Kidny

Kidny

மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை புனித பூமிக்கு சுவீகரிப்பு திட்டம்


எம் எம் முகிடீன் இஸ்லாஹி
மாதம்பை பழைய நகர் என்பது பன்னெடுங்காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும்  ஒரு கிராமம் ஆகும். இது கொழும்பு- சிலாபம் ஏ-3 வீதியில் அமையப் பெற்றுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் முற்காலம் தொட்டு வாழ்ந்து வந்திருப்பினும், இவர்களிடம் 1886 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்ததற்கான அத்தாட்சியாக காணி உறுதிகள் காணப்படுகின்றன.

இப்படியான இப்பிரதேசம் கடந்த வியாழக்கிழமை (29) முதல் ஊடகங்களின் கவனத்துக்கு வந்துள்ளதுடன், ஒரு பேசு பொருளாகவும் மாறிவருகின்றது. இந்தப் பிரதேசத்தில் தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையானது உடன் தீர்க்கப்படாது போனால், இரு இனங்களுக்கிடையிலான ஒரு முறுகலாக மாறாலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் உருவானது முதல், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்க பல்வேறு காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள், இரு பெரும் அரசியல் கட்சிகள், சிறுபான்மை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நல்லிணக்க நடவடிக்கைக்கு முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றன.

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே ஐக்கியம், புரிந்துணர்வு என்பவற்றினை ஏற்படுத்துவதனை அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தியுள்ளமையானது, சிறுபான்மை சமூகங்கள் முழு மூச்சாக உழைத்து உருவாக்கிய அரசியல் மாற்றத்தின் ஓர் அடைவு என்று கூறினால் அது மிகையாகாது.

இவ்வாறாக அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களுடன் சாத்தியப்படுத்தப் போகும் இன நல்லிணக்க செயற்பாட்டுக்கு ஒரு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் ஒன்றாக இந்த மாதம்பை புனித பிரதேச பிரகடனம் மாறிவருவது கவலைக்குரிய ஒன்றாகும் என முஸ்லிம் புத்திஜீவிகளினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த பிரச்சினையை சிலர் தவறாக சித்தறிக்க முயற்சிக்கின்றனர். இரு சமூகங்களுக்கிடையிலான இனப் பிரச்சினையாக இதனைக் காட்டவும், மாற்றவும் சில தீய சக்திகள் எத்தனித்து வருவதாக அப்பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர். பல நூற்றாண்டுகள் அங்குள்ள இரு இனங்களும் ஒன்றுமையாக வாழ்ந்து வந்துள்ள நிலையில், தனிப்பட்ட ஒருவரின் சுய நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரச்சினை இரு இனங்களின் சுமுக வாழ்வுக்கு பாதிப்பாக அமையும் என அப்பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இங்கு தலை தூக்கியுள்ள பிரச்சினையின் தன்மை குறித்து முஸ்லிம்கள் சார்பாக முன்வைக்கும் ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை பரிமாறிக் கொள்வதே இந்த கட்ரையின் நோக்கமாகும்.

16 ஆம் நூற்றாண்டில் கோட்டையை ஆட்சி செய்த வீர பராக்கிரமபாகுவின் இரு புதல்வர்களில் ஒருவர் சகலகலா வல்லப மற்றவர் தானே வல்லப. முதலாவது மகன் உடுகம்பல பகுதியை ஆட்சி செய்தார். தானே வல்லப என்பவர் தான் இந்த மாதம்பைப் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளார்.

தானே வல்லப எனும் ஆட்சியாளன் தனது மனைவி இறந்த துக்கத்தில், தனது மகனை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு கூறுகின்றது. மஹவெவவுக்கு, பக்கத்திலுள்ள “கல்லமுன” எனும் இடத்தில் இவரது மகனைக் கூட்டிச் சென்று இவ்வாறு கொலை செய்துள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. தாண்டவராயன் எனும் இவரது பேரப் பிள்ளையினால் இந்த தானே வல்லபன் கொலை செய்யப்பட்டதாகவும் மற்றுமொரு வரலாற்றுத் தகவல் உள்ளது.

இவருக்காக அனுதாபம் தெரிவித்து பல இடங்களிலும் தேவாலயங்கள் அமைத்துள்ளனர். தனிவெல்ல தேவாலயம் எனும் பெயரில் மாதம்பையில் அமைந்துள்ள தேவாலயமும் இந்த மன்னரின் நினைவாக கட்டப்பட்ட ஒன்றாகும். தனியொருவரின் காணியில் இந்த தேவாலயம் அமையப் பெற்றுள்ளது. இந்த தேவாலயம் எத்தனையாம் ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.

தற்பொழுது கீர்த்தி சேனாநாயக்க என்ற ஒரு செல்வந்தனரினால் இந்த தேவாலயம் நடாத்தப்படுகின்றது. இதற்கு முன்னர் இவரது அப்பாவின் அண்ணனும், பின்னர் அப்பாவும் இதனை பரிபாலனம் செய்துள்ளனர்.


 தேவாலயத்துக்கு மேற்குப் பக்கத்தில் 17 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள், வியாபார நிலையங்கள் உள்ள பிரதேசமும், வலப் பக்கமாக 7 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் உள்ள பிரதேசமும் தேவாலயத்தின் புனித பிரதேச திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக்கும் திட்டத்தை கீர்த்தி சேனாநாயக்க என்பவர் 1991 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வந்தார். இருப்பினும், அப்போதிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள், பிரதேச சிங்கள அரசியல்வாதிகள் ஆகியோரின் எதிர்ப்பினால் அது முடியாமல் போனது.

பின்னர் கீர்த்தி சேனாநாயக்கவின் முயற்சியில் நில அளவை உத்தியோகத்தர்கள் வருகை தந்து அளப்பதற்கு முயற்சித்தனர். இதன்போதும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வடிகான் வசதிகளை மேற்கொள்வதற்கே காணிகளை அளப்பதாக அங்கு வருகை தந்த அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்த போது அதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். 

இவ்வாறு அளந்த பின்னரே 1999.மார்ச் மாதம் 19 ஆம் திகதி வர்த்தமானியில் புனிதப் பிரதேசம் என பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அளந்த வரைபடத்தை வைத்தே வர்த்தமானியில் பதிவு செய்துள்ளனர். வரைபடத்திலுள்ள திகதியும், வர்த்தமானியின் திகதியும் ஒன்றாகவே காணப்படுகின்றமை இதற்கான சான்றாகும்.

இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரை சந்தித்து முறையிட்டோம். இந்தப் புனிதப் பிரதேச பிரகடனத்தினால் இருப்பிடங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. மதுபானசாலை, இறைச்சிக்கடை, விபச்சார விடுதி போன்ற சட்டவிரோத நிலையங்கள் இந்தப் புனிதப் பிரதேசத்துக்குள் அமையக் கூடாது என்பதே இதன் மூலம் கருதப்படுவது என எமக்கு கூறப்பட்டது. இதனையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதன்பின்னர் கடந்த அரசாங்க காலங்களில் எந்தவித முன்னெடுப்புக்களும் இடம்பெறவில்லை. நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன், கீர்த்தி சேனாநாயக்க என்பவருக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இதனைச் செய்யப் பார்க்கின்றார். இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் மேல் மட்ட அரசியல்வாதிகளும் பின்னணியில் இருப்பதாக சந்தேகங்கள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே வர்த்தமானியில் பதியப்பட்ட புனிதப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு அனுமதியைப் பெறும் நடவடிக்கையே அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே கடந்த 29 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

தற்பொழுது அளப்பதற்கு வருகை தந்ததன் நோக்கம், புனிதப் பிரதேசத்துக்குள் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களின் 24 வீடுகளையும் அபகரித்து, அந்த இடங்களில், தேவாலயத்தின் வாகனத் தரிப்பிடம், கோபுரங்கள் உட்பட தேவாலயத்தின் பல அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காகும்.

தற்பொழுது இப்பிரதேசத்தில் அளவீட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்கப்படுமாயின் அதனை வைத்து அடுத்த கட்டமாக 24 வீடகளை அபகரித்து தேவாலயத்தின் விஸ்தரிப்பு இடம்பெறும் என பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளன.

இதில் விசேட அம்சம் என்னவெனில், தேவாலயத்தைச் சூழவுள்ள வீடுகளில், முஸ்லிம்களின் வீடுகளைப் போலவே, சிங்கள சமூகத்தவர்களின் வீடுகளும் அமையப் பெற்றுள்ளன. இருப்பினும், ஏற்கனவே, வர்த்தமானியில் புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வரைபடத்தில், எந்தவொரு சிங்கள சமூகத்தவர்களின் வீடுகளும் உட்படுத்தப்படவில்லை. முஸ்லிம்களின் வீடுகள் மாத்திரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான உத்தியோகபுர்வ அரச வரைபடம் மேலே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ள பகுதிகள் புனிதப் பிரதேசத்துக்குள் அடங்கும் முஸ்லிம்களின் குடியிருப்பு பிரதேசம். கறுப்பு நிறத்தில் அடையாளமிடப்பட்டுள்ள பகுதி தேவாலயத்தைச் சூழவுள்ள சிங்களவர்களுக்குரியது.)

இருப்பினும், கவலைக்குரிய விடயம் என்னவெனில், விகாரையைச் சூழவுள்ள சிங்கள குடியிருப்புப் பகுதி எதுவும், புனிதப் பிரதேசத்துக்குள் அடங்கவில்லை என்பதாகும். முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களை சுவீகரிப்பதற்கான முயற்சியே இந்த புனிதப் பிரதேச நாடகம் என்பதற்கு இந்த வரைபட தகவல்கள் சிறந்த சான்றாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இப்பிரதேச மக்கள் தமது பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இறுதியாக சென்றவாரம் அளப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது, நில அளவை அதிகாரிகள், சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலர் வருகை தந்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்புக் காரணமாக இவர்களின் அளக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியட்சகரிடம் நியாயங்களை தெளிவாக பிரதேச முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக் கூறிய பின்னர், தங்களது நியாயங்களை உரிய அதிகாரிகளிடம் சென்று தீர்வைப் பெற்றுக் கொள்ளுமாறு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

(இக்கட்டுரை மாதம்பை பிரதேசவாசியும், அகில இலங்கை சமாதான நீதவானும், குறித்த பிரச்சினைக்கு நேரடியாக முகம்கொடுத்துவருபவருமாகிய எஸ்.எம்.கௌஸுல் அமீர் என்வரின் ஆதாரபுர்வமான தகவல்களை தழுவி எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)


மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை புனித பூமிக்கு சுவீகரிப்பு திட்டம் மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை புனித பூமிக்கு சுவீகரிப்பு திட்டம் Reviewed by Madawala News on 10/03/2016 07:54:00 AM Rating: 5