலையிலிருந்து சென்ற வருடம் 18மாணவிகள் பல்கலைக்கழகம் சென்றனர். உண்மையாகவே இது பாராட்டத்தக்க விடயமாகும்.

இப்பாடசாலையினுடைய அதிபர், ஆசிரியர்களின் சிறந்த நிருவாக செயற்பாடே இதற்குக் காரணமாகும். அண்மைக் காலமாக இப்பாடசாலை கல்வித்துறையில் படிப்படியாக முன்னேற்றம் கண்டுவருகிறது. சில பாடசாலைகளில் பல குழுக்கள் காணப்படுகிறது. குறிப்பாக அதிபர் சார்ந்த குழுக்களும், ஆசிரியர் குழுக்களும், நடுநிலையான குழுக்களும் என பல குழுக்கள் காணப்படுகிறது. இவ்வாறான பிரிவுகளும், பிளவுகளும் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைகின்றது.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் மக்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை அதிகாரிகளிடம் தட்டிக் கேட்கின்றபோது அந்த அதிகாரிகள் அரசியலை காரணம் காட்டி அதிலிருந்து தப்பித்தக் கொள்வதற்காக தனக்கு சாதகமாக அந்த திணைக்களத்தையே பாவிக்கும் நிலமையினை கான்கின்றோம். ஆகவே மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் இதன் உண்மைகளை கற்ற சமூகத்தின் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இன்று எமக்கு கிடைத்திருக்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரம் என்பது ஒரு மாகாணத்தையே ஆளுகின்ற விடயமாகும். இப்பதவியின் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உதவிகளைப் பெற்று இதய சுத்தியுடன் இம்மாகாணத்தை முன்னேற்றுவதே முதலமைச்சரின் கடமையாகும்.

ஆனால் எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு முதலீடு என்ற போர்வையில் 2014ஆம் ஆண்டு மாகாண விவசாய, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்துகொண்டு கிழக்கு மாகாண சபையின் 15இலட்சம் ரூபா நிதியினையும், அதே போன்று 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்துகொண்டு 32இலட்சம் ரூபா நிதியினையும் செலவு செய்து எமது மக்களினுடைய பணங்களை விரயம் செய்துள்ளார்.

குறிப்பாக கிழக்கிலே உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வந்து முதலீடு செய்வதாகக்கூறி கொழும்பிலுள்ள ஆடம்பர ஹோட்டல்களிலே கிழக்கு முதலீடு எனும் தோரனையில் மாநாடுகளை நடாத்தினார். இதற்காகவே கிழக்கு மாகாண சபையின் பெருந்தொகைப் பணங்கள் செலவு செய்யப்பட்டது.

இந்த விடயம் சம்மந்தமாக கடந்த மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்து சில கேள்விகளை கேட்டிருந்தேன். குறிப்பாக கிழக்கு முதலீடு அமர்வுகளில் எத்தனை உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிகள் பங்கேற்றனர் எனக்கேட்ட போது சுமார் 271 வெளிநாட்டு முதலீட்டாளர்களும், 255 உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குபற்றியதாக அவர் கூறினார்.

மேலும் இதற்காக மாகாண சபையினுடைய நிதி எவ்வளவு செயலவு செய்யப்பட்டது எனவும் இதில் எத்தனை நாடுகள் கிழக்கில் முதலீடு செய்துள்ளது எனக்கேட்கப்பட்ட போது சுமார் 6 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாகவும், இதுவரை எந்தவொரு நாடும் கிழக்கில் முதலீடு செய்யவில்லை எனவும் அதற்கான முயற்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் பதிலளித்தார்.
குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முதலமைச்சருக்கு அதிகாரமும் இல்லை எனவே இம்மாநாட்டின் பயனாக மாகாணத்தில் எத்தனை முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கின்ற விபரப்பதிவுகள் எதுவும் முதலமைச்சரிடத்தில் இல்லையெனவும் கூறி தப்பித்துக்கொள்ளும் முதலமைச்சர் மாகாண சபையினுடைய பணங்களை ஏன் செலவு செய்தார் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தற்போது கிழக்கு மாகாண சபையினுடைய காலம் சுருங்கி தேர்தல் ஒன்று வருகின்ற வேளையில் சர்வதேச விமான நிலையம், ஏறாவூரில் சர்வதேச விளையாட்டு மைதானம், ஏறாவூரில் நவீன சந்தை என்றும் மேலும் பல மில்லியன்களை கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப் போவதாக முதலமைச்சர் கூறிவருகின்றார். இது தேர்தலினை இலக்கு வைத்தே அவரினால் முன்வைக்கப்படும் போலி வாக்குறுதிகளாகும்.

எனவே இந்தவியடத்தில் ஏறாவூர் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு முதலீடு என்ற போர்வையில் கிழக்கு முதலமைச்சர், 6 மில்லியன் நிதியினை ஏப்பமிட்டார் . கிழக்கு முதலீடு என்ற போர்வையில் கிழக்கு முதலமைச்சர், 6 மில்லியன் நிதியினை ஏப்பமிட்டார் . Reviewed by Madawala News on 10/25/2016 06:02:00 PM Rating: 5