Ad Space Available here

தனக்குப் பிடிக்காத சகோதரர்களை, பழிவாங்கும் ஒரு கேடு கெட்ட அவல நிலை. ( அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்)நாடு முழுதும் இனவாதம் துளிர்விட்டு மக்கள் அல்லோல கல்லோலப்ப்பட்டு பெருந்துயரில் சிக்கி இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதில் தான் சமூக வலைதளங்களில் பலரது முழுநாளும் கழிகிறது. இதனால் இவர்கள் உச்சபட்ச சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் அடைகின்றனர். பாலைவனத்தில் இருக்கும் அரபிக்கு கொட்டும் மழையைக் கண்டது போல...

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு இந்நாட்டில் கடும் போக்குவாதிகளால் பேசப்பட்ட இனத்துவேச கருத்துக்கள் எல்லாம் மீண்டும் வாட்ஸ் அப் எங்கும் ஒரு சுற்று வரத் தொடங்கி இருக்கின்றன. அதில் பேசப்படும் ஆடியோ, வீடியோக்களும் எக்காலத்திற்கும் பொருத்தமான முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுகளாய் இருப்பதால் பார்ப்பவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு சேர் செய்கின்றனர்.

இந்நிலையில் இதன் உச்ச கட்டமாகமாக தனக்குப் பிடிக்காத சகோதரர்களை, பழிவாங்கும் ஒரு கேடு கெட்ட அவலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

வர்த்தகரும் சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்  கொண்டவருமான ரிஸ்வான் சஹீட் அவர்கள் பொதுபல சேனாவின் ஏஜென்டாக தொழிற்படுவதாக ஒரு ஃபேக் ஐ.டி பேஸ்புக் எங்கும் ஓலமிட்டுக் கொண்டு இருக்கிறது.

ரிஸ்வான் சஹீட் அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள் ,அவர்களின் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஃபேஸ்புக் எங்கும் அவர் பதிவுகளை அவதானித்து வருபவர்கள் இதை ஏதோ நஸ்ருத்தீன் முல்லா கதைகளில் வரும் ஜோக்கு போல் கடந்து செல்கின்றனர்.

ஆனால் இதில் துரதிஷ்டம் என்ன என்றால் 600 இற்கும் மேற்பட்டோர் அந்த வாந்தியை சேர் செய்து இருக்கின்றனர்.இதை ஒரு வேளை ஞானசார தேரர் பார்த்தால் கை கொட்டிச் சிரிக்க கூடும்..

சட்டமும் ஒழுங்கும் சீர் கெட்டு அளுத்கமை பற்றி எரிந்து ,முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சுடுகாடாக்கப்பட்டு  முஸ்லிம்கள் இந்நாட்டில் சொல்லணா துயரத்திலும் அச்சத்திலும் இருந்த வேளையில், அதிகார வர்க்கத்தின் பெயர்களை சமூக வலைதளங்களில் எழுதுவதற்கு கூட பலரது கைகள்  கூசிய  கடந்த ஆட்சியில்  துணிவுடன் மும் மொழிகளிலும் பதிவுகள் இட்டு தினம் தினம்  பேரினவாதிகளின் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான அன்பரை , தொடர்ந்தும் சமூகத்தின் மீது திணிக்கப்படும் வன் முறைகளுக்கு எதிராக, இஸ்லாமிய போர்வ்வையைப் போர்த்தியபட்டி இருக்கும் சில எட்டப்பர்களதும் புல்லுருவிகளதும்  அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும்  ஒரு மனிதரை  இனவாதியான ஞானசாரவுடன் முடிச்சுப் போட்டிருப்பதன் மூலம் நாம் முதலில் போராட வேண்டியது சமூகத்தில் உள்ள இத்தகைய விஷச் செடிகளுக்கு எதிராகவே என்று புரிகிறது..

அன்பர் ரிஸ்வான் சஹீட் மீது சுமத்தப்பட்டு இருக்கும்  இந்த அபாண்டம் வதந்தியாகவே பிறந்து வதந்தியாகவே வாழ்ந்து வெறும் செய்தியாக செத்துப் போய்விடலாம்..ஆனால் இத்தகைய ஈனச் செயலைச் செய்தவர்கள் இறைவனைப் பயந்து கொள்ளட்டும்..

ஒரு பிரச்னையில் கூட ஒன்றுபடத் தெரியாத சமூகமாய் நாம் இருக்கிறோம்.இங்கே எமக்கு எதிராய் இனவாதிகள் முன்வைக்கும் அனைத்துக் கோஷங்களையும் ஆழ்ந்து அவதானியுங்கள்.."காட்டிக் கொடுப்பும் துரோகமும்,இட்டுக் கட்டலும்  " கூட்டணி அமைத்து கை கட்டி  சிரித்துக் கொண்டு இருப்பது கூடவா நம்மில் பலருக்குப் புரியவில்லை?

அன்பர்களுக்கு ஒரு வேண்டு கோள்,

 ஃபேக் ஐ.டிக்களில் பவனிவரும் தகவல்களை எல்லாம் ஏதோ அரசாங்க வர்த்தமானி செய்திகள் மாதிரி உள்வாங்கி பகிர வேண்டாம்..

ஒரு செய்தியின் உண்மைத்தன்மையைப் பற்றி நன்கு ஆராய்ந்து செயற்படுங்கள்..இந்நாட்டில் 85 வீதமான மக்கள்  சமூக வலைதளங்களைப் பாவிப்பதில்லை..

இங்கே கண்டபடி அடித்துவிடப்படும் வதந்திகளால் அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது.

தனக்குப் பிடிக்காத சகோதரர்களை, பழிவாங்கும் ஒரு கேடு கெட்ட அவல நிலை. ( அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்) தனக்குப் பிடிக்காத சகோதரர்களை, பழிவாங்கும் ஒரு கேடு கெட்ட அவல நிலை. ( அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்) Reviewed by Madawala News on 11/23/2016 04:09:00 PM Rating: 5