Ad Space Available here

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் நிலை..


கருத்தரங்கு:– தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் நிலை

உரை:– வீ. அமீர்டீன் (சிரேஷ்ட விரிவுரையாளர்), அரசறிவியல் துறை, பேராதனைப் பல்கழைக்கழகம், பேராதனை.

இடம்:– தென் கிழக்குப் பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடம்
காலம்:– 13.04.2002

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல்வேறு காலகட்டத்திலும் சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் அதிகாரங்களை இன ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தவகையில் இறுதியாக இப்போது ஆட்சி அதிகாரத்திலிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது, விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவந்திருப்பது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வென்றால் மிகையாகாது.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டில் தேசியப்பற்றுடன், வரலாற்றுக் காலம் முதல் வாழ்ந்து வந்த போதிலும் சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளின் மாற்றங்களினால் தோற்றுவிக்கப்பட்ட சிங்கள, தமிழ், தேசியவாதத்திற்குள் சிக்குண்டு இருபக்கத்திலும் நசுக்கப்பட்டு உரிமைகளை இழந்து வாழ்கின்ற ஒரு போக்கே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் தாம் வாழும் பிரதேசங்களில், தமிழ் மக்களுடன் கூட்டுச் சேர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறு ஒன்று சேர்ந்து வாழ்ந்த போதிலும் முஸ்லிம்களின் உணர்வுகள் பொருளாதார நடவடிக்கைகள் தமிழ் தீவிரவாதிகளினால் மீறப்பட்டும், பறிக்கப்பட்டும் வந்துள்ளமையே கடந்தகால நிகழ்வுகள் காட்டுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் 1980 ஆம் ஆண்டுகளின் பின்னர் அதிலும் குறிப்பாக 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற கசப்பான நிகழ்வுகள் கிழக்கு முஸ்லிம்களின் மனதில் இன்னும் அழியாச் சின்னங்களாக இடம்பிடித்திருக்கின்றன. தமிழ் தேசியப் போராட்டத்தில் முக்கியமான பங்கினை முஸ்லிம்கள் வழங்காவிட்டாலும் அவர்களின் போராட்டத்திற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை. இருப்பினும் தமிழ் தீவிரவாதக் குழுக்களால் முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையால், இன்று அமைதியான சூழல் இருந்தபோதிலும் அவர்களின் நடவடிக்கைகளில் நம்பிக்கையற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இத்தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள் நீதி, நியாயத்திற்குப் புறம்பாக முஸ்லிம் மக்களை புறக்கணித்து அவர்களின் இன உரிமைகளைப் படிப்படியாக சூறையாடியும் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் தடுத்ததன் காரணமாகவும் முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற பல தனியான அடையாளங்களுடன் கூடிய மாற்று வழிகளை நாடவேண்டியேற்பட்டுள்ளது.

ஆயினும் இன்று முஸ்லிம்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையின் நிகழ்வுகளை உணரமுடியாத அளவிற்கு தேசிய ரீதியில் இடம் பெறும் அரசியல் மாற்றங்கள் காரணமாயிற்று. அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிட்டு கூறத்தக்க எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. பாராளுமன்றத்திலிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவெனப் புறப்பட்ட கூட்டத்தினர் முஸ்லிம்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கேற்ற தீர்வு முயற்சிகளை மேற்கொள்ளாமல் நாங்கள் நிரந்தர சமாதான ஒப்பந்தம் வருகின்ற போது எல்லாவற்றையும் செய்துவிடுவோம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் ஓர் உண்மையை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு இறுதித் தீர்வுகள் எட்டப்படும் வரை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் ஓர் சட்டப்படியான ஆவணம் என்பது உணரப்படல் வேண்டும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாகவே புலிகளின் அரசியல் செயற்பாடுகள் வடகிழக்கில் நிலைநிறுத்தப்படவிருக்கின்றது. இதனால் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, சமூக செயற்பாடுகள் தீர்க்கமான முறையில் திட்டமிடப்பட்டு வரையறை செய்யப்படுகின்ற போதே இந்த நாட்டில் ஏற்படவிருக்கும் நிரந்தரமான சமாதான முயற்சிகளை உணர்வுபூர்மானவையாகவும் அதே சமயம் ஐய உறவுகளற்ற முறையிலும் அமைய முடியும்.

ஆகவே, முஸ்லிம்கள் இந்த நாட்டில் பரவலாகச் சிதறி வாழ்ந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு செறிந்து வாழ்கின்றமை இப்பிரதேசத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இது இலங்கை முஸ்லிம்களுக்கு பல பிரதேசங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை காண்ப்பட்டபோதிலும் என்னைப் பொறுத்தவரையில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் வரையறை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற போதே இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பாக அமையும் எனலாம். மாறாக கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகுமானால் இலங்கையின் சகல பிரதேசங்களிலும் வாழும் முஸ்லிம்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். ஆகவே நிரந்தர சமாதானத் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுகின்ற போது முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஏனையோரும் பின்வரும் அம்சங்களைக் கவனத்திற் கொள்ளவேண்டுமென நினைக்கிறேன்.

இலங்கை முஸ்லிம்களின் 1/3 பகுதியினர் கிழக்கில் செறிந்து வாழ்கின்றனர். இருப்பினும் தமிழ் மக்களின் உரிமைகளை வரையறை செய்கின்றபோது வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமாயின் இவர்களது தொகை 18 வீதமாக குறையயிருப்பதனால் எதிர்கால இலங்கையில் குறிப்பாக 30 வீதமான நிருவாக நடவடிக்கைகள் இருக்கத்தக்கதாக மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.

முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவைகளைக் கவனித்து பரிபாலிக்கும் நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களின் கைவசமிருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு விகிதாசாரப்படி உரித்தான அரசாங்க காணிகளில் ஏனையவர்கள் குடியேறுவது தவிர்க்கப்படல் வேண்டும்.

நாம் நிகழ்த்தப்போகின்ற அரசியல் அமைப்பு ரீதியான உரிமையானது இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம் மக்களது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சுவீட்சமான வாழ்வையும் பெற்றுத்தருவதற்கான அடிப்படை அம்சமாக அமைதல் வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மக்களைப் போன்று தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு, மதம் போன்றவற்றைக் கொண்டிருப்பதனால் மேற்படி அம்சங்களை தாங்கள் வாழும் பிரதேசங்களில் எந்தவிதமான இடையூறுகளுமின்றிப் பேணிப்பாதுகாப்பதற்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யப்படுதல் வேண்டும். வடகிழக்குப் பிராந்தியத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் மக்களின் பின்தங்கிய நிலையில் காணப்படும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான உடன்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். 

நாட்டில் நாலாபுறங்களிலும் பொருளாதார நடடிவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். முஸ்லிம்களின் பாரம்பரிய நிலப்பகுதிகளில் எந்தவிதமான அச்சமுமின்றி வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். தமிழ் தேசிய வாதத்திற்குள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாகக் காணப்படும் ஒரு இனக்குழு என்பதுடன் வடக்கும் கிழக்கும் முஸ்லிம்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

வடகிழக்குப் பிரதேசத்தில் ஓர் இடைக்கால அரசாங்கம் அமைய வருகின்றபோது தமிழ் மக்கள் பெறுகின்ற உரிமைகளையும் சலுகைகளையும் வாய்ப்பினையும் சுதந்திரத்தினையும் முஸ்லிம்கள் பெற்று வாழ்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். இடைக்கால அரசாங்கத்தில் அங்கத்தவர்களாக நியமிக்கப்படும் முஸ்லிம்கள் பிரதிநிதிகள் தேசிய அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருக்காமல் அவர்களுக்கு ஆக்கமான அரசியல் அதிகாரமும் ஆதிக்கமும் அதனைப் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும்.

வேலைவாய்ப்பு, காணிப்பகிர்வு, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள் சம்பந்தமானவற்றில் முஸ்லிம்களின் வரலாற்று வசிப்பிடங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும். ஏற்படுத்தப்படும் இறுதித் தீர்வு திட்டத்தில் சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் நடைமுறை ரீதியாகவும் பேணப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

மீள் வாசிப்புக்காக வை.எல்.மன்சூர்

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் நிலை.. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் நிலை.. Reviewed by Madawala News on 10/31/2016 01:21:00 PM Rating: 5