tg

ஏன் முஸ்லிம் பாடசாலைகளில் தாடி வைக்க அனுமதிக்க கூடாது?முஸ்லிம் பாடசாலைகளில் எமக்கு இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாதா? இது இன்று பலருடைய ஏக்கமாக இருக்கின்றது.

 குறிப்பாக இந்த நாட்டில முஸ்லிம்களுக்கென தனித்துவமான முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன. வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுக்கு நேரகாலத்துடன் பாடசாலை விடப்படுகின்றது. றமழானில் விடுமுறை வழங்கப்படுகின்றது.  ஆனால் இன்று இப்பாடசாலைகளில் எமது மார்க்கக் கடமையான தாடியை வைக்க அனுமதிப்பதில்லை.

இப்பிரச்சினை இன்று பல பாடசாலைகளில் பூதாகரமாக ஆகியுள்ளது என்பதனை மறுக்க முடியாது.

இன்று பல பாடசாலைகளில் நீண்ட தாடியை வைத்துக் கொண்டு வந்த மாணவர்கள் டிசிபிளின் கமிட்டியினால் எச்சரிக்கப்படுகின்றார்கள். அல்லது திருப்பி அனுப்பப் படுகின்றார்கள்.

எனவே டிசிபிளின் கமிட்டியில் உள்ளவர்கள் முஸ்லிம் ஆசிரியர்கள். அதிபரும் முஸ்லிம். ஒரு கடமையை தடுப்பதற்கு அல்லது மறுப்பதற்கு இவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.

பின்னர் இந்த விடயம் முகநூல்களிலும் வட்ஸ் அப்களிலும் ஒரு பேசு கொருளாக மாறுகின்றது. இயக்கங்களைச் சாடவும் தனக்கு விருப்மில்லாதவர்களைக் கழுவவும் இது ஒரு வாய்ப்பாக அமைகின்றது.


அரசாங்கப்பாடசாலைகளைப் பொறுத்தவரை அதன் அதிகாரம் முற்றுமுழுதாக அரசுக்குறியது என்பதனை யாரும் மறுக்க முடியாது. அந்தப் பாடசாலைக்கான அனைத்துச் செலவையும் அரசே மேற்கொள்கின்றது. உதாரணமாக ஒரு பாடசாலையில் 100 ஆசிரியர்கள் இருந்தால் அவர்களின் ஊதியம் மாதாந்தம் சராசரியாக 40 ஆயிரம் ருபாய்கள் எனின் மாதத்திற்கு சுமார் 40 இலட்சம் ரூபாய்களை அரசு அவர்களுக்காக செலவிடுகின்றது.

அது வருடத்திற்கு சுமார் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய்கள் ஆகின்றது. ஒரு பாடசாலைக்கு சுமார் 30 வருடகால வரலாறு இருந்தால் அரசாங்கம் அதற்கு செலவிட்ட தொகையை கணக்குப் பார்த்தால்? இதே போல் பாடசாலைக்கான கட்டிடங்கள் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களுக்காக அரசாங்கம் இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றது.

எனவே இவ்வாறு ஒருபாடசாலைக்கு அரசாங்கம் செலவழிக்கும் பொது அப்பாடசாலை எவ்வாறு நடைபெற வேண்டுமென்ற சட்ட திட்டங்களையும் அந்த அரசாங்கமே வழங்கியுள்ளது.

மாணவர்களின் உடை எவ்வாறு இருக்க வேண்டும் அவர்களின் தலைமுடி எவ்வாறு அமைய வேண்டும் என பல்வேறு விடயங்களை “சேர்குளர் என்ற வகையில் அது ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கியுள்ளது.


எனவே அதிபர்கள் ஆயினும் சரி ஆசிரியர்கள் ஆயினும் சரி அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் அவர்கள் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட கடமைப்பட்டுள்ளனர்.


இந்த வகையில் நோக்கும் போது தாடிவைத்தல் என்ற விடயத்தில் டிசிபிளின் கமிட்டியில் உள்ளவர்கள் கூறுவது என்னவென்றால் செர்குயுலரில் தாடி வைப்பதற்கு அனுமதி இல்லை என்பதாகும்.

அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கூறிய ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் அவர் சேவையில் இருந்தபோது கல்விக் காரியாலய பணிப்பாளர் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமயம் அன்று ஒரு மாணவன் தாடியுடன் பாடசாலையில் காணப்பட்டான்.

அதனை அவதானித்த பணிப்பாளர் சிங்களத்தில் “விதுகல்பதிதுமா சேர்குயுளர் எக தன் னெத்த?” ( அதிபர் அவர்களே சுற்று நிறுபத்தை அறிய வில்லயை? ) என கேட்டு தாடி வைத்தல் சுற்று நிருபத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை உணர்த்தியுள்ளார். அன்று இன்று போல் இனவாதிகள் இல்லாத காலம். அதனால் அது அந்த விடயம் அத்துடன் முற்றுப் பெற்றுள்ளது.


ஆனால் இன்று அப்படியல்ல. எது எப்படி இருந்தாலும் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள் ஓரளவு தாடி வைத்தும் வையாமலும் இருப்பதனை எமது ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை.

 ஆனால் நீண்ட தாடிகளை வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வரத்தொடங்கும் போதுதான் அதிபரும் ஆசிரியர்களும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றார்கள். ஏனெனில் இந்த விடயம் கல்விக் கந்தோருக்கோ அல்லது கல்வி அதிகாரிகளுக்கோ தெரிய வருகின்றபோது அதிபரும் ஆசிரியர்களும் சுற்று நிருபத்தை மதிக்காத குற்றவாளிகள் ஆகின்றார்கள்.


எனவே அவர்கள் தாடி வைப்பதற்கு எதிராக பாடசாலையில் நடவடிக்கை எடுக்கின்ற போது அதனை பெரிது படுத்தி முகநூலிலும் வடஸ்அப் இலும் ஒரு விவகாரமாக மாற்றி இன்டர்நெட் முப்திகளுக்கு அவலாக மாற்றுகின்றார்கள். ஒவ்வொருவரும் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை நிர்வாகத்தை விமர்சிப்பதில் அவர்களை வழிகேடர்களாக காட்டுவதில் ஒருத்தருக்கு ஒருத்தர் சலைத்தவர்கள் அல்லர் என்பதனை நிருபிக்கின்றார்கள்.

இந்த விவகாரம் சில இடங்களில் பொலிஸ் நிலையம் வரை சென்றதனை நாம் அறிகின்றோhம். கடந்த காலங்களில் ஒலிபெருக்கியில் அதான் சொல்லுவதற்கு நீதி மன்றத்தடை விதிக்கப்பட்டதனை நாம் அறிவோம். இதற்குக் காரணம் பெரும்பாண்மை இனவாதிகள் அலலர். எமது முஸ்லிம் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகள் பொலிஸ் நிலையம் சென்று பின்னர் நீதி மன்றம் வநதபோது கடைசியில் ஒலிபெருக்கியில் அதான் சொல்லுவதற்கே தடையாக அமைந்ததை அவதானிக்கின்றோம்.

நாளை இந்த தாடி விடயத்திலும் இவ்வாறான ஒரு நிலைமையை எமது சகோதரர்கள் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். தற்போது ஓரளவு கண்டும் காணாததுபோல் இருக்கின்ற நிலைமைக்கும் ஆப்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்.

எல்லவற்றிற்கும் ஒரு முறையுண்டு. தலையை விட்டு விட்டு வாலைப்பிடிப்பதில் அர்த்தமில்லை. உண்மையிலேயே பாடசாலைகளில் தாடி வைக்க அனுமதிக்க வேண்டுமென்றால் அதற்கு முறையாக முறையானவர்களிடம் அனுக வேண்டும். கல்வி அமைச்சரிடமோ அல்லது அது சமப்பந்தப்பட்டவர்களிடமோ இந்த பிரச்சினை எடு;த்துச் செல்லப்பட்டு தேவையான அனுமதியை சட்டரீதியாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

 அல்லது பாராளுமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்ற வேண்டியும் ஏற்படலாம். இப்படி ஒரு வேலையை  செய்ய முடியுமாக இருந்தால் இலங்கையிலுள்ள அனைத்த முஸ்லிம் பாடசாலைகளிலும் இந்த மார்க்கக்கடமையை நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்பாக அமைக்க முடியும்
எது எப்படியோ அரசாங்க சுற்றுநிருபத்தில் இதற்கு அனுமதியில்லாத பட்சத்தில் விதன்டாவாதத்திற்காக பாடசாலை நிர்வாகத்துடன் மோதுவதில் எந்த அர்த்தமுமில்லை.


கடந்த காலங்களில் எனக்குத் தெரிந்த ஒரு பாடசாலையில் உயர்தர மாணவன் ஒருவன் பாடசாலைக்கு தாடிவைத்துக் கொண்டு வந்தபோது அதனை டிசிபிளின் கமிட்டி எதிர்த்த போது அவர் ஊரில் தனக்கு தெரிந்த உலமாக்களை பாடசாலைக்கு அனுப்பி பிரச்சினையை ஏற்படுத்தினார்.

ஆனால் அம்மாணவன் பாடசாலையிலிருந்து விலகியதன் பின்னர் அவருடைய தாடியும் மறைந்து விட்டது. தலைமுடியும் புதிய புதிய டிசைன்களில் ( கட்) வெட்டப்பட்டிருந்ததனை சுட்டிக்காட்டக் கூடியதாக இருந்தது. எனவே இப்படியும் இருக்கின்றது விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மார்க்கத்தை சரியாக பின்பற்ற வேண்டும் என்ற விடத்தில் பலர் சகோதரர்கள்  உறுதியாக இருப்பதனை அறிகின்றோம்.

பள்ளிவாசல்களில் பித் அத்கள் நடைபெறுவதனால் அல்லது நபி (ஸல்) அவர்களின் முறைக்கு மாற்றமாக பல விடயங்கள் நடைபெறுகின்றது எனக் கூறி தனிப்பள்ளி அமைத்து தமது மார்க்க் கடமைகளை பலர் நிறைவேற்றுவதனை காண்கிறோம்.

தனிப்பள்ளி அமைத்து இவ்வாறு நடந்து கொள்வதனால் ஊர் பிரிகின்றது என ஒரு சாரார் கூற ஓர் ஒற்றுமைக்காக சத்தியத்தை விட்டுக் கொடுக்க முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.

உண்மையில் ஊர் பள்ளிவாசல் என்பது அந்த அந்த ஊர் ஜமாஅத்தைப் பொறுத்தது. ஊர் மக்கள் விரும்பினால் பள்ளிவாயலில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் பாடசாலை என்பது அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டது. எல்லா பாடசாலைவகளுக்கும் ஒரே சட்டம் என அறிமுகப்படுத்தியிருந்தால் இன்று எமது பெண்பிள்ளைகள் பர்தா அணிந்து பாடசாலைக்கு செல்ல முடியாது போயிருக்கும். ஊர் பள்ளி சரிவராது தனிப்பள்ளி அமைப்போம் என்னும் போது ஏன் எமது கட்டுப்பாட்டில் இல்லாது அரசாங்கப்பாடசாலைகளில் மாத்திரம் அடம்பிடிக்க வேண்டும். தனிப்பாடசாலை அமைத்து சரியாக இஸ்லாத்தை அமுல் நடத்தலாமே.

 தனிப்பாடசாலை அமைப்பதனால் ஊர் இரண்டாகப் பிரியப்போவதுமில்லையே? வீனாக இப்பாடசாலைகளில் சண்டைபிடித்து இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சலுகைகளையும் இல்லாமலாக்குவானேன். அல்லது முறையாக முறையானவர்களை அனுகி சட்டரீதியாக அனுமதியைப் பெற்று இந்தக் கடமையை நிறைவேற்ற முயற்சிப்போம்
நன்றி

அல் ஹாஜ் மஹ்ரூப் 
ஓய்வு பெற்ற அதிபர்

ஏன் முஸ்லிம் பாடசாலைகளில் தாடி வைக்க அனுமதிக்க கூடாது? ஏன் முஸ்லிம் பாடசாலைகளில் தாடி வைக்க அனுமதிக்க கூடாது? Reviewed by Madawala News on 10/16/2016 08:49:00 PM Rating: 5