Kidny

Kidny

மாணவர் பாராளுமன்றத் தேர்தலும், மறைக்கப்படும் கசப்பான உண்மைகளும்.இலவசக் கல்வியிலே, இன்பத்தில் திளைக்கின்ற, இனிய நாடு, எம் இலங்கை; இங்கு தான் பணத்தின் வாசம் மறந்து, ஏழை மகனும், செல்வந்த மகனும் நண்பர்களாய்ப் பழக முடியும்; இங்கு தான் பாரபட்சமின்றிக் கறுப்பனும், வெள்ளையனும் பல்லாண்டுகள் இணைய முடியும்; இங்கு தான் எந்தப் பிள்ளையும் சமனான கல்வியை எளிதாகப் பெற முடியும்.

கல்வி புனிதமானது, குருடாய்க் கிடந்த எம் கண்களுக்கு அது ஒளி தந்தது; செவிடர்களாயிருந்த எம்மை அது கேட்க வைத்தது; ஊமையர்களாயிருந்த எம்மை அது பேச வைத்தது. தூங்கிக் கிடந்த எம் இதயங்களை அது தட்டி எழுப்பியது.

இத்தகைய புனிதமான கல்வியை, இவ்வழகான நாட்டில், சில பல இடையூறுகளுக்கு மத்தியிலும், இனிமையாகப் பெற்று வந்தோம். தனியார் கல்வி நிலையங்களும், கட்டணம் செலுத்தப்பட்ட கல்வியும் என்று தொடங்கப்பட்டனவோ, அன்றிலிருந்து இலவசக் கல்வியின் இணையில்லாத சுகத்தை இன்புற அனுபவிக்கும் பாக்கியத்தை நாம் இழக்கத் தொடங்கினோம்.
எனினும் இந்த இக்கட்டான நிலையை அரச பாடசாலைகள் கம்பீரமாக எதிர் கொண்டன. இலவசக் கல்வி என்றால் என்ன இழக்காரமா? எனக் கேட்க வைக்கும் அளவிற்கு மாணவர்களை அவை பயிற்றுவித்தன. இதற்கு அந்தப் பாடசாலைகளில் தன்னலன் பாராது உழைத்த எம் ஆசிரியர்களே மூல காரணம்!

இத்தகைய சூழ் நிலையில், இவ்விலவசக் கல்வியின் மகிமைக்குக் குந்தகம் ஏற்படுத்தி, அதனைச் சீர் குலைத்து, அதன் பயனை இலங்கை மக்களை அனுபவிக்க வைக்கக் கூடாதெனக் கங்கணம் கட்டிக் கொண்டு பணி புரியும் பல சக்திகள் களமிறங்கியுள்ளன.


அரசியல் ஒரு சாக்கடை மட்டுமல்ல, அது ஒரு போதையும் கூட. அந்த போதையில் சுகம் கண்டு, மீண்டு வந்தவர்களை நான் மிக மிக அரிதாகத் தான் காண்கிறேன். அந்த போதைக்கு அடிமைப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்கின்றனர்; அடித்துக் கொள்கின்றனர்; அடுத்தவரைப் பற்றிக் குறை பேசுவதிலேயே காலம் கழிக்கின்றனர்; இது தவிர இன்னோரன்ன பல அடாவடிகளில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் அரசியல்வாதிகளின் இயல்பல்ல, ஆனால் அரசியலின் இயல்பு. இவற்றிற்கெல்லாம் புறம்பானதொரு அரசியல்வாதியை இது வரை நான் கண்டதில்லை.
இந்நிலையில், இலங்கை அரசு, மாணவர்களிற்கு ஜனநாயகத்தைப் போதித்தல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல் என்ற பெயரில், அரச பாடசாலைகளுக்குள் அரசியலைக் கொண்டு புகுத்தும் ஓர் செயற்பாடாகத்தான், புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்ற இம் மாணவர் பாராளுமன்றத் தேர்தலை நான் பார்க்கிறேன்.


இது எனது தனிப்பட்ட கருத்துத் தான். நீங்கள் எனது கருத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம், ஏன் எனது கருத்தை முற்றாக நிராகரிக்கலாம். அதற்காகப் பல காரணங்களைச் சுட்டிக் காட்டி ஒரு எதிர்க் கட்டுரையைக் கூட நீங்கள் வெளியிடலாம். ஆனால் அவையெல்லாம் வெறும் விவாதக் குறிப்புகளாய் இருக்குமே தவிர, நடைமுறையிலிருந்து தூரமாய்த் தானிருக்கும்.

அதற்காக, இவன் "தான் பிடித்த முயலிற்கு மூன்று கால் தான்" எனும் விதண்டாவாதக் கொள்கையை உடையவனோ என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இளம் சந்ததியின் மத்தியில் விதைத்திருக்கிற நச்சு எண்ணங்களைப் பின்புலமாய்க கொண்டே நான் பேசுகிறேன். யதார்த்தத்தை காரணங்களைப் பூசி மறைக்க முடியாது.


1. இது வரை காலமும் நண்பர்களாய்ப் பழகி வந்த இரண்டு மாணவர்கள், இன்று வேட்பாளர்களாகிப் பகைவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இது போட்டி, இதில் எங்கே பகைமை இருக்கிறது? இத்தகைய பல போட்டிகளை மாணவர்கள் சந்திக்கின்றனர் தானே! என நீங்கள் கூறலாம். தனது திறமைகளை வைத்து மாணவர்கள் கலந்து கொள்கிற போட்டிகளிலேயே மாணவரிடையே பகைமை எண்ணம் வளர்க்கப்படும் நிலையில், திறமைகளுக்கப்பால் பிரபல்யத்தை விரும்புகிற அரசியலில், சாதாரண போட்டியை விட பொறாமையும், வஞ்சக எண்ணமுமே மேலோங்கும் என்பது வெளிப்படை.


2. இது தவிர, சமுகத்தில் நடைமுறையிலிருக்கிற கட்சி மற்றும் பிரதேசவாதங்களை மாணவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்று நாம் நினைப்பது நமது முட்டாள் தனம். இத்தகைய வேறுபாடுகள் கொண்ட இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிற நிலையில், இவை வேட்பாளர்களான இரு நண்பர்களை இன்னும் பகைமைக்குள்ளாக்கி விடுகின்றன. இதனால் எதிர்காலச் சந்ததி எதிர் கொள்ளப் போகும் பின் விளைவுகள் பாரதூரமானவை.


3. இவற்றிற்கும் அப்பால், வேட்பாளர்களை ஆதரிக்கும் சக மாணவக் குழுக்களிடையேயும் பகைமை எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாடசாலைகளுக்குள் குழு மோதல்கள் ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி நடக்க முடியாது, மோதல்கள் ஏற்படாது ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர் என நீங்கள் கூறலாம். ஆசிரியர்கள் பொலிஸாரும் அல்ல; மாணவர்கள் பாடசாலையிலேயே 24 மணி நேரமும் இருக்கப் போவதுமல்ல. பகைமை எண்ணம் விதைக்கப்படுவதே போதுமானது. உள்ளகப் பிரச்சினைகளே பலவற்றை எதிர்கொள்கிற நிலையில், பாடசாலைக்கு வெளியில் நிகழும் பிரச்சினைகளையும் பாடசாலைக ஏற்றுக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே!


4. மாணவர்களின் பண்பாடுகளிலும் இத் தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சுய விளம்பரம் தேடுவதிலும், தற்புகழ் பாடுவதிலும் மாணவர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளமை வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிகறது. மனிதன் என்ற வகையில் தன்னைச் சிலர் ஆதரிக்கும் போது உள்ளூர ஏற்படுகிற பெருமை எண்ணம் இங்கு மாணவர்களுக்கு விதைக்கப்படுகிறது. திறமையால் ஒருவன் தோற்பதை விட ஜனரஞ்சகத்தால் ஒருவன் தோற்பது உளவியல் ரீதியிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களிடையே கல்வியில் ஆர்வம் பொதுவாகக் குறைந்திருக்கிற இக்காலப்பகுதியில், கல்வியில் ஆர்வமூட்டும் வகையிலான செயற்றிட்டங்களை அமுல் படுத்துவதில் காட்டப்படாத அதீத அக்கறையை, அரசு இத்தேர்தலில் காட்டுவதானது, அரசை சந்தேகக் கண் கொண்டு பார்க்கச் செய்கிறது. மாணவர்களின் கற்றல் பாட வேளைகள் ஏற்கனவே பல வழிகளிலும் வீணடிக்கப்படும் நிலையில், மாதமொரு பாராளுமன்ற அமர்வு என்றும், அமைச்சரவை என்றும், அதன் கீழ் சகல மாணவர்களையும் குழுக்களாக்குவது என்றும், கால நேரத்தை விரயம் செய்வதான அரசின் சுற்றறிக்கைகள சந்தேகத்திற்கு மேலும் வலுச் சேர்க்கிறது.

6. பாடசாலை மாணவர்கள் எவரும் யௌவனப் பருவத்தைக் கடந்திராதவர்கள். அவர்கள் வழிகாட்டலின்றி சரியான முடிவை எடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறவர்கள். அவர்களின் பிஞ்சு மனதில் அரசியல் எண்ணங்களையும், குரோத மனப்பாங்கினையும் வளர்த்து விடுவது ஆரோக்கியமானதொரு விடயமாய்த் தெரியவில்லை.


மாணவர்களுக்கு ஜனநாயகத்தைப் போதிக்கும் எண்ணமிருந்தால், முதலில் நாட்டிலும், தேசிய பாராளுமன்றத்திலும் அதனைக் கொண்டு வாருங்கள். மாணவர்களுக்குத் தலைமைத்துவத்தைப் போதிப்பதற்கு, நடைமுறயிலிருக்கும் மாணவர் தலைவர் முறை போதுமானது வேண்டுமானால் அதில் சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

அதை விடுத்து பாடசாலைகளின் குறிக்கோளான நாட்டுக்குத் தேவையான நற்பிரஜைகளை உருவாக்குதல் எனும் பொறிமுறையில் கையாடல் செய்யாதீர்கள். இலவசக் கல்வியை சின்னபின்னப் படுத்தி, அரசின் தனியார்மயப்படுத்தலுக்குள் பாடசாலைகளையும் சிக்க வைக்கும் முயற்சிகளுக்கு சோரம் போகாதீர்கள்.

இது மதுவைப் போன்றது மேலோட்டமாகப் பார்த்தால் நலவுகள் தான் தெரியும். ஆனால் இதனால் விளையவிருக்கும் தீங்குகள் நலவை விட மிகைத்ததாகும். எமது எதிர்காலச் சந்ததியை வளமிக்கதாக்குவோம்!
-Thilshan Ibn Nizam-
மாணவர் பாராளுமன்றத் தேர்தலும், மறைக்கப்படும் கசப்பான உண்மைகளும். மாணவர் பாராளுமன்றத் தேர்தலும், மறைக்கப்படும் கசப்பான உண்மைகளும். Reviewed by Madawala News on 10/14/2016 10:35:00 AM Rating: 5