Ad Space Available here

றிஷாதின் காய்நகர்த்தல்..


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் அஷ்ரபின் வருகையோடு இலங்கை முஸ்லிம்கள் படிப்படியாக அவரது குடையின் கீழ் ஒன்று கூடலாயினர்.இலங்கை முஸ்லிம்களின் இதயமான அம்பாறையை மு.கா மிக இலகுவாக தன் வசப் படுத்தியிருந்தது.அஷ்ரபின் மரணத்தின் பிற்பாடு அவரது பெயரைக் கொண்டு பல கட்சிகள் முளைத்த போதும் எந்தக் கட்சியாலும் ஒரு நிலையான இடத்தை அடைந்து கொள்ள முடியவில்லை.அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு அதாவுல்லாஹ் தலைமையிலான தே.கா இருந்த போதும் அக்கரைப்பற்றுக்குள் மாத்திரமே அது வீரியத்துடன் செயற்பட்டிருந்தது.தற்போது மு.காவின் இதயமான அம்பாறையில் மரத்திற்கு சரி சமனாக நின்று மயில் தோகை விரித்தாடிக்கொண்டிருக்கின்றது.இத் தோகை விரித்தாடலுக்கு அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட செல்வாக்கு பிரதான காரணமாகவிருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் பிரபலங்கள் வழங்கிய ஒத்துழைப்பையும் ஒதுக்கி நோக்க முடியாது.அந்த வரிசையில் சாய்ந்தமருது ஜெமீல்,சம்மாந்துறை இஸ்மாயில்,பொத்துவில் எஸ்.எஸ்.பி மஜீத்,சாய்ந்தமருது சிராஸ் ஆகியோரை பிரதானமானவர்களாக கோடிட்டு காட்டலாம்.

சிராஸ் தனது அரசியல் பயணத்தை கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் மு.காவினூடாகவே ஆரம்பித்திருந்தார்.நாற்பது நாள் என்ற மிகக் குறுகிய காலப்பகுதியினுள் இவர் தனது அரசியல் பயணத்தில் மேயர் என்ற உச்ச இடத்தையும் அடைந்துகொண்டார்.இவர் மேயர் பதவியை சுவைத்துக் கொள்ள கல்முனை,சாய்ந்தமருது ஆகியவற்றிற்கிடையே அந் நேரத்தில் தோற்றம் பெற்றிருந்த பிரதேச வாதமும் அவரிடம் காணப்பட்ட பண வலிமையும் அரசியல் வாதிகளிடையே நிலவிய போட்டி நிலையும் பிரதான காரணமாகவிருந்தது.எது எவ்வாறு இருந்தாலும் வாக்குகளினூடாக பெறும் மதிப்பெண்களை சிராஸ் தன் வசப்படுத்தியிருந்தார்.சிராஸ் கல்முனை மாநகர சபை தேர்தலில் இலகுவாக போட்டியின்றி மேயர் பதவியை அடைந்து கொள்ளவில்லை.அத் தேர்தலில் மு.கா மேயர் பதவியை இலக்காக கொண்டு கல்முனையில் பிரபல சட்டத்தரணி நிசாம் காரியப்பரையும் சாய்ந்தமருதில் சிராசையும் களமிறக்கியிருந்தது.இருவரும் ஒரு சாதாரண மாநகர சபை உறுப்பினராக இருப்பது அவர்களின் இடத்திற்கு பொருத்தமானதல்ல.அதாவது மு.கா இருவரில் ஒருவரை மட்டம் தட்டும் நோக்கோடு செயற்பட்டுள்ளதா என்ற வினாவும் இவ்விடத்தில் எழுகிறது.இருந்தாலும் அந் நேரத்தில் அதி கூடிய விருப்பு வாக்கை பெறுபவருக்கே மேயர் பதவி என்ற எழுதப்படாத கொள்கை மு.காவிடம் காணப்பட்டது.அதனை சிராஸ் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக கூறியுமிருந்தார்.இதனை கல்முனை மாநகர சபை தேர்தலில் அதி கூடிய வாக்குகளைப் பெற்ற சிராசுக்கே கல்முனை மாநகர சபையின் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் மேயர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.அத் தேர்தலை தொடர்ந்து மு.கா சிராஸுக்கு மேயர் பதவியை வழங்கப்படப் போகிறதென்ற தோற்றம் வந்த போது மு.கா கல்முனை ஆதரவாளர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.இச் சந்தர்ப்பத்தில் சிராஸ் அமைச்சர் ஹக்கீமின் கோரிக்கையின் அடிப்படையில் கல்முனை மாநகர சபை ஆட்சிக் காலத்தின் முன்னரைப் பகுதிவரை மேயராகயிருக்க இணக்கம் தெரிவித்திருந்தார்.இதற்கு சிராஸ் இணங்கியிருக்காது போயிருந்தால் மு.கா மிகப் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதோடு பூரண மேயர் பதவி சிராசை வந்தடைவதற்கான வாய்ப்பே அதிகமாகவுமிருந்தது.இந்த விடயமே சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோசத்தை மிகவும் வலுப் பெறச் செய்திருந்ததென பிரதி அமைச்சர் ஹரீஸ் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிராஸ் தனது மிகக் குறுகிய கால அரசியல் பயணத்தில் தனக்கு கிடைத்த மேயர் பதவியை மிகப் பெரிதாக கருதியிருக்க வேண்டும்.இத்தோடு நின்று விடாது தனது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு ஹக்கீமின் நம்பிக்கையை பெறவும் மேயர் பதவி விடயத்தில் அவரது விட்டுக் கொடுப்பை நோக்கலாம்.மிகவும் பெருந் தன்மையோடு தனது பதவியை விட்டுக் கொடுக்க சம்மதித்த சிராசால் சொன்னது போன்று பதவியை இராஜினாமா செய்ய முடியவில்லை.காலம் செல்லச் செல்ல மனிதனுக்கு பதவி மீதான மோகம் அதிகரிப்பது யாவரும் அறிந்தது தான்.இந் நேரத்தில் சாய்ந்தமருது மக்களை தன் பக்கம் ஈர்த்து தன் பதவியை பாதுகாக்கவும் முனைந்தார்.சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகத்தினர் இவருக்கு சார்பாக அமைச்சர் ஹக்கீமிடம் சென்று குறைந்தது சிராசை ஆறு மாத காலத்திற்காகவாது மேயராக வைத்திருக்குமாறு கோரினர்.அமைச்சர் ஹக்கீமோ சாய்ந்தமருது மக்களுக்கு தான் வழங்கிய பிச்சை போன்று ஒரு நாள் கூட அவரது பதவி நாளை நீடிக்க  முடியாதென்ற பாணியில் செயற்பட்டார்.இவ்விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் சற்று விட்டுகொடுப்பை செய்திருக்கலாம்.நிசாம் காரியப்பர் பதவி கேட்டு சண்டை பிடிப்பவருமல்ல.ஆரம்பத்தில் சிராசும் தனது பதவியை இராஜினாமா செய்ய மறுத்தார்.இதன் போது இவர்கள் இருவருக்குமிடையில் போர் மூண்டது.அமைச்சர் ஹக்கீம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை கொண்டு சிராசை தோற்கடிக்க களமிறங்கினார்.தனது தோல்வியை அறிந்து கொண்ட சிராஸ் ஹக்கீமோடு உடன்பட்டு தனது பதவியை இராஜினாமா செய்தார்.நிசாம் காரியப்பர் மு.காவின் முக்கிய புள்ளி என்பதால் மேயர் பதவியை வழங்கி அவரை அழகு பார்க்க வேண்டிய தேவையும் மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமிற்கு இருந்தமையை மறுக்க முடியாது.

பதவியோடு பந்தாவாக சுற்றிய ஒரு மனிதன் பதவியின்றி பறப்பது கடினம் தான்.அத்தோடு ஹக்கீமோடு போர் முரசை கொட்டிய சிராசை எப்படியாவது மட்டம் தட்ட ஹக்கீமும் நினைத்திருப்பார்.சிராஸ் தனது பதவிக் காலத்தை மிகச் சிறப்பான வகையில் பயன்படுத்தியதால் அமைச்சர் ஹக்கீமிற்கு சிராஸ் மீதானதொரு அச்சம் காணப்பட்டதான கதைகளும் சிலரது வாய்களில் ஊசலாடின.இவற்றின் காரணமாக இவர்களுக்கிடையிலான நெருக்கம் முன்னர் போன்றல்லாது குறைவாக காணப்பட்டது.இதனை சிராஸ் தனது அறிக்கை ஒன்றிலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது சிராசின் உள்ளத்தையும் உலுக்கியது.தனது மாற்றுத் தீர்வாக அதாவுல்லாஹ் அணியின் பக்கம் சிராஸ் தனது சிரசை திருப்பினார்.அந் நேரத்தில் மு.காவிற்கு மாற்றுத் தீர்வாக தே.கா மாத்திரமே காணப்பட்டது.இது சிராஸ் தனது அரசியல் வாழ்வில் செய்ய மிகப் பெரும் தவறுகளில் ஒன்றாகவே பலரும் கருதுகின்றனர்.இவர் தனக்கு மேயர் பதவி கிடைக்காத போது மாறியதால் அவர் பதவி ஆசையினால் மு.காவை விட்டு மாறியவராகவே அனைவராலும் நோக்கப்பட்டார்.அந் நேரத்தில் சிராஸ் தூக்கிய சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை எனும் ஆயுதம் பலமிக்கதாகவும் இருந்தது.அதனை சாதிக்க அவர் சென்ற அமைச்சர் அதாவுல்லாஹ்விடம் அதன் அமைச்சும் இருந்தது.சிராஸ் அமைச்சர் அதாவுல்லாஹ்வினூடாக அக் கோரிக்கையை சாதித்திருந்தால் இன்று சாய்ந்தமருதில் ஒரு ஹீரோவாக திகழ்ந்திருப்பார்.அதுவும் அவருக்கு கை கூடவில்லை.இவர் அதாவுல்லாஹ்வோடு இணைந்ததால் அங்கும் இங்கும் கட்சி மாறித் திரிகிறார் என்ற அவமானத்தை சந்தித்தாரே ஒழிய வேறு எந்த இலாபங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.குறைந்தது தே.கா சார்பாக ஒரு தேர்தல் கூட கேட்கவில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தோல்வி தேர்தலுக்கு முன்பே கண் முன் தெரிந்தது.கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் தனது தேர்தல் வெற்றியைக் கருத்திற் கொண்டு ஐ.தே.க பக்கம் செல்வதற்கான சமிஞ்சைகளையும் காட்டினார்.மு.காவானத்து ஐ.தே.கவுடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு ஆசனம் கிடைப்பதற்கான சாதக தன்மை,வெற்றி பெறுவதற்கான சாதக தன்மை ஆகியன குறைவாகவே இருந்தன.இதனை உணர்ந்த இவர் அமைச்சர் றிஷாத்துடன் கை கோர்த்தார்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் குதித்தார்.பலராலும் அ.இ.ம.காவிற்கு ஒரு ஆசனம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அத் தேர்தலில் அ.இ.ம.கா ஆசனம் எதனையும் பெறவில்லை.இவரால் சாய்ந்தமருதில் சொல்லுமளவான வாக்குகளையும் பெற முடியாது போனது.

இவர் அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் இணைவதற்கு முன்பு அ.இ.ம.காவின் தலைவர் அமைச்சர் றிஷாதுடன் தனது அரசியல் எதிர்காலம் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.அந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் அம்பாறையில் தடம் பதிக்காததன் காரணமாக அவரது ஆலோசனையின் பேரில் தான் தே.காவில் இணைந்துள்ளார்.இதனை அமைச்சர் றிஷாத் சிராஸ் தனது பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது கூறியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.சிராஸ் அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் இணையாது தகுந்த காலம் பார்த்து மு.காவை விட்டு எக் கட்சியுடனாவது மாறியிருக்கலாம்.பிற்பட்ட காலப்பகுதியில் மு.காவிலிருந்து ஜெமீல் மாறியதன் காரணமாக சிராஸ் மு.காவில் இருந்திருந்தால் அவரது கேள்வியும் அதிகரித்திருக்கும்.

அமைச்சர் றிஷாத் தனக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களை திருப்திப்படுத்த தனது அமைச்சுக்கு கிடைத்த தலைவர் பதவிகளில் அதிகமானவற்றை அம்பாறைக்கு வழங்கியுள்ளார்.இவற்றில் அமைச்சர் றிஷாத் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலிற்கே முன்னுரிமை வழங்கினார்.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அமைச்சர் றிஷாத்துடன் இணைவதற்கு முன்பு சிராஸ் அமைச்சர் றிஷாத்துடன் இணைந்திருந்தாலும் இவர் இணைவதற்கு முன்பிருந்தே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மறைமுகமான பேச்சு வார்த்தையில் இருந்தார்.ஜெமீல் மாகாண சபையில் இரு தடவைகள் இருந்ததன் காரணமாக அவருக்கென்று தனியான ஒரு மதிப்பெண் அமைச்சர் றிஷாதிடம் இருந்தது.தனது பதவியை அமைச்சர் றிஷாதிற்காக அவர் இழந்துமிருந்தார்.ஜெமீலின் வரவின் பின்னரே அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காவின் வளர்ச்சு வேகமாகியது.இவ்வாறான பலதின் காரணமாகவே அமைச்சர் றிஷாத் ஜெமீலிற்கு வழங்கிய முக்கியத்துவம் சிராஸின் மனதை தைத்தது.இதன் காரணமாகவே சிராஸ் அமைச்சர் றிஷாதை விட்டும் சற்று தூரமானார் எனலாம்.

தற்போது இவர்கள் இருவரையும் அமைச்சர் றிஷாத் சமரசம் செய்து வைத்துள்ளார்.இருந்தாலும் இவர்களுக்கிடையில் தற்போதும் ஒரு சரியான உறவிருப்பதாக கூற முடியாது.இவர்கள் இருவரையும் சாய்ந்தமருது விடயங்களில் ஒரு மஷூரா அடிப்படையில் முடிவெடுத்துக்கொள்ள அமைச்சர் றிஷாத் பணித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.சில தகவல்களின் படி ஜெமீலிற்கு கீழ் இருந்து செயற்படுவதற்கு சிராஸ் சம்மதம் தெரிவித்த பின்னரே இவர் கட்சிக்குள் உள் வாங்கப்பட்டதாகவும் கதைகள் உள்ளன.தற்போது அமைச்சர் றிஷாதினால் வழங்கப்படிருக்கும் தலைவர் பதவியை அந் நேரத்தில் கேட்டிருந்தால் அதனை அமைச்சர் றிஷாத் வழங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படி சிராஸ் செயற்பட்டிருந்தால் தன் மீதான அமைச்சர் றிஷாத்தின் மரியாதை தொடர்ந்தும் பேணியிருப்பார்.அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காவிற்கு சம்மாந்துறை,சாய்ந்தமருது ஆகிய இடங்களே பிரதான இலக்கு.இந்த நிலையில் சிராசை வெளியில் விடுவது சில நேரம் எதிர்காலத்தில் சவாலாகவும் மாறிவிடலாம்.இதனால் இவர்களை எது செய்தாவது கட்டி வைக்க வேண்டிய தேவையும் அ.இ.ம.காவிற்குள்ளது.

இவருக்கு இத் தலைவர் பதவியை வழங்கியதன் மூலம் அம்பாறை மாவட்டம் அமைச்சர் ரிஷாதின் அமைச்சின் கீழ் உள்ள நான்காவது தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதோடு சாய்ந்தமருது தன்னகத்தே இரண்டு தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டது.இது வரை ஆட்சிக்கு வந்த எவராலும் அம்பாறை மாவட்டத்திற்கும்,சாய்ந்தமருதிற்கும் இத்தகைய கௌரவம் வழங்கப்படவில்லை.இதனை ஒரு வகையில் கௌரவமாக நோக்கினாலும் இது பல இடங்களில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரான அதிர்வலையை தோற்றுவித்துள்ளது.குறிப்பாக குருநாகல்,வன்னி மக்கள் அமைச்சர் றிஷாத்தை சற்று கடிந்து கொண்டுள்ளனர்.அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்தில் கால் பதிக்க முன்பு அமைச்சர் றிஷாதின் சேவைகள் அனைத்தையும் வன்னி மாவட்டமே உறுஞ்சிக் குடித்திருந்தது.அப்போதும் அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் அவரது செயற்பாடுகள் ஒரு குறித்த எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

தற்போது அமைச்சர் றிஷாத் தலைமையிலான அ.இ.ம.கா இலங்கை முஸ்லிம்களின் ஏக கட்சியாகவிருந்த மு.காவுடன் சரிக்கு சமமாகவுள்ளது.இதன் காரணமாக முன்னர் போன்று ஒரு குறித்த எல்லைக்குள் தனது செயற்பாட்டை முடக்க முடியாது.அமைச்சர் றிஷாத் ஒரு கட்சி தலைவர் என்ற வகையில் அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பதே ஏற்புடையதாகும்.இது சில வேளை அவரினூடாக இதுவரை காலமும் முற்று முழுதான பயன்களை சுவைத்த வந்த வன்னி மக்கள் அமைச்சர் றிஷாத் தங்களை புறக்கணிக்கின்றாரோ என கருதவும் வாய்ப்புள்ளது.அமைச்சர் றிஷாத் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவராக வர வேண்டுமாகவிருந்தால் அவருக்கு அம்பாறை மாவட்ட மக்களின் ஆதரவு தேவை.தற்போது அங்கு மு.கா ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் அ.இ.ம.கா இவ்வாறான நகர்வுகளினூடாகவே அதனை கைப்பற்ற முடியும்.அதனை வன்னி மக்கள் புரிந்து கொண்டு அமைச்சர் றிஷாத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஒரு பெற்றோருக்கு ஒரு பிள்ளை மாத்திரம் இருக்கும் போது அவர்களிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் தனது முதற் பிள்ளைக்கே கொட்டித் தீர்ப்பார்கள்.இன்னுமொரு பிள்ளை பிறக்கும் போது முதற் பிள்ளைக்கு எப்படித் தான் அன்பை கொட்டினாலும் தன்னை விட தனது தம்பியை தனது பெற்றோர்கள் அதிகம் கவனிப்பதாக மனம் சஞ்சலப்படுவது வழமை.சிறிய குழந்தை என்பதால் அதனை ஒரு நிலைக்கு கொண்டு வர குறித்த பெற்றோர்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பது இதற்கான காரணமாகவும் இருக்கலாம்.இதனை முதற் பிள்ளை தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது.இது போன்று தான் அம்பாறை மாவட்ட மக்கள் மீது அமைச்சர் றிஷாத் காட்டும் அக்கறையை வன்னி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தனது ஊரிலிருந்து,பகுதியிலிருந்து இலங்கை முஸ்லிம்களை தலைமை தாங்கக்கூடிய தலைவர் வருவதென்பது சிறிய விடயமல்ல.அதனால் அப் பகுதியே வரலாறு நெடுங்கிலும் பேசப்படும்.

கடந்த முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.இ.ம.காவிற்கு குருநாகலில் அம்பாறையை விட இரட்டை மடங்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.அமைச்சர் றிஷாத்தினால் இந்த ஊரிற்கு ஒரு தலைவர் பதவி கூட வழங்கப்படவில்லை.ஒரு கோணத்தில் இதனை தவறு எனக் கூறினாலும் பல இடங்களை விட அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை முன்னிலைப்படுத்தும் அமைச்சர் றிஷாதை அம்பாறை மாவட்ட மக்கள் புரிந்து கொள்வார்களா என்பதை எதிர்வரும் தேர்தல்களின் மூலம் தான் அறிந்துகொள்ளலாம்.அம்பாறையில் அரசியல் மாற்றமொன்றிற்கான சமிஞ்சை தென்படுவது குறிப்பிடத்தக்கது. 

சாய்ந்தமருதை மு.காவிடமிருந்து வீழ்த்தினால் மு.காவின் அம்பாறை அடித்தளம் சரிந்து விடும் என்ற கணக்கின் அடிப்படையில் தான் அமைச்சர் றிஷாத் தனது காயை நகர்த்துவதாகவே பலரும் கருதுகின்றனர்.சாய்ந்தமருது பதவி ரீதியாக மு.காவினால் புறக்கணிக்கப்படும் நிலையில் அமைச்சர் றிஷாத்தின் இக் காய் நகர்த்தல் சாய்ந்தமருது மு.காவின் ஆதரவில் தாக்கம் செலுத்தக் கூடிய நிலையும் உள்ளது.இதனை மு.கா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

குறிப்பு: இக் கட்டுரை இன்று 31-10-2016ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 68 கட்டுரையாகும்.


றிஷாதின் காய்நகர்த்தல்.. றிஷாதின் காய்நகர்த்தல்.. Reviewed by Madawala News on 10/31/2016 02:31:00 PM Rating: 5