Monday, October 10, 2016

ஹக்கீம் - அன்சில் மோதல்! இது தொடர்பில் அன்சிலின் விளக்கம்!!

Published by Madawala News on Monday, October 10, 2016  | (அய்ஷத்)
தற்போது சமூக வலைத்தளங்களிலும்இ ணையங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ள "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்-உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளருமான அன்சில் மோதல்" சம்மந்தமான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "அன்சில்" தன் தரப்பு கருத்துக்களை தன் முக நூலில் இன்று (2016.10.11)பதிவேற்றம் செய்துள்ளார்.

அது பின்வருமாறு-

" கடந்த 8ஆம் திகதி நடந்த உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வில் எனது சந்தேகங்களையும் கவலைகளையும் முன்வைத்ததனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகிறது.

நடந்தவைகளும், சிலதை கூட்டியும் குறைத்தும் செய்திகளாக உலாவுவதையும் அவதானிக்கிறேன்.

என்னைப்பற்றி சமூக ஊடகங்களில் வருகிற விமர்சனங்களுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. பதிலளிக்க ஆரம்பித்தால் அதை மாத்திரமே செய்துகொண்டிருக்க வேண்டியேற்படும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்வது எனது வழக்கம். நேரடியாக என்னிடம் தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு மாத்திரம் நான் தவறாது விளக்கமளிப்பேன்.

ஆனால், தற்போது உலவுகிற விடயங்கள் நடுநிலை தவறி, தாம் சார்ந்த பக்கம் நின்று கருத்துக் கூறுவதாகவும், கற்பனையில் அதிகம் பேசுவதாகவும் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி, என்னைத் தனிப்பட்ட வகையில் விமர்சிப்பதற்கப்பால், கட்சியினது நம்பகத்தன்னமயை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்திருப்பதையும் என்னால் அவதானிக்க முடிகிறது.

கட்சி என்ற அடிப்படையில் மாறுபட்ட கருத்துடையவர்களுக்கிடையில் கருத்தாடல்கள் இடம்பெறுவதென்பது ஆரோக்கியமான ஒன்றே. அதுவே உட்கட்சி ஜனநாயகமும்கூட. அதுவே அன்றைய தினமும் நடந்தது.

என்னைப் பொறுத்தவரை எந்தவித வெளி அழுத்தங்களுக்கும் உட்படாது சுயாதீனமாக சமூக விடயங்களில் எனக்கிருக்கின்ற இயல்பான பற்றுதலின் காரணமாகவே அன்றும் எனது சந்தேகங்களையும் கவலைகளையும் முன்வைத்தேன்.

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவேன்.

நான் முன்வைத்த விடயங்கள் சரியாக இருந்தாலும் முன்வைத்த இடம் பொருத்தமானதல்ல என்ற விமர்சனம் தற்போது முன்வைக்கப்படுகிறது. என் மீதான இவ்விமர்சனத்திற்கு எனது பக்கமான அத்தனை நியாயங்களையும் புறமொதிக்கி விட்டு அதனை எனது தவறு என்றே நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுவே இப்பிணக்கினை முடிவுக்கு கொண்டுவர சிறந்த வழி என்றும் நான் கருதுகிறேன்.

எனது தனிப்பட்ட எதிர்கால அரசியல் முன்னேற்றம் என்பது அழ்ழாஹ்வின் புறத்திலிருந்தானது என்பதிலே அதீதமான நம்பிக்கை கொண்டவன் நான். அதனால் அதனை எதிர்பார்த்தோ அல்லது அதற்காக திட்டமிட்டோ நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை.

ஆனால் உண்மைக்காகவும், நியாயத்திற்காகவும், சமூக நலனிற்காகவும் பிரகாசமான எனது அரசியல் எதிர்காலாத்தை இழந்துவிட்டு நிற்கவும் நான் பின்னிற்கப்போவதில்லை.

நான் சார்ந்து நிற்கின்ற அரசியல் கட்சி என்பது அரசியல் முன்னெடுப்புக்கான எனது ‘ஜமாஅத்’ என நம்புபவன் நான். என்னுடைய மார்க்க ஆசான்களான உலமாக்கள் எனக்கு அவ்வாறுதான் கற்றுத் தந்துள்ளார்கள். அப்படியான இந்த ‘ஜமாஅத்தை’ விட்டு வெளியேறுவது ஹராம் என்ற புரிதலில் இருப்பவன் நான். ஆகவே, என்னை இந்த ஜமாத்தை விட்டு வெளியேறச்செய்து விடலாம் என்ற முயற்சியில் யாரும் என்னிடம் பேச வேண்டியதில்லை என்பதை கூறிவைக்க விரும்புகிறேன்.

அல்லது இந்த இயக்கத்தை விட்டு நான் வெளியேறிவிடுவேன் என்று இந்த இயக்கத்தை ஆதரிக்கும் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.

இக்கட்சியின் ஒரு சிறு அங்கத்தவனே நான். இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கும் அளவு நான் பெரியவனில்லைதான். இருந்தாலும் சமூகத் தளத்தில் பெரியதாக காட்டப்படுகின்ற விடயங்களுக்காக இதனை எழுதவேண்டியேற்பட்டது என்பதை பணிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஆதரவாகவோ அல்லது எதிராகவோ உங்களது பின்னூட்டங்களை நான் எதிர்பார்கவில்லை. அவ்வாறாக இட்டு மேலும் ஒரு சங்கடமான நிலையை எனக்கு ஏற்படுத்த வேண்டாம் என தயவாக கேட்டுக்கொள்கிறேன்."


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top