Ad Space Available here

கிழக்கின் எழுச்சி- ஓர் அறிமுகம்..


பின்னணி
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாறு பலவகையான பதிவுகளை உள்ளடக்கப் பெற்றது. தமது மத அடையாளத்தை விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்ற பிடிவாதத்திலிருந்து எந்தக்கட்டத்திலும் முஸ்லிம்கள்  பின்வாங்கியதற்கான சான்றுகள் இல்லவே இல்லை.

எவர் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் முஸ்லிம்கள் தமது அடையாளத்தை நிலை நிறுத்துவதிலிருந்து பின்னடையாத பிடிவாதம் பின்னாட்களில் முஸ்லிம் சமூகத்துக்கான தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் அங்கீகரிப்பையும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்குள்ளாகியது. பேரின கட்சிகளூடாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள், தமது கட்சியின் பேரினக்கொள்கை/நிலைப்பாடுகளை தாண்டிச் செயல்பட முடியாமை யதார்த்தமாகிவிட்ட நிலையில், முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் விடயங்களில்கூட தம்மால் எதுவும் செய்ய இயலாத கையாலாகாதவர்களாகவே இருக்க நேரிட்டது.

இந்நிலைமை மீது விரக்தியுற்றிருந்த முஸ்லிம் மக்களின் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி அமைப்பு ரீதியான, நெறிப்படுத்தப்பட்ட முன்னெடுப்பை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற வடிவில் சட்டத்தரணி எம்.எச்.எம் அஷ்ரஃப் முன்னெடுத்தார். 
குறுகிய காலத்துக்குள் முஸ்லிம் காங்கிரஸ் (மு.கா) முஸ்லிம்களின் சுதந்திரமான குரலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது வரலாறு.
ஒருமுகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் செல்வாக்கைப் பெற்ற மு.கா. இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ச்சி பெற்றது.  இந்நிலைமை ஏற்படுவதற்கு அஷ்ரஃப் எனும் பல்துறை ஆளுமையையும் அவருடன் இணைந்திருந்த சிந்தனாவாதியான சேகு இஸ்ஸதீன் உட்பட பல சமூக நோக்குடைய இளைஞர்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் காரணமாக்கினான்.
பெரும்பான்மை கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகளின் வாக்கு வங்கியாயிருந்த கிழக்கு முஸ்லிம்களை பெரும்பான்மை கட்சிகளிடமிருந்தும், அவைகளின் முகவர்களிடமிருந்தும் மீட்டெடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் கணிசமான வெற்றியைப் பெற்றுக்கொண்டு, தனித்துவ அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது. இதைச் சகிக்க முடியாத சக்திகள் முஸ்லிம் காங்கிரஸை முற்றாக அழிக்கும் நோக்கில் அதன் தலைவர் அஷ்ரஃப் அவர்களை திட்டமிட்டுக் கொலை செய்தன.

அது மட்டுமல்லாமல்,   பேரினக் கட்சியின் விசுவாசியாக  செயற்படக் கூடியவரும், தனது அரசியல் இருப்புக்கு பேரினக் கட்சியின்பால் தேவையுடையோருமாகிய கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவரை முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்க வேண்டுமென்ற திட்டத்தையும் கச்சிதமாய் நிறைவேற்றிக் கொண்டனர்.

பேரினவாதக் கட்சிகளிடமிருந்து விடுதலை பெற உருவாக்கிய கட்சியையே பதவியையும் பணத்தையும் விலையாய்க் கொடுத்து மொத்தமாய் வாங்கி அதன் ஆதரவாளர்களை மீண்டும் தமக்கு அடிமைகளாக்கிக் கொண்டன. 
தவிரவும், சர்வதேச எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தமது நிகழ்ச்சி நிரலுக்கு தடையாய் நின்றுவிடக்கூடாது என்பதற்காக மு.காவின் புதிய தலைமையிடம் காணப்பட்ட சிற்றின்ப ஆசைகளுக்கு தீனிபோட்டு வளர்த்து பின்னர் அதையே தமது துரும்பாகவும் மூக்கணாங் கயிறாகவும் ஆக்கிக்கொண்டனர். 

அரசியல் தந்திரோபாயம் பற்றிய போதிய அறிவில்லாத தற்போதைய தலைமை இக்கொடிய சதிவலையில் சிக்கி முஸ்லிம்களின் பலமிக்க அரசியல் ஆயுதமாய் வளர்த்தெடுத்த  கட்சியையும்,  அதற்காய் நோன்பு நோற்று, அழுது, தொழுது, பிடிப்பிடியாய் அரிசி சேர்த்து தம்மையே வதைத்துத் தியாகம் செய்த மக்களையும் நட்டாற்றில் விட்டு விட்டு இலக்குகளற்றுச் சீரழியத் தொடங்கிற்று.

கட்சியின் தற்போதைய தலைமையின் சுயநலப்போக்கினால் எடுக்கப்படுகின்ற தான்தோன்றித்தனமான, சமூக விரோத நிலைப்பாடுகளில் அதிருப்தி அடைந்த மு.காவின் ஸ்தாபக முக்கியஸ்தர்களும், தலைமையின் இஸ்லாமிய விரோத சிற்றின்பக் கழியாட்டங்களை சகிக்க இயலாமல் வெறுப்புற்று இன்னும் பலரும் கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். அவ்வாறு வெளியேறியவர்கள் தமக்கு ஆதரவான மக்களையும் இணைத்துக்கொண்டு தமக்கென தனித்தனி கட்சிகளையும் உருவாக்கிக்கொண்டு அதிகார அந்தஸ்துக்களைப் பெற்றுக்கொள்வதையே இலட்சியமாககொண்டு செயல்பட ஆரம்பித்தனர். 
முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய சிந்தனையுடைய, நேர்மையான தலைமைத்துவம் ஏதுமின்றி அதிகாரமும் அந்தஸ்தும் உடையோரை எல்லாம் தமது தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் பேராபத்துமிக்க மன நிலை நோக்கி  உந்தப்பட்டுக் கொண்டிருந்தது.

மறு புறத்தில் சமூக நல நோக்குள்ள தலைமை ஒன்றும் இல்லாமையால் முஸ்லிம் விரோத சக்திகள் துணிவுடன் முஸ்லிம்களையும் அவர்களின் இறை வழிபாடுகளையும் அச்சமின்றி எதிர்க்கத் தொடங்கினர்.

மனித நியாயங்களுக்கு முற்றிலும் எதிரான 18ம் திருத்தச்சட்டம், திவி நெகும சட்டம், நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிரான அராஜகத்தனமான நடவடிக்கைகளுக்கு சுயநலங்களுக்காக  ஆதரவளித்த முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அதன் தலைமைகளையும் பேரினச்சமூகங்கள் கேவலமாய் பார்க்கத் தொடங்கியதன் விழைவாக, முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களையும் போலியானதென கருதத்தொடங்கின. இஸ்லாமிய ஹலால் சட்டத்தையும் தேவையற்றதென எதிர்க்கத்துணிவு கொண்டனர்.
மானிட நியாயங்களுக்கும் இறை கட்டளைகளுக்கும்  எதிராக மனோ இச்சைக்கு இசைந்து மாபெரும் ஹராமான செயல்களில் ஈடுபடுவோரை  தலைமைகளாக ஏற்றுக்கொண்டுள்ள  சமூகத்துக்கு, உணவில் மட்டும் ஹலால் பேணும் தேவையும் யோக்கியமும் என்ன இருக்கின்றது என்ற மனோபாவம் மாற்றுச்சமூக தீவிரப் போக்காளர் மத்தியில் வளரத்தொடங்கின. 

மற்றெல்லா விடயங்களிலும் ஹறாமானதை செய்து கொண்டிருக்கும் தலைவர்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் முஸ்லீம்களுக்கு உணவில் மட்டும் ஹலால் தேவையில்லை என்ற அவர்கள் பக்க நியாய சிந்தனையின் வெளிப்பாடாய் ஹலால் முறைமையை முற்றாக இல்லாமலாக்க கங்கணம் கட்டிச் செயல்பட்டனர். அதில் வெற்றியும் கண்டனர். 
அவ்வாறே முஸ்லிம்களின் மொத்த வணக்க வழிபாடுகளையும் போலியானதாய் நோக்குவதற்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இஸ்லாத்துக்கு மாற்றமான போக்குகள்  உந்து சக்தியாய் இருந்தன. 
இஸ்லாமிய ஷரீயத்தின் படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவர்களை அரசியல் தலைவர்களாகவும் கபினட் அமைச்சர்களாகவும் கொண்டுள்ள சமூகத்துக்கு தொழுகையெல்லாம் அவசியமில்லை என்ற தோரணையில்  பள்ளிவாசல்களிலும் கைவைக்கத் தொடங்கினர்.

"தலைமைகளே சமூகத்தின் விம்பங்கள்" என்பதற்கேற்ப முஸ்லிம் சமூகம் அன்னியர்களால் கேவலமாக பார்க்கப்பட்டதுடன், ஒட்டுமொத்த இஸ்லாமிய மத அனுஷ்டானங்களும் வழிபாடுகளும் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன.
பணத்தாலும் பதவிகளாலும் வாங்கப்படக் கூடியதாய் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆதாரங்களுடன் முத்திரையிடப்பட்டன.

மாற்றத்துக்கான தேடல்
--------------------------------------

இந்த சமூக அவலத்தை ஜீரணிக்க முடியாத சமூக அக்கறை கொண்டவர்கள் தமது உளக்கொதிப்பை பல வழிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
ஆயினும், இந்த இழி நிலைக்கு அடிப்படைக் காரணம் எது என்பதையும், இந்த அபாக்கிய நிலையை மாற்றுவதற்கான வழிவகைகள் எவை என்பதையும் கண்டறிவதற்கான காத்திரமான கூட்டுக் கருத்தாடல் முயற்சிகள், அமைப்பு ரீதியாக செய்யப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரங்கொண்ட ஒவ்வொருவரும் தான் அறிந்த விடயங்களை முன்வைத்து முஸ்லிம்  அரசியல் தலைமைகளை எல்லை மீறி விமர்சிக்கத் தொடங்கின. 

தனிமனித மானத்தை பகிரங்கமாய் சீரழிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத பெரும் பாவம் என்பதையும் கவனத்தில் கொள்ளாது தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கவலைக்குரிய  இந்நிலைமையை எம்மில் சிலர் கவனத்தில் கொண்டு ஆராயத்தொடங்கினோம்.
இந்நிலை தொடரவிடப்பட்டால் முஸ்லிம்கள் மேலும் பிரிவதையும் கேவலமடைவதையும் தவிர வேறெந்த நலவுகளுக்கும் வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த நாம் இச்சீரழிவுக்கு முக்கிய காரணமாய் 'இறை அச்சமற்ற' முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்பதை  பல்வகை ஆய்வுகளூடாக கலந்துரையாடி அறிந்து கொண்டோம். தான் செய்வதெல்லாம் சரியென பிடிவாதத்துடனிருக்கும் மு.கா.  தலைமையை காங்கிரஸிலிருந்து விலகுமாறு மரியாதையாய் கேட்டுக்கொண்டோம் . அத்துடனே காலத்தேவை நிமித்தம் மு.கா. தலைமை கிழக்குக்கு தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிணைத்தோம்.

ஏன் மு.கா.தலைமையை மட்டும் இலக்கு வைத்தோம்
-----------------------------------------

முஸ்லிம்களை தலைவர்களாகக் கொண்ட பல கட்சிகள் இருந்தாலும், முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாக எம்மைப் போன்றோரினாலும் எமது தாய், தந்தையராலும்  பல தியாகங்களுக்கு மத்தியில், அல் குர் ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு தேசிய, சர்வதேசிய ரீதியாக அடையாளம் காணப்பட்ட அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே என்பதாலேயே நாம் மு.காவை மட்டும் இலக்கு வைத்தோம்.

மற்றைய முஸ்லிம் தலைமைகளைக் கொண்ட கட்சிகள், மு.காவிலிருந்து பிரிந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளே. அவை குர் ஆன், ஹதீஸை முன்னிறுத்தி அங்கீகாரம் பெற்றவையுமல்ல. அக்கட்சிகளை உருவாக்குவதற்கு முஸ்லிம் சமூகம் எந்தத் தியாகமும் செய்யவுமில்லை. அவை தனிமனித முயற்சிலேயே உருவாகியவை. ஆகவே அவற்றை குறைகாணும் தார்மீக உரிமை எமக்கில்லை. தவிரவும் அக்கட்சித் தலைவர்களும் மு.காவின் தற்போதைய தலைமையின் ஜனநாயக விரோத போக்கு பிடிக்காமல் பிரிந்தவர்களே. மு.காவில் தலைமை மாற்றத்தினூடாக இவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதும் சாத்தியமானதே. 

ஆகையால் அனைத்து நலவுகளுக்கும் தடையாய் இருக்கும் மு.கா. தலைமையை மாற்றுவதே எல்லாவற்றுக்கும் தீர்வை தரும் என்பதை ஆய்ந்தறிந்தோம். மேலும் மு.காவை கைப்பற்றுவதின் ஊடாகத்தான் நாம் விரும்பும் இஸ்லாமிய சிந்தனையுள்ள தலைமைத்துவ சபையை நிறுவி அதனூடாக  நேர்மையான தலைமைத்துவத்தை முன்னிறுத்தி இஸ்லாமிய தலைமைத்துவத்தின் எழிமையான அழகிய பண்புகளால் பேரினத் தீவிரப் போக்குடையோரையும் கவர்ந்து, நமக்கு சாதகமானவர்களாக்கும் முயற்சியை மேற்கொள்வதுடன் முஸ்லிம் தலைமைகள் இறைவனுக்கு அஞ்சிய நேர்மையானவர்கள் என்பதை அறியப்படுத்தலாம். கீழ்த்தரமான அரசியல் தலைமைகளுக்கு எவரும் மதிப்பளிக்க மாட்டார்கள் என்பது புதிய கண்டுபிடிப்புமல்ல. 

இறை அச்சங்கொண்டோருக்கு அத்தனை படைப்புகளும் பயந்து நடக்கும் என்பது நபி மொழி. ஆக, அல்லாஹ்வுக்கு அச்சப்படும் நேர்மையான தலைமைக்கு முன் கை நீட்டிப்பேசும் தைரியம் எவருக்கும் வரமாட்டாது. அனுபவ ரீதியாகவும் இதை நாம் காணாமலுமில்லை. இத்தகையதோர் தலைமையை நிறுவுவதற்கான மிகப் பொருத்தமானதும் எமக்கு உரிமையுள்ளதுமான கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே!

கிழக்கின் எழுச்சி
----------------------------------
மேற்சொன்ன  எமது இலக்கை அடைவதற்கு ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட செயன்முறை அவசியம் என்பதால் மு.காவின் ஸ்தாபகப் பொருலாளரான வபா பாறுக் அவர்களை தலைவராக் கொண்டு கிழக்கின் எழுச்சி என்ற அமைப்பை உருவாக்கினோம்.
இஸ்லாமிய  உண்மையான மசூறா முறைமையில் இயங்கும் தலைமைத்துவ சபையின் வழிகாட்டலில் இயங்கும் இவ்வமைப்பில் தனி மனித செல்வாக்குக்கு சற்றேனும் இடமில்லை. 

எந்தவொரு அரசியல் கருத்தோ/நிலைப்பாடோ தலைமைத்துவ சபையின் பரிசீலனைக்குப் பின்னரே பொதுத்தளங்களில் வெளியிட அனுமதிக்கப்படுகின்றது.
மசூறா முறைமையை முடிந்தளவு கவனமாக அமுல்படுத்தும் அமைப்பாக  நாம் இயங்கிக்கொண்டு வருவதால்  உள்ளக ஒற்றுமையில் ஏற்பட்டுவரும் இறுக்கத்தையும்  அமைப்பின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்கூடாக காண்கிறோம்.
தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்களையும் அடையாளம் காண மசூறா முறைமை பெரிதும் உதவியதன் பயனாக செயலாளர் சகோ. அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸதீனை இணைத்தலைவராக நியமிக்கத் தூண்டப்பட்டோம். 

சமூக, அமைப்பு விடையங்களில் மசூறா முறைமை முறையாக கடைப்பிடிக்கப் படுவதால் கிடைக்கின்ற அனுகூலங்களை அநுபவித்துவரும் கிழக்கின் எழுச்சி இதே வகையில் மு.கா.வையும் பரிபாலிக்க விரும்பியது.
அவ்விருப்பின் வெளிப்பாடாய் மு.கா. தலைமையை கிழக்கின் எழுச்சிக்கே தரவேண்டும் என தனது கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றது.
பொருளாதார வளம் குறைந்த எமது அமைப்பு அத்தேவையை பூர்த்தி செய்வதற்காக இஸ்லாமிய தலைமைத்துவ நிறுவல் எனும் தனது பிரதான இலக்கை அடமானம் வைத்து எவரிடமும் / எந்தக்கட்சியிடமும் பொருளாதார உதவிகளை பெறுவதிலிருந்து பாதுகாப்பாய் இருந்திடவே விரும்புகிறது.
அவ்வாறே எந்தக்கட்சியுடனும் சங்கமித்து தனது இலக்கை தொலைத்துவிடுவதிலிருந்தும் அதியுச்ச பாதுகாப்பை நாடுகிறோம்.

உத்தேச அரசியலமைப்பில் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளமும் இருப்பும் பாதுகாப்பும், சம அதிகாரப்பகிர்வும் உத்தரவாதப் படுத்தப்படுவதை ஊர்ஜிதம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு முஸ்லிம்களை வடக்குடன் இணைத்து ஈழத்தின் அடிமைகளாக்கும் அனைத்து முன்னெடுப்புக்களையும் என்ன தியாகம் செய்தேனும் தடுத்திடவேண்டும் என்பதில் மிக உறுதியாயுள்ளோம்.
தேசிய,சர்வதேச ரீதியில் அல்லாஹ்வுக்கும் இஸ்லாத்துக்கும் பூசப்பட்டுள்ள இரத்த நிறத்தை மாற்றி அன்பை நிறமாக பூச பிரசாரங்கள் செய்து கொண்டு வருகிறோம்.
மேற்குறிப்பிட்ட எமது நோக்கங்களை வெற்றிகொள்ள உலமாக்களினதும் புத்திஜீவிகளினதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முயற்ச்சிகளை செய்து கொண்டுவருகிறோம்.

எதிர்கால முன்னெடுப்புகள்
-----------------------------------------

இவற்றையெல்லாம் சாதிப்பதற்காக மு.காவை கைப்பற்றும் முயற்சியை பல வடிவங்களிலும்  செய்து வருகிறோம்.
மு.காவை கைப்பற்றுதல் சாத்தியமற்றுப் போகுமாயின் கிழக்கின் எழுச்சி தன்னையே ஒரு அரசியல் சக்தியாக நிறுவிக்கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
அல்லாஹ்வின் மீதான அச்சமுள்ள நேர்மையான தலைமையை நிறுவி, முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் கேவலத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கண்ணியத்துக்குரியதாய் மாற்றி எதிர்கால சந்ததிகள் கௌரவமாய் வாழ செய்வதுடன், இஸ்லாத்தின் அழகை மற்றோருக்கும் காட்டி  அவர்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தெடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இதயசுத்தி எனும் இஹ்லாசுடன் செய்ய கிழக்கின் எழுச்சி  முயன்று கொண்டிருக்கும், இன்ஷா அல்லாஹ்!

தலைமைத்துவ சபை
கிழக்கின் எழுச்சி- ஓர் அறிமுகம்.. கிழக்கின் எழுச்சி- ஓர் அறிமுகம்.. Reviewed by Madawala News on 10/28/2016 03:55:00 PM Rating: 5