Ad Space Available here

இலக்கை நோக்கி அருகில் வந்து விட்டோம்...இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளரும் டிஸம்பரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் செயலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மாநாடு சம்பந்தமாக மடவளை நியூஸ் இணையத் தளத்துக்கு வழங்கிய செவ்வி...


மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன?


அநேகமாகவும் இலக்கை நோக்கி அருகில் வந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். 2002ல் நடத்திய மாநாட்டுக்கு நிறையக் கால அவகாசம் இருந்தது. ஆனால் இந்த மகாநாட்டுக்கு அந்த அளவு இல்லை. எனவே மாநாட்டு இயக்கக் குழு தொலைபேசிக் கலந்துரையாடலில் முடிவுகளை எடுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. 75 வீதமான விடயங்களைத் தீர்மானித்து அதற்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் தீர்மானிக்கப்படாத விடயங்களைச் சொல்ல முடியுமா?

இளம் இலக்கியப் படைப்பாளிகளில் பாராட்டுக்குரியவர்கள், மூத்த படைப்பாளிகளில் கௌரவத்துக்குரியவர்கள் தெரிவைச் சொல்ல முடியும். அத்துடன் கவியரங்கக் கவிஞர்கள் தேர்வையும் குறிப்பிட முடியும்.

அதில் ஏன் தாமதம் ஏற்பட்டது?


ஒரு சர்வதேச மாநாடு என்பது ஒரு மீலாத் விழாவைப் போன்றது அல்ல. முதலில் அடிப்படை விடயங்களை , தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதன்பிறகே அடுத்த கட்டத்துக்குள் நுழைய முடியும். மாநாடு நடத்தப்படும் இடம், வெளிநாட்டுப் பேராளர்கள் தங்குவதற்கான இடம், போக்குவரத்து என்று பல அடிப்படை விடயங்களை முதலில் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

மாநாட்டை நடத்த ஒரு பிரபல முஸ்லிம் பாடசாலை மண்டபத்தைப் பெற எண்ணியிருந்தோம். ஒரு மாதத்துக்கு முன்னரே அவர்களுக்கு வேண்டுகோள் கடிதமும் கொடுத்திருந்தோம். ஆனால் இந்தப் பேட்டி இடம்பெறும் நேரம் வரை அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

காத்திருந்து விட்டு நேற்றைய தினம்தான் இலங்கை மன்ற மண்டபத்தில் நடத்த முடிவெடுத்துப் பதிவையும் மேற்கொண்டோம்.


இலங்கை மன்ற மண்டபத்திலேயே சகல நிகழ்வுகளும் இடம்பெறுமா?


மூன்று நாள் நிகழ்வுகளும் அங்கே நடைபெறவுள்ளன. ஆய்வரங்குகளை நடத்துவதற்குப் பொருத்தமான அறைகள் அங்கில்லை. எனவே ஆய்வரங்குகளை நடத்துவதற்குப் பொருத்தமான வேறு ஓர் இடத்தை அடையாளங் கண்டு ஏற்பாடு செய்திருக்கிறோம்.


பாராட்டுக்குரியவர்கள், கௌரவத்துக்குரியவர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?


நாம் பிராந்திய ரீதியாக இணைப்பாளர்களை நியமித்திருக்கிறோம். அவர்களிடம் பேராளர் படிவம், பாராட்டு, மற்றும் கௌரவம் பெறுவோருக்கான படிவம் ஆகியவற்றை யாரும் பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர, இணையத்திலிருந்தும் தரவிறக்கும் வசதியையும் செய்திருக்கிறோம்.

ஆயினும் படிவங்களை இன்னும் முழுமையாகச் சமர்ப்பிக்காமல் அசமந்தமாக இருக்கிறார்கள். இது வழமையாக நடப்பதுதான். கால எல்லை முடிந்த பிறகுதான் பலரும் அவற்றை எடுத்துக் கொண்டு ஓடி வருவார்கள்.

எது எப்படியிருந்த போதும் இம்மாதம் 30ம் திகதியுடன் யாவற்றையும் பூர்த்தி செய்து விடுவோம். அதன் பிறகு கிடைக்கும் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் பாராட்டு, கௌரவம் பெறுவோருக்கான விருதுகளைத் தயார் செய்வது, மாநாட்டு மலரில் பெயர்ப்பட்டியல் சேர்ப்பதுஈ அச்சிடுவது என்று பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் தாமதத்தால் எல்லாவற்றையும் பாழ்பட விடமுடியாது.


படிவங்கள் மூலம் பாராட்டு, கௌரவத்துக்கு விண்ணப்பிப்பது பற்றி கருத்து முரண்பாடுகள் ஏற்படாதா?


ஏன் ஏற்பட வேண்டும்? இந்த வினா நாம் பிராந்திய படைப்பாளிகள் சந்திப்பின் போது இரண்டு இடங்களில் முன்வைக்கப்பட்டது. விழா நடத்துபவர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு இலக்கிய அமைப்புக்கும் நாட்டில் எழுதிக் கொண்டிருக்கின்ற அனைவரையும் தெரியாது. தெரிந்தாலும் அவர்களைப் பற்றிய முழுமையான விபரங்கள் தெரிந்திருக்காது. அவ்வளவு ஏன் முகவரி, போன் இலக்கங்கள் கூடத் தெரியாது. இந்த நிலையில் அந்தப் பட்டியலை இடுவது எப்படி?

இன்று சராசரியாக வீட்டுக்கு ஒரு கவிஞன் இருக்கிறான். பல இளம் படைப்பாளிகள் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். எனவே இவ்வாறான ஒரு படிவத்தின் மூலம் அவர்களை அடையாளங் காண்பது மட்டுமன்றி ஒரு பதிவாகவும் ஆக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திலேயே படிவங்களைக் கொடுத்திருக்கிறோம்.


வெளிநாடுகளிலிருந்து எத்தனை பேர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்?


ஏறக்குறைய 50 பேர் எதிர்பார்க்கப்படுகிறார்கள். கடந்த முறை திறந்த அழைப்பை விடுத்திருந்தோம். இம்முறை இலக்கியப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களுமே வருகிறார்கள். வியாபாரிகள், சுற்றுலாக்காரர்களைத் தவிர்த்திருக்கிறோம். இந்தியாவிலிருந்து 30 பேர், மலேசியாவிலிருந்து 10 பேர், சிங்கப்பூர், ஐக்கிய அரபு ராஜ்யம் ஆகியவற்றிவிருந்து 10 பேர் வரவிருக்கிறார்கள்.


இலங்கைப் பேராளர்களாகப் பதிவு செய்து கொள்வோருக்கு என்ன என்ன வழங்கப்படவுள்ளன?


காலை, மாலைத் தேனீர், மதிய உணவு, மாநாட்டு மலர், ஆய்வுக் கட்டுரைக் கோவை ஆகிய அடங்கிய புத்தகப் பை ஆகியன வழங்கப்பட இருக்கின்றன. இது தவிர, பாராட்டோ, கௌரவமோ பெறுமொருவர் தன்னைப் பேராளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பேராளர்களே ஒரு மாநாட்டின் உடல் போன்றவர்கள்.


முன்னோட்டமான நிகழ்ச்சி நிரலைக் குறிப்பிட முடியுமா?


11ம் திகதி பி.ப. அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும். இந்நிகழ்வு இரவு 8.00 மணிவரை நடைபெறும். இரண்டாம் நாளான 12ம் திகதி பி.ப. 4.00 மணிக்கு கலாசார நிகழ்வுகளும் கவியரங்கும் 3ம் நாளான 13ம் திகதி காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை உரையரங்கும் பி.ப. 4.00 மணிக்கு இறுதி நிகழ்வும் இடம்பெறும். இந்த நிகழ்வுகள் அனைத்துமே இலங்கை மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளன. மூன்று தினங்களிலும் பாராட்டு, கௌரவம் வழங்கல் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. 12ம் திகதி காலை 9.30 முதல் பகல் 1.30 வரை ஆய்வரங்குகள் இடம் பெறும்.

-ஜஸாக் அல்லாஹ் - அஷ்ரஃப் சிஹாப்தீன்-

இலக்கை நோக்கி அருகில் வந்து விட்டோம்... இலக்கை நோக்கி அருகில் வந்து விட்டோம்... Reviewed by Madawala News on 10/25/2016 11:18:00 PM Rating: 5