விமர்சனங்கள் ஆரோக்கியமாக அமையுமா?


எம்.எம்.ஏ.ஸமட்
விமர்சனம் என்பது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு முன்வைக்கப்படும் கருத்தாகும். அதில் நேர், எதிர் மறை தன்மைகள் காணப்படும.விமர்சனங்கள் குறிப்பாக ஒரு தனிநபரை, செயலாக்கத்தை, படைப்பை,  அமைப்பை, அரசியல் கட்சியை என பல்வேறு விடயங்களில் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் ஆரோக்கியமான விமர்சனங்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்கான பாதைகளைத் திறக்க வழிகோலும்.

சமகாலத்தில் அரசியல் பிரமுகவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக மட்டத்திலும், பிரதேச, பிராந்திய மட்டங்களிலும் அதிகளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை காண முடிகிறது.  அரசியல் பிரமுவர்களினாலேயே பிற அரசியல் பிரமுவர்கள் நாகரியமற்ற முறையில்  விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றமையையும் அரசியல் அரங்கில் அவதானிக்க முடிகிறது.

விமர்சனம் என்ற போர்வையில் ஒரு தரப்பை பாதிக்கும் நோக்குடன் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆரோக்கியமற்றதாகும். மொழிப்புலமை உள்ளது என்பதற்காக வெற்று விமாசனங்களை முன்வைப்பதால் எவற்றையும் அடைந்துகொள்ள முடியாது. அவை எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாது.

மாறாக, மக்கள் பிரதிநிதிகளின் அல்லது கட்சிகளினதும், அமைப்புக்களினதும் தலைமைகளின் செயற்பாடுகள் மக்களுக்கு நன்மையடைக் கூடியதாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களால் நிறைவு செய்யப்படாத மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தி, அவர்களினூடாக மக்களின் தேவைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் இலக்குடன்; விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோது அவை ஆரோக்கியமாக  அமையும். அவர்களின் கண்களைத் திறக்கவும் செய்யும்.

இணையத்தள சமூக வலைத்தளங்களினூடாக தங்களது மொழியாற்றலையும் கருத்தியில் வாதப் பிரதிவாதங்களையும் முன்னெடுத்துவருகின்ற சிலரினால் முன்வைக்கப்படுகின்ற  விமர்சனங்களில் சமூக நோக்கைக் காண்பது அறிதாகவேவுள்ளது. அவற்றில் சுயநலன்கள் மலிந்து கிடக்கின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமாக அமையும்போதுதான் அவை அர்த்தமுள்ளதாக அமையும். சமூக எழுச்சிக்கு வழிகோலும்.  அல்லாத பட்சத்தில் அவை வெற்று விமர்சனங்களாகவே கருதப்படும்.

அந்தவகையில், மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக் வந்தவர்களினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றபோது அல்லது அப்பிரச்சினைகள் தொடர்பில் மௌனம் காக்கின்றபோது அவற்றைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் எதிர்பார்க்கினற் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அத்தகைய விமர்சனங்களை அவமானப்படுத்தாது அவற்றுக்கு மதிப்பளிப்பது சம்பந்தபபட்டவர்களின் தார்மீகப் கடப்பாடாகும். அத்தோடு அவ்விமர்சனங்கள் தொடர்பில் சுயவிமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தகையவர்களின்; சமூகப் பொறுப்பாகும்.

தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளினூடாகவும். பத்திரிகைள், சஞ்சிகைகள மற்றும் இணையத்தள செய்திச் சேவைகள், வட்செப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாவும் சமூக அபிவிருத்தி, சமூக நலன்கள், சமூக எழுச்சி மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் ஆரோக்கியமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறு முன்வைக்கப்படுகின்ற அவ்விமர்சனங்கள் தமது கட்சியை அல்லது தலைமையின் செயற்பாடுகளை நெருக்கடிக்குள் தள்ளுவதாகக் கருதும் அரசியல் தலைமைகளினால் அவ்விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களின் கருத்துச் சுதந்திரங்களைப் பறிக்கும் செயற்பாடுகளும் சமகாலத்தில் முன்னெடுக்கப்படுகிது. அதற்காக அவர்கள் தங்களது முழு வளங்களையும்; பயன்படுத்திய சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. இந்நடவடிக்கைகள் அவர்களின் சமூக நலனற்ற தன்மைகளை மேலும் விளப்பரப்படுத்துவதற்கு வழிகோலியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களிலிருந்து  ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்டையில், அவர்களை வெற்றிபெறச் செய்த மக்களின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்படுவதும் அவர்கள் தொடர்பாகவும் அவர்களின் கடந்த கால, சமககால நடவடிக்கைகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நியாயமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதும் அவை தொடர்பில் சுயவிமர்சனம் செய்யப்பட்டு ஆரோக்கியமான நடவடிககைகள் முன்னெடுக்கப்படுவதும் இன்றியமையாதது.

சிறுபான்மைக்கட்சிகளும் பிரதிநித்துவமும் .

இந்நாட்டில் ஏறக்குறைய 70 வீதம் பெறும்பான்மையின சிங்கள சமூகத்தினரும்  30 வீதம் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகத்தினரும் வாழுகின்றனர். இச்சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 164 அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் 19 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளாகும்.

இக்கட்சிகளில் முறையாகச் செயற்படாத, விரல்விட்டு எண்ணக்கூடிய  அங்கத்தவர்களைக் கொண்ட அல்லது நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில் கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்காக மாத்திரம் பதிவு செய்து ஒரு சில குறுகிய சுய இலாபத்தை அவற்றினூடாக  அடைந்து கொள்வதற்காக தங்களை விசுவாசிக்கும் ஊடகவியலாளர்களைக் கொண்டு அல்லது தாங்களாகவே ஊடங்களுக்கு அறிக்கைகளை அனுப்பி அவற்றைப் பிரசுரிக்க செய்து பிரபல்யம் அடையும் கட்சிகளும் அக்கட்சியை வழிநடத்துவர்களும் விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். அவர்களின் இத்தகைய விமர்சனங்கள் சமூகத்திற்கு எத்தகைய பலனையும் அளிக்கப்போவதில்லை.

சிறுபான்மைக் கட்சிகள்; தனித்துவ அடையாளங்களோடும் தனித்துவ அடையாளங்களைத் தவிர்த்தும்  பிரதான கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்கின்ற வழமை முஸ்லிம் அரசியல் கட்சிகளிடத்திலும் மலையகக் கட்சிகளிடமும் காணப்படுகின்றன. ஆனால், சில தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்கின்ற மரபைக் கெண்டுள்ளன. அதிலும் குறிப்பாக  ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிட்டு  அதிக விருப்பு வாக்குகளைப் பெறும் கட்சியாக அதன் அரசியல் பயணத் தொடக்கத்திலிருந்து பயணத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

தமிழ் சமூகத்தின் சார்பில் வடக்கு, கிழக்கு மலையக மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்திலிருந்து எல்லாமாக 25 உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகளின் மூலம் கடந்த பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். முஸ்லிம் சமூகத்தின் சார்பில் 15 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகளின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தவிர்த்து மக்களின்; நேரடி வாக்களிப்பின் மூலம் தம்pழ், முஸ்லிம் மக்கள் சார்பில் 40 உறுப்பினர்கள் இந்த 8வது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து செயற்படுவது தர்மமாகாது.

இவ்விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் ஆணித்தரமான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வரும் வேளையில், தனித்துவமிக்க சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், தங்களது கட்சி நடவடிக்கைள் மற்றும் விசுவாசிகளின் நலன்களில் காட்டும் அக்கறையும் கரிசனையும் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வெளிப்படைத்தன்மையன்றி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை உதாசீனம் செய்ய முடியாது.

இந்நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும். அதை நிறைவேற்ற உங்களது வாக்குகளை அளியுங்கள் அதன் மூலம் வாக்களிக்கும் மக்களின் கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்த அரசியல் தலைமைகள் குறித்தும் அவர்களின் தலைமைத்துவங்களை நம்பிச் செயற்படுகின்ற ஏனைய உறுப்பினர்கள் குறித்து பெரும்பாலான கிழக்கு முஸ்லிம்கள் அதிருப்தியுடன் காணப்படுகிறார்கள்.  விமர்சனங்களை அள்ளி வைக்கிறார்கள்.

ஆனால், அவ்விமர்சனங்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கொலி என்ற நிலையிலேயேதான் காணப்படுகிறது. ஏனெனில், இந்நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை அரசு முன்நகர்த்தி வருகின்ற இக்கால கட்டத்தில் அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், தேர்தல் முறைமை மறுசீரமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றுக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் முன்நகர்த்தவில்லை. அல்லது அவற்றை முன்நகர்த்தினாலும் அவை மூடிய அறைக்குள் நடந்தேகின்ற விடயங்களாகவே உள்ளன  என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக காணப்படுகிறது.

கட்சிப் பேராளர் மகாநாடுகளை நடாத்துவதற்காக செலவு செய்த அளவிற்கு அல்லது ஆதாரவளர்களை ஒன்று திரட்டிய அளவிற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் நோக்கம் அதன் சாதாக, பாதக நிலைகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை இக்கட்சிகள் முன்னெடுக்கவில்லை.
 
இந்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய பொறியாக இந்த மூன்றாவது அரசியலமைப்பு இருக்கப்போகிறது. அதனால், இது குறித்த தெளிவை மக்களுக்கு வழங்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் அல்லது அக்கட்சிகளின் தார்மீகக் கடமையாகும். ஏனெனில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாற்றுத்  தேர்தல் பொறிமுறை இன்னும் இவற்றோடு தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பில் 90 வீதமானனோர் தெளிவற்றவர்களாகவே சமூகத்தில் உள்ளனர். இருப்பினும், சிறுபான்மைச் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இந்நல்லாட்சியின் பங்காளிகள் என்ற ரீதியில் இந்த நல்லாட்சி அரசாங்கம் வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்கள் மத்தியிலிருந்து இன்னும் அகன்றுவிட வில்லை.
 
நல்லாட்சியும் மக்கள் அபிலாஷைகளும்

காலத்திற்குக் காலம் தேர்தல்கள் நடைபெம்போது அத்தேர்தல்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்காக வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு அவ்வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களால் வெற்றி பெற்ற பின் ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி கடந்த பின் நீ யார் நான் யார் என்ற மனோநிலையில் அரசாங்கமும் பல மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட்ட  வராலாற்றுப் பாடங்கள் இன்னும் வரலாற்று ஏடுகளாக அரசியல் ஏடுகளில் பதிவாகியிருக்கிறது.

இந்த ஏமாற்று வராலாறுகள் மாற்றியமைக்கப்பட வேண்டு;ம். இந் வராலாற்ற மாற்றி எழுத வேண்டும் என்பதற்காகவே கடந்த 2015 ஜனவரியில் இந்நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டது. அதற்காக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

அவ்வாட்சியை ஏற்படுத்துவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.  இதனால் தங்களது அபிலாஷைகள் ஓரளவு நிறைவடைந்துள்ளது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ள போதிலும், இவ்வாட்சியில் சிறுபான்மையினரின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறுபான்மை சமூகங்களின் மத்தியில் காணப்படுகிறது.

பொருளாதாரத்தை மேம்படுத்தல், ஊழல்களை வேரோடு களைதல், சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு மற்றும்  கல்வியை மேம்படுத்தல் ஆகிய ஐந்து அம்ச செயல்முறைகளை முன்வைத்து  பிரமர் ரணில் விக்கிரம சிங்க கடந்த பாராளுமன்ற தேர்தல் காலங்களில்; பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

இந்த ஐந்து அம்ச செயல் முறையில் பல மக்களின் நீண்ட காலத் தேவைகளும் அபிலாஷைகளும் நிறைவு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கட்டியெழுப்பட்டதன் நிமித்தமும் கடந்த மஹிந்த ராஷபக்ஷவின் இருண்ட, எதிர்காலமற்ற, அரசாட்சி மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்குடனுமே மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரகவுமாக்கியுள்ளனர் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.

ஐந்து வருடங்கள் தொடரப்போகும் இந்த நல்லாட்சித் தொடரில் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது. இவ்வாட்சியில் பங்காளிகளாகியுள்ள சிறுபான்மையினக் கட்சிகளின் அரசியல் தலைமைகளும் பிரதிநிதிகளும் அவர்கள் அளித்துள்ள வாக்குறுதிகளையும், அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் அவர்களுக்கு வாக்களித்த மக்களின் நீண்டகால உடனடித் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு உழைப்பதே காலத்தின் தேவையாகவுள்ளது.

இத்தேவைகள் இவர்கள் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் நிதர்சனமான விமர்சனங்களை கிடப்பில் போடுவதற்கு அரசியல் தலைமைகள் முற்பட்டால் அப்பொறுப்பு மாற்றுத் தலைமைகளின் பக்கம் நகரும் என்ற யதார்த்தம்; புரியப்படுவது அவசியமாகும். ஏனெனில் சிவில் சமூகங்களின் எழுச்சி இந்த யதார்த்தத்திற்கு உரம் ஊட்டுவதாக அமைகிறது.

உத்தியோபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையாளர் ரீடா ஐசாக்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்பொன்று சந்தித்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக்; கலந்துரையாடி அதற்கான அறிக்கைகளையும் கையளித்திருப்பதானது அசியல் தலைமைகளுக்குச் சமாந்திரமாக செயற்படுவதற்கு சிவில் சமூகங்கள் எழுச்சி பெற்றுவிட்டன என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது.

சிவில் சமூகங்களின் தேவை மற்றும் அவற்றின் எழுச்சிக்கான அவசியம் தெர்டர்பில் முன்னர் நாம் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக வலியுறுத்தியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் வாழும் மக்களை விடவும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வாழும் மக்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பல தேவைகைளுடன் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வதற்கு வீடு, குடிப்பதற்கு நீர், வெளிச்சத்திற்கு மின்சாரம், போன்ற  அடிப்படைத் தேவைகள், பெண்கள் மகளிர் எதிர்நோக்கும் வாழ்வாதரப் பிரச்சினைகள், படித்த இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு, சம்பள அதிகரிப்பு, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள்,  பாடசாலைகளின் அபிவிருத்தி, கல்வி முன்னேற்றம் என நிறைவேற்ற வேண்டிய பல  உடனடித் தேவைகள் இப்பிரதேசங்களில் நிறைவேற்றப்படாது தேங்கிக் கிடைக்கின்றன.

இவற்றில்; முதன்மை வகிப்பது இனப்பிரச்சனைக்கான தீர்வாகும்.  இனைப்பிரச்சனைக்கான தீர்வை ஓரிரு வாரங்களிலோ ஓரிரு மாதங்களிலோ நிறைவு செய்து கொள் முடியாத போதிலும், இந்த நல்லாட்சியில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு சமத்துவமாக, எந்த ஒரு இனத்தையும் பாதிக்காத வகையில் அமையப் பெறும்;போதுதான் எல்லோரும் எதிர்பார்க்கும்; சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சமூக ஒற்றுமை, அமைதி, நல்லெண்ணம். சுபீட்சமான எதிர்காலம் என்ற ஒரு அமைதித் தேசத்துக்குரிய நிலைகளை இந்நாடு காணும்.

விருத்தியடைந்து வரும் நாடொன்றினதும் அரசியல் தலைமைகளினதும் செயற்பாடுகள் மக்கள் விரும்பும் திசையில் நகர வேண்டுமாயின் அச்செயற்பாடுகள் தொடர்பில் ஆரோக்கியமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.

குறிப்பாக காலத்திற்கு காலம் நடைபெறும் தேர்தல்களினூடாக மக்களது வாக்குகளைப் பெற்று அதகிhரத்துக்கு வருகின்ற மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் இயலாமை தொடர்பில் முன்வைக்கப்படுகின்றன விமர்சனங்கள் குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஆரோக்கியமான விமர்சனங்கள் முஸ்லிம் அத்தலைமைகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இருப்பினும,; ஒரு தனிநபரைக் கேவலப்படுத்தும் நோக்குடன் வெற்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோது   அவற்றினால் எதிர்பார்த்த இலக்கை எட்டுவதற்கு பதிலாக பக்கவினைவுகளே பதிலாகக் காணமுடியும். ஆதலால், சமுதாய நலன் கருதி முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆரோக்கியமாக அமைய வேண்டும். அவை அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு அத்தலைமைகளின் சமூக நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு இவ்விமர்சனங்கள் ஊக்கியாகச் செயற்படும்போதுதான் அவர்களினூடாக மக்கள் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை அடையக் கூடியதாக அமையும் என்பதே நிதர்சனமாகும்.
விமர்சனங்கள் ஆரோக்கியமாக அமையுமா? விமர்சனங்கள் ஆரோக்கியமாக அமையுமா? Reviewed by Madawala News on 10/14/2016 12:38:00 AM Rating: 5