Ad Space Available here

எமது தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக போரடி வருகின்றோம்..


(அகமட் எஸ். முகைடீன்,ஹாசீப் யாசீன்)
புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் பேருவளை முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பேருவளை சீனங்கோட்டை அல் - ஹூமைசறா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் எஸ்.எம்.ஜாபீர் ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம். றிஸ்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஐமீல் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.மிஸ்வர் பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்ள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 2016ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 150 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்இ கல்வி மற்றும் புறக் கீர்த்திய செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பேருவளையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் இருப்பது இப்பிராந்திய முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு களத்திலிருந்து உடனடித் தீர்வை பெற்றெடுப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றது.

கடந்த காலத்தில் அளுத்கம பிரதேசத்தில் அரங்கேற்றிய இன வெறியாட்டத்தில் எமது சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டது. 

இச்சந்தர்ப்பத்தில் இப்பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் முஸ்லிம்களிடத்தில் இருந்திருந்தால் இதன் பாதிப்பினை கணிசமான அளவு குறைத்திருக்கவோ அல்லது தடுத்திருக்கவோ முடியும். 

இந்நிகழ்வுகள் கற்றுத் தந்த பாடமாக அமைவது இப்பிரதேச முஸ்லிம் பிரதிநிதித்துத்தின் முக்கியத்துவமாகும்.

இலங்கை முஸ்லிங்களுக்கு வர்த்தகர்கள் என்ற நாமம் காணப்படுகின்றது.வர்த்தக துறையில் ஜம்பவான்களாக திகழ்வதோடு எம்சமூகத்தை அறிவியல் ரீதியாகவும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் உணரப்பட்டுள்ளது. 

எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து சமூகம் சார்ந்த சாதனைகளை ஏற்படுத்துவதற்கு கல்வியலாளர்களையும் திறமைசாலிகளையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கின்றது. அதேவேளை இதனை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு சமூகத் தலைவர்கள் சார்ந்ததாக உள்ளது.


ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் வழிகாட்டுதலிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனையிலும் இந்த நல்லாட்சியில் புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படவுள்ளன. 

அத்தோடு புதிய கைத்தொழில் பேட்டைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே மாணவச் செல்வங்களை எதிர்கால தொழிற் சந்தைக்கு ஏற்றவர்களாக பட்டை தீட்டி அவர்களை வளம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். அத்தோடு பல்துறைசார்ந்த விற்பன்னர்களை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.

முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை அரசியல் அபிலாஷைகளை போராடிப் பெறுகின்றவர்களாக எமது கட்சி காணப்படுகின்றது. நாம் மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள். அந்த வகையில் நாம் சாவல்களை கண்டு ஒழிந்து போகின்றவர்கள் அல்ல. அளுத்கம நகரில் அரங்கேற்றப்பட்ட இன அடக்கு முறையின்போது எமது சமூகம் உடமைகளையும் உயிர்களையும் இழந்தது. அன்று அதற்கு வித்திட்ட அரசை தோற்கடிக்க வேண்டும் என்று நாம் எடுத்த முயற்சியினால் இறைவனின் துணை கொண்டு இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்கிய பங்காளிகளாக நாம் காணப்படுகின்றோம்.

இப்பிரதேசத்தில் இரட்டைத் தொகுதி முறை காணப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருந்தது. 

பின்னரான விகிதாசார தேர்தல் முறை தேர்வில் இரட்டைத் தெகுதி முறை நீக்கப்பட்டமையினால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனது. இதே போன்ற நிலை கொழும்பு கண்டி அக்குறன மன்னார் போன்ற பல பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவது சவாலான விடயமாக மாறியுள்ளது.

இதனால் எமது தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக போரடி வருகின்றோம்.அந்த வகையில் ஏற்கனவே இரட்டைத் தொகுதிகள் உட்பட 168 தொகுதிகள் இருந்து கொண்டிருக்கிற நிலையில் புதிய தேர்தல் முறையில் 198 தொகுதிகளை உருவாக்க முயற்சிகளை செய்துவருகின்றோம். முஸ்லிம் சமூகம் அடர்த்தியாக வாழும் பிரதேசங்களிலிருந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் போராடும் எனவும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் உள்ளிட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதற்கு அமைவாக குறித்த பாடசாலைக்கு நீச்சல் தடாகம் மற்றும் மைதான அபிவிருத்தியினை அடுத்தாண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைத்துத்தருவதாகவும் இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதியளித்தார்.  
எமது தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக போரடி வருகின்றோம்.. எமது தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்காக போரடி வருகின்றோம்.. Reviewed by Madawala News on 10/26/2016 07:49:00 AM Rating: 5