பொதுமக்கள் பொறுமை காக்குமாறு பிரதியமைச்சர் பைசால் காசிம் வேண்டுகோள் !

(சுலைமான் றாபி) 

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் அமைய பெற்றுள்ள உயிர் மின் நிலையத்தினால் ஏற்படும்  பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும், இவ்விடயத்தில் பொதுமக்கள் பொறுமை காக்குமாறும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் இவ்விடயம் சம்பந்தமாக அவர் கருத்து தெரிவிக்கையில் : 

நிந்தவூர் உயிர் வாயு மின் நிலையத்தினால் நிந்தவூர்  மக்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கடந்த 19ம் திகதியன்று நிந்தவூரில் உள்ள தனது பிராந்திய காரியாலயத்தில் நிந்தவூர் அட்டப்பளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பள்ளித்தலைவர்கள், பொதுமக்கள் அடங்கிய குழுவினர் தன்னை சந்தித்து மகஜர் ஒன்றினை ஒப்படைத்தனர். 

அம்மகஜரில் பின்வரும் பிரச்சினை பற்றி கூறப்பட்டிருந்தது.

1. இவ் உயிர் வாயு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் புகையினால் அப்பிரதேச மக்களுக்கு தோல் நோய், சுவாச நோய் என்பன வருவதாகவும்
2. பயிற்செய்கை பாதிப்படைவதாகவும்
3. கிணற்றின் நீர் மட்டம் குறைவடைந்து குடி நீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பிரச்சினை சம்பந்தமாக  நிந்தவூர் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு இவ்விடயம் பற்றி ஆராயப்பட வேண்டும் என கேட்டுகொண்டதுடன் அரசாங்க அதிபருக்கும் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்  இப்பிரச்சினையின் உண்மைத்தன்மையை அறியும் வகையில் பக்க சார்பற்ற குழு ஒன்றை அமைத்து ஒரு கூட்டம் ஒன்றினை ஒழுங்குபடுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன். 

இதற்கமைய கடந்த 25 ம் திகதியன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இலங்கை முதலீட்டு சபை அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர். அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர், அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர், நிந்தவூர் பிரதேச அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் இப் பிரச்சினை சம்மந்தமாக ஆராயப்பட்டிருந்தது. இருந்த போதும் அந்த நேரத்தில் தான் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதனால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 

இக்கூட்டத்தில் இம்மின் நிலைய பிரச்சினை சம்பந்தமாக சுற்றாடல் அதிகார சபையினால் இரண்டு  வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவ் அறிக்கையினை தொடர்ந்து மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் இவ் உயிர் வாயு மின் நிலையத்தினால் ஏற்படும் சூழல் தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளரினால் மின் நிலைய முகாமையாளரிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை கடந்த 02ம் திகதியன்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் ஆகியோருடன் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இவ் விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் பக்கசார்பின்றி அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளேன் 

எனவே மேற்படி உயிர் வாயு மின் நிலைய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, இவ் விடயம் தொடர்பில் சுமுகமான முடிவு வரும் வரை பொதுமக்கள் பொறுமை காக்குமாறும் வேண்டுகோள் விடுப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் அமைய பெற்றுள்ள உயிர் மின் நிலையத்திற்கு எதிராக கடந்த 30 ம் திகதி பொதுமக்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுமக்கள் பொறுமை காக்குமாறு பிரதியமைச்சர் பைசால் காசிம் வேண்டுகோள் ! பொதுமக்கள் பொறுமை காக்குமாறு  பிரதியமைச்சர் பைசால் காசிம் வேண்டுகோள் ! Reviewed by Madawala News on 10/04/2016 03:17:00 PM Rating: 5