Kidny

Kidny

மீறப்பட்ட உரிமைகள் மீள வழங்கப்படுமா.? அல்லது முடிவிலியாக தொடருமா.?[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்]

ஒக்டோபர் மாதம் இருப்பத்திரெண்டாம் திகதி -  தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்ட நாளாக அனைவராலும் நினைவு கூறப்படும் இன்றைய நாளில், புத்தளம் மக்களின் உரிமைகளும் மீறப்பட்டு இருப்பத்தாறு வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இரவோடு இரவாக வந்திறங்கிய மக்களை  இன்முகம் கொண்டு வரவேற்ற புத்தளம் மண், இரவு பகலென தனது கால நேரங்களை செலவழித்து, தன்னால் ஆன உதவிகளை செய்தது அனைவரும் அறிந்ததே.


புத்தளம் மண்ணின் மைந்தர்கள் தமது வீடு வாசல்களை, பூமி நிலங்களை, தோட்டம் துரவுகளை, தொழில் புரியும் இடங்களை, பாடசாலைகளை என அத்தனையையும் தம்மை நம்பிவந்த சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் வரலாற்றில் விருந்தோம்பல் சமூகமாக (Host Community) தம்மை பதிவு செய்துகொண்டமை இவ்விடத்தில் கட்டாயம் நினைவு படுத்தப்பட வேண்டியதொரு விடயமாகும்.


மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எல்லாத்தரப்பினரும் அவர்களின் மீள்குடியேற்றம் பற்றியும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது பற்றியும் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி வாயிலாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் கவனயீர்ப்பு போராட்டங்கள், தூதரக அறிக்கைகள் என்பன மூலமாகவும் தமது விடயங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இது ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பாகும்.


இவ்வாறானதொரு நிலையில் மூடிமறைக்கப்படும் உண்மை, கவனம் செலுத்தாது கைவிட்டுச் செல்லும் கடமை என்பவற்றை பற்றி அனைத்து சாராரும் சிந்திப்பது இன்றியமையாததாக இருந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய விஜயம் செய்த ஐ.நா விஷேட பிரதிநிதி ரீடா ஐசெக் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம்கள் விடயத்தில் கருத்துக்களை தெரிவித்ததோடு உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்தோர் சமூகங்கள் மத்தியில் நிலவும் சாத்தியமான முரண்பாடுகளை தீர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்மை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


இன்று புத்தளம் பிரதேசம் தமது மக்களையும் அதனோடு சேர்த்து வடபகுதி மக்களையும் இணைத்துக்கொண்டு பாரிய குடிபரம்பல் மிக்க பிரதேசமாக மாறி இருக்கிறது. இதனால் பெளதிகவியல் சார்ந்த பல பிரச்சினைகளும் கூடவே ஏற்பட்டிருக்கின்றது. ஒரு பிரதேசத்தின் குடிபரம்பல் அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு வள பங்கீடு செய்யப்படாவிட்டால் அங்கு சிக்கல் நிலை உண்டாகும். அதைதான் இப்போது புத்தளமும் எதிர்நோக்கி உள்ளது.
ஒரு பிரதேசத்தின் வளங்கள் அப்பிரதேச மக்களுக்கு அமானிதமானவை. வளங்கள் எனும் போது அரச தனியார் வேலைவாய்ப்புகள், பாடசாலைகள், திணைக்களங்கள் தொட்டு கடைதெருக்கள் உட்பட எல்லா உரிமைகளையும் குறிக்கும். இவைகளை இப்பிரதேச மக்கள் தந்துதவினார்கள் என்றாலும் அவைகள் திருப்பி கொடுக்கப்பட வேண்டியவைகளாகும்.


சனத்தொகை அதிகரிக்கும் போது வளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். அதிக சன அடர்த்தியைக் கொண்ட ஒரு சமூகத்தின் சமநிலைதன்மை குறைந்த வளங்கள் காரணமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அச்சமூகத்தில் சமூகக் கலாசார, பொருளாதார, கல்வி, சுகாதார, அரசியல் நெருக்கடிகள் என இன்னோரன்ன பிரச்சினைகளும் ஏற்பட வழிவகுக்கின்றன. இது ஒவ்வொரு படித்த, பாமர மனிதனுக்கும் நன்றாக விளங்கக்கூடியது.
ஒரு பிள்ளையை ஆரம்ப பாடசாலைகளில் சேர்க்கும் போதிலிருந்தே சிக்கல் ஆரம்பிக்கிறது. அதுவே ஐந்தாம் தர புலமைப்பரிசில் “கட்டவுட்” பெறுபேற்றில் தாக்கம் செலுத்தி படிப்படியாக க.பொ.த. சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை என தாக்கம் தொடர்கிறது. அதேநேரம் பல்கலைகழகம் செல்வதிலும், “Z” புள்ளி விடயத்திலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி பல்கலைகழக அனுமதியின் போக்கையே மாற்றி அமைத்துவிடுகின்றது.


மறுபுறம் வியாபார நடவடிக்கைகளிலும் இடியப்ப சிக்கலாய் இப்பிரச்சினை நீள்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்ட வியாபார நிலையங்களே இருந்து வந்த நிலையில் கொள்ளளவுக்கு மீறிய வியாபார நிலையங்களின் உருவாக்கத்தாலும், அதிகரித்த நிரம்பல் காரணமாகவும் வருமதி குறைவடைகிறது. ஆரோக்கிய தன்மை இழக்கப்படுகிறது.
இதுபோன்று வேலைவாய்ப்பு, போட்டிப் பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமான வளப் பகிர்வுகள் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இவ்வட மாகாண மக்களின் உள்ளூர் இடம்பெயர்வு என்ற  பாரிய பிரச்சினைக்கு மீள்குடியேற்றம் ஒன்றே தீர்வாக அமையும் என்றால் மிகையாகாது.

அவ்வாறாக அல்லாது போனால் அரசினால் வழங்கப்படும் இடம்பெயர்ந்தோருக்காக வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், மானியங்களும், வடமாகாணத்திற்கு என ஒதுக்கப்படும் அனைத்து வள ஒதுக்கீடுகளும் புத்தளத்தை வந்தடையச் செய்யவேண்டும். புத்தளத்திலுள்ளவர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
தாய்மண்ணை நேசிக்கும் மக்கள் இன்று இப்புத்தளம் மக்களுக்கு நன்றி கூறி தத்தமது பிரதேசங்களுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் எம்முடைய இடத்திலிருந்து பார்த்து புரிந்துக் கொண்டவர்கள். உபசார சமூகத்தின் சுமையை குறைத்தவர்கள். அவர்களை நாமும் நன்றியுடன் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இன்னும் சிலர் தமது தாயக பூமியை தரிசிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.


அதேநேரம் இன்னொரு புறத்தில் 50%க்கும் அதிகமானோர் அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மீள்குடியேறுவதற்காக வழங்கப்படும் இலவச வீடுகளை பெற்றுக்கொண்டு,  இங்குள்ள சலுகைகளை அனுபவித்து கொண்டும், ஏனையோருக்கு செல்ல வேண்டிய வளங்களை ஆக்கிரமித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.


பொதுவாக கூறுவதென்றால் ஒவ்வொரு வருட ஒக்டோபரிலும் இடம்பெயர்வை நினைவு கூர்வதுடன் முடியுமான வரை அனுதாபத்தை திரட்டி நிவாரணங்களை பெற்றுக் கொள்வதுடன், மீள் குடியேற்ற பொதிகளிலும் கருத்திட்டங்களிலும் கண்ணாக இருப்பதுடன் இவைகள் முற்றுபெருகின்றன. இதுவே தொடர்கதையாகி முடிவில்லாது நீள்கிறது.


எந்த ஒரு மனிதனும் அவனுடைய தாய்க்கு அடுத்தபடியாக தாய் மண்ணை நேசிக்கவே செய்வான். தாம் வாழ்ந்த மண்ணில், தமது முன்னோர்கள் வாழ்ந்த மண்ணில் மீண்டும் குடியேறவே விரும்புவான். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது க.:பாவை கட்டிப்பிடித்து அழுதார்கள் என வரலாற்றில் இருந்து படிக்கின்றோம். அப்படியென்றால் நம் நபி அவர்களின் தாய்மண் பற்று எவ்வாறு இருந்திருக்கின்றது என்பதை இதனூடாக அறிய கூடியதாக உள்ளதல்லவா.!


அதேநேரம் கடந்த ஆண்டுகளில் நினைவுகூறப்பட்ட நிகழ்வில் உலகிலுமுள்ள உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்கள் அழைக்கப்பட்டு பல கருத்திட்டங்கள் முவைக்கப்பட்டன. நடந்தது என்ன? என்று தேடிப்பார்த்தால் வெறுமை தான் மிச்சமாகிறது. அதேநேரம் இவர்களின் மீள் குடியேற்றத்துக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லையா?

என்றாலும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை பல வருடங்களாகப் பெற்றிருந்தும் அவர்களுக்கான மீள் குடியேற்ற ஏற்பாடுகள் செய்துக் கொடுக்கபடவில்லையா.? என்றாலும் வெறுமை தான் மிச்சமாகின்றது.
இனிவரும் காலங்களிலாவது அரசியல்வாதிகளோ, இஸ்லாமிய அமைப்புக்களோ, சிவில் சார் அமைப்புக்களோ,  எதுவா இருந்தாலும் புத்தளம் மக்களின் மீறப்பட்ட, மீறப்படுகின்ற உரிமைகள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்நோக்கும் சிக்கல்களை உள்வாங்கி செயற்பட வேண்டும். இல்லாது இது தொடர்ந்தால் ஒரு சமூகம் அநீதி இழைக்கப்பட்டு, இன்னொரு சமூகம் குற்றமிழைத்த நிலைக்கு தள்ளப்படும் என்பது யதார்த்தபூர்வமான உண்மை என்று சொன்னால் மறுக்க இயலாது.


வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கான நிரந்தர தீர்வு பெறப்படாது மெளனம் சாதிக்கப்படுமா..? தாங்க முடியாத சுமையை உபசார சமூகம் தொடர்ந்தும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்குமா..?


வருடங்கள் விரைந்தோடும் இத்தருணத்திலாவது இரண்டு சமூகங்களினதும் புத்தி ஜீவிகள், அரசியல் வாதிகள், சிவில் சமூக அமைப்புக்கள் இவைகளை பற்றி சிந்திப்பார்களா..? விடை தெரியா கேள்விகுறியோடு..!
வட மாகாண முஸ்லிம்கள் – வளங்கள் – புத்தளம் மக்களின் அமானிதம் –மீள்குடியேற்றம் –சிக்கல்களுக்கு தீர்வு..

மீறப்பட்ட உரிமைகள் மீள வழங்கப்படுமா.? அல்லது முடிவிலியாக தொடருமா.? மீறப்பட்ட உரிமைகள் மீள வழங்கப்படுமா.? அல்லது முடிவிலியாக தொடருமா.? Reviewed by Madawala News on 10/22/2016 02:57:00 PM Rating: 5