Ad Space Available here

மஹிந்த ராஜபக்ஷ தனது தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றார்.தான் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றார்.

 நான் அதே ஜனாதிபதியோடு பலமுறை வாக்குவாதப்பட்டவன். மிக மோசமாக அவர் என்னோடு முரண்பட்டுக் கொண்ட நிலவரங்கள் அடிக்கடி நடந்திருக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், மஹியங்கனை - பங்கரகம்மன குடிநீர் வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கூறினார்.


கடந்த சனிக்கிழமை (29) முற்பகல் பங்கரகம்மனையில் நடந்த நிகழ்வில் உரையாற்றும்பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,
இந்த கிராமம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களை 'மரக்கல' என்று அழைப்பதற்கான உண்மையான பின்னணி இந்த கிராமமத்தில் நடந்த ஒரு சம்பவத்தைனூடாக நிகழ்ததென்று வரலாறு சொல்கின்ற விஷயத்தை அடிக்கடி எல்லோரும் மேடைகளில் பேசுகின்றார்கள்.


சிங்கள ராஜதானியில் கடைசி மன்னரைப் பாதுகாத்த ஒரு கிராமம் என்ற காரணத்தினால் இரண்டாவது இராஜசிங்க மன்னரின் பரிசாக வழங்கிய இந்த கிராமத்தவர்கள் இங்கு பாதுகாப்பாக வாழுகின்ற ஒரு சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.


ஆனால், முன்னைய ஆட்சியாளர்கள் தங்களையும் மன்னர்களாக நினைத்துக் கொண்டு செய்த சில அட்டூழியங்களினால் கொஞ்சம் இந்த ஊர் ஆடிப்போய், அசந்து போய் இருந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என்றொரு பீதியும், அச்சமும் முன்பெல்லாம் இல்லாதளவிற்கு வளருகின்ற காலமாக யுத்தம் நிறைந்த சூழலில் நிறைய கெடுபிடிகளைச் சந்தித்த ஒரு கிராமம்.


அந்த கெடுபிடிகளிலே ஒரு சில விஷயங்களை நாங்கள் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்திடம் கொண்டு போய் முறையீடு செய்யுமளவிற்கு பாரதூரமான கேடுபிடிகளும் மஹியங்கனை பிரதேசத்தில் நடந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.
தடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியைக் கொண்டு போய் வீசி இந்த சமூகத்திற்குச் செய்யப்பட்ட அநியாயம் என்பதும், பள்ளிவாசளை இயங்காமல் தடுத்தது என்பதும் பாரதூரமான விடயங்களாகும். அதைவிடவும் கேவலமாக இந்த சமூகத்தின் மீது மிக மோசமானதொரு அவமானத்தை ஏற்படுத்துகின்ற, ஆத்திரத்தைத் தூண்டுகின்ற ஒரு சம்பவம் நடந்த ஒரு பின்னணியிலே, ஏதாவது பங்கரகம்மன பிரதேசத்திலிருந்து தொலைபேசி வந்தால் நாங்கள் ஒரு விதமான நடுக்கத்தோடு, தயக்கத்தோடுதான் தொலைபேசியை கையில் எடுக்க வேண்டியிருந்தது.

இந்த ஊருக்குள் நடந்த அண்மைக்கால நிகழ்வுகள் என்பது மிகவும் வேதனைக்குரியனவாகும்.


இறைவனின் அருளால், எங்களுடைய நல்லாட்சி வந்த பிறகு இவ்வாறு நடக்க மாட்டாது என்று நினைத்தாலும், ஒரு சில சம்பவங்கள் அதற்குப் பிறகும் நடந்தன. அதில் சும்மா தான்தோன்றித்தனமாக எங்களுடைய இளைஞர்கள் ஏதாவது விஷயமறியாமல் செய்த விடயங்கள் விபரீதமாக போய்விட்ட ஒரு நிலவரத்தைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.


முஸ்லிம் சமூகம் இப்படியாக சிதறி வாழுகின்ற போது உச்சகட்ட சகிப்புத் தன்மையை நாங்கள் பேண வேண்டும். இஸ்லாம் என்பது எல்லோரும் வாளால், வீரத்தால் வளர்ந்த மார்க்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இஸ்லாம் வளர்ந்தது வீரம் என்பதை விடவும் சகிப்புத் தன்மையால் தான். ஆரம்ப இஸ்லாமிய சமூகம், ஆரம்பகால ஸஹாபாக்கள் கொடுமைகளை சகித்துக் கொள்ளவில்லையென்றால், இஸ்லாமிய சமூகம் எப்பொழுதோ அழிந்திருக்கும். பாலைவன மணலிலே போட்டு உருட்டிப் புரட்டி செய்த அநியாயங்களையும், கொடுமைகளையும் ஆரம்பகால ஸஹாபாக்கள் மிகுந்த உச்சக்கட்ட பொறுமையோடு ஏக இறைவனின் நாமத்தை துதித்தவர்களாக தாங்கிக் கொண்ட பின்னணியில் தான் இஸ்லாம் வளர்ந்தது.


பெரிய யுத்தங்கலெல்லாம் வெற்றியடைந்து, பெரிய சாம்ராஜ்ஜியங்களை கைப்பற்றியதெல்லாம் பிற்கால வரலாறு. ஆனால் ஆரம்பகால வரலாற்றில் சகிப்புத்தன்மையோடு இந்த சமூகம் பாதுகாக்கப்பட்டது மாத்திரமல்ல, உச்சகட்ட பொறுமையைக் கடைபிடித்தது தான் இஸ்லாத்துடைய வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

எனவே, நாங்கள் எல்லோரும் எந்த நிலையிலும் பொறுமையகை; கடைப்பிடிக்க வேண்டும்.

பெரும்பான்மை சமூகம் கொஞ்சம் பக்குவம் தவறி நடந்து கொள்வது அடிக்கடி நடக்கின்ற ஒரு விடயம்தான். கடந்த காலங்களில் எங்களுக்கிருந்த ஒரு பெரிய பீதி என்னவென்றால், ஆட்சியாளர்கள் அனுசரணையோடு ஆக்கிரமம் நடந்தது. அக்கிரமக்கார்களுக்கு ஆட்சியாளர்கள் அனுசரணையாக இருந்தார்கள் என்பது தான் நாங்கள் எல்லோரும் ஆத்திரமடைவதற்கும், ஆவேசமடைவதற்கும் காரணமாக இருந்தது.


அதற்கு நாங்கள் தகுந்த தருணத்தில், தேர்தல் காலத்தில் எங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பாவித்து ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதில் நாங்கள் எல்லோரும் உச்சகட்ட முயற்சியைச் செய்ததைகூட அண்மையில் முன்னாள் ஜனாதிபதிப் பிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.
'நான் முஸ்லிம்களுக்கு தவறிழைத்து விட்டேன்; நான் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டேன்' என்று அவர் பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றார.; ஏனென்றால், நான் அதே ஜனாதிபதியோடு பலமுறை வாக்குவாதப்பட்டவன். மிக மோசமாக என்னோடு முரண்பட்டுக் கொண்ட நிலவரங்கள் அடிக்கடி ஜனாதிபதியோடு எனக்கு நடந்திருக்கின்றது.


ஆனால், அதே ஜனாதிபதி, நான் அன்று சொன்ன விடயங்களின் யதார்த்தத்தை, உண்மையை இன்று உணர்ந்திருக்கின்றார். அது நல்லதொரு விடயம். இந்த நாட்டிலே பெரும்பான்மை மக்கள் மத்தியில் இன்று அவருக்கிருக்கின்ற ஆதரவுத் தளம் என்பது பெரிதாகப் பாதிக்கப்பவிடவில்லை என்ற காரணத்தினால் இவற்றையெல்லாம் கொஞ்சம் பக்குவமாகத் தான் கையாளவேண்டும்.


கடந்த காலங்களிலே அவர் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்காக நாங்கள் அவருடைய தவறுகளை பற்றி இனியும் கதைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆனால், இப்படியொன்று நடக்கும் போது எப்படி இவற்றை அணுகுவது என்பதிலே பக்குவம் வேண்டும்.


இந்த ஊருக்கு பக்கத்திலுள்ள கிராமத்திற்கு தம்பக்கொல்ல விஹாரை மற்றும் எட்டுவீடு பிரதேசத்திற்கான குடிநீர் இணைப்பினை பெற்றுத் தரவேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுக்கபட்டது.

அண்மையில் மஹியங்கன் ரிதிமாலியத்த எனும் பிரதேசத்தில் 3500 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு பாரிய நீர் விநியோகத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 37 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெரிய சுத்திகரிப்பு நிலையத்தோடு நீர் வழங்கல் தாங்கிகளை கட்டி அதை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.


இந்த ஊருக்கான இணைப்புகளை பெறுவதற்கு நாங்கள் மேலதிகமாக ஏறத்தாழ 45 மில்லியன் ரூபாய் செலவிட்டு இந்த இணைப்புக்களை பெற்றுதருவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.
பதுளை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் நிலவரம் சம்பந்தமாக பெரிய பாடசாலைகள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்ற பாணியிலே தான் முதலமைச்சர் பேசினார்.


இந்த பதுளை மாவட்டத்தில் ஒரு மூலையிலுள்ள பங்கரகம்மன கிராமப் பாடசாலையை முன்னேற்றுவதற்கு ஆளணித் தேவைப்பாடுகளை நிறைவேற்றுகின்ற ஒரு முயற்சியில் மூன்று ஆசிரியர்களை நியமித்திருப்பதாக முதலமைச்சர் சொல்கின்றார். இதில் எத்தனை பேர் திரும்பி போவார்கள் என்பது தெரியாது. இருந்தாலும், அவர்களை திரும்பி போகாத மாதிரி நாங்கள் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும். எதிர்காலங்களில் ஒதுக்கீடுகள் வருகின்ற போது இந்த பாடசாலையின் ஆசிரியர்களை நிரந்தரமாக தங்க வைப்பதற்கு விடுதிகளை அமைத்துக் கொடுத்தாவது அவர்களை வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.


பதுளை மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளைப் பார்க்கின்ற போது யானைப் பசிக்கு சோளப் பொறி போட்ட வேலையைத்தான் நாங்கள் செய்கின்றோம். இப்பொழுது ஆட்சியில் இருக்கின்றோம் என்ற காரணத்தினால் ஓரளவு எங்களால் சாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த ஊருடைய முக்கிய தேவைகளை நிவர்த்திப்பதற்காக ஒத்துழைப்போம் என்றார்.
இந்நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க, ஊவா மாகாண சபை உறுப்பினர் உபாலி சேனாரத்த உட்பட அரசில் பிரமுகர்கள், நீர் வழங்கல் வடிகாமைப்புச் சபையின் தலைவர் பொறியலாளர் கே.ஏ.அன்சார், மஹியங்கனை அமைப்பாளர் மௌலவி எம்.எச். சேகுத்தீன் பீஏ, உயர்பீட உறுப்பினர் பீ.தாஜுதீன் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் உட்பட பொதுமக்கள் அநேகர கலந்து கொண்டனர்.

- ஹபீஸ் Dr -

மஹிந்த ராஜபக்ஷ தனது தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ தனது தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றார். Reviewed by Madawala News on 11/01/2016 04:45:00 PM Rating: 5