Ad Space Available here

ஈ - சி நேஷன் தொழிற் பயிற்சி கல்லூரியுடன் கைகோர்க்கும் பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி. ..


வாஹித் அப்துல் குத்தூஸ் – பதுளை
பதுளை பஹ்மியா அரபிக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கட்டாய தொழிற்துறை பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அக்கறைபற்று ஈ சி நேஷன் தொழிற்பயிற்சி கல்லூரியுடன் இணைந்து செயற்பட பதுளை பஹ்மியா அரபிக்கல்லூரி நிர்வாகம் முன்வந்துள்ளது.
   
 தேசிய தொழிற்பயிற்சி நிலையம் ,   இலங்கை மூன்றாம் நிலை கல்வி அதிகார சபை , தேசிய பொறியியல்துறை கல்வி நிறுவனம் ஆகிய அரச துறைகளில் பதியப்பட்ட மற்றும் சர்வதேச பொறியியல்சார்ந்த  கல்வித்துறை நிறுவனமான சிட்டி அன்ட் கில்ட் (city & guild) நிறுவனத்தின் பூரண அங்கீகாரம் பெற்ற ஈ சி நேஷன் கல்லூரியின்  நிர்வாகப் பணிப்பாளர்  ஏ எல் எம் பாசித் அவர்களும் , பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி செயலாளர் ஏ எம் எம் முஸம்மில் அவர்களும் மேற்படி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கை ஒன்றை கடந்த சனிக்கிழமை பதுளை பஹ்மியா அரபிக்கல்லூரி காரியாலயத்தில்  கைச்சாத்திட்டார்கள். 

பஹ்மியா அரபிக்கல்லூரி தலைவர் அல் ஹாஜ் ஏ எச் எம் ஜவ்பிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முன்னாள் பதுளை மாவட்ட  காதி நீதிபதியும் பஹ்மியா அரபிக்கல்லூரி பிரதித் தலைவருமான அல் ஹாஜ் ஏ எம் எம் ஹனிபா ஆசிரியர்  , நிர்வாக உறுப்பினர் எம் எஸ் எம் மசூது , நிர்வாக உறுப்பினர் அல் ஹாஜ் சாதிகீன் , உதவிச் செயலாளர் முன்னாள் பிரதி அதிபர் ஏ எம் நவாஸ் உற்பட பலர் கலந்து கொண்டனர்.  

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய  பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி செயலாளர் ஏ எம் எம் முஸம்மில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,“ இலங்கையில் ஆயிரக்கணக்கான ஆலிம்கள் வருடந்தோறும் உருவாக்கப் படுவதாக அவ்வப்போது ஊடகங்களின  வாயிலாக அறிய முடிகின்றது. வெளியாகும் இவ்வுலமாக்களின் பெரும்பான்மையானோர் பள்ளிவாயில் நிர்வாக சபைகளின் கீழும் மற்றும் பல நிறுவனங்களிலும் குறைந்த அளவிலான ஊதியத்தின் கீழ் வேலைக்கமர்த்தப் படுகின்றார்கள். சமூகம் இவர்களை ஆலிம்கள் உலமாக்கள் என்று அழைத்தாலும் உண்மையான தன்மானமுள்ள அறிஞர்களாக இவர்களால் சமூகத்திற்கு தேவையான கால சூழலுக்கேற்ற தலைமைத்துவத்தை வழங்க முடியாதுள்ளது. இதற்கான பிரதான காரணமாக இந்த ஆலிம்களின் வருமானம் மிகவும் கீழ் நிலையில் உள்ளதாகும். இவர்களின்  வருமானத்திற்கு எந்த வித உத்தரவாதமும் குறித்த அரபிக்கல்லூரிகளால்/ மதுரசாக்களால் வழங்கப் படுவதில்லை. அந்த வகையில் ஜாமியா நலீமியா , அக்குரணை ஹக்கானியா போன்ற அரபிக் கல்லூரிகள் விதி விளக்காக இருந்து செயற்பட்டு  சமூகத்தின் இந்த குறைநிரப்பை ஓரளவு பூர்த்தி செய்து வந்தாலும் சமூகத்தின் தேட்ட நிலைக்கு இது போதுமானதாக இல்லை. 

இந்த நிலைமைகள்  காரணமாக ஆலிம்களாக வெளியாகும் அநேகமான உலமாக்கள் ஒன்றில் தாம் ஒரு சிலரை  ஒன்று சேர்த்து ஒரு அரபிக் கல்லூரியை ஆரம்பிக்கின்றார்கள், அல்லது ஹஜ் உம்ரா சேவைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். பலபேர் ஆட்டோ ஓட்டுனர்களாகவும், இன்னும் சிலர் அரசாங்கத்தால் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாத தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. தற்போதைக்கும் பதுளை சிறைச்சாலை யொன்றில் வல்ல பட்டை , மற்றும் சட்டத்திற்கு முரணான மாட்டு வியாபாரத்தில் குற்றவாளிகளாக்கப்பட்டவர்கள் இன்றும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது எமது சமூகம் எதிர்கொண்டுள்ள பாரியதொரு சவாலாக உள்ளது.  இந்தவகையில் பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி நிர்வாகம் இந்த விடயத்தில் கூடிய கரிசனை கொண்டு செயற்பட்டதன் விளைவாக இன்று இந்த வரலாற்று புகழ் மிக்க நிகழ்வை நிகழ்த்த முடிந்தது. இங்கே கல்வி கற்கும் ஏழை பெற்றார்களின் பிள்ளைகளுக்கு இவ்வாரனதோர் வாய்ப்பினை வழங்க வல்ல அல்லாஹ் நமக்கு துணை புரிந்தான். 

இம்மாணவர்கள் அல் ஆலிம் , அல் ஹாபில்களாக பட்டம் பெற்று வெளியேறும் பட்சத்தில் குறிப்பிட்ட தொழிற்துறையிலும் ஓட்டோ கேட் (AUTO CAD) , டிராப்ட் மன் (DRAOUGHTMEN) , கணணி மற்றும் தொழில்நுட்ப கல்வி போன்ற துறைகளில் தகுதி வாய்ந்த சான்றிதல்களையும் பெற்றிருந்தார்களேயானால் அவர்களின் சுபீட்சமான வாழ்க்கைக்கு உத்தரவாதமும் உறுதி செய்யப் படுகின்றது.   

மேலும் க பொ த (சா/த), உயர் தர பரீட்சைகளுக்கும் மாணவர்கள் தோற்றக் கூடிய வகையில் செயற்பாடுகள் நடைபெற்று வருவதால் இன்ஷா அல்லாஹ் ஒரு உயிரோட்டமிக்க அரபிக்கல்லூரியாக பதுளை பஹ்மியா அரபிக்கல்லூரி  குறுகிய எதிர்காலத்தில் மிளிர்வது உறுதியாகும்” .  என்று கருத்துக் கூறினார்.

ஈ - சி நேஷன் தொழிற் பயிற்சி கல்லூரியுடன் கைகோர்க்கும் பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி. .. ஈ - சி நேஷன் தொழிற் பயிற்சி கல்லூரியுடன் கைகோர்க்கும்  பதுளை பஹ்மியா அரபிக் கல்லூரி. .. Reviewed by Madawala News on 10/11/2016 07:52:00 AM Rating: 5