Kidny

Kidny

இவையெல்லாம் நடக்குமா என 48 மணிநேரம் பொறுத்திருப்போம்...அம்பாறை - இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவு மாயக்கல்லி மலையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர்சிலை    தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவர் என வர்ணிக்கப்படும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரின் அனுமதியுடனேயே இந்தச் சிலை வைக்கப்பட்டதாக    முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் ஐ தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட சர்ச்சையானது  மன்சூரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கொண்ட வீடியோ ஒன்று வெளிவந்ததால்  மிக வீரியம் பெற்றுள்ளது.

இணைத்தலைவரான மன்சூர் எம்பியின் அனுமதியுடனேயே இந்தச் சிலை வைக்கப்பட்டதாக மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் கூறியிருந்தார் என முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்  குறித்த நிகழ்ச்சியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தை மன்சூர் எம். பி உடனேயே மறுத்திருந்த நிலையில் அவருக்குப் பேரிடியைக் கொடுப்பது போன்றே குறித்த வீடியோ வெளியாகி அவரது முன்னைய மறுப்பை பொய்ப்பித்துள்ளது.

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  கடந்த வியாழக்கிழமை  இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மன்சூர் எம்.பி  'இது  பௌத்த நாடு. எந்த இடத்திலும் சிலை வைக்க முடியும். அதற்காக அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. வைத்த சிலையை  எந்த ராசாவைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அகற்ற முடியாது அவர்கள் சிலை வைக்கும் போது நம்மால் என்னதான் செய்ய முடியும்?' என்று தெரிவித்துள்ளார்.

வெட்கம்.. வெட்கம்.. கேவலம். தனது கையாலாகத் தனத்தைக் காட்டி முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கே மன்சூர் எம்பி இன்று கோவணம் கட்டி நடுத்தெருவில் விட்டுள்ளார்.

சம்மாந்துறை என்பது சன்மார்க்கம் சங்கை போன்ற உயர் பண்பியல்களைக் கொண்ட பிரதேசம். அரசியலில் கூட பல கனவான்களைக் கண்ட பூமி.   இந்த நிலையில் அன்வர் இஸ்மாயிலின் மறைவுக்குப் பின்னர் தங்களுக்கு ஒரு எம்.பி இல்லை என்ற ஏக்கத்தில் காணப்பட்ட அந்த மக்களுக்கு கிடைத்த ஓர் அரசியல்வாதியான மன்சூர் இன்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்துகள் வெட்கத்துக்கு இன்னொருமுக்காடையே போட வைத்துள்ளன.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மாபெரிய தவறு ஒன்றை அவர் இழைத்துள்ளார். அழிக்க முடியாத கரும்புள்ளியாக அது அமைந்து விட்டது. இது அவரது கட்சிக்கும் தலைமைக்கும்இன்று தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மன்சூரின் இந்தச் செயற்பாடு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸின் தலைமைத்துவம் சற்று சந்தேகத்துடனேயே ஆராய வேண்டும்.

பௌத்த நாடு என்பதற்காக எங்கும் சிலை வைக்க முடியும் என பாராட்டுடன் அனுமதிப்பத்திரமும் வழங்கும் மன்சூர் எம்.பி இது ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்பதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார் போல் தெரிகிறது.  

சிலை வைப்பதற்கு அவர் அனுமதி வழங்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் 'இது  பௌத்த நாடு. எந்த இடத்திலும் சிலை வைக்க முடியும். அதற்காக அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. வைத்த சிலையை  எந்த ராசாவைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அகற்ற முடியாது அவர்கள் சிலை வைக்கும் போது நம்மால் என்னதான் செய்ய முடியும்' என்று மன்சூர் தெரிவித்ததன் மூலம் அதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பதுதானே பொருள்?

'வைத்த சிலையை  எந்த ராசாவைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அகற்ற முடியாது அவர்கள் சிலை வைக்கும் போது நம்மால் என்னதான் செய்ய முடியும்' என்று மன்சூர் தெரிவித்துள்ளார்.

என்ட ராசாமாரே இதற்குத் தானோ முஸ்லிம் சமுகம் உங்களை எம்.பியாக்கி அமைச்சர்களாக்கியது? சொல்லுங்கள் ராசாமார்களே.. சொல்லுங்கள். 

எதிர்காலத்தில் தங்கத்திலான புத்தர் சிலையை நீங்களே வாங்கிக் கொடுத்து நீங்களாகவே அவர்கள் கூறுமிடங்களில் வைத்து விட்டு  வணங்கி வருவீர்களோ தெரியாது. 

சில வேளைகளில் சிங்கள அரசியல்வாதி ஒருவருக்கு  முஸ்லிம்கள் வாக்களித்து அவரை எம்.பியாக்கி அமைச்சராக்கி இருந்திருப்பின் அந்த சிங்கள அரசியல்வாதி முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்புக்கும் பௌத்த தேரர்களின் முயற்சிக்கு விட்டுக் கொடுத்திருக்கவும் மாட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது

சம்மாந்துறையில் கைத்தொழில் அமைச்சின் ஊடாக கைத்தொழில் பேட்டை ஒன்றை உருவாக்கி பல ஆயிரம் பேருக்கு தொழில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை நிராகரித்த இதே மன்சூர் குறித்த கைத்தொழில் பேட்டைக்கு  இடம்கூட ஒதுக்க வேண்டாமென்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் இன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலை வைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை மிக வேதனையானது.

சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது யாருக்காக? யார் சென்று வணங்குவதற்கு?  ஓர் இந்தக் கேள்விக்குப் பதில் தேட முயன்றால் இனவாதம் கொண்ட சிங்கள அமைச்சரின் விருப்பங்களை நிறைவேற்ற மன்சூர் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியும் குறுக்கீடாக முன்னிற்கலாம்? 

இன்று அம்பாறையிலுள்ள ஒரேயொரு பள்ளிவாசலின்விஸ்தரிப்பு பணிகளை சுதந்திரமாகஇ பகிரங்கமாகமுன்னெடுக்க முடியாத நிலைமை அங்கு காணப்படுகிறது. அம்பாறையில் முஸ்லிம்கள் வீடுகளை காணிகளை கடைகளை கொள்வனவு செய்ய முடியாதபடி கட்புலனாகாத கட்டுப்பாடுகள் அங்குள்ள சிங்கள அரசியல்வாதிகளால் விதிக்கப்பட்டுள்ளன.  ஏன் அங்கு ஒரு வீட்டையோ கடையையோ வாடகைக்கு கூட முஸ்லிம்கள் பெற முடியாதுள்ளது.

இவ்வாறனதொரு நிலையில் அம்பாறையை அண்டிய தமிழ் பேசும் மக்கள் விசேடமாகஇ முஸ்லிம்கள் அதிகம்வாழும் பகுதிக்குள் சிங்களவர்கள்  அத்துமீறி நுழைந்து புத்தர் சிலை வைத்தமையை நியாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இதேவேளை 'சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் அமைச்சர் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்றாரா?'  என கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸீர் அஹமட்  கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல விடயம். அதேவேளைஇ அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் குறித்த சிங்கள அமைச்சருக்கு துணபோகும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பிலும் ஹாபிஸ் நஸீர் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சரான ஹாபிஸ் நஸீரின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தப் பிரதேசத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை அவரது அதிகாரத்தின் பலவீனத்தைக் காட்டுகிறதா  என்பதும் இங்கு சிந்திக்கப்பட வேண்டும்.

மாகாண சபைக்கு உட்பட்ட அதிகாரங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது எனது அனுமதி பெறப்பட்டே எதுவும் நடக்க வேண்டும் என்று அடிக்கடி கூறும் கிழக்கு முதலமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் எதனைக் கூறி முஸ்லிம்களை ஆற்றுப்படுத்தப் போகிறாரோ தெரியவில்லை.

இறுதியாக 7 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மன்சூர் எம்.பி இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை   விளக்க வேண்டும். புத்தர் சிலை வைப்பதற்கு தான் அனுமதி வழங்கியதாக அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறித்து அரசாங்க அதிபரிடம் ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படையாக அவர் விளக்கம் கோர வேண்டும். தான் கூறாத ஒன்றை அரசாங்க அதிபர் கூறியதற்காக பகிரங்க மன்னிப்புக் கோரச் செய்ய வேண்டும். இவையெல்லாம் நடக்குமா என 48 மணிநேரம் பொறுத்திருப்போம். 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
இவையெல்லாம் நடக்குமா என 48 மணிநேரம் பொறுத்திருப்போம்... இவையெல்லாம் நடக்குமா என 48 மணிநேரம் பொறுத்திருப்போம்... Reviewed by Madawala News on 11/06/2016 10:02:00 PM Rating: 5