Kidny

Kidny

கிழக்கின் எழுச்சியின் செயலாளர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்கு எழுதிய கடிதம். இது.அஸ்ஸலாமு அலைக்கும்,
முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்க காலத்திலிருந்து இன்றுவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருபவர்களில் நீங்களும் ஒருவர் என்ற அடிப்படையில், கட்சியின் மீது பேரன்பு கொண்ட உண்மையான போராளிகளின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் நீங்கள், சுய இலாபங்களுக்காக கட்சியையும் அதற்கு வாக்களிக்கும் மக்களையும் அடமானம் வைக்கும் தலைவரின் நன்மதிப்பைப் பெறத் தவறியதிலிருந்து, கட்சிக்குள் ஓரங்கட்டப்படத் தொடங்கினீர்கள்.

உங்களை கட்சிக்குள் ஓரம் கட்டுவதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்த போது, பின்வரும் விடயங்களுக்காகவே நீங்கள் ஓரங்கட்டப் பட்டிருக்கக் கூடும் என்பது எமக்குத் தெளிவாகிறது.


முதலாவது வவுனியாவில் பேராளர் மாநாட்டில் வைத்து கட்சியின் யாப்பு மாற்றப்பட்ட போது நீங்கள் அதற்கெதிராக குரல் கொடுத்தீர்கள்.

இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் மகிந்த அணியிலிருந்து விலகி மைத்திரிக்கு ஆதரவளிக்க அழுத்தம் கொடுத்தீர்கள்.

மூன்றாவது அவ்வாறு ஹகீம் அவர்கள் மைத்திரி பக்கம் வர இணங்காத நிலையில், தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், நீங்கள் உங்கள் ஆதரவாளர்களுடன் வெளியேறி மைத்திரிக்கு ஆதரவளிக்கப் போவதாக மிரட்டினீர்கள்.


நான்காவது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ரணில் தலைமையிலான அரசு, முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு ஆதரவளிக்கக் காரணமான உங்களுக்கு கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைத் தர முன்வந்தது. பின்னர் உங்களின் சிபாரிசின் பேரில் அது ஹகீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் கட்சிக்குள் உங்களின் செல்வாக்கு மீதான ஒரு அச்சத்தைத் தோற்றுவித்தது.


ஐந்தாவது, ஹகீம் அவர்கள் உங்களுக்கு பிரதியமைச்சுப் பதவிக்கு மட்டுமே சிபாரிசு செய்திருந்தும், உங்களுக்கு சுகாதார ராஜாங்க அமைச்சுப் பதவி தரப்பட்டதை ஹகீமால் சகித்துக்கொள்ள முடியாமல் போனது

ஆறாவது, அந்தப் பதவியை வைத்துக்கொண்டு கிழக்கு மற்றும் வடக்கிலுள்ள அத்தனை வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை இனம் கண்டு, அவற்றை ஆவணப்படுத்தி, அவைகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்த தகவல்கள் நாள்தோறும் பத்திரிகைகளில் வெளிவந்தது. நீங்கள் உங்கள் கட்சித்தலைவரின் அனுமதிக்குக் காத்திராமல் உங்கள் அமைச்சுப் பதவியை திறம்பட முன்னெடுத்தது கட்சிக்குள் பலரையும் அச்சப்படுத்தியது.


ஏழாவது கட்சியின் செயலாளராக உங்கள் கையொப்பமிடும் அதிகாரம், பதவி ஆசையில் அலைந்தவர்களின் கண்களில் உறுத்திக் கொண்டிருந்தது.

மேலும் நவனீதம்பிள்ளையிடம் நீங்கள் முஸ்லிம்கள் தொடர்பாக கொடுத்த அறிக்கை குறித்து அப்போதைய ஜனாதிபதி சீற்றம் கொண்டு ஹகீம் அவர்களிடம் வினவியபோது, அது நான் இல்லை, எமது செயலாளர் என்று, கிழக்கின் எழுச்சியை இன்று இனவாதிகளாக காட்டி தனது அரசியல் இருப்பை காப்பாற்றிக் கொள்ள முயல்வதுபோல், உங்களையும் காட்டிக் கொடுத்த வரலாறையும் நாம் அறிவோம்.

2012 ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஹகீம் அவர்கள் பொது சன ஐக்கிய முன்னணியில் போட்டியிட தீர்மானித்த போது, மு.கா தனித்து போட்டியிட வேண்டுமென்று, நீங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இன்று ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெற்றிருக்கின்றோம்.

இவ்வாறான காரணங்களால் உங்களை நீண்ட காலமாகத் திட்டம் தீட்டி ஓரம் கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை உணருவதிலிருந்தும், கட்சியின் மீது நீங்கள் வைத்திருந்த அபரிமிதமான விசுவாசம் உங்களைத் தடுத்துவிட்டிருந்தது.


ஆனால் கிழக்கு மண்ணைச் சேர்ந்த உங்களை ஒதுக்க முற்படும் நயவஞ்சகத்திலிருந்து கிழக்கிற்கான அச்செயலாளர் பதவியின் அதிகாரங்களை மீளவும் உங்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கிழக்கின் எழுச்சி விரும்பியது. அதற்காக பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் செயலாளரின் அதிகாரங்களுக்காக குரல் கொடுத்தது.


இதற்குக் காரணம் அப்பதவி கிழக்கில் ஒரு சமுக சிந்தனையுள்ள ஒருவரிடம் இருப்பது, முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கத்திற்கு பெரிதும் உறுதுணையாயிருக்கும் என்று நாங்கள் நம்பியதனாலேயேயாகும்.


இதே காரணத்திற்காகத்தான் கிழக்கின் எழுச்சி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தையும் கிழக்கிற்குத் தருமாறு கேட்டது.

செயலாளர் பதவி ஹஸனலி எனும் தனி நபருக்கு வழங்கப் படுவதிலோ, அல்லது தலைவர் பதவி ஹகீம் எனும் தனி நபரிடமிருந்து பிடுங்கப் படுவதிலோ கிழக்கின் எழுச்சிக்கு எந்த வித தனிப்பட்ட லாபங்களும் இருக்கவில்லை.


ஆனால் இந்த முயற்சிகள் கைகூடாமல் இழுத்தடிக்கப் பட்டுக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், கிழக்கையும் வடக்கையும் இணைப்பது பற்றிய கதையாடல்கள் அதிகரிக்கலாயிற்று.

முஸ்லிம் காங்கிரஸின் மூலம் முஸ்லிம் சுய நிர்ணயத்தை அடைய முடியாது போனால், வேறு மாற்றுத் திட்டத்திற்கு தயாராகவேண்டிய நிர்ப்பந்தத்தில் கிழக்கின் எழுச்சி ஏனைய முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் தேசியத்தை ஊர்ஜிதப் படுத்த முயன்றது. ஆனாலும் நாம் எமது முதல் கோரிக்கையான கிழக்குக்குத் தலைமை என்பதை கைவிடவில்லை.


பதினெட்டாம் திருத்தச் சட்டத்திற்கு கட்சி ஆதரவளித்த போது நீங்கள் அதிகாரமுள்ள செயலாளராகத்தான் இருந்தீர்கள்.

திவினெகும சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கும் போதும் நீங்கள் அதிகாரமுள்ள செயலாளராகத்தான் இருந்தீர்கள்.

மேலும் இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சகல அதிகாரங்களும் கொண்ட செயலாளராகத்தான் இருந்தீர்கள்.

செயலாளரின் அதிகாரங்கள் மீளளிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டது மேற்கூறிய பல சந்தர்ப்பங்களில் உங்கள் அதிகாரம் உங்காளிடமிருந்தும், உங்களால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை என்பதையும் அறிந்தவர்களாகத்தான்.


இந்த நிலைமைகளில் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எனும் இடத்தில் இதுவரை இருந்த உங்கள் பெயர் நீக்கப்பட்டு உயர் பீடத்திற்கென நியமிக்கப் பட்ட மன்சூர் ஏ காதர் அவர்களின் பெயர் சிங்களத்திலும் தமிழிலும் மாற்றப்பட்டுள்ளதாக அறிந்தோம்.


உயர்பீடத்திற்கு நியமிக்கப்பட்ட செயலாளரின் பெயரை திருட்டுத்தனமாக தலைவர் கையெழுத்திட்டு கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியதாகவும், அதற்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்ததாகவும் இவ்வளவு நாளும் சொல்லப்பட்டது. ஆனால் உங்கள் ஆட்சேபனையையும் மீறி தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் பெயர் மாற்றம் வந்தது எப்படி? தேர்தல் ஆணையம் உங்கள் ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டிருந்தால், உங்கள் பெயர் மாற்றப்பட்டிருக்க மாட்டாது. அல்லது அந்த இடத்தில் ஒரு கேள்வி அடையாளமே இடப்பட்டிருக்க வேண்டும். அல்லது உங்கள் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் உங்கள் பெயரை எடுத்துவிட்டு புதியவரின் பெயரைப் போடுவதாக அவர்கள் தீர்மானித்ததிலிருந்து உங்கள் ஆட்சேபனை வறிதாகிவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.


நாம் ஏற்கனவே சொன்னது போல் இப்பதவியின் அதிகாரங்கள் மீளக்கிடைப்பது மிகவும் முக்கியமானது என்பதால் மட்டுமே நாம் உங்களிடம் இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம்.


நீங்கள் தேர்தல் ஆணையத்தை உடனடியாக அணுகி எந்த முகாந்திரத்தைக் கொண்டு உங்கள் பெயர் மாற்றப்பட்டது என்பதை விசாரணை செய்ய வேண்டும். அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஹகீம் அவர்களை நீதிமன்றுக்கு அழைப்பது, நீங்கள் வளர்த்தெடுத்த கட்சியை கோர்ட்டுக்கு கொண்டு வந்ததாகாது என்ற யதார்த்தத்தை அறிவுபூர்வமாக புரிந்து கொள்ளுங்கள்.

கட்சியின் யாப்புக்கு அப்பாலான முறையில் திருட்டுத்தனமாக உங்களை ஓரங்கட்டிய சகோதரர் ஹகீமின் கீழ்த்தரமான கைங்கரியத்தை சட்டபூர்வமாக நிறுவி, யாப்பை மீறி தான்தோன்றித்தனமாக செயல்படும் ஹகீம் அவர்களை கட்சியின் தலைமைக்கு தகுதியில்லாதவர் என நிரூபிக்க நீங்கள் முன்வரவேண்டும்.

நீங்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என்பதை நினைவு கூருங்கள். நீங்கள் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கட்டாய உயர்பீட கூட்டத்தில் ஹகீம் அவர்கள் தனக்கு கூஜாத்தூக்கும் உறுப்பினர்களைக் கொண்டு செயலாளர் பதவிக்கு வேறொருவரை முன்மொழிந்து,

இன்னுமொருவரால் அது வழிமொழியப்பட்டால் உங்கள் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவும் செய்த ஹகீம் அவர்களுக்கு அதையும் செய்ய முடியாமல் போகுமென்றா எண்ணுகிறீர்கள். அவ்வாறு நடந்ததன் பின்னால் நீங்கள் நீதிமன்றம் சென்றாலும் எந்த பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை.

உங்களை முழுதாக நீக்கிவிட்டு, தானே தலைவராகவும் தானே செயலாளராகவும் இருக்கப் போகும் ஹகீம் அவர்களால் இந்தக் கட்சியைக் கொண்டு மக்கள் நலனுக்காகப் போராட முடியுமென்றா எண்ணுகிறீர்கள்? இதுவரை அப்படி நடந்ததில்லையே. பின் எதைக் கொண்டு இனிமேல் நடக்கும் என எதிர்பார்ப்பது?

இழப்பதற்கு ஒன்றுமில்லை ஹஸனலி அவர்களே! உடனடியாக உங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை நீதிமன்றுக்கு கொண்டு சென்று நியாயம் கேளுங்கள்.

அவ்வாறு செய்யாது, கட்சியும் உங்கள் கை விட்டுப் போகுமானால், அது மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் நீங்கள் செய்த பெரும் துரோகம் என்ற துன்பகரமான நிலையில் மீதி நாட்களை நீங்கள் கழிக்க வேண்டி வரும்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸதீன்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி
கிழக்கின் எழுச்சியின் செயலாளர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்கு எழுதிய கடிதம். இது. கிழக்கின் எழுச்சியின் செயலாளர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்கு எழுதிய கடிதம். இது. Reviewed by Madawala News on 10/06/2016 08:48:00 AM Rating: 5