Ad Space Available here

கல்முனை நகர முஸ்லிம்களின் வரலாற்றினையும் பூர்வீகத்தையும் திரிவுபடுத்தும் சதித்திட்டங்களுக்கு எதிரான கல்முனை பிரகடனம்.(எஸ் .எல். அப்துல் அஸீஸ் )

கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள், பொது அமைப்புகளின் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட  'கல்முனை பிரகடனம்'  எனும் தலைப்பிலான பிரகடன நிகழ்வு ஒன்று நேற்று (30) இரவு கல்முனை முகையதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசளில் இடம்பெற்றது.

கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள், பொது அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர், மருத்துவ கலாநிதி  எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சம்மேளனத்தின் பணிப்பாளரும், தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான எச்.எம். நிஜாம் இப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பித்தார்.

பிரகடனம் பின்வருமாறு அமைந்திருந்தது,

கல்முனை நகர முஸ்லிம்களின் வரலாற்றினையும் பூர்வீகத்தையும் திரிவுபடுத்தும் சதித்திட்டங்களுக்கு எதிராக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின்   சம்மேளனத்தின் பிரகடனம்.


இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம், பாரம்பரியம் மற்றும் தேசிய அடையாளம் என்பவைகளில் இருந்து பிரிக்க முடியாத தொன்மைமிக்க  நகராக  கல்முனை இருந்து வருகின்றது.

இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்கள் மட்டக்களப்பினை தமிழ் சிற்றரசர்களினை கொண்டும் கல்முனையை முஸ்லிம் சிற்றரசர்களினை கொண்டும் நிர்வகித்து வந்துள்ள வரலாறுகள் உள்ளன. உதாரணமாக, இலங்கையை ஆட்சி செய்த பராக்கிரமபாகு மன்னன் மட்டக்களப்பில் தினசிங்கன் எனும் தமிழ்சிற்றரசனையும் கல்முனையில் ரகுமான்ராஜா என்ற முஸ்லிம் சிற்றரசனையும் நியமித்து நிர்வாகம் செய்த வரலாற்றை குறிப்பிட முடியும். இவ்வாறாக, முஸ்லிம் சிற்றரசர்களை கொண்டு கல்முனை ஆட்சி செய்யப்பட்டுள்ள வரலாறு காலனித்துவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமாக இருந்து வந்துள்ளதை சான்று பகர்கின்றது.

ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட உள்ளுராட்சி தொடர்பிலான சட்டங்களில் கல்முனை முஸ்லிம்களினுடைய பூர்வீகம் என்ற தொன்மை மிக்க வரலாறு பேணப்பட்டிருந்தது. கல்முனை பிரதேசம் ஒரு நகரமாக உத்தியோகபூர்வமாக அப்போதைய ஆளுநர் சேர் ஜே. ரிட்ச்வேயினால் 1892ஆம் ஆண்டின்  18ஆம் இலக்க சிறியபட்டின சுகாதாரசபைகள் சட்டத்தின் பிரிவு-2 இன் கீழ் 1897 பெப்ரவரி19 இல் வெளியான 5459 ஆம் இலக்க அரச வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டது. மேற்சொன்ன 5459ஆம் இலக்க அரச வர்த்தமானியில் ‘கல்முனை பட்டினம்’ பின்வரும் எல்லைகளினை கொண்டு வரையறை செய்யப்பட்டது.

வடக்கு எல்லை: நற்பிட்டிமுனையில் இருந்து கடல் நோக்கிச்செல்லும் வீதி (தாளவெட்டுவான் வீதி); கிழக்கு: கடல்; தெற்கு: சாய்ந்தமருது கிராமம்; மேற்கு: நற்பிட்டிமுனை கிராமம்.

1897 பெப்ரவரி 19 இல் மேற்குறித்த எல்லை நிர்ணயங்களுடன் பிரகடனம் செய்யப்பட்ட கல்முனை பட்டினம் முஸ்லிம் பெரும்பான்மையை கொண்டமைந்தது. காலனித்துவத்திற்கு முற்பட்ட கல்முனையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான சமுகமாக இருந்தார்கள் என்ற தவிர்க்க முடியாத தொன்மையான வரலாற்றின் அடிப்படையில் இருந்தே 1897  பெப்ரவரி 19 இல் பிரகடனம் செய்யப்பட்ட கல்முனை பட்டினம் மற்றும் அதன் எல்லைகள்  ஆங்கிலேயர்களினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. 1933இல் டொனமூர் சீர்திருத்தத்தினை மையப்படுத்தி 1935 இல் கல்முனை மேற்கு எல்லையில் கொண்டு வரப்பட்ட சிறிய எல்லைத்திருத்தங்கள் தவிர, 1897  பெப்ரவரி 19இல் மேற்கொள்ளப்பட்ட இந்த அரச பிரகடனத்தின் மூலம் குறித்துரைக்கப்பட்ட கல்முனை பட்டின எல்லைகளுக்குள் காணப்படும் நிலம், வசிக்கும் குடிகள் (Inhabitants), காரியாலயங்கள், வர்த்தகமையங்கள் என்பன இற்றைவரை அமுலுக்கு வந்த எந்தவொரு பொதுநிர்வாக அலகுகளின் எல்லைகளினாலோ அல்லது உள்ளுராட்சி மன்ற அலகுகளின் எல்லைகளினாலோ துண்டு போடப்பட்டு வேறாக்கப்படவில்லை என்பது தெட்டத் தெளிவான நிதர்சன வரலாற்று உண்மையாகும்.

அந்த வரலாற்றுத் தொன்மைமிக்க கல்முனை நகர எல்லைகள் இனியும் துண்டாடப் படமுடியாது என்பதை அதன் பெரும்பான்மை குடிமக்களாகிய நாங்கள் உறுதியாக  பிரகடனம் செய்கின்றோம்.

1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க சிறியபட்டின சுகாதாரசபைகள் சட்டத்தின் இயக்கத்தில் உருவான சுகாதாரசபை பட்டினத்தின் பொதுச்சுகாதாரம், துப்புரவு, குப்பை மற்றும் கழிவு அகற்றுதல், வீதிவிளக்குகளை நிர்மாணித்தல் பொதுமலசலகூடம், மற்றும் சந்தை ஆக்கம் என்பவற்றுடன் சிறிய வாசிகசாலை அமைத்தல் போன்ற பொறுப்புகளுடன் கூடிய உள்ளூராட்சி அமைப்பாக காணப்பட்டது. அதன் பின்னர் 1946ஆம்ஆண்டின் 3ஆம் இலக்க நகரசபை சட்டத்தின் பிரிவு-2 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட அமைச்சரவையின் அதிகாரபூர்வமான கட்டளையின்படி கல்முனை-1ம்  வட்டாரம் தொடக்கம் கல்முனை-07ம்  வட்டாரம் வரைக்கும் ஏழு தேர்தல் வட்டாரங்களை கொண்ட பட்டினசபையாக (Town Council) 1946 இல் பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது  கல்முனையில் மொத்த வாக்களர் தொகை 10,458 ஆக இருந்தது.

1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பட்டினசபைத் தேர்தலில் 5 முஸ்லிம் உறுப்பினர்களும் 2 தமிழ் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். முஸ்லிம் உறுப்பினர்கள் மொத்தமாக 5131 வாக்குகளையும் தமிழ் உறுப்பினர்கள் 1773 வாக்குகளையும் பெற்று தெரிவாகியிருந்தனர். இது கல்முனையின் இனத்துவ பரம்பல் 1946ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 76%ஆகவும் தமிழர்கள் 24% இருந்துள்ளனர்  என்பதையே காட்டுகின்றது.

1987 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ் கல்முனை பட்டினசபையுடன் அதனைச் சூழ்ந்து இருந்த கிராமிய சபைகளான கரவாகு வடக்கு கிராமிய சபை, கரவாகு தெற்கு கிராமிய சபை, கரவாகு மேற்கு கிராமிய சபை என்பன இணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டு 1994ல் முதலாவது கல்முனை பிரதேச சபை தேர்தல் நடைபெற்று பின்னர் 2000ஆம் ஆண்டு நகர சபையாகவும் பின்னர் 2001ஆம் ஆண்டு மாநகர சபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1897ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்முனை பட்டின சுகாதார சபை தொடக்கம் இன்றுள்ள கல்முனை மாநகர சபை வரை கல்முனை உள்ளுராட்சி சபைகளின் வரிமற்றும் ஏனைய வருமானங்களில் 75% இற்கு குறையாத பகுதி கல்முனை முஸ்லிம்மக்களின் உழைப்பில் இருந்தே பெறப்பட்டுள்ளது.

கல்முனை சாஹிரா வீதியில் இருந்து தாளவெட்டுவான் வீதி வரைக்குமான கல்முனை நகர எல்லைக்குள் 90% இற்கும்மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதாகும். கல்முனையின் நகரப்பண்பு முஸ்லிம்களின் வர்த்தக நிருவனங்கள் மற்றும் அவைகளின் பொருளாதார செயட்பாடுகளின் நேரடிப் பிரதிபலிப்பாகும். கல்முனைத் தொகுதியில் இருந்து காலத்திற்கு காலம் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களினால்தான் கல்முனையின் நகரப் பண்பினை எடுத்தியம்பும் அனைத்து உட்கட்டுமானங்களும் வசதிகளும் கொண்டுவரப்பட்டன என்பது சமகாலத்தில் வாழும் அனைவரும் அறிந்த உண்மையாகும். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, நீதிமன்ற கட்டிடத் தொகுதி, டெலிகோம், கல்முனை ரெஸ்ட் ஹவுஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை , வீதி அபிவிருத்தி திணைக்களம், நீர்பாசனத் திணைக்களம், கட்டிட திணைக்களம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காரியாலயக் கட்டிடத்தொகுதி, பொதுநூலகம், சந்தைதொகுதி, மாநகரசபை கட்டிட தொகுதி, பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் , இலங்கை போக்குவரத்து சபை டிப்போ, தபால் தலைமைக் காரியாலயம், பஸ் தரிப்பு நிலையம், பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் பணிமனை கட்டிடத் தொகுதி என்பவற்றினை இங்கு பிரதானமாக குறிப்பிட முடியும். மேற்கூறப்பட்ட அதிகாரபூர்வமான வரலாறு, சமகால புள்ளிவிபரங்கள் மூலம் கல்முனை நகரம் முஸ்லிகளின் பூர்வீக நகரம் என்பது  நிரூபணமாகின்றது.

உண்மை இவ்வாறு இருக்க, கல்முனை நகரம் தமிழர்களுடையது அல்லது தமிழர்களுக்கு மட்டும் உடையது, அதை முஸ்லிம்கள் கபளீகரம் செய்தார்கள் என்று ஆதாரமின்றி கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதானது வேதனைகுரியது மட்டுமல்லாது, தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை மேலும்  மலினப்படுத்துகின்றது.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாரளுமன்றத்தில் குறிப்பிட்ட “95% தமிழர்கள் வாழ்ந்து வரும் கல்முனை நகரம்” என்பது  பொய்யாக புனையப்பட்ட எவ்வித ஆதாரங்களும் இன்றி கூறப்பட்ட ஒரு முதிர்ச்சியற்ற கூற்று எனவும் அது அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சமுகங்களை மோதவிட்டு முஸ்லிகளின் பாரம்பரிய வாழ்விடங்களையும் பொருளாதாரத்தினையும் சூறையாடும் நோக்கில் அரங்கேற்றப்பட்டு வரும் சதித்திட்டங்களிள் ஒன்று என்பதையும் இத்தால் மிகவேதனையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 1980 களுக்குப் பிறகு வீரியம் பெற்ற தமிழ் ஈழக்கோரிக்கைகளின் பின்னனியில் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் அடையாளத்தினை அழித்து அவர்களின் பூர்வீகத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலான பயங்கரவாத அட்டூழியங்கள் அப்போதய தமிழ் பயங்கரவாத இயக்கங்களினால் முஸ்லிம்களின்மீது கட்ட விழ்த்து விடப்பட்டன. இலங்கை முஸ்லிம்களின் முக வெற்றிலையாகவும் கிழக்கின் பிரதான வர்த்தக மையம்களில் ஒன்றாகவும் இருந்த கல்முனை நகரினையும் இப்பயங்கரவாதம் காவு கொண்டிருந்தது.  அதன் விளைவாக 1986 தொட்டு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தமிழ் பயங்கரவாத அமைப்பினால் கல்முனை நகரத்தில் உள்ள முஸ்லிம் கடைகள் கொள்ளையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. கல்முனை முஸ்லிம் மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்முனை முஸ்லிம் தனவந்தர்கள் கடத்தப்பட்டு கப்பம் பறிக்கப்பட்டார்கள், கல்முனை நகரின் வடக்கு பிரதேசங் களில் வாழ்ந்த முஸ்லிம் குடியிருப்புகளை விரட்டியடித்து  தங்களின் வசிப்பிடங்களை விற்றுவிட்டு அல்லது கைவிட்டு விட்டு செல்லும்படியாக அச்சுறுத்தப்பட்டார்கள். கல்முனையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் இந்த அட்டுழியங்கள் அனைத்தும் கல்முனை நகரினை முஸ்லிம்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கும் நோக்கிலேயே அமைந்திருந்தன. கல்முனை நகர் முஸ்லிம்களுடையது என்னும் ஒரேயொரு வரலாறே இதற்கு காரணமாக இருந்தது.

மேலும், ஆயுதம் ஏந்திய தமிழ்  பயங்கரவாதிகள் 1990களில் கல்முனை உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தினை (இப்போதய பிரதேச செயலகம்) துப்பாக்கி முனையில் இரண்டாக்கி இனத்துவ அடிப்படையிலான பொது நிர்வாகத்தினை கல்முனையில் ஏற்படுத்தினர். 1990இல் கல்முனையில் சேவையில் இருந்த அனைத்து அரசாங்க அதிகாரிகளும் இந்த சட்ட விரோத செயற்பாட்டை அறிந்திருந்தார்கள்.

ஆயுதம் ஏந்திய தமிழ் போராளிகளின் துப்பாக்கி முனையில் பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் கலைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபை மூலமாக காக்கப்பட்டு இன்றும் செயற்பட்டு வரும் சட்டரீதியற்ற, இனத்துவ அடிப்படையிலான தனியான தமிழ் உப பிரதேச காரியாலயத்தினை முஸ்லிம்களின் நெஞ்சில் நிலையாக நிறுவுவதற்கும் அதன் ஊடாக கல்முனை முஸ்லிம்களின் பொருளாதார மையங்களினை அபகரிப்பதற்கும் கல்முனை நகரத்தை பற்றிய பொய்யான வரலாறுகள், புனை கதைகள,  திரிவுபடுத்தப்பட்ட எல்லைகள், புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை பரப்பும் நெறிகெட்ட செயல்களில் சில இனத்துவ அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும்  செயற்பட்டு வருகின்றார்கள்.

இவ்வாறு, கல்முனையில் முஸ்லிம்களின் அடையாளத்தினையும் அவர்களின் பல நுற்றாண்டு கால உழைப்பையும்  கபளீகரம் செய்து, அவர்களை சிறுமைப்படுத்தும் பொருட்டு தமிழ்த்தாயக  கோரிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற் கொள்ளப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாகவே  கல்முனை நகர் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் விடுத்துவரும் கூற்றுக்களை நாங்கள் நோக்குகின்றோம்.

கல்முனை நகரம் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும் அது ஏனைய தமிழ், சிங்கள மற்றும் பறங்கிகுடிமக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 1980களுக்கு முன்னர் எமக்கிடையே நிலவிய ஒற்றுமை மிக்க சகோதரத்துவ நல்வாழ்வுக்கு நாம் எல்லோரும் திரும்பிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், புனைந்த வரலாறு, பொய்யான புள்ளிவிபரங்கள் மற்றும் போலியான தகவல்களை பரப்பி நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லெண்ண செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் கீழ்த்தரமான செயல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளுமாறு தொடர்பு பட்ட நபர்களை நாங்கள் பணிவாய் வேண்டி நிற்கின்றோம்.

1897 ஆம் ஆண்டில் பிரகடனம் செய்யப்பட்ட கல்முனை சனிடரி சபை எல்லைகளை தழுவி 1946 இல் பிரகடனம் செய்யப்பட்ட கல்முனை பட்டின சபை எல்லைகளை எதிர்காலத்தில் துண்டுபோடும் வகையிலான எந்த உள்ளுராட்சி மன்ற அல்லது பொது நிர்வாக அலகுகளையும் ஒருபோதும் எங்களால் ஏற்கமுடியாது என்பதை அதன்பெரும்பான்மை குடிமக்களாகிய நாங்கள் மீண்டும் உறுதியாக பிரகடனம்செய்கின்றோம்.

இன அடிப்படையில் துண்டாடப்படாத கல்முனை நகரத்தினுள் எந்த பிரதேச அல்லது எந்த இனத்தில் இருந்து வரும் நேர்மையான நிர்வாகிகளை எங்களின் நிர்வாகிகளாக ஏற்று என்னேரமும் ஒத்துழைப்பு வழங்க  கல்முனை நகர முஸ்லிம்களாகிய நாங்கள்   தயாராக உள்ளோம் என்கின்ற நல் லெண்ணத் தினையும்  நாங்கள்  பிரகடனம்  செய்கின்றோம்.

கல்முனை நகர முஸ்லிம்களின் வரலாற்றினையும் பூர்வீகத்தையும் திரிவுபடுத்தும் சதித்திட்டங்களுக்கு எதிரான கல்முனை பிரகடனம். கல்முனை நகர முஸ்லிம்களின் வரலாற்றினையும் பூர்வீகத்தையும் திரிவுபடுத்தும் சதித்திட்டங்களுக்கு எதிரான கல்முனை பிரகடனம். Reviewed by Madawala News on 10/01/2016 08:49:00 AM Rating: 5