Accaddemy

மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன

மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர்

மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் யாழ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர் அவர்கள் சுபியான் மௌலவிக்கு அனுப்பி வைத்துள்ள திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார், அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுபியான் மௌலவியின் 1994-2014 வரையான 20வருட கால அரசியல் குறித்து தெளிவான பார்வை எம்மிடம் இருக்கின்றது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள் அல்லது இழந்த இழப்புகள் பற்றி நான் விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. 2015 ஜனாதிபதித் தேர்தல் வரை மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான மஹிந்தவின் அனைத்து துரோகங்களையும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதியுமாகிய மௌலவி சுபியான் அவர்களுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அஸ்மின் அய்யூப் அவர்கள் பற்றி அல்லது அவரது பணிகள் பற்றி விமர்சிக்க எவ்வித அருகதையும் கிடையாது.

2013ல் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையில் நியமன உறுப்பினராக வடக்கு முஸ்லிம் மக்களின் நலன்களை கவனிக்கவென நியமிக்கப்பட்ட கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்ததின் அடிப்படையிலே நியமிக்கப்பட்டார். எனவே குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் செயலாற்றவேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கின்றது. அவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் வடக்கின் ஐந்து மாவட்ட முஸ்லிம்களின் விவகாரங்களையும் கவனிக்கின்ற ஒருவராகவே இருக்கின்றார் என்பதை மீண்டும் ஒருதடவை நினைவூட்ட விரும்புகின்றேன். 

இருப்பினும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விவகாரங்களில் கௌரவ உறுப்பினர் அஸ்மின் அவர்களது செயற்பாடுகளுக்கு ஈடாக இதுவரை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியும் செயலாற்றவில்லை என்பதை என்னால் உறுதிபடத் தெரிவிக்க முடியும். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான முழுமையான திட்டமிடல் தயாரிப்பு, தரவுகள் சேகரிப்பு என மிகவும் அடிப்படையான விடயங்கள் தொடங்கி, அந்த மக்களின் காணியில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள், கல்வி சார்ந்த பிரச்சினைகள், சுகாதாரம், உட்கட்டமைப்பு சார்ந்த விடயங்கள் என பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி அவற்றைத் தீர்ப்பதற்கான அல்லது நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை கௌரவ அஸ்மின் அவர்கள் முன்னெடுப்பதை எல்லோரும் அறிவார்கள்.

பத்திரிகைகள் தெரிவிப்பது அதிகம் நடைமுறைப்படுத்துவது குறைவு என்ற ஒரு பாரிய குற்றச்சாட்டினை தாங்கள் முன்வைத்துள்ளீர்கள். இவற்றை ஆதாரபூர்வமாக தங்களால் நிறுவ முடியுமா? என நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன், பத்திரிகைகளில் வெளிவராத எத்தனையோ செயற்திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார் என்பதே உண்மையாகும். அரசியல் ரீதியாக பல்தடவைகள் தோல்வியைத் தழுவிய சுபியான் மௌலவி அவர்கள் அரசியல் ரீதியான காழ்ப்புணர்வின் அடிப்படையில் செயற்படுகின்றீர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நெருக்கமான உறவுகளைப் பேணிவருகின்ற கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்களின் விவகாரங்களை புரிந்துகொண்டு பேசுவதற்குரிய நிலையினை ஏறபடுத்தியிருக்கின்றார், இப்போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி  முஸ்லிம்களின் விவகாரங்களில் பல்வேறு முன்னேற்றங்களும் மீள்குடியேறுகின்ற மக்களுக்கு நம்பிக்கைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்ற சூழல், முஸ்லிம்களை வைத்து இனவாத அரசியல் செய்ய முற்படுகின்ற ஒருசிலருக்கு பலத்த ஏமாற்றத்தையே தந்திருக்கும். எனவே அவர்கள் காழ்ப்புணர்வுகொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள்.

வடக்கு மாகாணசபையால் அல்லது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அஸ்மின் அவர்களால் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதுவித நன்மைகளும் நடக்கவில்லை என்று கூறுகின்ற மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் , அதற்காக ஒரு திறந்த மேடையை ஏற்படுத்தித் தருவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் தாங்கள் தரும் திகதியில் அவ்வாறான ஒரு திறந்த விவாதத்தை நடாத்த தாங்கள் முன்வரவேண்டும் என நான் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்

மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன Reviewed by Madawala News on 10/10/2016 12:37:00 PM Rating: 5