Kidny

Kidny

வழிபாட்டு அரசியல்..


ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரே இறைவனை வழிபடுகின்ற முஸ்லிம்களுக்கு வழிபடுவதற்கான இன்னுமொரு தெரிவே கிடையாது.ஆனால், ஏனைய சில மதங்களில் பல தெய்வ வழிபாடு இருக்கின்றது.அங்கு பொதுவாக, ஒரு தெய்வத்தை வழிபடுபவர் பெரும்பாலும் இன்னுமொரு தெய்வத்தின் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார். ஒரு தெய்வத்தை வழிபடுகின்றவருக்கு இன்னுமொரு தெய்வத்தை கண்ணில் காட்டவே முடியாதிருக்கும்.மாற்று தெய்வங்களை தரிசித்தலும் அதுபற்றி கேட்டலும் கூட தம்மை பிற மதத்தின்பால் இழுத்துச் சென்றுவிடும் என்று நம்புவார்கள். 

இன்னுமொரு மதத்தின் நல்லுபதேசங்களை கேட்பது கூட தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கும். தெய்வத்தின் விடயத்தில் எல்லா விஷயங்களையும் கண்ணைமூடிக் கொண்டு நம்புபவர்களாக இருக்க வேண்டும் என்பதும், எந்த சந்தேகத்திற்கும் கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடாது என்பதும் அவ்வாறான பக்தர்களின் நிலைப்பாடாக இருக்கும். பக்தி முற்றினால், அவர்களது நிலைமை இதை விட தீவிரமாகலாம்.

முஸ்லிம்களிடையே தங்களுடைய இறைவனை வழிபடுகின்ற விடயத்தில் இவ்வாறான ஒரு நிலை இல்லை. ஆனால், அரசியல் என்பது அவர்களுக்கு மத்தியில் இன்னுமொரு மதம் போல வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில், முஸ்லிம் அரசியல் என்பது அரசியல் வழிபாடுகளாலும் வழிபாட்டு அரசியலாலும் நிரம்பி வழிந்து, நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்குள் மிக மோசமானதும் கேடுகெட்டதுமான ஒரு அரசியல் கலாசாரம் ஆழ வேரூன்றி அகலக் கிளை விரித்து வளர்ந்திருக்கின்றது. ஆனால் அதிலிருந்து எந்தப் பயனும் இந்த சமூகத்திற்கு கிடைக்கவில்லை. அது எப்படியானது என்றால், ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் தம்முடைய கட்சியின் கொள்கைகயை கண்மூடித்தனமாக நம்புகின்றார். தமது கட்சி என்னதான் நிலைப்பாடு எடுத்தாலும் அதுவெல்லாம் மிகச் சரியான நிலைப்பாடாக இருக்கும் என்று கண்ணைப் பொத்திக் கொண்டு சொல்கின்றார். 

தம்முடைய கட்சித் தலைவனைஅல்லது தாம் ஆதரவளிக்கும் அரசியல்வாதியை வேறு ஒருவரும் விமர்சிக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றார். தம்முடைய அரசியல்வாதி எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அதுபற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றோம்.

சுருங்கக் கூறின் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருவித வழிபாட்டு அரசியலை உருவாக்கியிருக்கின்றார்கள். தம்மை வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்கள் போல அவர்கள் நினைக்கின்றார்களோ இல்லையோ, ஆனால் தொண்டர்கள், ஆதரவாளர்கள் எனப்படுகின்ற வகையறாவுக்குள் உள்ளடங்கும் - கட்சிக்கு வாக்களிக்கின்ற, தேர்தல் காலத்தில் உழைக்கின்ற, கட்சிக்காக சண்டித்தனம் பேசுகின்ற, சமூக வலைத்தளங்களில் வரிந்து கட்டுகின்ற அரைவேக்காடுகள் தமது அரசியல்வாதியை ஒரு தெய்வத்தைப் போல எண்ணியே வழிபடுகின்றனர் என்றால் மிகையில்லை.

அரசியல் வழிபாடு என்ற விடயத்திற்குள் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் விதிவிலக்கல்ல. தேசியத் தலைமை என்ற கோதாவில் அரசியல்கட்சி தலைவர்கள் தொடக்கம் இரண்டாம் நிலைத் தளபதிகள், சாதாரண சிப்பாய்கள் தொட்டு உள்ள10ராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் வரை எல்லோரும் வழிபாட்டு அரசியலுக்குள் ஒரு பெரிய அல்லது சிறிய தெய்வமாக இருக்கவே பெரும் பிரயாசைப்படுகின்றனர். அவர்கள் விரும்பாவிட்டால் கூட, பக்தகோடிகளான அவர்களுடைய ஆதரவாளர்கள் தெய்வத்தைப் போலவே அவர்களை கையாள்வதை அடிக்கடி காணக் கிடைக்கின்றது.

ஒரு கட்சியின் கூட்டம் நடக்கின்றது என்றால் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுந்தான் அந்தக் கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே இருக்கின்றது. ஒரு தெய்வம் இருக்கின்ற இடத்திற்கு அதை வழிபடுபவர்கள் மாத்திரமே போக வேண்டுமென நினைப்பது மாதிரியானது இது. உண்மையில், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரின், கட்சியின் கோஷம் கொள்கை என்ன என்பது அவருடைய கட்சிக்காரர்களுக்கு தெரியும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டியவன் மாற்றுக் கட்சிக்காரனே. அவனுக்குத்தான் உங்களது கொள்கை விளக்கமும், வாக்குறுதிகளும் அவசியமாகின்றது. ஒரு வாக்காளன் எனப்படுபவன், எல்லாக் கட்சிகளின் கூட்டங்களுக்கும் செல்ல வேண்டும், எல்லா அரசியல் தலைவர்களின் பிரகடனங்களையும் அறிய வேண்டும்.அதன் பிறகு அவன் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுக்க வேண்டும். ஆனால், அது நடைபெறுவதில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிரணிக் காரர்களை போட்டுத் தாக்குவதையே தம்முடைய பிரசாரமாக ஆக்கியிருக்கின்றார்கள். எதிரணிக் காரன் ஒருவன் அந்தக் கூட்டத்தில் நுழைந்தால் அவன் உளவாளியாகவே நோக்கப்படுவது வெட்கக் கேடு.

இரண்டு கட்சிகளுக்குள் இவ்வாறான நிலை இருப்பது ஒருபுறமிருக்க, இன்று ஒரு கட்சிக்குள்ளேயே ஆயிரத்தெட்டு பிளவுகளும் குழுக்களும் உருவாவது புதிய ட்ரென்ட் ஆகியிருக்கின்றது. இது முதலாளித்துவ அரசியலின் பிரித்தாளும் தந்திரமாகும். இதற்கமைய, ஒவ்வொரு ஊரிலும் கட்சிகளின் ஆதரவாளர்கள் மன்னிக்கவும் பக்தர்கள் பலவாறாக கூறுபோடப்பட்டுள்ளனர்.

 'இவர் அவருடைய ஆள், இவர் இவருடைய ஆள்' என்று இரண்டு மதங்களை பின்பற்றும் ஆட்களைப் போல பிரித்து நோக்கப்படுகின்றனர். இந்த பக்தி நிலை முற்றியதால் தேர்தல் காலங்களில் ஒரு கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுக்களும் இடம்பெறுகின்றன. இவ்வாறு யாரோ ஒரு அரசியல்வாதிக்காக சொந்த குடும்பத்திற்குள் சண்டை பிடித்துக் கொண்ட பக்தர்களின் குடும்பங்கள் இன்னும் உறவின்றி இருக்கின்றன.
எந்தவொரு அரசியல்வாதியையாவது ஒரு ஊடகவியலாளர் விமர்சித்தால் அல்லது அவரது குறைகளை சுட்டிக் காட்டினால் அந்த அரசியல்வாதியின் ஆதரவாளர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகின்றது. இதுவே ஒரு பொதுமகனோ மாற்றுக் கட்சிக்காரனோ இவ்வாறான கணைகளை தொடுத்தால் எதிர்வினை கடுமையாகிவிடுகின்றது. பொதுத் தளத்தில் சண்டைக்கு வந்து விடுகின்றார்கள். இவ்வாறா கருத்தை முன்வைப்பவன் சில வேளைகளில் இன்னுமொரு கட்சிக்காரனாகவோ குழப்பம் விளைவிப்பவனாகவோ இருக்கலாம். ஆனால் மறு தரப்பில் இதை நோக்குகின்றவன் அதை நடுநிலையாக நின்றே நோக்க வேண்டும். அவ்வாறான ஒரு விமர்சனம் தனது வழிபாட்டுக்குரிய அரசியல்வாதிக்கு பொருத்தமானதா என்பதை சிந்திக்க வேண்டும். நமது நம்பிக்கையை வென்றவர் என்றாலும் அவர் அரசியல்வாதி என்பதையும் மறதிக்கும் தவறுக்கும் இடையில் படைக்கப்பட்ட மனிதன் என்பதையும் நினைவிற் கொண்டு உண்மை கண்டறியும் ஆய்வொன்றை சுயமாக மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் அக் குற்றச்சாட்டு பிழை என்றால் மிக நாகரிகமான முறையில் பதிலிறுக்கலாம்.

இதேவேளை, கருத்துக்களை வெளியிடுவோரும் நாகரிகத்தை பேண வேண்டியிருக்கின்றது. தாறுமாறாக அரசியல் தலைவர்களை கிண்டலடிப்பதை தவிர்த்துக் கொள்வது வளர்ந்ததொரு சமூகத்திற்கு அழகாகும். விமர்சனங்களை, குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி அரசியல்வாதிகளை கேள்வி கேட்க ஊடகவியலாளர்களுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு பொது மகனுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால் அதற்கொரு முறையிருக்கின்றது.அவர்களை விமர்சிப்பதற்கும் நையாண்டி செய்வதற்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தை புரிந்து செயற்பட வேண்டும். ஆனால் ஏகப்பட்ட இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்ட இன்றைய காலப்பகுதியில் பொதுவெளியில் நாகரிகம் என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது எனலாம். 

இதற்கும் அடிப்படைக் காரணம் - கண்மூடித்தனமான வழிபாட்டு அரசியலாகும். அதாவது, வழிபடும் பக்தர்களை முட்டாளாக்கலாம் என்று அவர்களுடைய தெய்வங்களான அரசியல்வாதிகள் நினைத்து செயற்படுகின்றமையாகும்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை யாராவது ஒருவர் கேள்வி கேட்டுவிட்டால், அவரது செயற்பாடுகளை விமர்சித்து விட்டால், அதற்கான பதிலை – விளக்கத்தை  அளிப்பதே நாகரிகமானது. ஆனால் அவ்வாறு ஒழுக்கமுள்ளவர்களாக நமது அரசியல்வாதிகள் அவர்களது சீடர்களையும் பக்தகோடிகளையும் வளர்க்கவில்லை என்பது கண்கூடு. இப்படியான சந்தர்ப்பங்களில் அதற்கு பதிலளிப்பதை விடுத்து, அதைச் கேட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக 'தெய்வ சாபங்கள்' விடப்படுகின்றன. அவன் மதம் மாறியவன் போல காட்டப்படுகின்றான். 

இவ்வாறான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற போது, சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் அதை ஆற அமர யோசித்து, நமது அரசியல்வாதி இவ்வாறு செய்திருப்பாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் களத்தில் இறங்கி கொச்சையான பதில்களை அளிக்க முற்படுகின்றனர். அவர்களது அரசியல்வாதிகள் எந்தளவுக்கு முட்டாள்தனமான பக்தர்களாக அவர்களை வைத்திருக்கின்றார்கள் என்பதை, அவர்களுடைய பதில்களை பார்த்தாலே இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

ஒரு அரசியல்வாதியை நோக்கி கேள்விகளை எழுப்புகின்றவர்களில், விமர்சனங்களை தொடுக்கின்றவர்களில் ஒரு சிலராவது சமூக அக்கறையுடன் அவற்றைச் செய்கின்றனர். பதிலளிப்போரில் பெரும்பாலானோர் சமூகம் பற்றி சிந்திப்பவர்களே கிடையாது. தம்முடைய தலைவனுக்கு அதாவது கண்கட்ட தெய்வத்தை யாராவது குறை சொல்லி விட்டால், சாறத்தை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விடுகின்ற சிலர், சில போதுகளில், தாம் நிர்வாணமானது கூட தெரியாமல் பொதுத் தளங்களில் வாதிட்டுக் கொண்டு, அறிக்கைவிட்டுக் கொண்டு இருப்பார்கள். இதுதான் முஸ்லிம் அரசியலின் நிலை.

இவர்கள் யாரென்று பார்த்தால்.... அந்த அரசியல்வாதியிடம் தொழில் செய்பவராக, அடுத்த தேர்தலில் போட்டியிட இருப்பவராக, அவரிடம் தொழில் பெற்றவராக, அவரது எடுபிடியாக, அவருக்கு ரகசிய தகவல் சொல்லும் உளவாளியாக, அடியாளாக, அந்த அரசியல்வாதியின் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். காத்திரமான விவாதங்களை சமூகத்திற்காக முன்வைக்கின்றவர்களும், நியாயத்திற்காக தமது அரசியல்வாதிக்கு வக்காளத்து வாங்குவோரும் மிகச் சிலரே. உண்மையான ஆதரவாளர்கள் யாரும் இவ்வாறு வழிபாட்டு அரசியலுக்குள் சிக்கியிருக்கவும் மாட்டார்கள். சிக்கியிருக்கவும் கூடாது. 

யாராவது ஒரு கட்சியின் உண்மையான ஆதரவாளன், ஒரு அரசியல்வாதியை விசுவாசித்தாலும் கூட, வெளியே அந்த அரசியல்வாதி பற்றி என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்பதை காதால் உள்வாங்கிக் கொள்வான். அதைப் பற்றி ஆழமாக யோசிப்பான். பிழை என்றால் பிழை என்பான், சரி என்றால் சரி என்பான். நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவான். அது  அவனது வழிபாடு பற்றிய முடிவாக இருக்கும்.

முஸ்லிம் மக்கள் இன்று தலைவர்களின் ஒற்றுமை பற்றிப் பேசுகின்றார்கள். உண்மையிலேயே தலைவர்கள்,தம்முடைய அரசியல் இலாபத்திற்காக இன்னும் பிரிந்திருக்கின்றார்கள். ஆனால் சாமான்ய மக்கள் ஏன் இன்னும் ஒன்றுபடவில்லை. மார்க்கக் கொள்கைகள் ரீதியாக, அரசியல் நிலைப்பாடு ரீதியாக இன்னும் ஏன் முஸ்லிம்கள் பிரிந்திரிக்கின்றீர்கள். 

அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், கண்கண்ட தெய்வங்களாக அரசியல்வாதிகளை நோக்குவதும் அவர்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் சரி காண்பதும், அவர்கள் காட்டுகின்ற பிழையான வழிகளிலும் பயணிக்க சித்தமாய் இருப்பதும் ஆகும்.

எனவே முஸ்லிம்களுக்கு விடிவு வேண்டுமென்றால் அரசியல் கருத்து வேற்றுமைகளுக்கு அப்பால் நின்று சரியை சரி எனவும் பிழையை பிழை எனவும் சொல்வதற்கு ஆதரவாளர்களும் வாக்காளர்களும் எப்போதும் பின்நிற்கக் கூடாது. நம்முடைய தலைவன் பிழை செய்திருந்தாலும் அது பிழைதான். திருத்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும். நம்முடைய எதிர்தரப்பு தலைவன் சரி செய்திருந்தால் அது சரிதான். அதைப் பாராட்ட வேண்டும்.
அப்படியென்றால், முதலில் இந்த வழிபாட்டு அரசியலில் இருந்து வெளியில் வர வேண்டும்.
 

வழிபாட்டு அரசியல்.. வழிபாட்டு அரசியல்.. Reviewed by Madawala News on 10/10/2016 11:01:00 PM Rating: 5