Kidny

Kidny

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆதில் பாக்கிர் மாக்கார் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது..நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், சமூகங்களுக்கிடையே கட்டி எழுப்புவதற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உட்பட பல்வேறு சமூக அமைப்புக்களினூடாக ஆதில் பாக்கிர் மாக்கார் அளப்பெரிய பங்களிப்புச் செய்தார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம்(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோது ஹிதாயத் சத்தார் ஆதிலின் மறைவு குறித்து அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

உண்மையில் ஆதில் பாக்கிர் மாக்கார் என்று சொல்லப்படுகின்றவர் இலங்கையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தவராவார்.அவர் 25 வருடங்கள் இவ்உலகில் வாழ்ந்தாலும் இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் சகல இன மக்களினதும் மனங்களை வென்ற வாலிபராக திகழ்ந்தார்.

இதற்கு மிகவும் முக்கிய காரணமொன்றும் உள்ளது.முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தன் தலைவருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் 4ஆவது புதல்வராக கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வியை மேற்கொண்டு மிகவும் கௌரவமிக்க மாணவராக பாடசாவைக் கல்வியை முடித்துக்கொண்டு சட்டத்துறைக் கல்வியை மேலதிக படிப்பையும் முடித்துக்கொண்டு ஒரு சட்டத்தரணியாக இவ்வருடம் டிசம்பர் மாதமளவில் சத்தியப்பிரமாணமும் செய்துகொள்ள இருந்தார்.

ஆதில் பாக்கிர் மாக்கார் என்ற வாலிபர் இக்காலப்பகுதியில்தான் இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டுக்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இதன்காரணமாக இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களினதும் அன்பையும், கௌரவத்தையும் பெற்றுக்கொண்ட அவருக்கு உலகின் மிகவும் பிரபல்யமான கல்லூரியும், இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் என்.எம் பெரேரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் படித்த பல்கலைக்கழகமுமான லண்டன் ஸ்கூல் ஒஃப் எக்கொனமிக் என்ற பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அரசியல் பற்றி பட்டப்பின்படிப்பை மேற்கொள்வதறகான புலமைப்பரிசிலை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தால் வழங்கப்பட்டதுடன், இப்படிப்பினை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி லண்டன் சென்றார்.இந்நிலையில் கடந்த 2 வாரகாலமாக அப்பலைக்கழகத்தில் தனது கல்வியை ஆரம்பித்த ஆதில், திடீர் சுகயீனமுற்ற நிலையில் மரணமானார்.

முன்னாள் சபாநாயகர் எம்.ஏ பாக்கிர் மாக்கார் வபாத்தான பிறகு எம்.ஏ பாக்கிர் மாக்காரின் பெயரில் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தை பாக்கிர் மாக்கார் குடும்படுத்தினர் நிறுவி, அதன் இளம் தலைவராகவும் இவர் செயற்பட்டார்.இன்று இந்நாட்டில் நிலவுகின்ற ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஒன்றிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் அடிப்படை குறிக்கோளான நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்துக்கு மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்கார் முக்கிய பங்கு வகித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து பணிப்பாளர் குழுவில் ஒரு அங்கத்தவராக செயற்பட்ட அவர், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் இரு பிரதிநிதிகளில் ஒருவராகவும் தெரிவு செயப்பட்டார். 

அப்போதைய இளைஞர் விவகார அமைச்சசராக இருந்த டலஸ் அழகப்பெரும இத் தெரிவுபற்றி குறிப்பிட்டபோது, உங்களுடைய குடும்ப அரசியலையும் பார்க்காது உங்களுக்குள்ள திறமையின் காரணமாகவே உங்களை இத்தூதுக்குழுவிற்கு தெரிவுசெதுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வெளிநாட்டு புலமைப்பிரிசில்களைப் பெற்றுக்கொண்ட ஆதில், அந்நாடுகளில் உள்ள இளைஞர் அமைப்புக்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தார்.அத்துடன் 2014ஆம் ஆண்டு 80 இளைஞர்கள் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளைப் பெற்று சென்றிருந்தாலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் 8பேரே சென்றிருந்தனர். ஆனாலும் இவ்வருடம் 78 பேரையாவது வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தேசிய இளைஞர் சேவை மன்ற தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்கார் முயற்சியினால் 26ஆக பிரித்துள்ள ஒரு மாவட்டத்தில் மூவர் விகிதம் 78பேரை வெளிநாட்டுக்கு உயர்கல்விக்காக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். இதுபோன்ற பல்வேறு செயற்றிட்டங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்கார் முயற்சியினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. 

மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்காரின் மறைவு, எம்மைப் போன்ற இந்நாட்டில் உள்ள இளம் அரசியல்வாதிகளுக்கும், அனைத்து இன மக்களுக்கு இழப்பாகும். இதேவேளை, மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்காரின் ஜனாஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதன்போது கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களும், சகல இனங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டமை அன்னாரின் புகழையும், சமூக சேவையையும் பறைசாற்றுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆதில் பாக்கிர் மாக்கார் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆதில் பாக்கிர் மாக்கார் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.. Reviewed by Madawala News on 10/21/2016 11:42:00 PM Rating: 5