Kidny

Kidny

நமக்கான பொறுப்பும் மக்கள் பாதுகாப்பும் ..


-எம்.எம்.ஏ.ஸமட்-
நாட்டில் மௌன அமைதி நிலவினாலும் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்நாடு எதிர்நோக்கிய யுத்தத்தின் காரணமாக இத்தேசத்தில் வாழம் அனைத்து இன மக்களும் ஏதோவொரு வகையில் துன்ப துயரங்களையும், நெருக்கடிகளையும், அச்சத்தையும் உள்வாங்கியவர்களாக வாழ்ந்த காலங்கள் இன்னும் மனங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது.

அதன்வடுக்கல் இதயங்களை விட்டு அகலாத, அகற்றமுடியாத நிலையில், வீதி விபத்துக்களாலும், தற்கொலை, கொலை, கொள்ளை, கடத்தல் சிறுவர் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறைகள் என்ற படுபாதாலச் சம்பவங்களினாலும,  நோய்களாலும், வாழ்வாதாரச் சிக்கல்களினாலும் மக்கள் தினமும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை வளம் நிறைந்த இலங்கைத் திருநாடு இத்தகைய துன்பியல் நிகழ்வுகளால் காலத்திற்குக் காலம் அவஸ்தைப்படுவது இயற்கையின் நியதியா? அல்லது மனித செயற்பாடுகளின் விளைவா?  என வினவவும் தோன்றுகிறது.

துப்பாக்கிச் சூடுகளும் வால் வெட்டுக்களும் என்ற அபாயகரமான நிகழ்வுகளின்  பயம் ஒரு புறம் மக்களை ஆட்கொண்டிருக்கையில,நோய்களின் தாக்கமும் மறுபுறம் மக்களை இம்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

தொற்றா நோய்களுக்கும் தொற்று நோய்களுக்கும்  மக்கள் அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நீண்ட காலம் நிலவிய கடும் வரட்சியின் பின்   வட கிழக்கு ஆழ்கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.​

வரட்சியும் மழையும்

இலங்கையின் காலநிலைக்கேற்ப மழை வீழ்ச்சிக் காலமானது மே மாதம் முதல் ஆகஸ்ட மாதம் வரை தென்மேல் பருவ மழைக் காலமாகவும் நவம்பர் முதல் டிசம்பர் வரை வட கீழ் பருவ மழை காலமாகவும் காணப்படுகிறது. இந்த வட கீழ் பருவ மழைக் காலம்

ஆரம்பிப்பதற்கு முன்னதாக வடகிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக மழை மொழிய ஆரம்பித்திருக்கின்றபோதிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாட்டின் 23 மாவட்டங்களையும் உள்ளடக்கி பல பிரதேசங்கள் கடும் வரட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது

வடக்கு, கிழக்கு மாகாண மாவட்டங்கள் அடங்கலாக ஏனைய மாகாணங்களின் மாவட்ட மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்குமேற்பட்ட காலம் கடும் வரட்சியினால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். மக்கள் மாத்திரமின்றி, கால் நடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இவ்வரட்சியினால் 23 மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஏறக்குறைய 236,528 குடும்பங்களைச் சேர்ந்த 879,156 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வரட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை பெய்வது ஒரு வகையில் ஆறுதல் அளித்தாலும் பருவ கால மழை ஆரம்பித்ததன் பிற்றபாடு மழை நீர் காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகி வளர்வதற்கான சூழல் உருவாகி நோய்கள் பரவும் நிலையும் உருவாகலாம். எனவும் இதனால் மக்கள் இது குறித்து கூடிய அவதானம் செலுத்த வேண்டுமென சுகாதாரத் தரப்பினர் மக்களை அறிவூட்டியுள்ளனர்.

இதனால், ஆட்கொல்லி நோயான டெங்குக் காய்ச்சல் குறித்த அவதானம் அவசியமாகவுள்ளது. டெங்குகக் காய்ச்சல் குறித்த அவதானம் நம்மில் பலரின் சிந்தனையில் இருந்தாலும் இன்னும் பலரின் சிந்தனையில் இந்நோய் தொடர்பான கவனம் இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. அது பாதிப்புக்களையும் ஏற்படுத்துகிறது. ​

மழை காலத்தில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு நுளம்புகளே பிரதான காரணிகளாக இருக்கின்றன. நுளம்புகள் பெருகி வளர்வதற்குத் தகுந்த சூழலைத் தோற்றுவிப்பதில் மழை நீர் பெரும் பங்கு வகிக்கிறது. பெருகி வளரும் நுளம்புகளினால் ஏற்படும் நோய்கள் தொடர்பாகவும் நோய்களுக்கான சிகிச்சை பெறுவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு கட்டுபடுத்த முடியும் என்பது குறித்தும் ஒவ்வொரு தனி நபரும் குடும்பமும் அறிந்திருப்பது அவசியமாகும். நம்மை நாம் பாதுகாக்க முயற்சிக்காவிடின் நாமும் பாதிக்கப்பட்டு பிறரும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மற்றும்  தேசிய டெங்கு தடுப்புப் பிரிவும் நுளம்புகளினால் ஏற்படும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்ளை காலத்திற்குக் காலம் முன்னெடுத்தாலும் அதற்கான ஒத்துழைப்பு மக்களினால் வழங்கப்படாதிருப்பதை இப்பிரிவுகளின் நடவடிக்கைளின்போது டெங்கு நுளம்புகள் பெருகி வளர்வதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை அவதானிக்கின்றபோது அறிய முடிகிறது.

டெங்குப் பாதிப்பும் நடவடிக்கைகளும்

சுகாதார அமைச்சினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பல செயற்திட்டங்களின்போது டெங்கு நுளம்பு விருத்தியடையக்கூடிய சூழலை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் பல தரப்பினர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள், பாடசாலை அதிபர்கள் என பல தரப்பினர்களுக்கும் எதிராக இவ்வருட ஆரம்பம் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சின் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது.

முக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வங்காது பொடுபோக்கு மனப்பாங்குடன் செயற்படுவது காலம் மாறினாலும் மக்களின் மனப்பாங்குகள் இன்னும் மாறவில்லை மனப்பாங்குகளை மாற்றுவதற்கான முயற்சிகள் கூட மக்களிடையே காணப்படவில்லை என்பதை நன்கு புடம்போடுகிறது. முக்களின் மனப்பாங்கு மாற்றத்திற்கான தேசிய செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டால் கூட அவை நல்ல பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

இந்நிலையில், இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதத்தின் இத்தினம் வரை டெங்கு நுளம்பின் நோய்த்தாக்கத்தினால் 44,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில், ஜுலை மாதத்தில் பத்தாயிரத்துக்கு அதிகமானவர்களும் ஜனவரி மாதத்தில் ஆராயிரத்துக்கு மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்களை நோக்குகின்றபோது, மேல் மாகாணத்திலலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 13,703 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 5,727 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2,922 பேரும் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இம்மாவட்டங்களில் ஆளாகியுள்ளனர்.

நம்மை நாம் பாதுக்க எடுக்கம் அக்கறையில் உள்ள கவனக் குறைவே நம்மை நோய்கள் காவுகொள்ளக் காரணமாகவுள்ளது. இதனால் டெங்கு நோய் குறித்த அவதானம் நம்மைப் பாதுகாப்பதோடு பிறறையும் பாதுகாக்க வழி வகுக்கும்.

டெங்கு ஒழிப்பும் அக்கறையும்

நுளம்புகள் கடிப்பதன் மூலமே டெங்கு, உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆபாரிக்க நாடுகளிலும் ஏனை சில நாடுகளிலும், தற்போது ஆசிய நாடுகளிலும் பரவி வரும் சிகா நோய் கூட ஒருவகை நுளம்பு கடிப்பதானல் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது பெரும்பாலனா நுளம்புகள் மாலை வேளையிலும் இரவு நேரங்களிலும் கடிக்கின்றன. எனினும் டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் அல்லது பரப்பும் நுளம்புகள் பகல் வேளையிலேயே கடிக்கின்றன. வீட்டுக்குள்ளே மாத்திரமின்றி வெளிப்புறங்களிலும் நுளம்புகள் கடிக்கலாம். நுளம்புக் கடியிலிருந்தும் அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் அயலவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சாரும். நமது சுற்றுச் சூழலில் நுளம்புகள் பெருகக் கூடிய சூழலைத் தோற்றுவிக்காமலும் அவ்வாறு நுளம்புகள் பெருகக்கூடிய சூழல் காணப்படுமிடத்து அவற்றை அழிக்கக் கூடியவர்கள் வந்து அழகிக்கும் வரை காத்திராமல் நம்மால் முடிந்தளவு அச்சூழலைச் சுத்தம் செய்து நுளம்பு பெருக்கத்திற்ன வாய்ப்பை இல்லமால் செயவது சமூகப் பொறுப்பாகும்.

டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் 'ஈடிஸ் ஈ ஜிப்டஸ்', 'ஈடிஸ் எல்பொபிக்டஸ்' ஆகிய நுளம்புகள் நீர் சேரக் கூடிய வெற்றுப் பாத்திரங்கள், வெற்று டின்கள், தயிர்ச்சட்டிகள் முட்டிகள், பழைய டயர்கள், சிரட்டைகள், கோப்பைகள் இன்னும் பல நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களிலிருந்து பெருகுகின்றன.

நுளம்பகள் பெருக்கூடிய  இடங்கள் தொடர்பில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர வழிகளினூடாக விழிப்பூட்டல் செய்யப்பட்டும் அது குறித்து மக்களில் பலர் அலட்சியப்போக்குடன் செயற்படுவதனாலேயே டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின்  மனோநிலையானது இந்நோய் தொடர்பிலும் இவற்றைத் தடுப்பது தொடர்பிலும் திசைதிருப்பப்படாத நிலையில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க முடியாது.

நுளம்புகள் பெருகுவது தடுக்கப்படல் வேண்டுமாயின் நுளம்புகள் பெருகி வளரும் என்று கருதப்படும் மேற்கூறப்பட்ட பொருட்களை உடைத்து நொருக்கலாம் அல்லது புதைக்காலம். எரிக்கக் கூடியவற்றை எரித்து விடலாம். மலர்ச்சாடிகள், எறும்புகளை அகற்றுவதற்கு வைக்கப்படும் தண்ணீர்ச்சாடிகள், என்பவற்றிலுள்ள தண்ணீரில் சிறிது உப்பை அல்லது சவர்க்காரத்தைக் கலந்துவிடவும். முடியுமாயின் அவற்றிலுள்ள நீரை அடிக்கடி மாற்றவும். கூரையின் மேல் அல்லது முற்றங்களில் கிடக்கும் நீர் சேரக் கூடிய டயர்களில் மண்ணை நிரப்பி விடவும் அல்லது நீர் ஓடிவிடக் கூடியவாறு அவற்றில் ஓட்டைகளை ஏற்படுத்தி விடவும். கூரைப் பீலிகளில் நீர் தேங்கி நிற்காதவாறு அவற்றில் சேரக் கூடிய குப்பை கூழங்களை அடிக்கடி சுத்தம் செய்து விடவும்.

இவ்வாறான நமது நடடிவக்கைகள் மூலம் நமது வீட்டுச் சூழலில் நுளம்புக் குடம்பி வளர்வதைத் தடுக்கலாம். நமது வீட்டுச் சூழலில் மாத்திரமின்றி நமது அயலவர்களின் வீட்டுச் சூழல், புறச்சூழல், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை நம்மாலோ அல்லது அதற்குரியவர்களினூடாகவோ மேற்கொள்ளும் போது நம்மையும் பாதுகாது நமது அயலவர்களையும் சமூகத்தையும் இந்நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

அதுமாத்திரமின்றி, இந்நோய் தொடர்பில் அலட்சியப்போக்கை கைவிடுதல் அவசியமானது. இந்நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் உடன் வைத்தியரை நாடி அதற்கான சிகிச்சைகளை உடன் பெற்றுக்கொள்ளுதல் முக்கியமானது.

கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, வயிற்றுளைச்சல் ஆகியன இந்நோயின் சாதாரண அறிகுறிகளாகும். இவ்வடையாளங்களோடு தோலின் அடியில் சிறிய இரத்த (சிவப்பு) அடையாளாம், கண்கள் சிவப்பு நிறமாதல், மூக்கினால் இரத்தம் கசிதல், மலசலத்துடன் இரத்தம் வெளியாதல், முரசினால் இரத்தம் வெளியாதல் வாந்தி அல்லது மலம் கறுப்பு அல்லது செம்பட்டை நிறமாதல், வயிற்று நோவு போன்றவை டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலின் அடையாளங்களாக இருக்கும். அத்துடன் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரின் காய்ச்சல் திடீரென குறைந்து விடக் கூடும் என்றாலும் நோயாளி சுகயீனமாகக் காணப்பட்டால் அது பாராதூரமான ஒரு நிலையாகும். அப்படிப்பட்ட ஒரு நோயாளிக்கு உடம்பு குளிர்ந்து போதல், உடல் வெளிறல், கலக்கமான, தூக்கமான நிலை, மூச்செடுத்தல், நாடி ஓட்டம் வேகமாதல் போன்ற பாரதூரமான அடையாளங்கள் ஏற்படுதல் நோய் கடுமையானதைக் காட்டும். விஷேடமாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள ஒரு பிள்ளையின் காய்ச்சல் திடீரென இறங்குமெனின் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு  சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பிரிவும் ஏனைய சுகாதார நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மக்களை அறிவூட்டுகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட நபர் சார்ந்ததோர் இவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தாமையும் கடந்த காலங்களை விடவும் ஓரிரு வருடங்களில் டெங்கு நோயினால் ஏற்பட்டுள்ள தாக்கம் அதிகாமாக உள்ளமைக்கு காரணங்காக இருக்குமென்று கூறப்படுகிறது. ஆதலால், நோய்த் தொற்றுக்கான அடையாளங்கள் காணப்படுமிடத்து அவற்றை அலட்சியம் செய்வது நம்மை மேலும் ஆபத்துக்குள் தள்ளிவிடும்.

இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்குமாக அரசாங்கம் பல மில்லியன் ரூபாய்க்களைச் செலவிடுகிறது. டெங்கு நோய் மாத்திமின்றி நுளம்புகளினால் ஏற்படும் ஏனைய நோய்கள் தொடர்பிலும்  நமது கவனம் செலுத்தப்படுதல் அவசியமாகும். இந்நோய்களை ஏற்படுத்தும் நுளம்புகள் வளராமல் தடுக்கப்படுமாயின் நுளம்புகளைக் கட்டுப்படுத்தவும் நுளம்பினால் ஏற்படும் நோய்களைக் சுகப்படுத்தவும் செலவிடப்படும் நிதியைக் கொண்டு மக்கள் நல வாழ்விற்கு பயனளிக்கும் அபிவிருத்தியில் செலவிட முடியும்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு டெங்குக் காய்ச்சலைக்கட்டுப்படுத்தவும் நுளம்புகள் பெருவதைத் தடுக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும,; இத்திட்டங்கள் வெற்றியளிப்பது பொது மக்களின் நடவடிக்கைகளிலே தங்கியுள்ளது. மக்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத வரையில் எத்தகைய தண்டனைகளை ஏற்படுத்தினாலும் எந்தச் செயற்றிட்டத்ததை அறிமுகப்படுத்தினாலும் அவற்றினால் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியாது. அப்படியாயின் முதலில் மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளமென்பதையும் சுட்டிக்காட்டவேண்டிய தேவையுள்ளது.

அவ்வாறு இருந்த போதிலும், உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்தும் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதால் இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக இந்நாட்டு மக்களே கூடிய அவதானமும் கவனமும் செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத் தேவைக்குள் உள்ளாக்கப்பட்டும் பொறுப்பளிக்கப்பட்டும் உள்ளோம் என்பதை நினைவில் வைத்து செயற்படும்போது, நமக்கான பொறுப்பைச் செய்தவர்களாகவும் அதனால் நமது மக்களைப் பாதுகாத்தவர்களாகவும் நமது மனச்சாட்சியின் முன் நாம் நமது தேசத்திற்கு உதவினோம் என்ற பெறுமையுடன் வாழ்ந்து மறைய முடியும்.
நமக்கான பொறுப்பும் மக்கள் பாதுகாப்பும் .. நமக்கான பொறுப்பும் மக்கள் பாதுகாப்பும் .. Reviewed by Madawala News on 10/27/2016 07:18:00 PM Rating: 5