Ad Space Available here

Video.. 5,000 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளே சிக்க 50,000 பேர்கொண்ட படை ஈராக் மொசூலை சுற்றி வளைத்தது.இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து ஈராக்கின் வடக்கு நகரான மொசூலை விடுவிக்க முன்னேறும் ஈராக்கிய படைகள் மொசூலின் கிழக்கு புறநகர் பகுதிக்குள் முதல் முறை நுழைந்தன.

எனினும் நகரின் கிழக்கு பகுதியில் உக்கிர மோதல் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதாக ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஈராக்கிய படையினர் நேற்றைய தினம் முன்னேற்றம் கண்டதை அடுத்து அங்கு தொடர்ச்சியாக பீரங்கி சத்தங்கள் கேட்பதாகவும், கறும்புகை வெளிவருவதாகவும் யுத்த களத்திற்கு அருகில் இருந்து ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார். தம்மை நோக்கி எறிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி வேட்டுகள் வருவதாக ஈராக்கிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

மொசூல் நகருக்குள் இருக்கும் ஐ.எஸ் குழுவினர், சரணடைய வேண்டும் அல்லது சாவை எதிர்நோக்க வேண்டி வரும் என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அறிப்பொன்றை விடுத்தார். ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூல் கடந்த 2014 ஜுன் மாதம் தொடக்கம் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

மொசூலுக்கு தெற்காக இருக்கும் ஹய்யாராஹ் விமானத் தளத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய அபதி, அரச படை அனைத்து பக்கங்களில் இருந்தும் நகரை நெருங்குவதாக பிரகடனம் செய்ததோடு “பாம்பின் தலை துண்டிக்கப்படும்” என்றார். இரண்டு வாரமாக நீடிக்கும் மொசூல் யுத்தத்தில் சுமார் 50,000 ஈராக்கிய பாதுகாப்பு படையினர், குர்திஷ் போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா போராளிகள் பங்கேற்றுள்ளனர்.

இதற்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை வான்வழி தாக்குதல்களை நடத்தி உதவுகிறது. மொசூல் ஈராக்கில் ஐ.எஸ் வசமிருக்கும் கடைசி நகரப்பகுதியாகும்.

கிழக்கு மொசூலின் புறநகர் பகுதிகளுக்கு முன்னர் இருக்கும் கடைசி கிராமமான பஸ்வாயாவை ஈராக்கிய படையினர் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றினர். இதனை அடுத்து குக்ஜாலி வர்த்தக வலய பகுதியை நோக்கி படையினர் முன்னேற்றம் கண்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை சூரியோதயத்திற்கு முன்னர் மொசூல் நகருக்குள் நுழையும் நோக்குடனேயே படையினர் முன்னேறிச் சென்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஈராக்கிய படை மொசூல் நகருக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

எவ்வாறாயினும் ஈராக்கிய படை நேற்று மொசூலின் புறநகர் பகுதியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தது. இதன்போது ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சுழல் ஏவுகணை எறிகுண்டு, இயந்திர துப்பாக்கி மற்றும் ஸ்னைப்பர் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐ.எஸ்ஸுக்கு எதிரான அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படையினரின் வழியில் ஒன்பதாவது கவசப் பிரிவினர் முன்னேறி செல்வதோடு இவர்கள் நகர எல்லைக்குள் 5 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. மறுபுரம் குர்திஷ் படையினர் நகரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து முன்னேறி வருவதோடு ஷியா போராளிகள் நகரின் மேற்கு புறநகர் பகுதியை கைப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி மொசூல் படை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னர் நகருக்குள் 1.5 மில்லியன் மக்களுடன் 3,000 தொடக்கம் 5,000 வரையான ஐ.எஸ் போராளிகளும் அவர்களின் தலைவர் பக்தாதியும்  இருந்ததாக நம்பப்படுகிறது. அவர் புதிதாக வெளியிட்ட ஆடியோவில் இருந்து அது உறுதி செய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை நகரில் இருந்து 17,900 க்கும் அதிகமான மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மோதல் மொசூல் நகரை நெருங்கும்போது சுமார் 700,000 மக்கள் வரை வெளியேறும் நிலை இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி கடும் எச்சரிக்கை விடுத்து அரசு தொலைக்காட்சியில் பேசினார்.
அப்போது அவர், 'ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அவர்கள் சரண் அடைய வேண்டும். இல்லையேல் அவர்கள் செத்து மடிய வேண்டும்' என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, 'எல்லா கோணத்திலும் நாம் அவர்களை நெருங்கி விட்டோம். கடவுள் விருப்பப்படி பாம்பின் தலையை நசுக்குவோம்' என்று குறிப்பிட்டார்.
Video.. 5,000 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளே சிக்க 50,000 பேர்கொண்ட படை ஈராக் மொசூலை சுற்றி வளைத்தது. Video.. 5,000 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளே சிக்க 50,000 பேர்கொண்ட படை ஈராக் மொசூலை சுற்றி வளைத்தது. Reviewed by Madawala News on 11/03/2016 09:47:00 AM Rating: 5