Accaddemy

வீதி விபத்துக்கள் தொடர்பில் சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் பாரிய கவனம் i சாரதிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள்!



(சுலைமான் றாபி)

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்காக சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிசாரினால் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, காரைதீவு மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இவ் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோடு, குறிப்பாக இப்பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு வாகன விபத்துகளை தடுக்குமுகமாக மூன்று படிமுறைகளில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் துண்டுப்பிரசுரம் மூலமும், விஷேட விளம்பர பதாதைகள் மூலமும் மற்றும் கள நடவடிக்கைள் மூலமும் இத்திட்டம் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக காலை முதல் இரவு வரை போக்குவரத்துப் பொலிசார் பணியிலமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் குறிப்பாக நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிக வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதனை துரித கதியில் கட்டுப்படுத்த வேண்டிய தேவையின் நிமிர்த்தம் இவ்வாறான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, போக்குவரத்து பொலிசாரின் மும்முரமான இச்செயற்பாடு காரணமாக தற்போது வாகன விபத்துக்கள் இடம் பெறும் வீதம் கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதே வேளை இந்த பகுதியில் இடம் பெறும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் போக்குவரத்து பொலிசாரினால் வேக அளவு மானி (Speed Meter) கொண்டு வேகமாக வாகனங்களைச் செலுத்தும் வாகன சாரதிகளுக்கெதிராக நீதிமன்றம் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, முறையற்ற விதத்தில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக தண்டப்பணமும் விதிக்கப்படவுள்ளது.

எனவே சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் பகல் மற்றும் இரவு வேளைகளில் வாகனங்களைக் செலுத்தும் சாரதிகள் உரிய வேகக் கட்டுப்பாட்டுடன் தங்கள் வாகனங்களைச் செலுத்துமாறும், முறையான வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றி வீதி விபத்துக்களில் இருந்து தங்களையும் பொது மக்களையும் பாதுகாத்துக் கொள்ள சாரதிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவின் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீதி விபத்துக்கள் தொடர்பில் சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் பாரிய கவனம் i சாரதிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள்! வீதி விபத்துக்கள் தொடர்பில் சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் பாரிய கவனம் i சாரதிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டுகோள்! Reviewed by Madawala News on 10/24/2016 07:32:00 PM Rating: 5