Ad Space Available here

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குருடர்கள் கண்ட யானை போலாகி விட்டது.


இன்றையதினம் முசலி கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் நிகழ்வில் உரை நிகழ்த்தும்போதே வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்

மன்னார்/முசலி கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் 55வது ஆண்டு நிறைவை முன்னிட்ட இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை வழங்கியமைக்கு பாடசாலை சமூகத்திற்கு எனது நன்றியறிதல்களை முன்வைக்கின்றேன்.

இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்; முஸ்லிம்களினதும் பூர்வீகம் வடக்கு என்பதை நினைவூட்டு, உறுதிப்படுத்தும், அத்தாட்சிப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் வரவேற்கத்தக்கனவே, இந்தப் பாடசாலை, இந்த ஊர் மேலும் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை இவ்விடத்தில் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்த மேடையிலே பல முக்கியஸ்த்தர்கள் இருக்கின்ற காரணத்தினால் வடக்கு முஸ்லிம்கள் சார்ந்து ஒரு சில கருத்துக்களை முன்வைப்பது சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

1990ம் ஆண்டு எவ்வாறு நாம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாத சூழ்நிலையில் இங்கிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டோமோ அதேபோன்ற ஒரு சூழலில் நாம் மீள்குடியேற்றத்திற்கு தயாரில்லாத சூழ்நிலையில் மீள்குடியேற்றம் எம்மை நோக்கி எமக்கு முன்னால் வந்து நின்றது. வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது மிகவும் சாதாரண எளிமையான விடயம் அல்ல, மாறாக அது பல்தொகுதிகளை உள்ளடக்கிய ஒன்றாகும். இதனை எம்மில் பலர் புரிந்துகொள்ளவில்லை, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

யானை பார்த்த குருடர்களின் கதைக்கு நிகரான கதையாகவே வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்று மாறியிருக்கின்றது. ஒரு சிலர் காணிகள் இருந்தால் மீளக்குடியேறலாம் என்கின்றார்கள், இன்னும் சிலர் வீடுகள் இருந்தால் மீள்குடியேறலாம் என்கின்றார்கள், வேறு சிலரோ தொழில் வாய்ப்புகள் இருந்தால் மீளக்குடியேறலாம் என்கின்றார்கள். ஆனால் எவருமே ஒட்டுமொத்தமான மீள்குடியேற்றத் திட்டமிடல் குறித்து காத்திரமான முன்னெடுப்புகள் எதனையும் முன்வைக்கவில்லை

அதைவிடவும் ஆபத்தான விடயம் என்னவென்றால் மீள்குடியேற்றத்தை அரசியல் மயப்படுத்தியிருக்கின்றார்கள், மீள்குடியேற்றத்திற்கு அரசியல்வாதிகளின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியமானதுதான், ஆனால் மீள்குடியேற்றத்தை அரசியல்வாதிகள் தலைமை தாங்குவது பல்வேறு சமூக ரீதியான சிக்கல்களை உருவாக்கி மீள்குடியேற்றத்தை மீள்குடியேற்றத்தை ஒரு நொண்டிக் குதிரையாக மாற்றிவிடும். எனவே இதுவிடயத்தில் நாம் கூடுதல் கவனத்தோடும் நிதானத்தோடும் செயற்படுதல் அவசியமாகும்.

மரிச்சுக்கட்டி மரைக்கார்தீவு காணிப்பிரச்சினை ஒரு நல்ல உதாரணமாகும்

மீள்குடியேற்றம் மக்களால் முன்னெடுக்கப்படவேண்டும், சிவில் சமூகத்தவர்களே அதற்குத் தலைமைத்துவத்தைக் கொடுக்க வேண்டும், மீள்குடியேற்றம் அரசியல் ரீதியாக நடக்கின்றபோது அரசியல் வேறுபாடுகளும், கட்சி வேறுபாடுகளும் இங்கே மறைமுகமாக வேலைசெய்கின்றது, இதனால் மீள்குடியேற்றம் தோல்வியைத் தழுவக்கூடும்

அதைவிடவும் இந்த நாட்டிலே அரசியல் யாப்பு மாற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் முக்கியத்துவப்படுகின்ற ஒரு காலத்திலே நாம் இருக்கின்றோம், இந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள் மௌனமாக இருக்க முடியாது. அமையவிருக்கின்ற அதிகாரப் பகிர்விலே வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வில் வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கு தனியான மாகாண அமைச்சு ஒதுக்கப்படவேண்டும், அத்தோடு வடக்கு முஸ்லிம்களின் இனவிகிதாசாராம் 1990களில் இருந்த விகிதாசாரமே அடிப்படையான விகிதாசாரமாகப் பேணப்படுதல் வேண்டும், அத்தோடு 1990களிலே இடம்பெற்றதைப் போன்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் இனரீதியான பாகுபாட்டு நடவடிக்கைகளும் ஒருபோது இடம்பெறக்கூடாது அதற்கான சட்ட ஏற்பாடுகள் அரசியல் வரைபிலே உள்ளடக்கப்படவேண்டும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் எவ்வாறான உள்நாட்டு சர்வதேச பொறிமுறைகளினூடாக நீதி பெற்றுக் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்ற நீதி வடக்கு முஸ்லிம்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் போன்ற முக்கியமான கருத்துக்களை நாம் முன்வைத்து வருகின்றோம்.

 இது விடயங்களிலும் மக்கள் தெளிவான கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் முன்வைக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
என்றும் குறிப்பிட்டார்

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குருடர்கள் கண்ட யானை போலாகி விட்டது. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குருடர்கள் கண்ட யானை போலாகி விட்டது. Reviewed by Madawala News on 11/30/2016 09:22:00 PM Rating: 5