Kidny

Kidny

தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும்ஒரு பிள்ளை அழத் தொடங்கிய பிறகுதான், அந்தப் பிள்ளையின் தாய்க்கு அக் குழந்தை ஏதோ ஒரு தேவையுடன் இருக்கின்றது என்பது புரிகின்றது. பிள்ளைக்கு இப்போதைக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த தாய், புதிதாக தேவையொன்று உருவாகி இருப்பதை உணர்வாள். 'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்பார். சில பிள்ளைகள் சொல்லும் அல்லது அதற்கான சைகையை காட்டும். வேறு சில பிள்ளைகள் கடைசிமட்டும் என்னவென்று சொல்லாமல் அழுதுகொண்டே இருக்கும்.

மூத்த பிள்ளையை கண்ணுற்ற, இளைய பிள்ளையும் தனது பசியை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைப்பான். ஆனால் தாய்க்கு புரியும்படியான கோரிக்கையை முன்வைக்க மாட்டான். பசிக்குது என்ற தோரணையில் அழவும் மாட்டான். வெறுமனே.... அங்குமிங்கும் அப்பிள்ளை ஓடித்திரியும், அதைப் பார்த்தால் பொறாமையில், அல்லது வீம்பில் அழுது கொண்டிருப்பது போல தெரியும். வேறு வழியில்லாமல் ஏதாவது ஒன்றை அருந்தக் கொடுத்துவிட்டு, அல்லது விளையாட்டுப் பொருட்களை கையில் கொடுத்துவிட்டு, தாய் போய்விடக் கூடும்.

இப்படியான ஒரு இளைய குழந்தையின் நிலையிலேயே இலங்கை முஸ்லிம் சமூகம் இருக்கின்றது எனலாம். உத்தேச அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் ஆகியவை ஊடாக நிறைவேற்றப்பட வேண்டியப பல தேவைகள் தமக்கு இருக்கின்றது என்பது முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனால், முஸ்லிம் அரசியல் சூழலில் காணப்படும் மக்கள் நலனை அன்றி வேறுவிடயங்களை முன்னிறுத்தும் போக்கு, முஸ்லிம்கள் தம்முடைய அபிலாஷைகளை ஒருமித்த குரலில் முன்வைப்பதற்கு தடையாக இருந்து வருவதை காணலாம். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவே வேண்டுமென தமிழ் தேசியம் கூறிவருகின்ற நிலையில், இணைக்கபடக் கூடாது என்றும், இணைக்கப்பட்டால் முஸ்லிம் மாகாணம் அல்லது தனி அலகு வேண்டுமென்றும் பல தரப்பட்ட கருத்துக்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். 

பெருமளவான அரசியல்வாதிகள் வெளிப்படையாக எதையும் பேசாமல் பூடகமாக காரியங்களைச் செய்வதிலேயே குறியாக இருப்பதையும் காண முடிகின்றது. இதேவேளை, அரசாங்கம் தமது முடிவுகளை சொல்லாமல் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கருத்து போதலுக்கு சிண்டுமுடிந்து விட்டிருக்கின்றது எனலாம்.

அடிப்படை புரிதல்
இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம் என்று வருகின்ற போது, தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் சில அடிப்படை விடயங்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக இது ஒரு ஜனநாயகப் பொறிமுறையாகும். ஜனநாயக அடிப்படையில் இது பற்றிய எந்தவொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கும் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் உரிமை இருக்கின்றது. அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்க வேண்டும் என்றே பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கின்றனர். இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதற்கான காரணம் என்ன? அவ்வாறு இணைத்தால் எவ்வாறான இமாலய பலன்கள் இரு இனங்களுக்கும் கிடைக்கும்?; என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்லாத நிலையில், அவ்விணைப்பு இடம்பெறக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு முஸ்லிம்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இவ்விரு மாகாணங்களும் இணைந்திருந்த போது முஸ்லிம்கள் பெற்ற அனுபவத்தை வைத்து இவ்விடயத்தை அவர்கள் நோக்குகின்றனர். ஆனாலும். வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்ற தமிழர்களின் ஜனநாயக விருப்பத்தை முஸ்லிம்கள் கேலிக்குள்ளாக்க முடியாது.
1987ஆம் ஆண்டின் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ்விரு மாகாணங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 

இக்காலப்பகுதியிலேயே முஸ்லிம்கள், தமிழ் ஆயுத இயக்கங்களினால் பாரிய அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு சிறுபான்மை இனத்திற்காக போராடியவர்களின் துப்பாக்கிகள் இன்னுமொரு சிறுபான்மை மக்களின் முதுகுகளை நோக்கி திரும்பியிருந்தன என்பதுதான், தமிழ் - முஸ்லிம் உறவு விரிசலின் தொடக்கப்புள்ளி ஆகும். அப்போதிலிருந்து ஏற்பட்ட பரஸ்பர நம்பிக்கையீனங்;கள் இன்றுவரையும் முற்றாக களையப்படவில்லை.
இவ்வாறான பின்னணியிலும் கூட தமிழர்களும் முஸ்லிம்களும் கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் இரண்டறக் கலந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களிடையே எந்த விரிசலும் பெரியளவில் ஏற்படவில்லை. ஆனால், யார் யாரெல்லாம் இவ்விரு சகோதர இனங்களும் முரண்பட வேண்டும் என்றும், அதில் தாம் இலாபம் தேட வேண்டுமென்றும் அன்று நினைத்தார்களோ அவர்களே இன்று இன உறவு பற்றி பேசுகின்றனர். இதை பார்;த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. வடக்கும், கிழக்கும் இணைந்து விட்டால் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படும் என்ற கருத்து ஆய்வுக்குரியது. ஏனெனில், இவ்விரு மாகாணங்களும் இணைவதால் இரு தரப்பு அரசியலுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்படுமே தவிர, சாமான்ய மக்களுக்கு இடையில் உள்ள அவநம்பிக்கைகள் நீங்கிவிடும் என்று அறுதியாக கூற முடியாது. அரசியல்வாதிகள் ஒருக்காலும் இனநல்லுறவை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டாளர்களாக இருந்ததும் இல்லை, இன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கின்ற அந்நியோன்யம் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டதென்றும் கூற முடியாது.
ஆகவே, தமிழ் - முஸ்லிம் உறவு என்பது உருவாக வேண்டியது, அடிமட்டத்தில் இருந்தாகும். அயல்வீட்டில் வாழ்கின்ற தமிழனும் முஸ்லிமும் பேசிக் கொள்ளாத வரையில், அவர்களுக்கு இடையில் சமரசமும் உரையாடல்களும் விருத்திபெறாத வரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் இடையில் எத்தனை பேச்சுக்கள் நடந்தாலும், இனநல்லுறவு விருத்தியடையாது. எனவே, இனநல்லிணக்கத்தின் ஒருகூறாக இவ்விணைப்பை பார்க்கலாமே தவிர இதனால் உறவு பலப்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் சிறுபான்மையினரின் ஒன்றுதிரண்ட அரசியல் பலம் அதிகரிக்கும்.

சாத்தியத் தன்மை
ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படப் போகின்றது என்ற நம்பிக்கை, நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின் அதிகரித்துள்ளது. ஆனாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சாத்திமற்றது என்றும், நேரத்தை வீணாக்கும் பேச்சு என்றும் பெருமளவானோர் கருதுகின்றனர். அதற்குக் காரணங்களும் உள்ளன. அதாவது, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் சிங்கள கடும்போக்கு சக்திகள் இன்னும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கான ஆதரவும் குறைந்த மாதிரி தெரியவில்லை. இப்படியிருக்கையில், வடக்கையும் கிழக்கையும் இணைக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சி செய்யுமாக இருந்தால், இவ்விவகாரத்தை பலமடங்காக ஊதிப் பெருப்பிப்பதற்கு எதிரணியும் கடும்போக்கு சக்திகளும் முயற்சி செய்யலாம். இது அரசாங்கத்தின் பலத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தலாம். அத்தோடு, இவ்விணைப்பு பற்றிய சட்ட ரீதியான நடைமுறைகளும் பாரிய நடைமுறைச் சிக்கலை எதிர்நோக்க வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறான பல காரணங்களால்.... இவ்விணைப்பு இடம்பெற மாட்டாது என சிலர் திடமாக நம்புகின்றனர்.

இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அது என்னவென்றால், இலங்கையின் தீர்வுத்திட்ட விவகாரத்தில் சர்வதேசம் பிரதான பங்கு வகிக்கின்றது. உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில், சர்வதேச தலையீட்டுடனான தீர்வுப் பொதிகள் மிகவும் நுட்பமான முறையில் தயாரிக்கப்பட்டு அதன் இறுதி வடிவமே மேசையில் முன்வைக்கப்படும். அப்போது ஏற்படக்கூடிய சாத்தியமான சவால்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான மாற்றுவழிகள் முன்னமே அடையாளம் காணப்பட்டிருக்கும். இந்த அடிப்படையிலான ஒரு தீர்வுத்திட்டமே இலங்கையில் முன்வைக்கப்படலாம் என்று ஊகிக்க முடிகின்றது. ஆயினும், வேறு நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் அதிக சிக்கல்கள், சவால்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இதையெல்லாம் அறியாதவர்களாக வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றார்கள் என்று யாராவது நினைத்தால் அது முட்டாள்தனமான நினைப்பாகும்.  உண்மையில் சாதக பாதகங்களை நன்றாக அறிந்து வைத்துக் கொண்டே, சர்வதேசத்தின் பேராதரவுடனும் புலம்பெயர் சக்திகளின் பக்கபலத்துடனும் இணைந்த வடகிழக்கில் ஒரு தீர்வை பெறுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. யாருக்கு என்ன நடந்தாலும் தமது சமூகத்திற்காக முன்னிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளின் பண்புகளை, முஸ்லிம் அரசியலில் காண முடியவில்லை.

முஸ்லிம்களின் பங்கு
இனப் பிரச்சினையால் பிரதானமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்றாலும், முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க இழப்புக்களை சந்தித்திருக்கின்றார்கள். இத்தனைக்கும் முஸ்லிம்கள் தனிநாடு கோரி போராடியவர்களும் அல்லர். எனவே, தீர்வுத்திட்டம் வருகின்ற போது வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இரு பிரதான இனங்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே முன்வைக்க வேண்டும். அதுவே வெற்றிகரமானதாகவும் அமையும். தமிழர்கள், முஸ்லிம்களை புறக்கணித்து ஏதாவது ஒரு தீர்வை திணிப்பார்களாயின் அதனால் மேற்குறிப்பிட்ட நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது. மாறாக, இன்னும் நம்பிக்கையீனங்களும் முரண்பாடுகளுமே உருவாகும். மாகாணங்களை இணைத்துவிட்டு, தமிழர்களும் முஸ்லிம்களும் மனதால் பிரிந்து வாழ நேரலாம். இதனை தமிழ் அரசியல்வாதிகள் ஓரளவுக்கு இப்போது உணர்ந்து வருகின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கான உப தீர்வும் வழங்கப்பட்டு, அவர்களும் திருப்திப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வதை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிகின்றது.

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களது அரசியல் தலைமைகளும் ஒட்டுமொத்தமான முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை சாரம்சமாக இன்னும் பொதுத்தளத்தில் எடுத்துரைக்கவில்லை. மக்களின் கருத்தறியாது, த.தே.கூ.தலைவரும் மு.கா. தலைவரும் இந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்க முடியாது. இது ஒரு ஜனநாயக செயன்முறை என்பதால் அடிமட்டத்தில் (மக்களிடம்) இருந்து மேல் நோக்கியே (அரசியல்வாதிகள் வரை) இந்த அபிலாஷைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் அந்த இயல்பை முஸ்லிம்களிடத்தில் காண முடியவில்லை. 

அதுமட்டுமன்றி தமது நிலைப்பாடுகளில் நிலையற்றவர்களாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
இவ்விவகாரத்தில் மு.கா.வுக்கு பெரும் பொறுப்பிருக்கின்றது. பிரதான முஸ்லிம் கட்சியான மு.கா. அப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுகின்றதா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட கூடாது என்று பெருமளவான முஸ்லிம் மக்கள் கருதுகின்ற நிலையில், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் இணைப்புக்கு சாதகமான நிலைப்பாட்டுடன் இருக்கின்றார் என்ற அபிப்பிராயம் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஹக்கீம் இன்னும் தனது உறுதியான நிலைப்பாட்டை தெளிவாகவும் பகிரங்கமாகவும் அறிவிக்காமையே இதற்கு காரணம் எனலாம். ஆரம்பத்தில் 'சேதாரம் இல்லாத விட்டுக் கொடுப்புக்குத் தயார்' என்று கூறியிருந்த அவர் பின்னர், 'விடயங்களை பகிரங்கமாக போட்டுடைத்து விடக் கூடாது' என்று சொல்லியிருந்தார். மக்கள் மத்தியில் விமர்சனங்கள் அதிகரித்திருத்த பிற்பாடு, 'வடக்கு கிழக்கை இணைப்பதற்கு மு.கா.தலைமை இணங்கிவிட்டது என்பதில் எவ்வித உண்மையும் இல்லை' என்று ஒரு முக்கிய கருத்தை கூறியுள்ளார். 

இருப்பினும், இணைந்த அல்லது பிரிந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை றவூப் ஹக்கீம் பகிரங்கமாக முன்வைக்கவில்லை. 

வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத்தையா, முஸ்லிம் அலகையா மு.கா. கோருகின்றது என்று குறிப்பிடவும் இல்லை என்பது கவனிப்பிற்குரியது.
மறுபுறத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் 'வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவிகளைத் துறந்துவிட்டு வீதிகளில் இறங்கிப் போராடுவோம்' என்றும் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றார். இதேநேரம், வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து வந்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா மீண்டும் இவ்விரு மாகாணங்களும் இணையக்கூடாது என்பதை மேடை போட்டு சொல்லிக் கொண்டிருக்கின்றார். 

தெளிவாக நிலைப்பாடுகளை அறிவிப்பது நல்லதே. ஆயினும், வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்கும் இங்கு விடை காண வேண்டியுள்ளது. எதிர்ப்புகளை பொருட்படுத்தாது வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டால் அதற்குள் என்ன தீர்வு வேண்டும் என்பதை றிசாட், அதாவுல்லா போன்றோர் சொல்ல வேண்டும். அவ்வாறே, பிரிந்திருந்தால் என்ன தீர்வு வேண்டும் என்பதை ஹக்கீம் சொல்ல வேண்டும். கிழக்கு தனித்திருந்தால் சிங்களமயமாகும் சாத்தியமுள்ளதா? என்ற கோணத்திலும் சிந்திப்பது அவசியம்.

மிக முக்கியமாக, மாற்று அரசியல் கலாசார அமைப்பாக அறியப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்னவென்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். இம் முன்னணி வட மாகாண சபை தேர்தலில் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு போட்டியிட்டது. இதன்படி த.தே.கூட்டமைப்பில் அதன் உறுப்பினர் ஒருவர் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கின்றார். புதுவிதமான அரசியல் இயக்கமாக செயற்படும் என மக்கள் எதிர்பார்க்கும் இம் முன்னணியானது த.தே.கூட்டமைப்புடனும் மு.கா.வுடனும் சமகாலத்தில் உறவை கொண்டிருக்கின்றது. ஆனால் இன்னும் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது முஸ்லிம்களின் நிலைப்பாடு என்னவென்பது பற்றி பேசவில்லையே என்பது ஒரு குறைபாடாக இருக்கின்றது. ஏனைய அரசியல் கட்சியில் இருந்தும் தாம் வேறுபட்டவர்கள் என்பதை காட்டுவதற்காகவாவது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் தமக்கிடையே பேசி உத்தேச தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை பொதுமக்களும் சர்வதேசமும் அரசாங்கமும் தமிழ் தரப்பும் தெளிவாக காணும்விதத்தில் வெளிப்படையாக முன்னிலைப்படுத்த வேண்டும். நிலைதடுமாறும் நிலைப்பாடுகளோடும் மௌனத்தோடும் இருப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்பார்கள் !
 
- ஏ.எல்.நிப்றாஸ்-
(வீரகேசரி வாரவெளியீடு 16.10.2016)
 
தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் தமிழ் - முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் Reviewed by Madawala News on 10/16/2016 08:46:00 PM Rating: 5