Kidny

Kidny

நிசப்தத்தின் மர்மங்கள்...


மொஹமட் பாதுஷா ..
புயலுக்குப் பின்னர் நிலவும் அமைதியைப் போல அல்லது சில அனர்த்தங்களுக்கு முன்னர் இருக்கும் ஓர் இனம்புரியாத காலநிலையைப் போல முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் ஒருவித நிசப்தம் நிலவுகின்றது. இப்போது வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் சிறுபான்மையினர் இருக்கின்ற நிலையில் ஒரு முஸ்லிம் கட்சியானது உள்ளகமாக தமக்குள் முரண்பட்டுக் கொள்வதையும் அந்த முரண்பாடுகளைத் தீர்க்காமல் தொடர்ச்சியாக இழுத்துச் செல்வதையும் ஓர் ஆரோக்கியமான சூழலாகப் பார்க்க முடியாது. முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற இந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையிலான பிணக்குகள் களையப்படும் என்று எண்ணியிருந்த மக்களுக்கு அபசகுணமான செய்திகளே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. மறுபக்கத்தில் முரண்பாட்டாளர்களின் அரசியல் செயற்பாட்டுத் தளமும் சோபையிழந்து போயிருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.  

முஸ்லிம் காங்கிரஸுக்குள் உருவான நவீன முரண்பாடுகளின் தோற்றமும் முன்கதைச் சுருக்கமும்இ நமக்குத் தெரியும். செயலாளர் எம்.ரி.ஹசன்அலிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மறுக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல்கள் ஆணையாளருக்குக் கட்சித் தலைவர் அனுப்பிய கடிதம் ஒன்று தொடர்பாக தெரியவந்ததையடுத்து ஹசன்அலி தனக்கு இழைக்கப்பட்ட அநியாயம் பற்றிப் பகிரங்கமாகப் பேசத் தொடங்கினார். இவரோடு கட்சியின் தவிசாளரான பஷீர் சேகுதாவூதும் இணைந்து கொண்டார். ஹசன்அலி அவ்வப்போது பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தேசியப் பட்டியல் எம்.பி பதவி கொடுக்காத காரணத்தினாலேயே அவர் இவ்வாறு போர்க் கொடி தூக்குவதாகக் கட்சித் தலைவரும் அவருக்கு ஆதரவானவர்களும் கூறிவந்தனர். ஆனாலும் கொஞ்சம் தாமதித்துச் செயலாளர் தனக்கு அப்பதவி தேவையில்லை என்று அறிவித்தார்.   

இப்பிரச்சினை பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து செயலாளருடன் சமரச முயற்சிகளை மேற்கொள்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு நடத்திய பேச்சுவார்த்தையின் மூலமோ தனிநபர் உரையாடல்களின் மூலமோ இணக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. 'செயலாளருக்குரிய அதிகாரங்களைத் தனக்கு ஒப்படைத்தாலேயே மற்ற விடயங்கள் பற்றிப் பேச முடியும்' என்று ஹசன்அலி பிடிவாதமாக இருந்தார். தலைவர் என்ற வகையில் ரவூப் ஹக்கீம் எடுத்த ஒரு தீர்மானத்தை அவரே வாபஸ் பெறுவது தனது முடிவைத் தானே பிழை காண்பதற்கு ஒப்பானது என்பதுடன் தலைவர் என்ற வகையில் அது கௌரவத்தைப் பாதிப்பதாகவும் அமையலாம். இவ்வாறான மேலும் பல காரணங்களால் ஹசன்அலியின் கோரிக்கையை ரவூப் ஹக்கீம் இன்றுவரைக்கும் செயலுருப்படுத்தவில்லை. சமரச முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்று ஹசன்அலிக்கும் தலைமைக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்ததுதான் மிச்சம்.  

ஒரு சில நாட்களாக காட்டமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த ஹசன்அலி இப்போது பொதுவெளியில் தலைவரைப் பற்றி விமர்சிப்பதை வெகுவாகக் குறைத்திருக்கின்றார். தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கலந்து கொண்ட சர்ச்சைக்குரிய உயர்பீடக் கூட்டத்தில் உயர்பீடச் செயலாளரைப் பிரதான மேசையில் அமரக் கூடாது என்ற ஒரு கோரிக்கை ஹசன்அலி சார்பாக முன்வைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. ஆனாலும் பஷீருக்கும் ஏனையோருக்கும் இடையில் உயர்பீடக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட வேளையில் அங்கிருந்த செயலாளர் ஹசன்அலி பேசவேயில்லை என்பதைப் பலரும் பேசிக் கொண்டனர். அதன் பின்வந்த ஊடகங்களுக்கு குறிப்பிடத்தக்க விதத்தில் கருத்துத் தெரிவிப்பதை ஹசன்அலி குறைத்து வருவதுபோல் தோன்றுகின்றது. ஒரு வகையான நெகிழ்ச்சிப் போக்கை அவர் கடைப்பிடிப்பதாக மேலோட்டமாகப் பார்க்கின்றவர்களுக்குத் தோன்றுமளவுக்கு நிலைமைகள் உள்ளன.  

மறுபக்கத்தில் பஷீர் சேகுதாவூத் ஹசன்அலியை விடவும் வேகமாக வெகுண்டெழுந்தார். இது பல்வேறு அதிர்வுகளையும் ஏற்படுத்தியது எனலாம். அவர்இ பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். பிறகு தாருஸ்ஸலாம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான கேள்விகள் அடங்கிய கடிதத்தை தலைவர் ஹக்கீமுக்கு அனுப்பினார். அக்கேள்விகளுக்கு விடையை எதிர்பார்த்துக் கலந்து கொண்ட உயர்பீடக் கூட்டத்தில் அவரைப் பேசவிடாது தடுத்தமையால் அமளிதுமளி ஏற்பட்டது. அதன் பிற்பாடுஇ சில ஊடகங்களில் தனது நிலைப்பாடு தொடர்பான கருத்துக்களைப் பஷீர் வெளிப்படையாகச் சொல்லி வருகின்ற போதிலும் சொல்ல வந்த எதையோ மறைத்து சுயதணிக்கை செய்து அவர் கருத்துக்களை வெளியிடுவது போல உள்ளது. இதைப் பார்க்கின்ற சிலர்இ 'பஷீர் ஏதோ இரகசியத்தை வைத்துக் கொண்டு கடைசியில் பாரிய எதிர்த்தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளப் போகின்றார்' என்று நினைக்கின்றனர். இன்னும் சிலர் 'இவரிடம் அப்படி இரகசியங்கள் ஒன்றுமில்லை' என்று கூறுகின்றனர். இந்தப் பின்னணியில் மேலோட்டமாகப் பார்த்தால் பஷீர் சேகுதாவூதின் வேகமும் குறைந்து மெத்தனமாகிப் போனதாகத் தோன்றலாம்.  

தலைவர் ஹக்கீமுடனான முரண்பாடு உருவான போதுஇ ஹசன்அலி மற்றும் பஷீர் சேகுதாவூதின் செயற்பாடுகள் சில 'சஸ்பென்ஸ்' நிறைந்த திரைப்படங்கள் போலஇ பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதற்காக கட்சிக்குள் முரண்பாடு வலுத்து தலைவரும் இவர்களும் பிரிந்து நிற்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை - சில கூத்தாடிகளைத் தவிர! ஆனால்இ தலைவர் என்ன செய்வாரோஇ அதற்குப் பதிலாக தவிசாளரும் செயலாளரும் என்ன செய்வார்களோ என்ற ஓர் ஆவல் அப்போது மக்களிடையே இருந்தது என்பதே இதன் அர்த்தமாகும். ஆனால்இ இன்று அந்த நிலை இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. 'இருவரும் என்ன செய்கின்றார்களாம்? என்ன நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்களாம்' என்றே நிறையப் பேர் வினவுகின்றனர். அப்படியென்றால் நடந்தது என்னவென்று சிந்திக்க வேண்டியுள்ளது.  

நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி சில விடயங்களை அனுமானிக்க முடிகின்றது. அதாவதுஇ செயலாளர் ஹசன்அலியும் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றார்கள் என்றாலும் அவர்கள் இருவரது பிரச்சினைகளின் வடிவம் வேறுபட்டதாகும் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹசன்அலி தனக்குரிய (செயலாளர்) அதிகாரங்களை மீள ஒப்படைக்கக் கோருகின்றார். பஷீரோ கட்சியைத் தூய்மைப்படுத்தப் போவதாகச் சொல்கின்றார். அப்படியென்றால் ஒருவரது விவகாரத்துக்குள் இன்னுமொருவர் மூக்கை நுழைத்துக் கொண்டு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு இருவரும் வந்திருக்க வேண்டும். உயர்பீடத்தில் பஷீரைப் பேச விடாமல் தடுத்த வேளையில் ஹசன்அலி வாய்மூடி மௌனமாய் இருந்ததற்கும் அதன்பிறகு ஆளுக்காள் வக்காளத்து வாங்கி அறிக்கை விடாமல் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம். ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு கசந்துவிட்டதாக சொல்லப்பட்டமை மிகைப்படுத்தப்பட்ட கணிப்பு என்றே கூற முடியும்.  

இதுஇவ்வாறிருக்க தலைவரின் பக்கத்தில் இருந்து இவர்களை நோக்கி ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற அடுத்த வினா எழுகின்றது.  

சிலவேளை ஒருகட்டத்தில் ஹசன்அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பியை வழங்குவதன் மூலம் அவர் இதற்காகத்தான் சண்டைபிடித்தார் என்பதை நிரூபிப்பதுடன் பஷீரை தனிமைப்படுத்துவதற்கும் ஹக்கீம் தரப்பினர் வியூகங்களை வகித்திருக்கக் கூடும். 'ஹசன்அலிக்கு எம்.பி பதவி கொடுபடப் போகின்றது' எனத் தகவல்கள் வெளியாகி இருந்ததையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இருப்பினும் இந்தப் பருவகாலத்தில் தலைவரினால் ஹசன்அலி வீழ்த்தப்பட்டிருக்கின்றார். அதுமட்டுமன்றி அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டால் ஐ.தே.கட்சியின் சிபாரிசில் ஓர் அமைச்சு அல்லது பிரதியமைச்சு வழங்கப்படக் கூடும் என்றும் அரசல்புரசலாகப் பேசப்பட்டது. இவ்விடயம் தலைவரின் காதுகளுக்கும் எட்டியிருக்கலாம். அந்தப் பின்னணியில்.... செயலாளர் அதிகாரத்தோடும்இ அமைச்சுப் பதவியோடும் ஹசன்அலி உள்ளே வந்துவிட்டால் அதைவைத்து அவர் தன்னைப் பழிவாங்கலாம் என்று எண்ணி ஹசன்அலிக்கு எம்.பி. பதவி வழங்கும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கக் கூடும் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.  

இதேநேரம் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆரம்பத்திலிருந்தே ஒரு தீவிரப் போக்கை கடைப்பிடித்தமையால் ஹசன்அலியைப் போல மென்மையான வழியில் அவரை கையாள முடியாது என்று தலைவர் ஹக்கீம் நினைத்திருக்கலாம். பஷீருக்கு பலமான ஓர் அடியைத் தூர இருந்து அடிப்பதற்கே பெரும்பாலும் தலைவர் விரும்புவார். பஷீர் சேகுதாவூத் தன்னிடம் விடைகளை வைத்துக் கொண்டுதான் சொத்துக்கள் பற்றிய கேள்விகளை கேட்டார் என்பதை தலைவர் ரவூப் ஹக்கீம் நன்றாக அறிவார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நல்லது கெட்டதுகளில் எல்லாம் கூடஇருந்து பெரும் பங்காற்றிய தவிசாளர் பஷீர் சத்தம் போடாமல் இருப்பது போன்று வெளியில் தோன்றினாலும்இ அவர் மிக நுட்பமாகவும் இராஜதந்திரி போலவும் காரியம் சாதிப்பதில் விண்ணன் என்பதை ஹக்கீம் அனுபவ ரீதியாக அறியாமல் இருக்கமாட்டார்.  

ஹசன்அலியைப் போல பஷீரையோ பஷீரைப் போல ஹசன்அலியையோ கையாள முடியாத சூழ்நிலை தலைமைக்கு ஏற்பட்டிருக்கின்றது. எப்படியாவது கட்சியை விட்டுச் சேதாரமின்றி இருவரும் தூரவிலகிச் சென்றால்... 'தலையோடு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்' என்று தலைவரும் அவருக்கு ஆதரவானவர்களும் நினைத்திருக்கக் கூடும். ஆரம்பத்தில் 'தாம்தூம்' எனக் குதித்த தவிசாளரும் செயலாளரும் அடங்கிப்போனது போன்று ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய தோற்றப்பாடு அவர்களுக்கு ஓர் ஆறுதலை அளிக்கலாம். ஆனால்இ இப்பிரச்சினை சரியாகத் தீர்க்கப்படாவிட்டால் இந்த ஆறுதல் எல்லாம் தற்காலிகமானவையாகவே இருக்கும். ஏனெனில்இ ஹக்கீமைப் போலவே ஹசன்அலியும் பஷீரும் கூட அரசியல் கத்துக் குட்டிகள் அல்லர். இவ்விருவரும் தமது கௌரவத்துக்கு வைக்கப்பட்ட ஆப்புக்குப் பதில் ஆப்பைஇ இப்போது இரகசியமாக சீவிக் கொண்டிருக்கலாம். சரியான நேரத்தில் அது செருகப்படலாம். அப்போதுதான்இ அது சக்தி வாய்ந்ததா? பலவீனமானதா என்பதை நாம் அறிய முடியும்.    இதுபோன்ற பல சவால்களை ஹக்கீம் இதற்கு முன்னரும் சந்தித்திருக்கின்றார். ஆனால்இ சவாலை ஏற்படுத்திய பலர் பின்னர் ஒதுங்கிச் சென்றுவிட்டனர். மீதமிருந்த சவால்களை எதிர்கொள்ள பஷீரும் ஹசன்அலியும் முக்கிய கருவிகளாகச் செயற்பட்டனர். ஆனால்இ இப்போதைய முரண்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை; கட்சிக்குள்ளாள உள்ளக முரண்நிலை இன்னும் தணியவில்லை என்பதை சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவமும் குறிப்புணர்த்தி இருக்கின்றது.  

எது எப்படியிருந்தாலும் இவ்வாறான ஒரு குழப்பநிலை பிரதான முஸ்லிம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்றமை மிகவும் மோசமான துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். இதுஇ அக்கட்சியின் இயக்கப்பாட்டில் மாத்திரமன்றி முற்றுமுழுதான முஸ்லிம் அரசியலிலும் ஒரு தேக்க நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. உட்கட்சி முரண்பாடுகள்இ தலைவருக்கு மட்டுமன்றி கட்சியை நேசிக்கின்ற எல்லோருக்குமே கண்ணுக்குள் விழுந்த தூசிபோல கரித்துக்கொண்டே இருக்கின்றது.  

கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போல இது ஒரு மிக முக்கியமான காலகட்டமாகும். நெடுங்காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக வடக்குஇ கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றியும் பேசப்படுகின்றது. இவ்வாறான ஒரு காலசூழலில் தலைவரும் தவிசாளரும் செயலாளரும் வேறுசிலரும் ஆளுக்கொரு மூலையில் நின்று தமது நிலைப்பாடுகளை முன்வைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். ஆளுக்காள் பகை தீர்ப்பதில் காட்டுகின்ற அக்கறையைத் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களின் பங்கை உறுதிப்படுத்துவதில் காட்டினால் இந்த சமூகம் நலன்பெறும். அவசரமாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டிய பணியாக மேற்குறிப்பிட்ட தீர்வுத்திட்ட விவகாரம் காணப்படுகின்றது. தனித்தனியாக செயற்படுவதை விட ஒரு கட்சி என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட்டால் அது இன்னும் பலமாக இருக்கும். ஆனால் இன்றைய நிலைமையில் ஹசன்அலி மற்றும் பஷீருடன் சமரசமாக இணங்கிப் போனால்இ தீர்வுத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பான தன்னுடைய தீர்மானத்தில் அவர்கள் செல்வாக்குச் செலுத்துவார்கள் என்ற காரணத்துக்காகவும் ஹக்கீம் சற்று விலகிநின்று அரசியல் செய்ய எத்தனிக்கின்றாரோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எது எவ்வாறாயினும் தலைவரும் செயலாளரும் தவிசாளரும் தங்களது சொந்தக் குத்துவெட்டுக்களைச் சற்றுநேரம் ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள்சார்பு அரசியலில் இப்போது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.  

  
நிசப்தத்தின் மர்மங்கள்... நிசப்தத்தின் மர்மங்கள்... Reviewed by Madawala News on 10/17/2016 03:47:00 PM Rating: 5