சிலை வைப்பு விவகாரத்தில் பா.உ. மன்சூர் பலிக்கடாவாக்கப் படுகின்றாரா?



ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான வானளாவிய அதிகாரங்களைக் கொண்டு அவரால் என்ன செய்திருக்க முடியுமோ அதைச் செய்திருக்கிறார். அவ்வளவுதான் அவரால் செய்ய முடியும்.

கிழக்குக்கு கிடைத்திருக்க வேண்டிய கபினட் அமைச்சுப் பதவி மன்சூரிடம் இருந்திருந்தால் அந்த அதிகாரத்தின் பலம், வேறு மாதிரி காய் நகர்த்த அவரைத் தூண்டியிருக்கும் என்பது வெளிப்படை.

கிழக்கின் கபினட் அமைச்சுப் பதவியை நயவஞ்சகமாக சூறையாடி வைத்திருக்கும் ஹகீம் அவர்கள் சிலை வைப்பு பற்றி வாய் திறந்தருளியிருக்கிறாரா? அல்லது ஒருதலைப்பட்சமாக தாக்கப்படும் மன்சூருக்கு ஆதரவாகவாவது ஏதும் கூறியிருக்கிறாரா? மன்சூரின் தலை உருளுவதால், தன் தலை தப்பியதை எண்ணி ஆனந்தப்படுகிறாரா? உண்மை என்னவெனில் மன்சூரை பலிக்கடாவாக்கி தன் தலை உருளுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடமிருந்தும் மன்சூர் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கிழக்கு கிழக்கு என்கிறீர்களே உங்கள் பிரச்சினையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்பது போல் ஹகீம் வாய் மூடி மௌனமாயிருக்கிறார். அப்படி என்றால் கிழக்குக்கு உரித்தான உமது நண்பருக்குக் கொடுத்து முடக்கி வைத்திருக்கும் தேசியப் பட்டியலையும், கபினட் அந்தஸ்து அமைச்சர் பதவியையும், மு.கா தலைமைப் பதவியையும் கிழக்குக்கு கொடுத்து விடுங்கள், எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.


சிலை வைப்பு பற்றி கிழக்கின் எழுச்சியிடம் கேட்கப்படுகிறது. ஆத்திரமடைந்திருக்கும் இளைஞர்களை உசுப்பேற்றி அந்த சிலையை அப்புறப்படுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்? இந்த சிலையை அகற்றினால் கூட கிழக்கு முஸ்லிம்களுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஏனென்றால் இங்கு நாங்கள்தான் பெரும்பான்மை. அந்தப் பெரும்பான்மையைச் சிதைப்பதற்கான முயற்சிதான் இம்மாதிரியான சம்பவங்கள்.

ஆனால் அவ்வாறு சிலை அகற்றப்பட்டால் அதன் பின் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி போன்ற ஏனைய இடங்களில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க நம்மால் முடியுமா?

கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் நாங்கள் எங்களுக்கு பாதகமான விடயங்களைக் கையாள்வதிலும், கிழக்குக்கு வெளியில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களது பாதுகாப்பு பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கின்ற விடயங்கள் அல்ல இவை.

வெளிமாநில முஸ்லிம்களைப் பற்றிச் சிந்தித்து கிழக்கான் தனது பெரும்பான்மையையும்  இழக்கப்போகின்றான். ஆனால் அவர்களுக்கு அதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லை. தமது வியாபாரங்களும் தமது நலன்களும்தான் அவர்கள் தலையில் இருக்கின்றது. அவர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் நாம் கடையடைப்பு செய்ய வேண்டும், குரல் கொடுக்க வேண்டும். நமது பிரச்சினைகளுக்கு அவர்கள் வாயும் திறக்க மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்கும் அளிக்க மாட்டார்கள்.

கிழக்குக்கு எழுச்சி என்றதும் கிழக்கான் பிரதேசவாதம் பேசுகின்றான் என்ற வெளி மாநிலத்தவர் எத்தனை பேர் சிலை வைக்கப்பட்டதை கண்டித்தார்கள்?
எத்தனை பேருக்கு இப்படி ஒரு விடயம் நடந்தது தெரியும்?
எத்தனை பேருக்கு, இந்த சம்பவத்தின் மூலம் கிழக்கில் முஸ்லிகள் இழக்கப்போகும் நிலங்கள் பற்றித் தெரியும்.

எதுவுமே தெரியாது.  ஆனால் எமது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க கிழக்குக்குத் தலைமை வேண்டும் என்று கேட்டால், நாம் பிரதேச வாதிகள். இதில் துயரம் என்னவென்றால் சுயநலன்களுக்காக அவர்களுடன் ஒத்தூதும் கிழக்கின் அடிவருடிகளின் செயல்கள்.

இது வெளி மாநில முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கொண்ட ஒரு பதிவு அல்ல. அப்படியும் இதைக் கொச்சைப்படுத்த முயல்வார்கள். ஆனால் ஹகீம் அவர்கள் எமக்குரித்தான தலைமைப் பதவியையும் கபினட் அமைச்சுப் பதவியையும் சூறையாடி வைத்திருப்பதனால் நாங்கள் இழந்து கொண்டிருக்கும் எமது உரிமைகளினதும் நிலங்களினதும் மீட்புக்கான போராட்டம். எதிர்வரும் காலங்களில் கிழக்கு இதைவிட மோசமான இரண்டு பேரினக் கெடுபிடிகளுக்குள் சிக்கித் தவிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமாயின்  முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்குக்கு  மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் போராடுகின்றோம்.

வெளிமாநில முஸ்லிம் சிந்தனையாளர்களையும் கல்விமான்களையும் புத்தி ஜீவிகளையும் பார்த்து ஒரே ஒரு கேள்வி மாத்திரமே நான் கேட்க விளைகிறேன். பதினாறு வருடங்கள் பிரதேசவாதம் பாராது ஹகீம் அவர்களை தலைவராக்கி, அமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் கிழக்கு மக்கள். ஆனால் இந்தப் பதினாறு வருடங்களில், வடக்கு கிழக்கிற்கு வெளியே எங்காவது ஒரு இடத்திலாவது முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றியீட்டும் நிலையை உருவாக்கியிருக்கின்றாரா?

அவரிடம் ஒப்படைத்த கட்சியை இரண்டாக மூன்றாக உடைத்ததைத் தவிர வேறு என்ன சாதனை செய்திருக்கிறார்? அவரின் தகுதியின்மைதான் நாம் அவரை பதவி விலகச் சொல்வதற்கான காரணம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஹராமான வேலைகளில் ஈடுபட்டு, அதிலிருந்து தப்பிக்க அவர்களிடம் தஞ்சமடைந்து, முஸ்லிம்களின் ஹலால் ஹராம் பிரச்சினையை காபிர்கள் கேவலமாகப் பார்ப்பதற்கான நிலைமையையும் அவரே உருவாக்கினார்.

இது மொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் அவரால் ஏற்பட்ட பாரிய இழப்பு. உங்கள் தலைவர் பச்சை ஹராமான விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றார், அவரை நீங்கள் தலைவராக வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு சாப்பாட்டு விடயத்தில் மட்டும் ஹலால் கேட்குதா என்று அவர்கள் கேட்பதற்கு, என்ன பதில் சொல்வது?

ஒவ்வொரு ஊர்களிலும், பிரித்தாளும் தந்திரத்தால் கட்சிக்குள்ளேயே இரண்டு மூன்று குழுக்களை ஏற்படுத்தி, அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளும்  நிலையை உருவாக்கி, முஸ்லிம் ஒற்றுமைக்குச் சிதை வைத்து, அதில் குளிர் காயும் நயவஞ்சகத்தனத்திற்காக இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று பயப்படுவதுமில்லை.

இந்தச் சிலை வைப்பு விவகாரத்தில் பா. உ மன்சூரை மாட்டிவிட்டு கிழக்கு முஸ்லிம் மக்கள் இன்னுமொரு முஸ்லிம் கிழக்கானை துரோகியாகப் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்.

ஆனால் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு, கிழக்கு மக்கள் வெளி மாநில முஸ்லிம்களைத் துரோகிகளாகப் பார்க்கும் நிலை வருவதற்கு முன், ஹகீம் அவர்களை பதவி விலகுமாறு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மாத்திரம்தான் நீங்களும் நாங்களும் விரும்புகின்ற ஒரே முஸ்லிம் உம்மா எனும் விடயம் நீடித்திருக்க முடியும். ஹகீம் எனும் தனி மனிதனின் பதவிப் பேராசையால் அது சிதைவடைவதை நாம் விரும்பவில்லை.

-அஸ்சஹூர் சேகு இஸ்ஸதீன் -
சிலை வைப்பு விவகாரத்தில் பா.உ. மன்சூர் பலிக்கடாவாக்கப் படுகின்றாரா? சிலை வைப்பு விவகாரத்தில் பா.உ. மன்சூர் பலிக்கடாவாக்கப் படுகின்றாரா? Reviewed by Madawala News on 11/07/2016 01:46:00 PM Rating: 5