Free Space

நான் ஒரு இனவாதி அல்ல.. அளுத்கம கலவர சம்பவங்கள் நடக்கும் போது நானும் கோத்தபாயவும் வெளிநாட்டில் இருந்தோம்.



எந்த இனத்திற்கும் அநீதி ஏற்பட இடமளிக்க போவதில்லை எனவும் தான் ஒரு இனவாதி அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் சில அடிப்படைவாதிகள் இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை  தனது அலுவலகத்தில் சந்தித்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் நாட்டிற்குள் தவறான விடயங்களை பரப்பினர். முஸ்லிம் மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த தவறான விடயங்களை கொண்டு சென்றனர்.

நாங்கள் எப்போதும் தமிழ் மக்களுடன் போரிடவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டோம்.

முஸ்லிம் மக்களை வடக்கில் இருந்து விரட்டிய போதும், கிழக்கில் இருந்து விரட்ட முயற்சித்த போது ஒரு மாதத்திற்குள் நாங்கள் முஸ்லிம் மக்களை மீண்டும் மூதூருக்குள் அனுப்பினோம்.

யாருடைய காலத்தில் அந்த சுதந்திரம் கிடைத்தது? பேருவளை , அளுத்கம சம்பவங்கள் நடக்கும் போது, நான் மற்றும் கோத்தபாயவும் வெளிநாட்டில் இருந்தோம். சம்பவத்தை அடுத்து முஸ்லிம் அமைச்சர்களை அனுப்பினோம். நாடு திரும்பிய பின்னர், நானும் அங்கு சென்றேன்.

இந்த சம்பவத்தின் பின்னர், தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நாங்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்தனர்.

எம்முடன் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்திருந்த போது, அவர்களை எம்மிடம் இருந்து பிரித்து அடுத்த பக்கம் சேர்க்க மேற்குலக நாடுகள் செய்த சூழ்ச்சிக்குள் நாம் சிக்கினோம். இதுதான் உண்மையான கதை.

நான் எந்த இனத்திற்கு அநீதி இழைத்ததில்லை. நான் இனவாதியல்ல. இனவாதியாகவும் மாறமாட்டேன். நாட்டில் உள்ள அனைத்து இனங்களும் சுதந்திரமாக வாழவே போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒரு இனவாதி அல்ல.. அளுத்கம கலவர சம்பவங்கள் நடக்கும் போது நானும் கோத்தபாயவும் வெளிநாட்டில் இருந்தோம். நான் ஒரு  இனவாதி அல்ல.. அளுத்கம கலவர சம்பவங்கள் நடக்கும் போது நானும் கோத்தபாயவும் வெளிநாட்டில் இருந்தோம். Reviewed by Madawala News on 10/06/2016 07:44:00 PM Rating: 5