Kidny

Kidny

நாங்கள் கதறிய போது மெளனியாக இருந்த உங்களுடன் எப்படி ஐயா சேர்ந்து தொடர்ந்து போராடுவது?அன்புள்ள பெரியவர் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு,

முதன் முதலாக பொதுவெளியில் ஒரு கடிதத்தை எழுதுகிறேன், அது உங்களுக்கானதாய் இருப்பதில் உள்ளூர திருப்தி.

உங்களோடு சில விடயங்களை உரையாடுகிற அதே வேளை அதற்கு சமாந்தரமாக இந்த கருத்துக்கள் மக்களையும் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தினால் இதனை பொதுவெளியில் எழுதுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

ஐயா நேற்றோடு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு இருபத்தாறு வருடங்கள் ஆயிற்று!

வடக்கு முஸ்லிம்களுக்கான சிவில் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டு நேற்று ஆற்றிய உரைதான் இன்றைய தமிழ் தினசரிகளை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த உரையில் இரண்டு இடங்களில் சாதாரண இலங்கை சிவில் சமூகத்தின் முஸ்லிம் பிரஜையாக எனக்கு முரண்பாடுகள் உண்டு.

முதலாவதாக உங்களது உரையின் ஓரிடத்தில்... " யாரால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களோ அவர்கள் தமிழ் மக்களையும் வெளியேற்றினார்கள்" என்று கூறியிருக்கிறீர்கள்.

ஐயா வடக்கிலிருந்து யாரால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை இதற்கு முதலும் பல இடங்களில் நீங்களும் உங்களது கட்சியும் வெளிப்படையாக சொல்வதற்கும், எழுதுவதற்கும் தயங்கிய வரலாறு உண்டு.

அதற்கு புலிகளின் இருப்பும், அவர்களது துப்பாக்கிகளும் காரணமாக இருந்தன.

புலிகள் இல்லத்து போனதன் பிறகும் அந்த உண்மையினை தெளிவாகச்சொல்வதற்கு ஏன் ஐயா நீங்கள் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?

அல்லது இதனை வெளிப்படையாக பேசினால் சர்வதேச சமூகத்திற்கு முன்னே புலிகளை காட்டிக்கொடுத்த சாட்சியாக உங்களது கூற்று அமைந்துவிடுமென்று அரசியல் காரணங்களுக்காக அச்சப்படுகிறீர்களா?

இதுவரையில் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் சிவசிதம்பரம் ஐயா எடுத்த நிலைப்பாடு உன்னதமானது. அவர் வடக்கு முஸ்லிம்கள் மீளக்குடியேறாத வரை தான் சொந்த ஊருக்கு செல்லப்போவதில்லையென சபதமெடுத்திருந்தார்.

ஆனந்தசங்கரி ஐயா பல இடங்களில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்காக புலிகளை பகிரங்கமாகவே சாடியிருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தைரியமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புலிகளின் இந்த செயலை கண்டித்துவருகிறார்.
அதற்காக பல எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார்.

ஆனால் நீங்கள் இதுவரை வெளிப்படையாக புலிகளின் பெயர்சொல்லி இந்த விடயத்தில் கண்டனங்களை பொதுவெளியில் பதிவுசெய்தமைக்கான ஆதாரங்களை காணக்கிடைக்கவில்லையே ஐயா,
அது ஏன் என்ற கேள்வி உங்களது முதிர்ந்த அரசியல் அனுபவத்தின் மீதுள்ள மரியாதையால் என்னுள் எழுந்து கொண்டேயிருக்கிறது!

இரண்டாவது விடயம் இன்னும் பாரதூரமானது.

உங்களது உரையில் இன்னோரிடத்தில்..." நீண்ட காலமாக தீர்வொன்றைப்பெற்றுக்கொள்ள போராடியுள்ளோம். சாத்வீகரீதியில், அரசியல் ரீதியில், ஜனநாயக ரீதியில், ஆயுதரீதியில் தற்போது ராஜதந்திர ரீதியாக போராடிக்கொண்டிருக்கிறோம். ஆயினும் இந்த போராட்டங்களில் முஸ்லிம் தலைவர்களின் பங்கு குறைவாகத்தான் இருந்தது. அதனை நாம் மறந்துவிடமுடியாது.

எனினும் எக்காரணத்திற்காகவும் முஸ்லிம்களை குறை கூற முடியாது. அவர்களை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது. அவர்கள் கிழக்கில் மாத்திரமல்ல நாடுபூராகவும் வாழ்வதற்கு உரித்துடையவர்கள். ஆனாலும் நாம் சமஷ்டிக்கான போராட்டத்தினை நடாத்துகின்ற போது முஸ்லிம் தலைமைகள் அதிகம் ஒத்துழைப்பு தரவில்லை......"
என்று குறைப்பட்டுள்ளீர்கள்.

ஐயா தமிழ்தலைவர்கள் அன்று தனிச்சிங்களச்சட்டத்தை எதிர்த்து 1950 களில் காலி முகத்திடலில் உண்ணாவிரதமிருந்த போது அரசாங்கத்தால் அடித்து துரத்தப்பட்டார்கள் அல்லவா?

அதிலே கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார் என்று உறுதியாக நம்பிய பின்னர் பேர ஆற்றிலே (Beira lake) எங்களது மூத்த அரசியல் தலைவரான மஷூர் மெளலானாவை அரச கூலிகள் வீசிவிட்டு சென்றதை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

அன்று அவர் உயிர்பிழைத்து தொடர்ந்து தமிழரசு கட்சி அரசியலுக்கு ஆற்றிய தொண்டுகளையும் அவரோடு உங்கள் அரசியல் பயணங்களில் தொடர்ந்த ஏராளமான முஸ்லிம்களையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

எங்களது மறைந்த தலைவர் அஷ்ரப் கூட அந்த பாசறையில்தானே தனது அரசியலை தொடங்கினார்.

வெட்கம் , பின்னர் கல்முனை தொகுதி தேர்தலொன்றின் தொகுதிப்பங்கீட்டில்தானே அந்த அரசியல் உறவும் முறிந்ததாக வரலாறு சொல்கிறது!

ஐயா உங்களது அரசியல் பயணங்களில் இணைந்த முஸ்லிம்கள் ஆயுதப்பயணங்களிலும் இணைந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரியாததா?

எந்த போராட்ட இயக்கத்தில் முஸ்லிம்கள் இருக்கவில்லை?

பிரபாகரனின் நெருங்கிய மெய்ப்பாதுகாவலராய் இருந்து படு காயமடைந்து முகமெல்லாம் தகர்ந்து போன எனதூர் முஸ்லிம் இளைஞன் ஒருவன் இந்தியாவில் இயக்க அனுசரணையில் ப்ளாஸ்டிக் சேர்ஜரி செய்து கொண்டு திரிந்ததை கண்டிருக்கிறேன்.

அவன் பின்னர் மட்டக்களப்பில் இயங்கினான். இயக்கத்திற்காக சொந்த சமூகத்தை பகைத்தான், சொந்த ஊரார்களையே நிந்தனை செய்ய துணிந்தான். ஈற்றில் மக்கள் அவனை கொன்றனர்.

ஐயா இவ்வாறான தமிழ் போராட்ட இயக்கங்களுக்காக எதனையும் செய்யத்துணிந்த ஏராளமான முஸ்லிம் இளைஞர்களின் வரலாறுகள் மறைந்துகிடக்கின்றன!

பல வரலாறுகள் அவ்வந்த இயக்கங்களால் மறைக்கவும் பட்டன!

முஸ்லிம்களை நோக்கி தமிழ் ஆயுத இயக்கங்களின், குறிப்பாக புலிகளின் ஆயுதங்கள் திரும்பத்தொடங்கிய போது அவை சமாந்தரமாக பல முஸ்லிம் போராளிகளையும் அழித்தன.

சகோதரப்படுகொலைகளாக, களையெடுப்புகளாக, தவிர்க்கவொண்ணாத துன்பியல் நிகழ்வுகளாக அந்த கொலைகளுக்கு பெயர்களும் சூட்டப்பட்டன.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது 1989 ல் எனது வகுப்பிலிருந்த இரண்டு பேர் இயக்கத்திற்கு ஓடிப்போனார்கள்.
பிறகு எங்கோ அவர்கள் செத்து மடிந்தாக பின்னர் கேள்விப்பட நேர்ந்தது. போராடி மாண்டார்களா இல்லை இயக்கமே சுட்டுப்போட்டதா யார் அறிவார்?

இப்படித்தான் எங்களது சமூகத்தின் மீது 1990 களில் புலிகளின் துப்பாக்கிகள் வலுவாக திரும்பிய போது எமது இளைஞர்களும் இயக்கத்தில் இணைவதை நிறுத்த தொடங்கினார்கள்.

ஏலவே இணைந்தவர்கள் முகவரியற்று போனார்கள்.

ஐயா இது நெடிய கதை உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. எனது வயது உங்கள் பாராளுமன்ற அனுபவம்!

இப்போது முஸ்லிம் தலைவர்கள் உங்களோடு இணைந்து போராடியது போதாதென குறைப்படிருக்கிறீர்கள்...

உங்களோடு இணைந்து போராடி,
உங்களுக்கு அடைக்கலம் தந்து, உணவும் பணமும் தந்து வாழ்ந்த எங்களை பாதியிலே கருவறுத்த நிகழ்வின் 26 வது நினைவில் அல்லவா இதனைப்பேசியிருக்கிறீர்கள்!

எங்களை வடக்கிலே வேரோடு பிடுங்கிய பிறகு,

நாங்கள் காத்தான்குடியில் தொழுது கொண்டிருக்கும் போது எங்களது முதுகுகளிலே வந்து சுட்டுக்கொன்றுவிட்டு போன பிறகு,

மூதூரிலே ரத்த சம்ஹாரம் செய்து பலபேரைக்கொன்று குவித்து ஊரையே எழுப்பவிரட்டியபோது 'ஒரு நாள் சுடுவதை நிறுத்தச்சொல்லுங்கள்  எங்கள் மையித்துகளை எடுத்துக்கொள்கிறோம் ' என உங்களது கால்களில் எங்களது அரசியல் தலைவர்கள் விழுந்து கதறியபோதும் பலன் கிட்டாத போது .....

எப்படி ஐயா உங்களோடு சேர்ந்து தொடர்ந்து போராடுவது?

யாருக்காக போராடுவது?

யாருக்கெதிராய் போராடுவது?

சிங்களம் உங்களுக்கு உரிமைகளை தரவில்லை, ஒடுக்குகிறார்கள் என்று நீங்கள் போராட்டம் தொடங்கினீர்கள், நாங்களும் இணைந்தோம். பாதியில் எங்களை துரத்தியது யார் ஐயா?

வட கிழக்குக்கு வெளியே நூற்றாண்டுகளாக சிங்களவர்களோடு எப்போதும் அனுபவித்திராத பெருந்துயரங்களையும், வடுக்களையும் வடகிழக்கிலே தமிழ் சமூகத்தோடு கடந்த முப்பதாண்டு காலத்தில் முஸ்லிம் சமூகம் சந்தித்துவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை!

வெள்ளைக்காரன் பிரித்தும்போட்ட ஒன்பது மாகாணங்களிலும், இந்தியாக்காரன் வந்து தீர்வு தருவதாக சொல்லி வடக்கையும் கிழக்கையும் இரவோடிரவாக இணைத்துவிட்டு போனான். வடக்கிலும் கிழக்கிலும் 38 வீதமாக இருந்த நாங்கள் இந்த இணைப்பினால் 17 வீதமாக மாறினோம். அதன் பிறகு நாம் சந்தித்த ஆயுத, நிர்வாக அடக்குமுறைகள் எம்மாத்திரம் ஐயா?

இன்னொரு இனத்திடமிருந்து விடுதலை கோரும் நீங்கள் எங்களை ஒடுக்கியது எந்த வகையில் தகும்?

யுத்தத்தின் பின்னர் இலங்கை மக்கள் அமைதியோடு வாழ்கிறார்கள் என்பது உண்மை.

ஆனால் சமாதானமாக வாழ்கிறார்கள் என்பது வெறும் பொய் ஐயா.

முகத்தில் போலிப்புன்னகை பூசி பாராளுமன்றத்தில் கைகுலுக்கும் பெரும்பான்மை இனத்தின் பெரும்பாலான எம்பிமார் உங்கள் முதுகுக்கு பின்னால் என்ன பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாததா?

அது போலதான் சாதாரண மனிதர்களும் இங்கே கைகுலுக்கி கொள்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலை புதினம் பார்க்க போகிற சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழர்களோடு புன்னகைப்பதும், கைகுலுக்குவதும்....

காத்தான்குடியின் சுட்ட பள்ளிவாயல்களை தரிசிக்க வருகிற தமிழர்கள் அங்குள்ள முஸ்லிம்களோடு புன்னகைப்பதும், கைகுலுக்குவதும்...

நீங்கள் உட்பட இப்போது இலங்கையில் வாழுகிற மூன்று தலைமுறைகளும் வெறுமனே நடித்துக்கொண்டிருக்கிறோம் ஐயா!

உதடுகளில் பொய்களை பூசி சிரித்து கொண்டிருக்கிறோம்.

காரணம்....

யுத்தத்தால் அதன் உப விளைவுகளால் இந்த சமூகங்கள் பட்ட காயங்கள் ஏராளம்.

அவை அவ்வந்த சமூகங்களுக்குள் தொட்டால் நோகும் தழும்புகளாக ஆறாமல் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன!

இந்த பின்புலத்தில்தான் நாம் இப்போது தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் மீண்டும் வட கிழக்கை இணக்க சொல்கிறீர்கள்!

சிங்கள சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதில் உங்களுக்கு தொடர்ந்தும் இருக்கும் அச்சமே இந்த தீர்வினை கேட்க தூண்டுகிறது.

காலி முகத்திடல் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீங்கள் சந்தித்த அடிகளின் துயரம் சமஷ்டியை நாடுகிறது.

அப்படியென்றால் கடந்த முப்பது ஆண்டுகளாக உங்களால் நாங்கள் பட்ட அடிகளுக்கும், சுமந்த துயரங்களுக்கும் வேறொரு தீர்வுதானே ஐயா எங்களுக்கு சாத்தியம்?

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உங்களோடு இணைந்து போராடுவதற்கும், அதிகாரங்களை பகிர்வதற்குமான நம்பிக்கைகளை 1990 களிலே தொலைத்துவிட்டோமே ஐயா?

அதன் பிறகு அதனை யாரால் கட்டியெழுப்ப முடிந்தது?

ஆயுதங்கள் மெளனித்த பிறகும் இன்றுவரை வடக்கிலும் கிழக்கிலும் எம்மாத்திர நிர்வாக ஒடுக்கு முறைகளை முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள்?

நீங்கள் தலைமை தாங்கும் கூட்டணியின் அரசியல்வாதிகள் எத்தனை பேர் எங்களுக்கெதிராக வெளிப்படையாகவே தொடர்ந்தும் துவேசங்களை பேசிக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்களையாவது உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையே ஐயா?

அன்று வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் காடுகளை கடந்து வருகிறபோது வழியில் ஜனித்த குழந்தைகளுக்கு இன்று 26 வயது....

பள்ளிகளில் சுடப்பட்ட வாப்பாமாருக்கு கருக்கொண்டு பிறந்த குழந்தைகளுக்கும் கடந்த ஆகஸ்டோடு 26 வயது....

இந்த தலைமுறை தங்களது பூர்வீகத்தை தேடியிருக்கும்!

இந்த தலைமுறை தங்களது வாப்பாமாரை தேடியிருக்கும்!

அதற்குரிய பதில்களையும் நாங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறோம்.

அந்த பதில்கள் கனதியானவை!

இந்த தலைமுறை இன்னும் 50 வருடங்கள் வாழ்வார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதுவரை இந்த வடக்கும் கிழக்கும் இணைவது சாத்தியமில்லை ஐயா!

உங்கள் கனவுகளின் மீது கல் எறிவதற்காய் என்னை மன்னியுங்கள்,

இத்தனை வலிகளை சுமந்த பின்னர் சிங்களத்தோடு இணைந்து வாழ உங்களுக்கிருக்கிற சங்கடங்களின் பலமடங்கை உங்களது போராட்ட எச்சங்கள் எங்களுக்குள்ளும் விதைத்துவிட்டதை உணருங்கள் ஐயா.

இந்த மடலுக்கு நீங்கள் பதில் தருவீர்களோ இல்லையோ, தீர்வுகள் தொடர்பில், முஸ்லிம்களை பற்றி நீங்கள் இனிமேல் வெளியிடுகிற கருத்துக்களில் எங்காவது ஒரு மூலையில் இந்த கடித்த்தின் தாக்கம் இருக்குமென்று நம்புகின்றேன்.

இது உங்கள் கரம் சேரவேண்டுமென்ற உறுதியில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முகவரி இடுகிறேன்.

உங்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்க ஆசித்தவனாய்....

மிக்க அன்பும் பணிவும்,

முஜீப் இப்றாஹிம்
காத்தான்குடி.

நாங்கள் கதறிய போது மெளனியாக இருந்த உங்களுடன் எப்படி ஐயா சேர்ந்து தொடர்ந்து போராடுவது? நாங்கள் கதறிய போது மெளனியாக இருந்த உங்களுடன் எப்படி  ஐயா சேர்ந்து தொடர்ந்து போராடுவது? Reviewed by Madawala News on 10/31/2016 12:41:00 PM Rating: 5