Ad Space Available here

பெண்கள் விடயத்தில் அநியாயம் இழைப்பதைத் தவிர்ப்போம்


பெண்கள் விடயத்தில் வேண்டுமென்றே அநியாயம் இழைப்பதை பயந்துகொள்ள வேண்டும்

(اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ)
"நீர் அநியாயம் இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை பயப்படுவாயாக; ஏனெனில் அதற்கும் இறைவனுக்குமிடையில் எவ்வித திரையும் இல்லை"
என்ற நபியின் பொன்மொழியை நம்பிக்கை கொண்ட யாரும் மணமுடித்த பின் தனது மனைவியர்களை சீரழித்து சின்னாபின்னமாக்கி சந்தி சிரிக்க வைக்கமாட்டார்கள்.

உலகில் இரண்டுவிதமான நடத்தையுடையோர் மிகக் கீழ்த்தரமானவர்களும் மகா கேவலமான துஷ்டர்களும் ஆவார்கள்

1) பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் போன்றோரது கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து தன்னை நம்பிவந்த மனைவியை ஒதுக்கி அவளுக்கு தாங்கமுடியாதளவு அநியாயங்களை இழைக்கும் மனிதப் போர்வையில் மிருகங்களாக சுற்றும் மனிதம் அற்ற கணவன்மார்கள்

2) பாலியல் தேவைக்கு மாத்திரமே பெண் படைக்கப்பட்டுள்ளாள் என்ற கருத்தை தன்னில் உறுதி கொண்டு திருமணம் முடித்து மனைவியில் தேவைகளை நிறைவுசெய்து அல்லது திருப்தி காணாத போது அவளை சீரழித்து நடுத்தெருவில் நிக்கவைத்துவிட்டு இன்னொரு பெண்ணை தனது மாய வலையில் விழவைத்து வழமையான தனது காம லீலைகளைத் தொடரும் கீழ்த்தரமான அற்பர்களான கணவன்மார்கள்.

ஆண்கள் என்போர் பெண்களுக்கு நலம் நாடுபவர்களாகவும் அவர்களை பாதுகாப்பவர்களாகவும் இருக்கவேண்டும், ஆனால் இன்று ஒருசில அற்பர்கள் பெண்களை பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரங்களாக மாத்திரம் பார்ப்பது தான் மன வேதனையளிக்கின்றது.

ஆண் என்ற அகம்பாவம் தலைக்கேறிவிட்டால் பிறகு இறைவனது கட்டளைகள் எங்கே மதிப்பளிக்கப்படப் போகின்றன. இறைவனது தண்டனைகளையும் அவனது கடின பிடியையும் மறந்த கல் நெஞ்சங்கள் தான் ஆண் என்ற திண்டாட்டத்தில் அனைத்து அனாச்சாரங்களின் தலை வாசலாக அமைகின்றன, இவ்வாறானவர்களுக்கு இறைவன் தீராதொரு நோயை கொடுத்துவிட்டான் எனில் அதன் பின்னர் எங்கே ஆண் என்று மார் தட்டிப் பேசமுடியும்?.

இறைவன் தாமதமாகவே நின்று கொல்வான், அந்நேரத்தில்  ஆண் என்ற வீராப்பும், பெருமையும் விதண்டாவாதமும்,அகம்பாவமும்,வீண்
பிடிவாதமும், வரட்டு கௌரவமும் கடுகளவிற்கும் பெறுமதியற்று பலவீனமுற்று நிற்கும் பொழுது இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை இத்தகைய காமுகர்கள் நன்குணர்ந்துகொள்வார்கள்.

மனைவியரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றைப் புரிந்து, அவர்களையும் மனிதப் பிறவிகளாக மதித்து, மனிதம் பேணி சிறந்த கணவனாக வாழ வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன் 

நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா 
14/10/2016
பெண்கள் விடயத்தில் அநியாயம் இழைப்பதைத் தவிர்ப்போம் பெண்கள் விடயத்தில் அநியாயம் இழைப்பதைத் தவிர்ப்போம் Reviewed by Madawala News on 10/19/2016 06:47:00 PM Rating: 5