Kidny

Kidny

வெட்கப்பட வேண்டும் i

By : அனஸ் அப்பாஸ்
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி அமைப்பதாக கூப்பாடு போட்டவர்கள் தற்போது அந்தக் கோஷத்திலிருந்து பின்வாங்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். நாட்டைச் சூறையாடி ஊழல் மோசடிகளினால் நாட்டைக் கடன் சுமையில் தள்ளி நாட்டையே குட்டிச் சுவராக்கி விட்டு, மீண்டும் தம்மிடம் நாட்டை ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்துகின்ற ராஜபக்ஷ குடும்பத்தவர்களை நம்பிக் களமிறங்குவதில் இருந்து சிங்கள சமூகம் படிப்படியாக தூரமாகி வருகிறது.


சிங்களவர்களை மட்டுமே வைத்து தம்மால் ஆட்சியமைக்க முடியும் என்பதை நிறுவப் போய் மஹிந்த அணியினர் அடைந்த தோல்வியை வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதற்கு முன்னரும் நாட்டிலே உருவான     சிங்ஹலே மகா சபா, சிங்ஹலயே பூமி பத்ர கட்சி போன்ற பல கட்சிகளும் இன்று மக்களால் மறக்கடிக்கப்பட்டுள்ளன. மஹிந்த அணிக்குச் சார்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய தீவிர இனவாதக் கட்சியான பொது ஜன பெரமுன மக்களால் இருந்த இடம் தெரியாமல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வரலாறுகள் சிங்கள இனவாதிகளின் வாக்குகளை மட்டும் நம்பி தம்மால் மீண்டும் ராஜபாட்டையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற முடியாது என்ற பாடத்தை மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உணர்த்தியுள்ளன. இதனால் தான் முஸ்லிம் முற்போக்கு முன்னணி என்ற பெயரில் முஸ்லிம்களின் வாக்குகளை தம்வசப்படுத்துவதற்கான முயற்சிகள் மஹிந்த அணியினரால் முடுக்கி விடப்பட்டுள்ளன.


இலங்கை முஸ்லிம்கள் மஹிந்த ஆட்சியின் கறைபடிந்த காலங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 1915 கலவரத்துக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் பாதுகாப்பின்றி அச்சத்தில் உறைந்து போன அனுபவத்தினை ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இவருடைய காலத்திலேதான் வரலாற்றில் மீண்டும் அனுபவித்தார்கள். முஸ்லிம்களுக் கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவிரோதச் செயற்பாடுகளை அடக்குவதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காமல் இனவாதச் சக்திகளுக்கு துணை போகக் கூடியதாக அவருடைய ஆட்சி அமைந்திருந்தது. இந்த இனவாதச் செயற்பாடுகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் இதனால் விதைக்கப்பட்ட இனவாத நச்சு விதைகள் சிங்கள சமூகத்தின் மத்தியில் இன்னும் முளைவிட்டுக் கொண்டுதானிருக்கின்றன.


இந்த அராஜகத்தை பொறுக்க முடியாமல் தான் வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்து மஹிந்தரின் ஆட்சியை மாற்றினார்கள். இந்தத் தோல்விக்குப் பின்னர் மல்வானை முஸ்லிம் அபிமானிகள் மஹிந்தரை அழைத்து முதலாவது கூட்டத்தை நடத்தினர். பின்னர் பேருவல முஸ்லிம்கள் மஹிந்தரை அழைத்து இப்தார் நிகழ்ச்சியை நடத்தினர். இந்தத் தொடரில் அவர் பெற்ற உற்சாகமே முஸ்லிம் முற்போக்கு முன்னணியை அமைப்பதற்கு அவருக்கு தைரியமளித்திருக்கிறது.


இந்த முன்னணியை அமைப்பதற்கும் முஸ்லிம்களை அழைத்து மாநாடு நடத்துவதற்கும் உழைத்த கூட்டங்கள் எல்லாம் முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்ற காலங்களில் மஹிந்தருடன் தான் இருந்தார்கள். இத்தனை பாதிப்புக்களுக்கும் மத்தியில் அவர்கள் முஸ்லிம்களுக்காக எதுவுமே செய்யவில்லை. மஹிந்தரின் குடும்பத்தைப் போல தமது சொந்த வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொள்வதே மஹிந்தருடன் ஒண்டியிருப்பதற்கான அவர்களது நோக்கமாக இருந்தது. சமூகத்துக்காகப் பேசினால் தமக்குக் கிடைக்கின்ற எச்சில்கள் அற்றுப் போய் விடுமோவென அவர்கள் பயந்தார்கள்.


தற்பொழுது மீண்டும் மஹிந்த தரப்பினருடன் முஸ்லிம்களை இணைக்கச் செய்கின்ற இவர்களின் பணியின் பின்னாலும் நிச்சயமாக சமூக நலன் இருக்கப் போவதில்லை. அவ்வப்போது தமக்கு விழுகின்ற எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டுகிறவர்களின் செஞ்சோற்றுக் கடனாகவே இந்த ஏற்பாடுகளை முஸ்லிம் சமூகம் பார்க்க வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்குள்ளாலேயே இருந்து முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்கி வயிறு வளர்க்கின்ற இத்தகைய குள்ள நரிகளையிட்டு முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும்.


பல தடவைகள் நம்பி ஏமாந்த அனுபவம் இந்த நேரத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது. தோல்வியடைந்த பின்னரான காலத்திலும் கூட தனது தவறுகளை ஏற்றுக் கொள்ளவோ, திருத்திக் கொள்ளவோ செய்யாமல் வெட்கமின்றி மீண்டும் முஸ்லிம் சமூகத்தை தம்மோடு இணைந்து கொள்ளுமாறு கோருவதனை நம்பி ஏமாறுவதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றும் வெட்கம் கெட்ட சமூகம் இல்லை.

அனஸ் அப்பாஸ் : மீள்பார்வை

வெட்கப்பட வேண்டும் i வெட்கப்பட வேண்டும் i Reviewed by Madawala News on 10/17/2016 09:44:00 PM Rating: 5