Kidny

Kidny

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும் ..

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர் முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப்  பார்த்துக் கேட்டார் 'நீங்கள் ஏன் உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும் முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?' என்று. அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் நபர் 'நீங்கள் உங்களது பிரித்தானிய மகாராணியை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா? முடிக்குரிய இளவரசியுடன் கைகுலுக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்குமா?' என்று கேட்டார். அதற்கு அந்த பிரித்தானியர் 'இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை' என்றார். 'ஏன் அதற்கென்ன காரணம்?' என்றார் முஸ்லிம் நபர். 'அவர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களைக் காண்பது  அரிதான வாய்ப்பாகும். அப்படிக் காணக்கிடைத்தாலும் அவர்கள் கையுறை போட்டுக் கொண்டே கைகுலுக்குவார்கள்' என்றார். அதற்குப் பதிலளித்த முஸ்லிம் நபர் சொன்னார் 'நாங்களும் எங்களது வீட்டிலுள்ள பெண்களை மகாராணியாகவும் இளவரசியாகவுமே பார்க்கின்றோம். அதனாலேயே பிற ஆண்கள் அவர்களை முகத்துக்கு முகம் சந்திப்பதற்கான கைகலுக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை' என்றார்.

நாகரிகம் என்பதன் வளர்ச்சியும் மனித இனத்தின் கூர்ப்படைதலும் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாமறிவோம்.இதன் படிமுறைப் போக்கை அறிந்தவர்கள் நாகரிகத்தின் வளர்ச்சியில்ஆடைகளின் முக்கியத்துவம் பற்றி ஆழமாக அறிவார்கள். புராண கதைகளிலும் சரித்திரக் குறிப்பேடுகளிலும் நாம் காண்பது போல் ஆரம்ப காலத்தில் மனிதன் ஆடை பற்றிய எந்தப் பிரக்ஞையும் அற்றவனாக வாழ்ந்திருந்தான். நதிக்கரையோர நாகரிகங்கள் உருவானதெல்லாம் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காகவே அன்றிஇ உடலை மறைப்பதற்காக அல்ல. உணவு என்ற அடிப்படைத் தேவை நிவர்த்தி செய்யப்பட்டு வயிறு நிரம்பிய பின்னரே மனித இனம் தனது அவயவங்களை மறைப்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது எனலாம். அதன்படி இலை - குழைகளால் தங்களது மர்ம ஸ்தானங்களை மட்டும் ஆதிகால மனிதர்கள் மறைக்கத் தொடங்கினர். இதுதான் ஆடைசார் நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியாகும். பின்னர்இ நாரிழைகளால் நெய்யப்பட்ட ஆடைகளை மனித சமுதாயம் அணிந்தது. இதுதான் ஆடையுலகின் முதலாவது பரிணாமம் ஆகும். அதனைத் தொடர்ந்து மனிதன் தன்னுடைய மானத்தை மறைக்க துணியைப் பயன்படுத்தினான். இப்படித்தான் மனித நாகரிகத்தில் முக்கிய இடம்பிடிக்கின்ற ஆடைகளின் தோற்றமும் வளர்ச்சியும் வரலாற்றின் வழி வந்திருக்கின்றது.

ஆக நிர்வாணம் என்பது நாகரிகம் இல்லாத தன்மை என்றால் முழுமையாக தம்முடைய உடலை மறைப்பது நாகரிகத்தின் உச்சக்கட்டமாகும். 

ஆடையே அணியாத மக்கள் நாகரிகமில்லாத ஒரு சமூதாயமாகக் கருதப்படுவார்களாயின் ஆடையுடுத்தலின் முழுப் பரிமாணமான முற்றாக உடம்பை மறைக்கும் சமுதாயமே மிக நாகரிகமானதாக கருதப்பட வேண்டும். ஆனால்இ மேற்கத்தேய கலாசாரமும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர உத்தியும் பெண்களை ஒரு விளம்பரப் பொருளாக மாற்றிவிட்டிருக்கின்றன. மூன்றாந்தர சினிமாக்களும் பெண்களை ஒரு போகப் பொருளாக காட்சிப் பொருளாகவே காட்டி கிறங்கடிக்கின்றன. 

ஆரம்ப காலத்தில்இ ஆடையே அணியாத மனித இனம்இ இலைகளால் தம்முடைய அந்தரங்க உறுப்புக்களை மறைக்கத் தொடங்கி... ஓரளவுக்கு உடம்பை மறைக்கின்ற அளவுக்கு ஆடைகளை உடுத்தும் நிலை வரை சென்றனர். பின்னர்இ மீண்டும் ஆடைக் குறைப்பு என்பதே நவீனகால நாகரிகமாக ஆக்கப்பட்டுள்ளது. அதாவதுஇ ஆடைசார் நாகரிகம் என்பது ஒரு உச்சப்புள்ளிக்குச் சென்று மீண்டும் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் மனிதன் உடம்பை மறைக்கத் தொடங்கியது நாகரிக வளர்ச்சியின் ஆரம்பம் என்றால் ஆடைக்குறைப்பு செய்யத் தொடங்கும் இன்றைய போக்கு உண்மையிலேயே நாகரிகத்தின் வீழ்ச்சி என்று சொல்ல வேண்டும். ஆனால்இ மேற்சொன்ன தரப்பினர்இ இதைத்தான் நாகரிகம் என்று சொல்லிஇ இன்றைய சமூதாயத்தை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றார். அவர்களுக்கு அது தேவையாகவும் இருக்கின்றது. முஸ்லிம்களின் அபாயாஇ புர்காஇ நிகாப் போன்ற ஆடைகள் தொடர்பாகஇ அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை இந்தப் பின்புலத்துடனும் நோக்க வேண்டியிருக்கின்றது.

சில மேற்குலக ஐரோப்பிய நாடுகளில் தொப்பி போட்டு தாடிவைத்த ஆண்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவது போலவேஇ தமது உடலை முழுவதுமாக மூடுகின்ற பெண்களும் பார்க்கப்படுகின்றனர். தொப்பி போட்ட ஆண்களை தீவிரவாதிகளாகவும் அபாயா அல்லது நிகாப் போட்ட பெண்களை தற்கொலைக் குண்டுதாரிகளாகும் உருப்பெருப்பித்து உலகுக்கு காட்டுகின்ற கைங்கரியத்தைஇ முஸ்லிம் விரோத நாடுகளும் சர்வதேச ஊடகங்களும் கனகச்சிதமாக செய்திருக்கின்றன. 

எந்தளவுக்கு என்றால் இப்போதெல்லாம் சில அராபிய நாடுகளின் விமான நிலையங்களில் கூட கோட்சூட் போட்டு வருகின்றவர்களை விட அதிகமாக இவ்வாறான உடையில் வரும் முஸ்லிம்கள் துலாவித்துலாவி விசாரிக்கப்படுகின்றனராம். மறுபுறத்தில் 'ஆடைக்குறைப்புக் கலாசாரமே இன்றைய சமூகச் சீரழிவுகளுக்கு காரணமாக அமைகின்றது என்றும் உடலை போதுமானளவுக்கு மறைக்கும் ஆடையை உடுத்துவதே வன்முறைகளை தடுப்பதற்கான சிறந்த முன்னேற்பாடு என்றும்' உலகளவில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதை உலகப் பிரபலங்கள் பலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது இஸ்லாமியர்களின் கலாசாரம் என்பதால் அதனுடன் உடன்பட முடியாத நிலைமை மேற்கத்தேயத்து்கு இருக்கின்றது. எல்லோரும் தங்களது உடலை மூடுவது சரியென்ற நிலைப்பாடு வந்துவிட்டால் ஆடைக் குறைப்பும் கிழிந்த தன்மையுள்ள ஆடைத் துண்டுகளுமே நவீன நாகரிகம் என்று சொல்லி தாம் உருவாக்கிய கருத்தியலுக்கு என்னவாகும்? பெண்களை போகப் பொருளாகக் காட்டும் பலநூறு மில்லியன் டொலர் வியாபாரத்தை என்ன செய்வது? என்ற பயம் மேற்சொன்ன தரப்பினருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

எவ்வாறிருந்தாலும் பல உலக நாடுகள் இன்று வரைக்கும் அபாயா புர்கா நிகாப் போன்றவற்றுக்கு அனுமதியளித்திருக்கின்றன. சில நாடுகள் முழுமையான தடையையும் வேறுசில நாடுகள் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கின்றன. பிரான்ஸ் முழுயான உடலை மறைக்கும் இவ்வகை ஆடைக்கு 2004ஆம் ஆண்டில் தடையைக் கொண்டு வந்தது. முகத்தை மூடும் ஆடைக்கு மட்டும்இ நெதர்லாந்து தடை விதித்திருக்கின்றது. இவ்வாறான ஆடைகளை தடை செய்வதா இல்லையா? என்பது தொடர்பில் ஜேர்மன் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றது. ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இந்த ஆடை தொடர்பாக அவ்வப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் இன்னும் முழுமையான தடை அமுல்படுத்தப்படவில்லை.

ஆனால் இலங்கையில் அபாயா அல்லது நிகாப் குறித்த கடுமையான விமர்சனங்கள்இ கடந்த நான்கு வருடங்களாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வகையான ஆடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொது பலசேனா போன்ற கடும்போக்கு இயக்கங்கள் கூறி வருகின்றன. அழகு  என்பது தங்களது உடம்பை மறைப்பதா?  வெளிக்காட்டுவதா? என்பதும்இ தாம் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதும் அவரவரது பிரச்சினை மட்டுமன்றி அடிப்படை உரிமையுமாகும். இதைப்பற்றி உணராமல் இனவாதிகள் காட்டுக் கூச்சல் போட்டு வருவதையும் காணமுடிகின்றது. இவ்விடத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அபாயா புர்கா நிகாப் என்ற மூன்று விதமான ஆடைகள் தொடர்பில் தமிழ் சிங்கள மக்களிடையே மட்டுமன்றிஇ முஸ்லிம்கள் சிலரிடையேயும் அடிப்படை விளக்கம் குறைவாகவே உள்ளது. எனவே அபாயா என்பது முகத்தை மூடாமல் உடம்பின் ஏனைய அங்கங்களை மூடுகின்ற ஆடையாகும். புர்கா என்பது கண் பகுதியும் முற்றாக மூடப்பட்ட ஆடை என்பதுடன்இ நிகாப் என்பது கண்மட்டும் தெரிகின்ற விதத்திலமைந்த ஆடை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அபாயா தொடர்பில் பெரிய சர்ச்சைகள் எதுவுமில்லை. புர்கா நிகாப் குறித்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

90களின் பிற்பகுதி வரை இலங்கையில் முஸ்லிம்களிடையே இவ்வகை ஆடைகளின் பாவனை என்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் அதிகரித்த மார்க்க போதனை அமைப்புக்களும் பிரசார வேலைத்திட்டங்களும் இவ்வகை ஆடைகளின் பாவனையை அதிகரிக்கச் செய்திருக்கின்றது எனலாம். முஸ்லிம் பெண்கள் தமது மார்க்கக் கட்டளையின் அடிப்படையிலேயே இவ்வகை ஆடைகளை அணிகின்றனர். அடிப்படைக் காரணம் மதம் சார்ந்தது என்றாலும்இ வாழ்வியல்சார் துணைக்காரணங்களும் சிலருக்கு இருக்கலாம். எது எவ்வாறாயினும் தம்முடைய ஆடைகளை தீர்மானிப்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும். அதனால்இ பிறரது சுதந்திரம் பாதிக்கப்பட்டாலொழிய அதனை தடைபோடுவதற்கு தார்மீக உரிமை யாருக்கும் கிடையாது. நிலைமை இவ்வாறிருக்க இலங்கையில் இவ்வகை ஆடைகளை தடைசெய்ய வேண்டுமென்று முன்னமே இனவாதிகள் மாத்திரமே கூச்சல்போட்டு வந்த நிலையில் இப்போது சட்ட ரீதியிலான முறையில் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் 'நிகாப் அணிவது முஸ்லிம்களுக்கு கட்டாயமானது என்ற முன்னைய நிலைப்பாட்டிலேயே உலமா சபை இருக்கின்றது. நிகாபை தடை செய்ய முற்பட்டால் அதற்கெதிராக 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட வேண்டும்' என்று கூறியுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. பாதுகாப்பு தரப்பினர் மறைமுகமாக இதைத் தடைசெய்வதற்கு திட்டங்களை தீட்டுகின்றனர் என்பதை அறிந்தவராக உலமா சபை தலைவர் இக்கருத்தை முன்வைத்திருக்கின்றாரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக நெருக்குவாரங்கள் ஏற்படுகின்ற போதுஇ முஸ்லிம் தலைவர்கள் பிழை செய்கின்ற போது 'இது நம்முடைய  வேலையல்ல' என்பது போல் உலமா சபை ஒதுங்கியிருந்தாலும் குறிப்பிட்ட விடயங்களுக்குள் மட்டும் தமது செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளமைக்காக அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும்இ அந்தச் சபையின் தலைவரது நிகாப் பற்றிய கருத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக கொண்டு செயற்பட வேண்டுமென தோன்றுகின்றது. அதேநேரம் 'மாற்றுக் கருத்துக்களையும் மதிக்க வேண்டும்' என்ற அவருடைய கருத்தையும் நினைவிற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இது விடயத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. இலங்கை என்பது ஒரு முஸ்லிம் நாடல்ல. பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பல்லினப் பரம்பலுள்ள நாடாகும். இங்கு சில தடைகள் தடங்கல்கள் இருந்தாலும் கணிசமான மதச் சுதந்திரம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்இ அபாயா அணிவதில் எப்பிரச்சினையும் இல்லை என்றே கடும்போக்காளர்களும் கூறி வருகின்றனர். 

முகத்தை முற்றாக மறைத்து (புர்கா நிகாப்) அணிவதே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யார் சொல்கின்றார்கள் என்பதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாத ஒரு விடயம்தான் மார்க்கமாகும். என்றாலும் அரசியல் சமூக சூழ்நிலைகளை விளங்கிக்கொண்டு ஏனைய சமூகங்களுடனான இருப்பை கௌரவப்படுத்தும் விதத்தில்இ புர்காஇ நிகாப் நடைமுறைகளை கடைப்பிடிப்பது நல்லதாகும். குறிப்பாக ஒரு பொலிஸ் நிலையத்தில்இ பரீட்சையில் அல்லது வேறு ஏதேனும் ஆள்அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு இடத்தில் முஸ்லிம் பெண்கள ஒரு பெண் உத்தியோகத்தரிடம் தமது முகத்தை காண்பிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்களுடன் இலங்கையருக்கு தொடர்பிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன்இ பயங்கரவாத தாக்குதல் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே கடும்போக்கு சக்திகள் புர்காவை தடை செய்ய வேண்டுமெனக் கோரி வரும் நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி அவ்வுடை மீதான தடை அல்லது கட்டுப்பாட்டை அமுலுக்கு கொண்டு வருவது தொடர்பாக உயர்மட்ட ரகசியக் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. முஸ்லிம்கள் தமது மத விடயத்தில் குறிப்பாக ஆடையணிவதில் தீவிர போக்கை கையாள்கின்றனர் என்ற கோணத்ததில் இவ்விவகாரம் நோக்கப்படுவதாக தெரிகின்றது. 

அதனடிப்படையில தேவை ஏற்படும்பட்சத்தில் இனிவரும் காலங்களில் இவ்வாறான ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்படுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மிகவும் யதார்த்தமானதே! ஏனென்றால்இ உலகம் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற  அல்லது அவ்வாறான ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு பற்றி சிந்திப்பதும் கலந்துரையாடுவதும் பாதுகாப்பு தரப்பினரின் கடமையே. ஆனால்இ சில விடயங்களை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

அதாவது இலங்கையில் முகத்தை மூடிய புர்கா அணிந்து கொண்டு இலங்கையில் எவ்விதமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காரியங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அபாயா புர்கா நிகாப் அணிந்த யாரொருவரும் வன்முறைகள் தாக்குதல்களில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்படவில்லை. இரண்டொரு வங்கிக் கொள்ளைகள் மட்டுமே இவ்வாறான ஆடை அணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களும் முஸ்லிம்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. எனவே சர்வதேச அச்சம் தொற்றியதன் காரணமாகஇ ஒரு சமூகத்தின் மத நடைமுறையை அம்மக்களின் ஆடைத்தெரிவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில்லை. 

மறுபுறத்தில் உடனடியாக அரசாங்கம் அவ்வாறான ஒரு தடையை விதிக்கும் சாத்தியமும் இல்லை என்றாலும்... செயற்கையாக அவ்வாறான ஒரு சூழல் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்திருக்கின்றது. இனவாத சக்திகளும கடும்போக்கு இயக்கங்களும் இதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்ளக் கூடும். யாராவது ஒருவரை புர்கா ஆடையுடன் சட்டவிரோத பாதுகாப்புக்கு குந்தகமான செயற்பாடுகளில் ஈடுபடவைத்து அப்பழியை முஸ்லிம்கள் மீது போட்டு புர்கா தடைக்கான களச்சூழலை சிருஷ்டிக்கப்படலாம் என்பதை அரசாங்கமும் முஸ்லிம்களும் நினைவிற் கொள்ள வேண்டும். 
மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும் .. மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும் .. Reviewed by Madawala News on 10/10/2016 07:50:00 AM Rating: 5