Kidny

Kidny

இலங்கை இஸ்லாமியர்களின் கவனத்திற்கு... இனவாதம் பற்றிய சுயவிசாரணைக்கான அழைப்பு!இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான இஸ்லாமிய சமூகம் இன்று மிகவும் நிதானித்து அணுகவேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றது. இலங்கையில் தற்போது பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மத்தியில் இனவாதத் தீயினை மூட்டிக் குளிர்காய ஏதோ ஒரு தரப்பு முயற்சியை முடுக்கிவிட்டிருப்பதனை உணரமுடிகிறது. இதன் தாத்பரியங்களைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தர்களில் ஒரு பகுதியினரும் இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினரும் ஆளுக்காள் பல்வேறுபட்ட பரஸ்பரக் குரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரையை எழுதும் நான் ஓர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இலங்கையன் என்பதனால் எமது சமூகம் பற்றிய சுயவிசாரணையாக இந்தக் கட்டுரையை நமது சகோதரர்களை நோக்கி சமர்ப்பிக்கிறேன்.

நமக்கும் இன்னொரு தரப்பிற்குமிடையிலான பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்கின்ற நிலைமை வரும்போது நாம் நமது தரப்பினைப்பற்றி சுயவிசாரணை செய்வதும் நமது பக்கம் ஏதாவது தவறுகளோ குறைகளோ இருப்பின் அவற்றைச் சரி செய்வதுமே தீர்வுக்கான முதலாவது அடித்தளமாகும். அந்த வகையில் இன்று தோன்றியிருக்கின்ற இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைக்கு சிறந்ததொரு தீர்வை எட்டுவதற்கு நாம் உண்மையிலேயே இதயசுத்தியுடன் ஆசைப்படுசேவாமாக இருந்தால் நாம் நமது தரப்பினைச் சுயவிசாரணைக்கு உட்படுத்துதல் தலையாய கடமையாக இருக்கின்றது. எனவே அதற்கான விடயங்களில் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் இங்கே விளக்க விளைகிறேன்.1915 சிங்கள - முஸ்லிம் கலவரம்
1915ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமே இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாது இனக்கலவரமாகக் கருதப்படுகிறது. இக்கலவரத்தில் சிறுபான்மைச் சமூகமான இஸ்லாமிய சமூகம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. இந்தக் கலவரத்தை பௌத்த சகோதரர்கள் மீதான கசப்புணர்வாக இன்னும் நினைவில் வைத்திருக்கும் நாம் இக் கலவரம் தோற்றம் பெற்றமைக்கான பின்னணியையும் சற்று சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

1915 காலப்பகுதியானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. பிரித்தானியர் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு நூற்றாண்டு நிறைவடைந்த காலகட்டமாகும். இது பிரித்தானியர்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான விடயமாகக் காணப்பட்ட போதிலும் இலங்கையர்களுக்கோ 100 வருடங்களாக பிரித்தானியர்களுக்குக் கீழ் வாழ்ந்திருக்கிறோம் என வருந்தும் விடயமாகவே இருந்தது. எனவே இலங்கையர்கள் தமது எதிர்ப்புணர்வை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், கடையடைப்புக்கள் போன்றவற்றின் மூலம் தெரியப்படுத்தவேண்டும் என்று அன்றைய இலங்கைத் தலைவர்கள் கருதினார்கள். உண்மையிலேயே இது காலணித்துவத்திற்கு எதிரான நியாயமான விடயமே ஆகும். எனவே பிரித்தானியர்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்ட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மையிலேயே இதில் இன, மத, மொழி வேறுபாடு இன்றி இலங்கையர்கள் யாவரும் கலந்துகொண்டிருக்க வேண்டியதொன்றே ஆகும்.

ஆனால் இங்கு எதிர்பாராத வேறொரு துர் நிகழ்வு இடம்பெற்றது. அதாவது பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டக் குழுவானது கண்டி - கம்பளையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவாயலைக் கடந்தவாறு வாத்தியக் கருவிகளை இசைத்து பிரித்தானியர்களுக்கு எதிராகக் குரலெழுப்பிச் சென்றது. அது இஸ்லாமியர்களின் அஸர் தொழுகைக்கான நேரமாக இருந்தது. பிரித்தானியர்களுக்கு எதிராக இலங்கையர்கள் செய்த இந்த எதிர்ப்பு நடவடிக்கையை எமது இஸ்லாமிய சகோதரர்களோ பௌத்தர்கள் தமது தொழுகையைக் குழப்புவதாக கருதிக் கொண்டனர். இதில் ஏற்பட்ட முரண்பாடே சிங்கள - முஸ்லிம் கலவரமாக வெடித்தது.

இந்த விடயத்தை நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. பிரித்தானியர்களின் காலணித்துவத்திற்கு எதிராக இலங்கையர்கள் போராட்ட ஊர்வலம் செல்கிறார்கள் என்றால் அந்த ஊர்வலத்தில் இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களும் கட்டாயம் பங்கெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகளே. ஆனால் இங்கோ அந்த ஊர்வலம் தமது தொழுகையைக் கெடுப்பதற்கான சதி என்று எமது சகோதரர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.  தாமும் தமது தொழுகையை நிறைவேற்றிவிட்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டுமே தவிர எமது தொழுகையை கெடுப்பதற்கான சதி என்று அபிப்பிராயம் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறே ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளிவாயலுக்கு முன்னால் வேண்டுமென்றே ஆர்ப்பரித்துச் செல்வதாக உணர்ந்திருந்தாலும் அந்த ஊர்வலம் கடக்கும் வரையிலும் சற்று பொறுமை காத்திருப்பதே ஓர் உண்மையான இஸ்லாமிய சமூகத்தின் பண்பாக இருந்திருக்கவேண்டும். இஸ்லாமியர்கள் கொண்ட இந்தத் தப்பபிப்பிராயமும் பொறுமையிழந்து செயற்பட்டமையும்தான் சிங்கள - முஸ்லிம் கலவரத்திற்குக் காரணமாகியது. இதன் விளைவு என்னவானது என்பது யாவரும் அறிந்ததே.

நேர்மையில்லாத குற்றச்சாட்டுக்களும் அச்சங்களும்
இலங்கை ஒரு பல்லின தேசம். இங்கு 70.19% பௌத்தர்களும் 12.6% இந்துக்களும் 9.7% இஸ்லாமியர்களும் 7.4% கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். (2011 மதிப்பீடு). 70% இற்கும் மேற்பட்ட பௌத்த சகோதரர்கள் இங்கு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் பௌத்த சகோதரர்களின் ஊடுறுவல் நிகழ்ந்தால் கலாசாரம் பறிபோய்விடும், இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றெல்லாம் இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் அச்சம் தெரிவிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் அதற்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் குரல்கொடுக்கும் போது முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருக்கிறது எனவும் அவதானம் தேவை எனவும் பௌத்த சகோதரர்களில் ஒரு பகுதியினர் பேசுவதை மாத்திரம் எவ்வாறு தவறு என எம்மால் கூற முடியும்?


எம்மிடம் இனவாதம் இல்லையா?

இன்றும் எம்மில் பலர் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் கிரிக்கட் போட்டி இடம்பெறும்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கும் நிலையில் பலர் இருக்கிறார்கள். அதுவும் அப்போட்டி இலங்கையில் உள்ள மைதானத்தில் இடம்பெறும் போதே தங்களது ஆதரவை வெளிப்படையாக பாகிஸ்தான் அணிக்கு காண்பித்து பாகிஸ்தான் கொடியை அசைப்பவர்கள் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

“சிங்க லே” என்று ஸ்டிக்கரை பௌத்த சகோதரர்கள் ஒட்டுவதற்கு முன்னரே சவூதி அரேபியாவின் வாள் சின்னத்துடன் கூடிய அரபு எழுத்தணியை எமது இஸ்லாமிய சகோதரர்கள் வாகனங்களில் ஒட்டத்தொடங்கிவிட்டார்கள் என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறிருக்கும் போது “சிங்க லே” என்ற வாசகம் தாங்கிய ஸ்டிக்கரை கண்டிக்க எமக்கு என்ன அருகதையிருக்கிறது?

நாம் நாட்டில் எங்காவது பயணம் சென்றால் எமது உணவுத் தேவைக்காக இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் உணவகங்களைத் தேடியலைகிறோம். ஆனால் ஏராளமான பௌத்த சகோதரர்கள் எமது இஸ்லாமியர்களில் உணவகங்களில் சாப்பிட்டுச் செல்வதனைக் கண்குளிரக் காண்கிறோம். இவ்விடயத்தை நான் சொல்லும் போது ஹறாம் - ஹலால் பிரச்சினையை உடனே நினைவுபடுத்துவீர்கள். எனவே அந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு உண்மையிலேயே பௌத்த சகோதரர்கள் யாவரும் இனவாதிகளாகவும் இஸ்லாமிய விரோதிகளாகவும் இருந்தால் அவர்கள் நமது சகோதரர்களின் உணவகங்களுக்கு வரமாட்டார்கள் எனும் தகவலைச் சொல்லிக்கொள்கிறேன்.

நாம் ஆடைக் கடைகளுக்குச் செல்வதாக இருந்தாலும் பெரும்பாலும் எமது இஸ்லாமிய சகோதரர்களின் கடைகளுக்கே நாடிச் செல்கின்றோம். ஆனால் பௌத்த சகோதரர்களின் ஆடையங்களில் பன்றி மட்டும் நாய் போன்ற விலங்குகளில் தோலினால் செய்யப்படுகின்ற ஆடைகளல்லவே...? ஆனால் பெரும்பாலான பௌத்த சகோதரர்களோ எமது இஸ்லாமிய சகோதரர்களின் முன்னணி ஆடையகங்களில்தான் அலைமோதிக்கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிவாயல்களும் புத்தர்சிலைகளும்

புத்தர் சிலைகள் வைக்கப்படுதல் எனும் விடயம் இன்று பூதாகரமாகியுள்ளது. புத்தர் சிலைகள் வைக்கப்படும் முயற்சிகள் ஆங்காங்கே நடந்துகொண்டுதானிருக்கின்றன. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதைக்கண்டு எமது இஸ்லாமிய சகோதரர்களில் சிலர் கூச்சலிடுவதிலும் அதை வைத்து எமது இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் அரசியல் செய்வதிலும் மனக் கசப்புக்களும் இனங்களுக்கிடையிலான முறுகல்களும்தான் மிஞ்சப்போகின்றன.

 புத்தர் சிலைகள் இது வரைக்கும் இஸ்லாமியர்களின் பள்ளிவாயல்களுக்குள் கொண்டு வந்து பலவந்தமாக வைக்கப்பட்ட தகவல்கள் எங்கும் கிடையாது. அதுபோலவே எமக்குச் சொந்தமான நிலங்களில் வைத்த தகவல்களும் கிடையாது. அவற்றையும் தாண்டி புத்தர் சிலையை வைத்துவிட்டு அதனை பிறரும் கட்டாயம் வணங்கித்தானாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவுமில்லை. அதுபோல புத்தர் சிலைகளை அடிக்கடி காண நேரிட்டால் மதம் மாற நேரிடும் என்கின்ற நிலையும் இஸ்லாமியர்களிடத்தில் இல்லை. அப்படியிருக்கு இதற்கு ஏன் முரண்பட்டுக் கொள்ளவேண்டும் என்று வினவினால் சில இஸ்லாமிய சகோதரர்கள் சில விளக்கங்களைத் தருகிறார்கள்.

1. பௌத்தர்கள் செறிவாக வாழாத இடத்தில் எதற்கு புத்தர் சிலை? சிலர் இதனை பௌத்தர்கள் இல்லாத இடத்தில் எதற்கு புத்தர் சிலை என்று வினவுகிறார்கள். ஆனால் அவ்வாறு வினவுவது தவறு. முஸ்லிம்கள் இல்லாத மாவட்டம் ஒன்று எவ்வாறு இலங்கையில் இல்லையோ அதுபோல பௌத்தர்கள் இல்லாத மாவட்டமும் இலங்கையில் கிடையாது.

2. புத்தர் சிலையை வைக்கும் நோக்கம் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான முன்னெடுப்பேயாகும் என்று சில இஸ்லாமியர்கள் அஞ்சுகிறார்கள்.

3. இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் இடத்தில் எதற்கு புத்தர் சிலை? இதனால் இஸ்லாமியர்களின் கலாசாரம் கேள்விக்குள்ளாகும் என வருந்துகிறார்கள்.

இவர்களிடம் வினவ என்னிடமும் சில வினாக்கள் உண்டு.

1. முஸ்லிம்கள் செறிவாக வாழாத இடங்களில் நாம் இதுவரையிலும் பள்ளி வாயல்கள் அமைக்கவே இல்லையா? பௌத்தர்களின் புனித பூமி எனப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலேயே எமது பள்ளிவாயல்கள் அமையப்பெற்றிருக்கின்றனவே. இது மாத்திரமன்றி நாம் இன்னுமின்னும் பள்ளிவாயல்களைக் கட்டிக்கொண்டுதானே இருக்கின்றோம்???

2. முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற இடங்களில் புத்தர் சிலை வைப்பது தவறு என்றால் மாற்று மத சகோதரர்களுக்கு அவர்களுடைய மொழியில் அல்குர்ஆன் பிரதிகளை அச்சிட்டு வழங்குவதும் தவறாகுமா?

3. புத்தர் சிலையை வைத்துவிட்டு சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ளுவார்கள் என்றும் எமது தனித்துவத்தையும் கலாசாரத்தையும் இழந்துவிடுவோம் என்றும் பயந்தால் பௌத்த சகோதரர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிறைய இடங்களில் ஆங்காங்கே இஸ்லாமிய சகோதரர்கள் நாடு முழுவதும் வாழ்கிறார்களே...? அந்த இஸ்லாமியர்களால் பௌத்தர்களின் தனித்துவமும் கலாசாரமும் பாதிக்கப்படுகிறதா? அன்றேல் அவ்வாறு அஞ்சி பௌத்த சகோதரர்கள் தம்மிடையே வாழும் இஸ்லாமியர்களை இலங்கையில் எங்காவது வெளியேற்றுகிறார்களா...?

4. எல்லாவற்றையும் விட மேலான அல்லாஹ்வையும் அவனது அளவற்ற சக்தியையும் ஈமான் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒரு சிலையைக் கண்டு இவ்வளவு அஞ்ச வேண்டும்?

சில பௌத்த துறவிகள் கடும்போக்குடன் நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்டு ஒட்டுமொத்த பௌத்த சகோதரர்களையும் சாடுதல் அல்லது அவர்கள் பற்றிய தவறான பதிவுகளை முகப்புத்தகத்தில் பதிவிடுதல் ஓர் இஸ்லாமிய சமூகத்தின் பண்பாகுமா? அதாவது ஒரு பௌத்த துறவியொருத்தர் பெண்னொருத்தருடன் தவறாக இருப்பதைப் போன்றதான காணொளியொன்று அண்மைக் காலமாக எமது இஸ்லாமிய சகோதரர்களின் முகப்புத்தகங்களில் பகிரப்பட்டவண்ணமிருக்கிறது. இது இஸ்லாமியர்களுக்கான முன்மாதிரியாகுமா? இவ்வாறு எதிர்ப்பினை வெளிக்காட்டும் முறை இஸ்லாத்தில் எங்காவது போதிக்கப்பட்டிருக்கிறதா?


எது எமது வீரம்?
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது தற்போதைய நிலையை விடவும் பண்மடங்கு இஸ்லாமிய விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியிருந்தன. ஆனால் அந்தக் காலத்தில் இந்தியாவில் வெளியான சினிமாப் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மகிந்த அரசுக்கு எதிராக அவ்வளவாக சத்தமிடவில்லை. ஏனென்றால் அப்போது வெள்ளைவேன் இருந்தது. தமது இயக்கத்தின் இருப்பிற்கே பங்கமேற்பட்டு விடும் என்ற அச்சமும் இருந்தது. ஆனால் இன்றைய அரசாங்கம் அவ்வாறான சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபடாது என்கிற நம்பிக்கையிருப்பதால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூச்சலிடுவது உண்மையான வீரமாகுமா?

அது மாத்திரமன்றி நாங்கள் சிறுபான்மையல்ல... எனக் கூறி உலகிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையையும் சொல்லி அச்சுறுத்துவது ஒரு நாட்டின் இறைமை பற்றிய அறிவின்மையின் அடையாளமல்லவா?

அல்குர்ஆனைக் கொச்சைப் படுத்தியதாகச் சொல்லி கொச்சையான வார்த்தைகளை அடுத்தவர்கள் மீது பிரயோகிப்பதா இஸ்லாம் எமக்குக் காட்டித்தந்துள்ள வழிமுறை? கோபம் வரும் போது பொறுமை செய்வதல்லவா உண்மையான வீரம் என எமது இஸ்லாம் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அல்குர்ஆனைப் பாதுகாப்பவன் எல்லாம் வல்ல அல்லாஹ் என ஈமான் கொண்டு ஏன் எம்மால் பொறுமை காக்கமுடியவில்லை? தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுமாறு கட்டளையிட்டுள்ள அல்குர்ஆனின் விவகாரத்திற்கே நாம் பொறுமையிழந்து வீதியில் கத்தலாமா?

எனவே இவையனைத்து விடயங்களையும் சீர்தூக்கிச் சிந்தித்து நாம் செயற்படுவோமாக இருந்தால் எம்மத்தியில் பக்குவப்பட்ட ஒரு மனநிலையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்துவான். இதனால் எமது இலங்கைத் திருநாட்டில் யாவருமாய்க் கூடி வாழ்கின்ற நிம்மதியான நிலைமை மலரும், இன்சா அல்லாஹ்!
- ரா.ப.அரூஸ்

இலங்கை இஸ்லாமியர்களின் கவனத்திற்கு... இனவாதம் பற்றிய சுயவிசாரணைக்கான அழைப்பு! இலங்கை இஸ்லாமியர்களின் கவனத்திற்கு... இனவாதம் பற்றிய சுயவிசாரணைக்கான அழைப்பு! Reviewed by Madawala News on 11/22/2016 08:37:00 AM Rating: 5