Ad Space Available here

கட்டாயத் திருமணம்...திருமணங்கள் பலவிதமாக இடம்பெறுவதுண்டு. சிலபோதுகளில் மாப்பிளைக்கு பிடிக்காத பெண்ணையும், பெண்ணுக்கு பிடிக்காத மாப்பிள்ளையையும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் விரும்பிவிட்டால், மணமக்களின் விருப்பத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதை காண்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு பல புதுப்புது காரணங்களும் கதைகளும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால் எதற்கும் அசையாமல் தமது விருப்பமின்மையை வெளிப்படுத்துகின்ற மணமக்கள் மிகக் குறைவு. அநேகர், விதியைப் பொருந்திக் கொண்டு, வலுக்கட்டாயத்திற்கு இணங்கிப் போகின்றனர். அவர்கள் என்னதான் சம்மதம் என்று சொன்னாலும், எதிர்காலம் குறித்த அச்சம் அவர்கள் மனதில் மட்டுமன்றி, பெற்றோரது உள்ளங்களிலும் காலம்முழுக்க இருந்து கொண்டே இருக்கும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தின் பிரதான கூறாக திகழும் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு விவகாரமும் இதுபோன்றதொரு உணர்வையே குறிப்பாக முஸ்லிம்களிடையே ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென ஆரம்பத்தில் சாடை மாடையாக கூறிவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் அரசியல்வாதிகளும் இப்போது வெளிப்படையாகவே இணைந்த வடகிழக்கை கோருகின்றனர். ஆனால், கிழக்கு முஸ்லிம்களில் கிட்டத்தட்ட எல்லோரும் அவ்வாறான இணைப்பு ஒன்று அவசியமில்லை என்றே கருதுகின்றனர். தமக்கும் ஏதாவது ஒரு உப தீர்வை அரசாங்கம் தரவேண்டும் என்பது முஸ்லிம்களின் அபிலாஷையாக இருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகள் முறையான செயன்முறை ஊடாக இவ்விடயத்தை முன்வைக்கவில்லை.

பரந்துபட்ட விடயம்
உத்தேச அரசியலமைப்பு என்பது பரந்துபட்ட ஒரு விடயமாகும். அதில் ஒரு பிரிவாகவே இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட ஏற்பாடுகள் அமைந்துள்ளன. இனப் பிரச்சினைக்கான தீர்வுப் பொதியில் வருகின்ற ஒரு பிரதான உள்ளடக்கமே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றிய விடயமாகும். ஆனால், அந்த விடயத்தில் கூட ஒருமித்த நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் எடுக்கவில்லை. இவ்விரு மாகாணங்களை இணைத்தோ இணைக்காமலோ முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை கூட்டாக அறுதியிட்டுக் கூறுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தமாதிரி தெரியவும் இல்லை.

தீர்வுத்திட்டத்தில் தம்முடைய தேவை, எதிர்பார்ப்பு என்ன என்பதை அரசாங்கத்திடம் முறையான அடிப்படையில் முன்வைக்காமல் மேடை போட்டு பேசுவதிலும், அறிக்கை விடுவதிலுமே முஸ்லிம் தலைவர்கள் காலத்தை ஓட்டுகின்றனர். சில அரசியல்வாதிகள் மதில்மேல் பூனைபோல நிற்கின்றனர். இன்னும் சிலர் மௌனம் காக்கின்றனர், இன்னும் சிலர் மந்திரித்து விடப்பட்டவர்கள் போல ஏதேதோ பேசுகின்றனர். ஒருசிலர் கீறல் விழுந்த இறுவட்டை போல ஒன்றையே திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றனர். வேறு பல அரசியல்வாதிகள் தமது பிழைப்புவாத அரசியலில் மூழ்கித் திளைத்திருக்கின்றனர். இதனால், ஏகப்பட்ட அபிலாஷைகளைக் கொண்டுள்ள ஒரு ஊமையைப் போல தம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் முஸ்லிம்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை கேட்டறியாமல், தம்முடைய தீர்மானங்களை மக்கள் மீது திணிப்பதே நிகழ்கால முஸ்லிம் அரசியலின் போக்காகவும் இருக்கக் காண்கின்றோம்.
பொறுப்புள்ள தலைமைகள்
இவ்விடயத்தில் பிரதான பொறுப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுமந்திருக்கின்றது. என்றாலும், சமாளிப்பு தன்மையுள்ள கருத்துக்களை அக்கட்சியின் தலைவர் தொடர்ந்து கூறி வருகின்றமை கிழக்கு முஸ்லிம்களிடையே ஒருவித மனக் கிலேசத்தை உண்டுபண்ணியிருக்கின்றது. அவர் மீது அதிகளவான விமர்சனங்கள் தாறுமாறாக முன்வைக்கப்படுவதற்கும், 'வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ஹக்கீம் மறைமுகமாக சம்மதம் அளித்துவிட்டார் என்று கதைகள் உலா வருவதற்கும் இதுவே காரணமாகியுள்ளது. இதற்கெல்லாம் அவர் அளித்த உச்சபட்ச விளக்கம், 'மு.கா. தலைவர் வட-கிழக்கு இணைப்பிற்கு சம்மதம் வழங்கி விட்டார் என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை' என்ற மிக நுட்பமான வார்த்தைகளாகும். இது ஓரளவுக்கு நம்பிக்கை தரும் கருத்தே என்றபோதும், சந்தேகங்களில் இருந்து முற்றாக மீள்வதற்கு இது போதுமானதல்ல.
வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தேசியத்திற்கு சார்பானவர் போல றவூப் ஹக்கீம் தோன்றினாலும், அவர் கடைசிக் கட்டத்தில் கிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாட்டின் பக்கம் ஓடி வரக் கூடும் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். பல காரணங்களின் அடிப்படையில் கடைசிநேரத்தில் எதிர்பாராத ஒரு நிலைப்பாட்டை மு.கா. தலைவர் வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அவ்வாறில்லாவிடின், இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் தனிஅலகு என்ற பெயரில் வழங்கப்படுகின்ற மிகச் சிறியதொரு நிலப்பகுதியை ஒரு பெரிய தீர்வாக காண்பிக்க ஹக்கீம் முற்படக் கூடும். அதைவிடுத்து, இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதை அவர் எதிர்ப்பதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

தீர்வுத்திட்டத்தில் தமிழர்களுக்கு, அதைக் கொடுக்க வேண்டாம், இதைக் கொடு;க்கக் கூடாது என்ற விதமான அறிக்கைகளே முஸ்லிம் அரசியலில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நமக்கு என்ன தேவை என்பதைச் சொல்லாமல் மற்றவனுக்கு எதைக் கொடுக்கக் கூடாது என்று கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. 

முஸ்லிம்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்கின்ற ஒரு தீர்வை மறுதலித்து, தமிழர்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வழங்கப்படுமானால் அல்லது தமிழருக்கான தீர்வு, முஸ்லிம்களின் கோரிக்கையை சாத்தியமற்றதாக்கும் என்றால் அப்போது குரல் எழுப்புவதில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுடைய சமூகத்தின் நிலைப்பாடு என்ன, தமக்கு என்ன தீர்வு வேண்டுமென பகிரங்கமாக சொல்லி, அதனை ஒரு ஆவணமாக முன்வைக்காமல்.

சும்மா அறிக்கை விட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமான அரசியலின் இலட்சணம் அல்ல.இவ்விடயத்தில் மு.கா. தலைவரை மட்டுமே குறைசொல்லவும் முடியாது. ஏனைய முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டுப் பொறுப்பிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் சார்பான எம்.பி.க்கள் தொடக்கம் ஐ.தே.க. மற்றும் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளடங்கலான 21 பேருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணிக்கும், சிவில் சமூகத்திற்கும் பாரிய பொறுப்புள்ளது.

மு.கா. தலைவருக்கு போட்டியாக வளர்ச்சியடைந்து வருகின்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக எதிர்க்கும் தனது நிலைப்பாட்டை அறிவித்து விட்டார். தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவும் எதிர்ப்பை காட்டிவருகின்றார்.

ஆனால், தீர்வுத்திட்டத்தில் நமக்கு என்ன தேவை என்பதை கூட்டாக, ஆவணமாக முன்வைத்த மாதிரி தெரியவில்லை. எப்படியோ தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படப் போகின்றது என்றிருக்கையில் தமிழர்களுக்கு என்ன கொடுக்கக் கூடாது என்பதை விடவும் நமக்கு என்ன தேவை என்பதில் கூட்டாக கவனம் செலுத்துவதற்கு முஸ்லிம் அரசியல் தவறிவிட்டதையே இது காட்டுகின்றது.

தமிழ்தேசியத்தின் உறுதி
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்ன நிலைப்பாட்டுடன் இருந்தாலும், தமிழ் தேசியம் இவ்விரு மாகாணங்களையும் இணைத்துப் பெறுவதில் கடுமையான உறுதியுடன் இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்தின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றார். 'தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இணைந்த வடகிழக்கில் தமிழ்பேசும் மக்களுக்கான தனிப் பிராந்தியம் உருவாக வேண்டும்' என்பதை அடித்துக் கூறியிருக்கின்றார் சம்பந்தன். இது மிகவும் உற்சாகமான கருத்தாகும். எந்த இனமும் மற்றைய இனத்திற்கு அநீதி இழைக்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது அவர் பற்றிய மதிப்பை உயர்த்துகின்றது.
'வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருந்தால் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இது ஒரு தனி தமிழ் பேசும் பிராந்தியமாக அமையுமென்றால் அதைத் தடுக்க முடியும்' என்ற தொனியில் சம்பந்தன் சொல்லியுள்ள கருத்து மிகவும் நிதர்சனமானது. 

உண்மையில் சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கிலும் கிழக்கிலும் பெருவாரியாக சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப் பரம்பல் மாற்றமடைந்துள்ளது. அதுமட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. வடிவேலுவின் காமடியில் வரும் 'கிணற்றைக் காணோம்' என்பது போலவே கிழக்கில் காணிகள் காணாமல் போயிருக்கின்றன. 

இந்நிலையில், தமிழர்களின் மாகாண இணைப்பு கோரிக்கையை புறக்கணித்துவிட்டு முஸ்லிம்கள் தனித்த கிழக்கு மாகாணத்தில் வாழுமிடத்து அது சிங்களமயமாகிவிடுமா என்ற கோணத்திலும் சிந்திப்பது இன்றியமையாதது.
மட்டக்களப்பில் உரையாற்றிய சம்பந்தன், பண்டா – செல்வா ஒப்பந்தத்தை தொட்டுப் பேசியிருக்கின்றார். அதாவது, வடக்கில் ஒரு பிராந்தியமும் கிழக்கில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான பிராந்தியங்களும் உருவாகலாம் என இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. வடக்குடன் திருமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருபகுதி இணைக்கப்படும். சமகாலத்தில் பட்டிருப்பு தொகுதிக்கு கிழக்கேயிருக்கும் நிலப்பரப்பில் (தற்போதைய அம்பாறை மாவட்டத்தில்) முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியமும், சிங்கள மக்களை உள்ளடக்கிய இன்னுமொரு பிராந்தியமும் அமைக்கப்படலாம் என்பன போன்ற அவ்வொப்பந்தத்தின் உள்விபரங்களையும் விளக்கியுள்ளார்.

இதிலிருந்து சில விடயங்கள் புரிகின்றன. முதலாவது, முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை என்ற விடயமாகும். இரண்டாவது, எவ்வழியிலேனும் வடக்குடன் கிழக்கின் ஒரு பகுதி இணைக்கப்படப் போகின்றது என்பதாகும். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறிய பல விடயங்கள் நியாயபூர்வமானவை என்றாலும் ஒருசில கருத்துக்கள் தர்க்கவியல் ரீதியான முரண்நகைகளாக தெரிகின்றன.

முரண்நகைகள்
இணைந்த பிராந்தியத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை உறுதிப்படுத்தப்படும் என்று சம்பந்தன் சொல்லியுள்ளார். இது நல்லதொரு அறிவிப்பாகும். ஆனால் அது எவ்வகையில் உறுதிப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் எதையும் முன்வைக்கவில்லை. ஒருவேளை இவ்வகையான ஒரு உத்தரவாதத்தை அரசாங்கம் தமிழ் தேசியத்திற்கு வழங்கி உங்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தால் அதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிப்பார்களா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். ஏனெனில், எல்லா இனங்களும் தம்முடைய பட்டறிவின் அடிப்படையில் வாய்மொழிமூல வாக்குறுதிகளில் பரஸ்பரம் நம்பிக்கையிழந்திருக்கின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழர்கள் எந்த அனுபவங்களை கருத்திற் கொண்டு ஒரு தீர்வு ஒன்றை கோரி நிற்கின்றார்களோ, அதே அனுபவப் பாடத்தை அடிப்படையாக வைத்தே முஸ்லிம்களும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஆட்சேபம் தெரிவிக்கின்றனா என்பதை தமிழ் அரசியல்வாதிகள் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும். இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஏதோவொரு காரணத்திற்காக அமைதிகாத்த தமிழ் அரசியல்வாதிகள் இப்போது கூறுகின்ற வாக்குறுதிகளை குறுக்குக் கேள்விகள் எதுவுமின்றி உடனேயே முஸ்லிம்கள் நம்பிவிடுவார்கள் என்று தமிழ் தேசியம் எதிர்பார்க்கவும் முடியாது.

அடிமட்டத்தில் வாழ்கின்ற அப்துல்லாவும் ஐயாத்துரையும் தங்களுக்கு இடையில் மனம்விட்டு பேசத் தொடங்காதவிடத்து இனங்களுக்கு இடையிலான நல்லுறவு சாத்தியமே இல்லை என்றிருக்கையில், வடக்கும் கிழக்கும் இணைந்தால் உறவு பலப்படும் என்று தமிழ் தரப்பினர் கூறி வருகின்றனர். அப்படியாயின், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச சபைக்குள் இருக்க முடியாதென கூறி தனி தமிழ் பிரதேச சபைகளை கோருவதும், தனியான தமிழ் பிரதேச செயலகங்களை கோருவதும் எதற்காக? என்ற முக்கியமானதொரு கேள்வி எழுகின்றது. இந்த தர்க்கவியல் நியாயத்துடன் உடன்படாத எந்தவொரு அரசியல்வாதியும் என்ன கூறினாலும், அவற்றை அரசியல் கற்பிதங்கள் என்றே முஸ்லிம் சமூகம் கருதும்.

பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் விதந்துரைக்கப்பட்டதற்கு கிட்டத்தட்ட சமமான ஒரு அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், அம்பாறை மாவட்ட மக்கள் தனித்து இயங்கினாலும் திருமலை, மட்டக்களப்பு முஸ்லிம்கள் ஒருவகை கட்டாயத்திற்குள் தள்ளப்படலாம். மிக முக்கியமாக வடகிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் வாழ்கின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் சிங்கள அடிப்படைவாதிகளின் நெருக்குவாரங்களுக்கும் உள்ளாக்கப்படும் அபாயமிருக்கின்றது. நிலைமைகள் இவ்வாறிருந்த போதிலும், முஸ்லிம் அரசியலின் இயக்கப்பாடு கவலைக்கிடமாகவே உள்ளது. யார் யாரைத் திருமணம் முடித்தால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் ஒருசிலரும், திருமணத்தை காரணமே இல்லாமல் குலைப்பதில் வேறுசிலரும் முனைப்பாக இருப்பதாக தெரிகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும் தமக்கு என்ன தேவை என்பதையும் முஸ்லிம்களுக்கும் என்ன கிடைக்கும் என்பதையும் ஏதோ ஒரு அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளன. 

ஆனால், முஸ்லிம் கட்சிகள் இன்னும் முறையான கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றி, ஆவண ரீதியாக அவற்றை அரசாங்கத்திடமோ தமிழ் தரப்பிடமோ முன்வைக்கவில்லை என்பது மிகுந்த மனவருத்தமானது. போகின்ற போக்கைப் பார்த்தால், அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களை மையமாகக் கொண்ட, கரையோர மாவட்ட எல்லையைப் போன்ற ஒரு பிராந்தியத்தை வழங்கி 'இதுதான் தென்கிழக்கு அலகு' என்று காண்பிக்கப்படும் சாத்தியமிருக்கின்றது.

தீர்வுத்திட்டத்திற்கு முன்னதாக செய்ய வேண்டிய பல காரியங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இவற்றை உடனடியாக நிறைவேற்றுவது மட்டுமன்றி, தீர்வில் தமிழர்களின் கோரிக்கைக்கு எதிர்கருத்து தெரிவிப்பதை விடுத்து முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டு ஆவணம் ஒன்றின் மூலம் முன்வைக்க வேண்டும். தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களை தமிழர்களோ கட்டாயத்திற்குள் தள்ள வேண்டியதில்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு என்ற திருமணம் பல்லாயிரம் காலத்து பயிர். எனவே பொய்; சொல்லியோ கட்டாயப்படுத்தியோ அதை நடத்திவைக்க முடியாது.
வீரகேசரி- 30.10.16


கட்டாயத் திருமணம்... கட்டாயத் திருமணம்... Reviewed by Madawala News on 10/30/2016 12:51:00 PM Rating: 5