Ad Space Available here

எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும்...


புதிய அரசியல் யாப்பில் கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசையாக உள்ள எங்களை நாங்களே ஆளும் தனி அலகு இருக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும்.ஒளித்து நாடகமாடக் கூடாது என மு.காவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். 


இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும். நமக்கு எல்லாமே 1978 ஆம் ஆண்டில் இருக்கின்றது. வேறு எந்த யாப்பும் முஸ்லிம்களுக்கு இது போன்று இருக்காது. அதுதான் இணக்க அரசியல் யாப்பை தந்தது. அதுதான் முஸ்லிம்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றியது.

அதுதான் 17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க.வின் ஆட்சியை மாற்றியது எனவும் குறிப்பிட்டார்.

தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கோரி ஏறாவூரில் கையெழுத்துப் பெறும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.கா.வின் தவிசாளர் பசீர்  உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது அரசியல் முகவரியை எழுதியவரும், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நீதி கேட்டவருமான தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையை அறிய வேண்டுமென்ற ஆர்வம் சர்வதேசம் வரை இருந்தது.

அந்த சந்தர்ப்பம் கைநழுவிப் போய் 16 வருடங்களின் பின்னர் அந்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளோம். இது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகும்.

தலைவரின் மரணம் பற்றி அறிய ஜனாதிபதி சந்திரிகாவினால் தனி நபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு மீயுயர் நீதிமன்ற நீதிபதி எல்.எச்.ஜி.வீரசேகர நியமிக்கப்பட்டார். அவர் தமது அறிக்கையை உரிய காலத்தில் வழங்கினார்.

இன்று வரைக்கும் வெளியிடப்படவில்லை. இலங்கைக்கு சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நாவின் அதிகாரி ரீட்டா ஐசாக் நதேயா வந்து சென்றுள்ளார்.

இந்தப் பின்னணியில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிகவும் அவசியமாகும்.

இவரிடம் மு.கா சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளது.

இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடனடியாக அங்கீகரித்துள்ளது. மு.கா முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு தருவதற்கு ஒரு ஆணைக் குழு நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை.

அது பொதுவானதொரு கட்சி என்ற அடிப்டையில் எல்லா சிறுபான்மையினருக்குமாக ஒரு ஆணைக் குழுவை நியமிக்குமாறு கேட்டுள்ளது.

ஜனாதிபதி ஒருவரினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையை வெளியிடாது இருப்பதென்றால் அது எங்களின் தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கின்றேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஆணைக் குழுவின் மீது நம்பிக்கை வர வேண்டும்.

அந்த நம்பிக்கை வர வேண்டுமாக இருந்தால் தலைவரின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கேட்கின்றோம். 

மரண அறிக்கையில் இதுவொரு விபத்து என்றிருந்தால் அதனை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்று கேட்கின்றோம்.

அந்த அறிக்கையை வெளியிட்டால் அரசாங்கம் பாதிக்கப்படுமா? ஏதாவது இயக்கம் பாதிக்கப்பட்டு விடுமா? சர்வதேச சதி அம்பலமாகி விடுமா என்று சிந்திக்கும் நிலைதான் கடந்த 16 வருடங்களாக எமக்குள் இருந்தது. இது பற்றி பாராளுமன்றங்களில் கேட்டிருக்கின்றோம். ஊடங்களிலும் பேசியிருக்கின்றோம்.

ஆனாலும், அவை பற்றி மக்களின் உணர்வுகளுடன் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை நாம் வழங்கவில்லை. அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காகவே மக்களுடன் இணைந்து கையெழுத்துக்களை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

இன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் அரசியல் தீர்வு பற்றி பேசப்படுகின்றது. அரசியல் யாப்பில் தமிழர்கள் தங்களுக்கு என்ன தீர்வு ேவண்டுமென்று ஏற்கனவே தயாரித்துக் கொடுத்து விட்டார்கள். ஆனால், முஸ்லிம்கள் யாப்பு மாற்றத்தில் என்ன இருக்க வேண்டுமென்று இன்னும் சரியாக சொல்லவில்லை. கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகள் பற்றி பேசப்படவில்லை.

1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யாப்பானது தமிழர்களிடையே வன்முறை அரசியல் வருவதற்கு காரணமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தேவையை உணர்வதற்கு வழி வகுத்தது. தலைவர் அஸ்ரப் இதற்காகவே முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும், விகிதாசார தேர்தல் முறையும் முஸ்லிம்களின் அரசியல் பலத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.

பிரேமதாஸாவை இளவயதாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்தார். அன்றிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பெரு வளர்ச்சி பெற்று வந்தது. அவர் 12 வீத வெட்டுப் புள்ளியை 05 வீதமாகக் குறைத்தார்.

அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் வளார்ச்சிக்கு; காரணமாகும். இந்த யாப்புதான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தையும், குரலையும் பலமடையச் செய்தது.

தலைவர் அஷ்ரப்  தனித்துவ அரசியலை பேணி இணக்க அரசியலை செய்தார்.

அதனை தமிழர்கள் செய்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதே வேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான சக்தி இணக்க அரசியலை விரும்பவில்லை.

பிணக்க அரசியல் மூலம்தான் தமிழர்களின் உரிமைகளை அடைந்து கொள்ளலாமென்று நினைக்கின்றது. இந்த இரண்டு சக்திகளும் சமாந்தரமாக செல்லுகின்றது.

இதனை தமிழர்களிடையே பிரிவினை என்று சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் தந்திரமாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் தீர்வினை வரைந்து கொள்ள முடியவில்லை.

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேசுவதனை பார்க்கின்ற போது நாடகத் தன்மை கொண்டதாக இருக்கின்றது. தமிழர்களின் தமிழ் ஈழக் கொள்கை இன்று வரைக்கும் உள்ளது. இன்று அதுவொரு கோட்பாடாக உள்ளது. இது இலங்கைக்குள் இல்லை. உலகத்தில் உள்ளதென்ற நிலைக்கு வந்துள்ளது.  

முஸ்லிம்களின் அபிலாசை முஸ்லிம்களை முஸ்லிம்களே ஆளுகின்ற பிரிக்கப்படாத ஒரு முஸ்லிம் அலகாகும். இந்தக் கோரிக்கை செத்துக் கிடக்கின்றது. மாய அரசியல் குகைக்குள் தூக்கத்தில் அமிழ்த்தப்பட்டுள்ளது.

புலிகளின் வியூகம் இலங்கையை தோல்வியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்பதாக இருந்தது. சூடானை தோல்வியடைந்த நாடாக மாற்றியதால்தான் அங்கு இரண்டு நாடுகள் உருவானது.

இதனால்தான் மஹிந்தவை ஜனாதிபதியாக்க புலிகள் செயற்பட்டார்கள். சர்வதேச நாடுகளின் உறவுகள் முறிவடையும் போது இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறிவிடும். 

1978ஆம் ஆண்டிற்கு முன்னர் 05 வருடங்களுக்கு ஒரு தடவை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. 1978ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி வேண்டுமென்று அமெரிக்கா விரும்பியது. ஜனாதிபதி மைத்திரி தேசிய பொருளாதாரவாதி. பிரதமர் ரணில் சர்வதேச பொருளாதாரவாதி. மேற்குலகின் தேவைக்காகவே 1978ஆம் ஆண்டு யாப்பு மாற்றம் செய்யப்பட்டது. 

இப்போதும் யாப்பு மாற்றம் என்பது சர்வதேசத்திற்காகவே பேசப்படுகின்றது. இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமாக இருந்தால் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப ஆட்சியை மாற்ற வேண்டும்.

எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு வரிகளை மாத்திரம் அறவீடு செய்கின்ற ஒன்றாக அரசாங்கம் செயற்படும். இதற்கு நாடு அமைதியாக உள்ளதென்று காட்ட வேண்டும். முதலீட்டாளர்களுக்கு அச்சமற்ற சூழலை காட்ட வேண்டும். இதனைத்தான் ரணில் விக்கிரமசிங்க செய்ய எத்தனிக்கின்றார். 

யுத்தம் மீண்டும் ஏற்படாதென்று சொல்வதற்கு உத்தரவாதமில்லை. புதிய பொருளாதாரத் தன்மையைக் கொண்டு வருவதற்கு அரசியல் யாப்பு இருக்க வேண்டும். ஆட்சியை தீர்மானிக்கின்றவர்களாக முஸ்லிம்கள் இருக்கக் கூடாதென்பதே திட்டமாகும். முஸ்லிம்களை மெல்லக் கொல்லும் நஞ்சுப் புகையாக யாப்பு மாற்றம் உள்ளது.

திட்டமிட்டபடி  யாப்பு தயாராக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். ஆனால், யாருக்கும்  என்ன இருக்கின்றதென்று தெரியாது. தமிழர்கள் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடனும்,  தமிழ் பிரதிநிதிகளை கொண்டும் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு இவைகள்தான் வேண்டுமென்று சரியாக சொல்லவில்லை.

ஹக்கீம் எனும் விரிவுரையாளர் வகுப்புகளை எடுக்கின்றார். சும்மா இருக்க முடியாது. உலகில் 10 பேர்தான் பணக்காரர்கள். அவர்கள்தான் இதனை வடிவமைக்கின்றார்கள்.

இஸ்ரேலியர்களும், ஸியோனிஸ்ட்டுக்களும் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றார்கள். ஆதலால், யாப்பு மாற்றம் என்பது இலங்கையை 25 வருடங்களுக்கு வழிநடத்துகின்ற சர்வதேச கரம் என்பதனை மறந்து விடாதீர்கள். இதனைச் செய்வதற்கு எல்லாம் இரகசியமாகவே பேசப்படுகின்றது. 

யாப்பில் என்ன உள்ளதென்று தெரியாது ஆதரவு அளிக்க முடியாது. யாப்பில் என்ன உள்ளதென்று தெரிந்து கொள்வதற்கானதொரு ஆரம்ப அடிதான் தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையில் என்ன இருக்கின்தென்று அறிவதற்கு எடுக்கப்படும் கையெழுத்து வேட்டையாகும். இதற்கு எல்லா முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும்.

எமக்காக குரல் கொடுத்து, எமக்காக மரணித்த தலைவரின் மரண அறிக்கையை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது. மறைந்த தலைவரின் மீது உண்மையான பற்றும் பாசமும் உள்ளவர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும். 

இந்த யாப்பு முஸ்லிம்களுக்கு தேவையா என்று எல்லா முஸ்லிம் எம்பிக்களும் சொல்ல வேண்டும்.

எமது சொந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு மாற்றத்தில் என்ன உள்ளதென்று சொல்லத் தேவையில்லை. இந்த யாப்பு  மாற்றம் தேவையா இல்லையா என்று சொல்ல வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த யாப்பு வசதியானதா, இல்லையா என்று சொல்ல வேண்டும்.    

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற அந்தஸ்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று சொல்ல வேண்டும்.

மாவட்ட முறையில் 05 வீத வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த முறை இருக்க வேண்டுமா, தேவையில்லையா என்று சொல்ல வேண்டும். 1978ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம்கள் பேரம் பேசும் சக்தியாக உள்ளார்கள். இந்த சக்தி இருக்க வேண்டுமா, இல்லையா என்று சொல்ல வேண்டும்.

புதிய யாப்பு மாற்றத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு இந்த அரசியல் சக்திகள் இருக்குமா என்று சொல்ல வேண்டும். கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசையாக உள்ள எங்களை நாங்களே ஆளும் தனி அலகு இருக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும். ஒளித்து நாடகமாடக் கூடாது. 

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும்.

நமக்கு எல்லாமே 1978ஆம் ஆண்டில் இருக்கின்றது. வேறு எந்த யாப்பும் முஸ்லிம்களுக்கு இது போன்று இருக்காது. அதுதான் இணக்க அரசியல் யாப்பை தந்தது. அதுதான் முஸ்லிம்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றியது. அதுதான் 17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க வின் ஆட்சியை மாற்றியது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவில் சமூகம் எடுத்த முடிவினை இதிலும் எடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சிக்காவோ, தனி நபர்களுக்காகவோ முடிவுகளை எடுக்காது முஸ்லிம் சமூகத்திற்காக முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த யாப்பில் தமிழர்களுக்கும் தீங்கில்லை. சிறு கட்சிகளுக்கும் பாதிப்பில்லை. கண் அடிப்பது. ஏஜன்டாக செயற்படுவது போன்ற நடவடிக்கைகளை எந்த முஸ்லிம் கட்சியும், தலைவரும் செய்யக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் முடியாது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததன் பின்னர் தமிழர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர மாற்று வழி கிடையாது. இன்று இருப்பது தமிழர்கள் விரும்பும் அரசியல் என்று சொல்ல மாட்டேன் ரீ-னா பொலிட்டிக்கஸ் (T-NA Politics). முஸ்லிம்களிடம் இருப்பதும் ரீனா பொலிட்டிக்ஸ்தான்.

அதனை ஒரு கொள்கையாக கோட்பாடாக, மதமாக முஸ்லிம்களிடையே வைத்துள்ளோம். இதனை விசேடமாக கிழக்கில் விதைத்துள்ளோம். இந்த அரசியல் நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றார்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும்... எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும்... Reviewed by Madawala News on 10/26/2016 05:05:00 PM Rating: 5