Yahya

மிஹின்லங்கா மூலம் அகலக் கால் வைத்த ராஜபக்ச ரெஜிமன்ட்... இந்த சிறு சம்பவமே சாட்சி.-By: Zafar Ahmed -

2014 இல் ஒரு மாலை நேர மத்தளை விமான நிலையம்.மத்தளையில் இருந்து தமிழகத்தின் மதுரை செல்லும் மிஹின்லங்கா விமானத்தைப் பற்றிய விபரம் ஒலித்துக் கொண்டிருக்க டிபார்ச்சர் லவுன்ச் இல் ஒரு காக்காய் குருவி இல்லை.ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிற மாதிரி.இத்தனைக்கும் கட்டுநாயக்கவில் இருந்து மத்தளை வந்த விமானம் ஏதோ நேர்த்திக் கடன் கழிக்க வந்தது போல் வந்து சும்மாவே மதுரை சென்றது.


ஒரு வரிசையில் நிற்க வைச்சி எண்ணி எடுக்கும் அளவுக்கு தமிழர்களைக் கொண்டிருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு ப்ளைட்.எப்பேர்பட்ட பூகோள அறிவு இது...


ஒரு விமானம் லேண்ட் ஆகும் போதும், டேக் ஆப் ஆகும் போதுமே உச்சபட்ச எரிபொருள் விரயம் ஆகிறது.இந்நிலையில் கட்டுநாயக்கவில் இருந்து வெறும் இருபது நிமிச பயணத்தில் மத்தளைக்கு வந்து ஆட்களே இல்லாமல் செல்லும் இந்த திருப்பணியை விதியின் சதி என்பதா இல்லை வங்குரோத்துத்தனத்தின் கதை என்பதா?


2007 ஆம் ஆண்டு ஜனவாரி இல் மகிந்த மிஹின் லங்காவுக்கு நாமம் சூட்டிய போதே ராஜபக்சாக்கள் இலங்கை வான் பரப்பில் அகலக் கால் வைக்கப் போகிறார்கள் என்று புரிந்து போனது.சேர்மனாக நியமிக்கப்பட்டவரும் லேசுப்பட்டவர் அல்ல.நிதி மோசடி வழக்குகளில் சிக்கித் தவிக்கும் சிந்தனைச் சிற்பி சஜிந்தவாஸ் குணவர்தன.

பஹ்ரைன், மதுரை,டாக்கா, காயா என்று ஓடியது மிஹின்.என்ன பண்றது.மிஹின் லங்கா என்னும் ஏழைக் குமரி தன் வாழ் நாளில் துயரத்தைத் தவிர ஒரு இழவையும் கண்டதே இல்லை.அத்தைகைய மிஹின் லங்கா ஆள் அரவமற்ற மத்தளைக்கு போகுது என்றால்..என்னா ஒரு ஜோடிப் பொருத்தம் பாருங்கள்...

இலங்கையின் அரச நிறுவனங்களின் சரித்திரத்தில் அதிக நட்டத்தைச் சந்தித்த நிறுவனமாய் மாறி தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறது மிஹின் லங்கா.இதை ஆரம்பித்த உத்தமோத்தமர்கள் வம்பும் வழக்குமாய் அலைய,இந்த சுமக்க முடியாத பெரும் சுமையும் வழக்கம் போல சாமானியனின் தலையிலேயே வந்து விழுந்து இருக்கிறது.அடேங்கப்பா 17 பில்லியன் டாலர்கள் காற்றில் கரைந்து விட்டன..எத்தனை பெரிய இழப்பு இது.


மத்தளை விமானநிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம்,மிஹின் லங்கா என்று ஒன்றோடு ஒன்று ஒட்டாது குருடனுக்கு குருடன் வழிகாட்டுவது மாதிரி கட்டப்பட்ட தூர நோக்கற்ற ஏதேச்சாதிகார கட்டுமானங்களின் விளைவுகளை அனுபவிக்க தொடங்கி இருக்கிறோம்.கட்டற்ற அதிகாரக் குவியல்கள் ஓரிடத்தில் செறிந்து இருக்கும் போது இத்தகு சால்ஜாப்புகள் சாத்தியமானதே.
வரலாறு நமக்கு சொல்லித் தந்த கசப்பான பாடங்களில் ஒன்று தான்.பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் போது கட்டவிழ்த்துவிடப்படும் இனவாதம்..

அதுதான் போலி தேசப்பற்றாளனின் கடைசி சரணாலயம்.இங்கே அதில் மாற்றம்.ஆளும் கட்சி விழி பிதுங்கி இருக்க மிஹின் லங்காவின் வளர்ப்புத் தாத்தாவும் பரிவாரங்களும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அதைச் செய்து கொண்டு இருக்கின்றன.

-By: Zafar Ahmed -
மிஹின்லங்கா மூலம் அகலக் கால் வைத்த ராஜபக்ச ரெஜிமன்ட்... இந்த சிறு சம்பவமே சாட்சி. மிஹின்லங்கா மூலம் அகலக் கால் வைத்த ராஜபக்ச ரெஜிமன்ட்... இந்த சிறு சம்பவமே சாட்சி. Reviewed by Madawala News on 10/05/2016 02:24:00 PM Rating: 5