Yahya

100 மில்லியனை கல்வி அமைச்சுக்கு மறைத்தது ஏன் ?


-அபு யாசிர்-
கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகக் கூறிதனவந்தர்களிடமிருந்து திரட்டப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள் பணத்திற்கு என்ன நிகழ்ந்தது? என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில்,  குறித்த அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்து செரண்டிப் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தனவந்தர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய்களை திரட்டியிருந்தது. இந்த நிதித் திரட்டலுக்காக மாளிகாவத்தை எப்பல் வத்தை எனும் வறிய மக்கள் வாழும் பிரதேசம் வீடியோ மூலம் படமாக்கப்பட்டு அந்த மக்களின் அவலங்களை ஆவணப்படமாக காட்டியே தனவந்தர்களிடம் மேற்படி பணம்  திரட்டப்பட்டது.

சுமார்  ஒரு வருட காலத்தை தாண்டியும் தாருஸ்ஸலாம் பாடசாலைக்காக திரட்டப்பட்ட இந்த பணத்தால் எவ்வித பயனும் இடம்பெறாத நிலையில், குறித்த பணம் இதுவரை எந்த வங்கியில்? எவ்வளவு? எந்த அமைப்பின் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்கிறது? போன்ற தகவல்கள்;செரண்டிப் அமைப்பின் அங்கத்தவரும், ஸாஹிரா கல்லூரியின் நிர்வாக சபையின் தலைவருமான பவ்சுல் ஹமீடால் வெளியிடப்படாமல் மர்மமாக இருந்து வருகிறது.


அண்மையில்; ஸாஹிராவின் பழைய மாணவர்கள் மத்தியில் அவர் கூறிய கருத்து, மேலும் சந்தேகத்தை சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஸாஹிராவில் 'குரூப் 80' பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் பேசும் போது திரட்டப்பட்ட பணம் 350 மில்லியன் ரூபாய்கள் கிடைத்ததாகவும் பின்னர் இந்த பணம் நன்கொடையாளியிடம் திரும்பி போய் விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவல் பல இணையதளங்களில் வெளிவந்துமுள்ளன.


அரசாங்கத்தின் 'அருகிலுள்ள சிறந்த பாடசாலை' (Nearest school is the best school)   திட்டத்திற்குள் மாளிகாவத்தை  தாருஸ்ஸலாம் உள்வாங்கப்பட்ட போது, அந்தத் திட்டத்திலிருந்து இந்த பாடசாலையை நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு (செரண்டிப் அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களுக்கு தெரியாமல்) பௌசுல் ஹமீட் இரகசியமாக எழுதிய கடிதத்தில், தாருஸ்ஸலாம் பாடசாலைக்காக திரட்டப்பட்ட பணம் தம்மிடம் 250 மில்லியன்கள் ரூபாய்கள் இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாற்றமாக ஸாஹிராவின் பழைய மாணவர்களான குரூப் 80க்கு ஒரு தொகையையும், கல்வியமைச்சுக்கு வேறொரு தொகையையும் அறிவித்ததன் மூலம் தான் விரித்த 'பொய்' வலையில் பவ்சுல் ஹமீட் தானாகவே மாட்டிக்; கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

எது எப்படியிருப்பினும், கல்வியமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் பவ்சுல் ஹமீட் மறைத்த மேலதிகமாக இருக்கும் 100 மில்லியன் ரூபாய்கள் பொதுப்பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு அவர் இன்று தள்ளப்பட்டிருக்கிறார்.  குறித்த செரண்டிப் நிறுவனம் எங்குமே இதுவரை பதிவு செய்யப்படாத அமைப்பாக இருப்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.


செரண்டிப் நிறுவனத்தின் ஊடாக கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதப் பிரதிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல்,; தாருஸ்ஸலாம் பாடசாலையை நல்ல நோக்கில் அபிவிருத்தி செய்ய முன்வந்த உலக மேமன் சங்கம் (World Memon Organization) என்ற அரச சார்பற்ற நிறுவனம், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட  'அருகிலுள்ள சிறந்த பாடசாலை' (Nearest school is the best school) அபிவிருத்தி திட்டத்தோடு இணைந்து தமது நிதி உதவியின் மூலம் தாருஸ்ஸலாம் பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்ய இணக்கம் தெரிவித்திருந்தது.


இணக்கமான முறையில் இடம்பெறவிருந்த அந்த வேலைத்திட்டத்திற்கு இடையூறாகவும், தடையாகவும் குறுகிய அரசியல்  நோக்கம் கொண்ட கொழும்பு அரசியலிருந்து மக்களால் தூக்கியெறியப்பட்ட சில சுயநலவாத சக்திகளின் செயற்பாடுகள், பவ்சுல் ஹமீடின் தந்திரமான செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.


தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு கிடைத்திருக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதியை நிறுத்துமாறு அமைச்சர் பவ்சியும், அவரின் மகன் நவ்ஸரும், பவ்சுல் ஹமீடும் தனித்தனியாக கல்வியமைச்சருக்கும், மற்றும் மாகாண கல்வியமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்ததும் சமூக வலைதளங்களிலும் அவை வெளிவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.


கொழும்பு வாழ் மக்களின் கல்வியின் மிகப்பெரிய சொத்தாக கருதப்பட்ட ஸாஹிரா கல்லூரி அதே மக்களுக்கு இன்று எட்டாக்கனியாக மாறியுள்ளது. மத்திய கொழும்பின் பிள்ளைகள் பலவித காரணங்களைக் காட்டி ஸாஹிராவிற்கு அனுமதி மறுக்கப்படுகின்றார்கள். மாளிகாவத்தை, மருதானை, புதுக்கடை போன்ற பிரதேச முகவரிகளைக் கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. தந்தைமார் சாரம் அணிபவர்களாய்; இருந்தால் அவர்களின் பிள்ளைகள் நிராகரிக்கப்படுகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களின் பிள்ளைகள் நிராகரிக்கப்படுகின்றார்கள். கல்வி கற்காத பெற்றோர்களின் பிள்ளைகள் நிராகரிக்கப்படுகின்றார்கள்.


இப்படி வெறுமனே பணம் பறிக்கும் ஒரு இடமாக ஸாஹிரா இன்று மாற்றம் பெற்றுள்ளது.  வருடா வருடம் பலகோடி ரூபாய்களை பிள்ளைகளிடமிருந்து அறவிடும் பவ்சுல் ஹமீடின் நிர்வாகம் ஸாஹிராவின் பௌதீக வசதிகளை அபிவிருத்தி செய்து அதிகமான மாணவர்களை உள்வாங்க முயற்சி செய்யாமல், தாருஸ்ஸலாமை ஸாஹிரா பாடசாலையின் கனிஷ்ட பாடசாலையாக மாற்றப்போவதாகவும் அதற்கு ஓர் அரசியல்வாதி தடையாக இருப்பதாகவும்  ஒரு புதுக்கதையை வெளியிட்டிருக்கிறார்.


ஸாஹிராவிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நிர்வாகம் வைத்துள்ள அநீதியான அளவுகோலினால் பாதிக்கப்படும் மக்களின், பிள்ளைகளின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பவ்சுல் ஹமீட் பல இடங்களில் இவ்வாறு ஸாஹிராவின் முன்னேற்றத்தைத் தடுப்போராக அர்த்தப்படுத்தி தனது அநீதியான செயற்பாடுகளை மூடி மறைத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


ஸாஹிரா ஓர் அரை அரச பாடசாலையாக இருப்பதைக் கூட புரியாமல் நடைமுறைசாத்திமற்ற கதைகளை சாதனையாக சொல்லும் அளவிற்கு இவரின் கல்வி பின்புலம் சாதகமாக அமைந்திருக்கிறது. ஸாஹிரா போன்ற ஒரு அரை அரச பாடசாலையின் (Semi Government)  கனிஷ்ட பாடசாலையாக  எப்படி ஒரு அரச பாடசாலையான தாருஸ்ஸலாமை மாற்ற முடியும்? இவரின் இந்த திட்டத்திற்கு கல்வி அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளதா? ஏன் இப்படி அர்த்தமற்ற பொய்யான தகவல்களை இவர் மக்கள் மயப்படுத்த வேண்டும்?


மருதானையில் ஸாஹிரா மதில் சுவருக்கு அருகில் வசிக்கும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிக்காத பவ்சுல் ஹமீட் இந்த அநியாயத்தை எதிர்த்து பேசுபவர்களை ஸாஹிராவின் முன்னேற்றத்தை தடுப்போராக காட்டவே முயற்சி செய்து வருகிறார். கடந்த பதினைந்து வருட காலங்களில் மாணவர்களின் கல்வி தொடர்பாக இவர் செய்த முன்னேற்றம் என்ன?  கபொத பரீட்சைகளில் ஸாஹிரா மாணவர்களால் சிறந்த பெறுபேறுகளை எட்டமுடிந்ததா? 'காசுக்கு தான் கல்வி' என்ற நிலைப்பாட்டில் ஸாஹிராவை நகர்த்திவரும் இவரே ஸாஹிராவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறார் என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.


ஸாஹிரா பாடசாலையை தனது பிள்ளைக்காக தெரிவு செய்யும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. அந்த உரிமையை ஊர்கiளின் பெயர்களையும், ஊரின் தன்மையையும், அவர்களின் பெற்றோரின் உடைகளையும், பெற்றொரின் கல்வித் தகைமைகளையும் வைத்து மட்டிட முடியாது. அப்படி செய்வது மனித உரிமை மீறலாகும்.


இன்று ஸாஹிராவிற்கு சாரம் அணிந்த பெற்றோர்களின் பிள்ளைகள் நிராகரிக்கப்படுகின்றார்கள். ஆட்டோ ஓட்டுனர்களின் பிள்ளைகள் நிராகரிககப்படுகின்றார்கள்.  கல்வித் தகைமை இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள்   நிராகரிக்கப்படுகின்றார்கள்.  உலகிலேயே எங்குமில்லாத சட்டத்தை அமுல்படுத்திக் கொண்டு ஏழை, அடித்தட்டு மக்களின் கல்விக்கு ஆப்பு வைக்கும் செயல் திட்டம் ஒன்றை பவ்சுல் ஹமீட் அரங்கேற்றி வருகிறார். 

 


100 மில்லியனை கல்வி அமைச்சுக்கு மறைத்தது ஏன் ? 100 மில்லியனை கல்வி அமைச்சுக்கு மறைத்தது ஏன் ? Reviewed by Madawala News on 10/06/2016 09:56:00 AM Rating: 5