Kidny

Kidny

மஹிந்தவுடன் அரசியல் செய்வது ஹராம் என உலமா சபை பத்வா வழங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன். s

அப்துல் சத்தார் :: தேசிய அமைப்பாளர் முஸ்லிம்  முற்போக்கு முன்னணி

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி (மீள்பார்வை)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருவதற்குரிய காரணங்கள் என்ன?

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்கினேன். 1983 கலவரத்தின்போது நான் பண்டாரவளையில் இருந்தேன். அங்கு என் கண் முன்னாள் சில தமிழர்களை கோவிலொன்றுக் குள் வைத்து எரித்தார்கள். இச்சம்பவம் என்னுள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1986 இல் தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டகாசம் புரிய ஆரம்பித்தன.

1983 போன்றதொரு கலவரம் முஸ்லிம் களுக்கும் ஏற்படலாம் என்றதொரு சிந்தனை எம்முள் தோன்றியது. அப்போது தமிழர்கள் இந்தியா சென்றார்கள். இன்னும் சிலர் யாழ்ப் பாணம் சென்றார்கள். ஆனால் முஸ்லிம்களா கிய எமக்கு ஒரு இடத்திற்கும் போக முடியாத தொரு நிலை காணப்பட்டது. அன்றிருந்த அரசாங்கம் உங்களுக்கான பாதுகாப்பை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியது.

அப்போது நாம் முஸ்லிம் ஆயுத அமைப்பொன்று பற்றி யோசித்தோம். எமது சமூகத்தை பாதுகாக்கக் கூடிய ஏதாவதொரு வழிமுறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் அப்போது நான் இராணுவத்தில் இணைந்தேன். பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராகவும் சேவையாற்றினேன்.

இவ்வாறு இருக்கும் பொழுது 1987 இல் முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. ஆயுத ரீதியான நம்பிக்கைகளைக் கைவிட்டு விட்டு அரசியல் ரீதியில் எமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. 1993 வரையில் காங்கி ரஸுடன் அரசியல் செய்தேன். எம்மால் தனி யொரு கட்சியாக இருந்து கொண்டு அரசியல் உரிமைகளை வெல்ல முடியாது, பெரும்பான் மைக் கட்சியொன்றுடன் இணைய வேண்டும் என்ற கருத்துக்கள் மேலெழ, கட்சிக்குள் ஏற் பட்ட கருத்து முரண்பாட்டில் 12 மாகாண சபை உறுப்பினர்கள் ஐ.தே.க.வில் இணைந்தார்கள்.

அப்போது பிரேமதாஸவின் ஆட்சிக் காலம். அவர் 1993 இல் கொல்லப்பட்டார். 1994 இல் அரசாங்கம் மாறியது. நாம் தொடர்ந்தும் ஐ.தே.க. வில் இருந்தோம். முதன் முதலாக நான் 1997 மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வில் போட்டியிட்டேன். அதனைத் தொடர்ந்து 2 மாகாண சபைத் தேர்தல்களில் எனக்கு போட்டி யிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

எமது தொகுதியில் நாம் கஷ்டப்பட்டு உழைத்து வரும் பொழுது ஐ.தே.க. முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தி எம்மை துண்டித்துவிடும். இவ்வாறு அரசியல் தொடர் பில் விரக்தியில் இருந்தேன். 2006 தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்னிடம் இருக்க வில்லை. அப்போது மஹிந்த ராஜபக்ஷ என்னை அழைத்தார். 2006 இல் நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். சிறி லங்கா சுதந்திரக் கட்சி குருனாகல் மாவட்ட அமைப்பாளர் பதவி எனக் குக் கிடைத்தது. இப்பதவியை வைத்து நான் பல சேவைகளை செய்தேன். அன்று முதல் எனக்கு ராஜபக்ஷ தொடர்பில் நல்லதொரு அபிப்பிரா யம் இருந்து வருகிறது.

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குகின்றமை தொடர்பில் கடந்த காலப்பகுதியில் பலர் என்னை திட்டினார்கள். சிலர் ஹராம் என்று கூறினார்கள். மஹிந்தவை சில முஸ்லிம்களுக்கு பிடிக்காது. மஹிந்தவுடன் இருப்பதும் அவரோடு இணைந்து அரசியல் செய்வதும் ஹராம் என்பதாக உலமா சபை பத்வா வழங்கினால் நான் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க மாட்டேன்.

நாட்டில் கடந்த காலப்பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட இனவாதச் செயல்களின் காரணமாகத்தானே ராஜபக்ஷ ஆட்சி பீடம் பதவி கவிழ்க்கப்பட்டது?

இன்று முஸ்லிம்கள் சர்வதேச ரீதியிலான சூழ்ச்சிக்கு அகப்பட்டுள்ளார்கள். இச்சூழ்ச்சி இன்று பல நாடுகளில் அரங்கேற்றப்படுகின்றது. இது எமது நாட்டிற்கும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் ரோ போன்ற உளவு அமைப்புக்கும் மேற்கு நாடுகளுக்கும் ராஜபக்ஷ மிகவும் தலையிடியாக இருந்தார். எப்படியேனும் அவரை ஆட்சி கவிழ்க்க வியூகம் வகுத்தார்கள். பல திட்டங்களைத் தீட்டினார்கள். அவருக்குள்ள பெரும்பான்மை பலத்தினை குறைக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

யுத்தத்தை தொடர்ந்து மஹிந்தவுக்கு தமிழ் வாக்குகள் காணப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் துவங்கி பொதுபலசேனா உள்ளிட்ட இனவாத அமைப்புக்களின் தோற்றம் வரையில் சர்வதேசத்தின் சூழ்ச்சி அரங்கேறியது.

பொதுபலசேனா உருவாக்கத்துடன் ராஜபக்ஷ ஆட்சிக் கூட்டணிக்கு தொடர்பு இல்லையா?

பொதுபலசேனாவின் உருவாக்கமும் மேற் கத்தேய நாடுகளின் சூழ்ச்சியொன்றாகும். ஞானசார தேரருக்கு சிங்கள சமூகத்தில் வரவேற்பில்லை. முஸ்லிம்களே ஞானசார தேரரை ஊக்குவித்தார்கள். நாட்டில் 35,000 பௌத்த பிக்குகள் உள்ளார்கள். பௌத்த பிக்குகள் எனும் பொழுது சிங்கள மக்கள் அவர்களை கும்பிட்டு வணங்கி கௌரவப்படுத்துவார்கள். ஆனால் ஞானசாரருக்கு இந்த வரவேற்பில்லை.

பௌத்தப் பெரும்பான்மை நாட்டில் தேர்தலில் போட்டியிட்ட ஞானசாரருக்கு வெறும் 5000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. இதன் மூலம் சிங்கள சமூகத்தில் அவருக்குள்ள வரவேற்பு விளங்குகிறது. மஹிந்தவை பொறுத்த வரையில் அவர் ஒரு அரசியல்வாதி. எமது சமூகத்தில் பல அமைப்புக்கள் உள்ளன. என்னை அரசியல்வாதி என்ற வகையில் ஏதாவது ஒரு அமைப்பு முக்கிய வைபவமொன்றுக்கு அழைக்கும்போது நான் செல்வேன். அதுபோன்று தான் காலியில் பொதுபலசேனாவின் கட்டிடமொன்றை திறந்து வைப்பதற்கு மஹிந்த அழைக்கப்பட்டு அவருக்கு முடியாமல் போக, கோத்தாபய  அங்கு சென்றிருந்தார்.

அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு மிலிந்த மொரகொடவிடமிருந்து வந்தது. மொரகொடவின் வேண்டுகோளுக்கிணங்கவே அவர் அங்கு சென்றிருந்தார். அவர் பொதுபலசேனா கட்டிட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டதனால் அவர் பொதுபலசேனாவுக்கு ஆதரவானவர் எனக் கூற முடியாது. பிற்காலத்தில் வழக்கொன்று இடம்பெற்று பொதுபலசேனாவுக்கு அவ்விடம் கிடைக்காமல் போனது.

கடந்த அரசாங்கம் அளுத்கம விவகாரத்தை ஏன் வளர்த்தது?

அளுத்கம சம்பவம் இடம்பெறுகின்ற பொழுது மஹிந்தவும் கோட்டாவும் நாட்டில் இருக்கவில்லை. பசில் மாத்திரமே இருந்தார். அளுத்கமையில் பொதுபலசேனாவின் கூட்டத்தை நடாத்துவதற்கான அனுமதியினை மதப் பாதுகாப்புச் சபையின் செயலாளரே வேண்டியிருந்தார். அவர் சம்பிக்க ரணவக்கவின் செயலாளர். இவ்விவகாரம் பிரச்சினையை உண்டு பண்ணும் எனக் கருதி அப்போதைய ஈஐஎ அனுர சேனாநாயக்க நீதிமன்ற அனுமதியை வேண்டினார். களுத்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஆயிஷா ஆப்தீன், இதை நான் நிறுத்தினால் தனக்கும் முஸ்லிம்களுக்குப் பிரச்  சினை வரும் எனக் கருதி அனுமதி வழங்கினார்.

இவ்விடயம் சரியென நான் சொல்ல வரவில்லை. மஹிந்த அன்று வெளிநாட்டிலிருந்து வந்ததும் உடனடியாக அளுத்கமைக்கு விரைந்தார். அங்கு போய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அன்று தொடக்கம் அவர் நாட்டிலுள்ள சகல பள்ளிவாயல்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்தப் பிரச்சினை இதற்கு மேல் செல்லாமல் பாதுகாத்தார்.

1983 இல் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட பொழுது ஜே.ஆர். ஒரு வாரம் பொலிஸாருக்கு விடுமுறை வழங்கினார். கிரீஸ் யகா சம்பவத்தின்போது புத்தளத்தில் முஸ்லிம் கிராமமொன்றிற்குள் நுழைந்த இரண்டு சிங்களவர்களை மக்கள் வெட்டிச் சாய்த்தார்கள். அப்போது அதை காரணமாக வைத்து அரசாங்கம் முஸ்லிம்களை தாக்கியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதற்கு வழிவிடவில்லை. அளுத்கம சம்பவம் தொடர்பில் ஞானசாரவினை கைது செய்திருந்தால் அவ்விவகாரத்தை வேறொரு பக்கத்திற்கு மாற்றியிருப்பார்கள். தேரர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள்.

தற்பொழுது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஜனக பண்டாரவினை காணிப் பிரச்சினை தொடர்பில் கைதுசெய்தார்கள். ஆனால் அளுத்கம விவகாரம் தொடர்பில் ஏன் ஞானசார கைதுசெய்யப்படவில்லை. இதில் முக்கிய ஒருவராக இருந்த சம்பிக ரணவக்க இன்று அரசாங்கத்தில் உள்ளார். முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கியதாகக் கூறிய ராஜிதவும் அரசாங்கத்தில் உள்ளார். இச்சம்பவத்தில் இலாபம் பெற்ற ரிஷாதும் ஹக்கீமும் அரசாங்கத்தில் உள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் எமது சமூகத்திற்கு ஒரு விடிவு கிடைத் ததா என்றால் இல்லை.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக நீங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றீர்கள்?

இன்று முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளது. 25 வீதமான முஸ்லிம்கள் சிறையில் உள்ளார்கள். போதைப் பொருள் பாவனை மற்றுமுண்டான சமூக விரோதச் செயல்களில் முன் நிற்பவர்கள் முஸ்லிம்கள். எமது சமூகத்திற்கு சரியானதொரு தலைமைத்துவம் இல்லை. இன்று ஒரு பள்ளிவாயலுக்கு சென்று எப்படி தொழுவதென்பதை தீர்மானிக்க முடியாதுள்ளது.

பல அமைப்பு சார்ந்த பள்ளிவாயல்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு விதமாக தொழுகிறார்கள். அடிப்படையான மார்க்க பிரச்சினைகளில் சிக்குண்டுள்ளார்கள். ஒரு குறிக்கோளற்ற சமூகமாக எமது மக்கள் காணப்படுகிறார்கள். தேர்தல் வந்தால் நாம் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்கிறோம். அது எதற்காக வாக்களிக்கிறோம் என்பது கூட தெரியாது. முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ரிஷாதின் கட்சியோ அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கச் செல்லும்போது எங்களுக்கு எத்தனை பாடசாலைகளை தருவீர்கள், எங்களுக்கு எத்தனை தொழில் வாய்ப்புக்களை தருவீர்கள் அல்லது எமக்கு ஒரு முஸ்லிம் ஊடகமில்லை, ஒரு ஊடகம் தேவை என்பதாகக் கேட்பதில்லை.

மாறாக எங்களுக்கு எத்தனை அமைச்சுப் பதவிகள், எத்தனை திணைக்களங்கள், எத்தனை வாகனங்கள் என்பதையே கேட்கிறார்கள். இவர்களால் எமது சமூகத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இன்று பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இன்று அநேகமான சிங்களப் பகுதிகளிலுள்ள வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப் பட்டிருக்கும். ஆனால் எமது பகுதிகளிலுள்ள வீதிகள் மணல் வீதிகளாகவே காட்சியளிக்கின்றன. இதுபோன்ற சில்லறைப் பிரச்சினைகள் அதிகம் உள்ளன.

முஸ்லிம் முற்போக்கு முன்னணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

முஸ்லிம் முற்போக்கு முன்னணி என்பது நாம் தமிழர்கள் என்பது போல் நாம் முஸ்லிம்கள் என்ற கருத்தில் உருவாக்கப்பட்டது. இதில் எவ்வித கட்சிபேதமும் இல்லை. எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் முஸ்லிம் நலன்களுக்கான செயற்பாடுகளில் ஈடுபடுதல். ஏனைய சமூகங்களைப் பகைத்துக் கொண்டு எமது உரிமைகளை ஒரு போதும் வெல்ல முடியாது.

இவ்வரசாங்கம் உறுதியானதல்ல. இவ்வரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது. எதிர்வரும் அரசாங்கம் மஹிந்தவின் அரசாங்கமாக இருக்கும். மஹிந்தவின் அரசாங்கத்தில் நாம் அவர்களுடைய   கட்சிக்குள் சேர்ந்து கொண்டால் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் நாம் தனியமைப்பாக பிவிதுரு ஹெல உறுமய போன்று முஸ்லிம் முற்போக்கு முன்னணியை உருவாக்கியுள்ளோம்.

எதிர்காலத்தில் மஹிந்த அரசு வந்தால் அதில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கம். புதிய அரசியலைப்பு உருவாக்கத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. முஸ்லிம் சமூகம் இவ்வரசின் கீழ் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக உள்ளது. பெரும்பான்மையினருக்கு மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு சந்தேகப் போக்குள்ளது.

கடந்த தேர்தலில் மஹிந்தவை தோற்கடித்தது முஸ்லிம்களல்ல. இருந்தாலும் முஸ்லிம்கள் தான் எம்மை தோற்கடித்தார்கள் என்ற கோபம் சிங்களவர்கள் மத்தியில் உள்ளது. எனவே இக்கருத்தை நாம் போக்க வேண்டும். முஸ்லிம்களை ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாக அவர்களுக்கு தீர்வு வழங்குவதும் எமது நோக்கம்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணி கட்சியாக பதிவு செய்யப்பட் டுள்ளதா?

தனிக்கட்சியாக பதிவு செய்யும் நோக்கம் எமக்கு இல்லை. அன்று பதியுதீன் மஹ்மூத் காலத்தில் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் சோசலிஸ முஸ்லிம் முன்னணி என்ற அமைப்பு இருந்தது. அதனூடு நிறையப் பணிகளைச் செய்தார்கள். பிற்காலத்தில் அது கலைக்கப் பட்டு, அதில் இருந்த அங்கத்தவர்கள் சுதந்திர கட்சியுடன் இணைந்தார்கள். அதனால் எமது விடயங்கள் அவ்வளவு பெரியளவில் நடைபெறவில்லை.

சுதந்திரக் கட்சியோடு இல்லாமல் தனியான அமைப்பில் இயங்குவதே எமது நோக்கம். தேவைப்பட்டால் பிற்காலத்தில் கட்சியாகப் பதிவோம். இம் முன்னணியில் தேசிய அமைப்பாளராக நான் செயற்படுகிறேன். முன்னாள் பா. உறுப்பினர் அஸ்வர் ஊடகப் பேச்சாளராகச் செயற்படுகிறார். முன்னாள் பாராளுமன்ற உப்பினர்கள், மாகாண சபை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், உலமாக்கள் என எம்மோடு பலர் கைகோர்த்துள்ளார்கள்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணி யின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

நாம் மாவட்ட ரீதியாக எமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை குருனாகலையில் ஆரம்பிக்கவுள்ளோம். முஸ்லிம்கள் கூடுதலாக உள்ள தேர்தல் தொகுதிகளுக்குச் சென்று அவர்களுடன் சுமுகமாகக் கதைத்து, அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, எம்மைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயத்தையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கவுள்ளோம்.

முஸ்லிம் காங்கிரஸையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் சேர்ந்த பலர் எதிர்காலத்தில் எம்முடன் இணைய உள்ளார்கள்.

மஹிந்தவுடன் அரசியல் செய்வது ஹராம் என உலமா சபை பத்வா வழங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன். s மஹிந்தவுடன் அரசியல் செய்வது ஹராம் என உலமா சபை பத்வா வழங்கினால் நான் அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன். s Reviewed by Madawala News on 10/30/2016 09:31:00 PM Rating: 5