Kidny

Kidny

உணர்ச்சிகளின் அடிமைச் சமூகம். (எவருடைய மனதையும் புண்படுத்தவல்ல)அனீஸ் பின் அலி முஹம்மத்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.....

வரலாறுகள் எத்தனையோ சமூகங்களையும் அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளையும் அதன் விளைவாக உருப்பெற்று உருக்குலைந்து போன நாகரிகங்களையும் கண்டுவிட்டது. ஆனால் இஸ்லாம் என்ற இறைவேதமும் குர்ஆன் என்ற இறைவாக்கும் இன்றும் ஒரு துளியேனும் மாறாதிருக்கின்றது. காரணம் அதனை அச்சொட்டாக அடிபிறழாமல்பின்பற்றுபவர்கள் உலகின் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்துதான் இருக்கிறார்கள்..


இன்றைய உலகில் அதிலும் குறிப்பாக இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் சிறுபான்மையாக வாழக்கூடிய முஸ்லிம்களாகிய நாங்கள் மேற்குறிப்பிட்ட அச்சொட்டு முஸ்லிம்களில் உள்ளடங்குகின்றோமா என சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். முழு உலகமும் சமூகமும் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது ஆனால் எமது சிந்தனைகளும் தேடல்களும் நாம் வாழும் வாழ்க்கையும் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது.


இலங்கை உட்பட முழு உலகிலும் இஸ்லாத்திற்கெதிரான வன்முறைகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த கால கட்டத்திலும் கூட இஸ்லாம் பற்றியும் சமூகம் பற்றியும் சிந்தனை செய்யாமல் இருந்தால் முஸ்லிம் என்ற போர்வை போர்த்தி என்ன பயனிருக்கின்றது? தௌஹீத் என்றும் சகோதரத்துவம் என்றும் தீன் என்றும் மார்க்கத்தினை பலபொருள் கொண்ட ஒரு விடயமாக பேசி, பிரச்சாரம் செய்வதில் என்னதான் பிரயோசனமிருக்கின்றது?முழு இஸ்லாமிய உம்மத்தும்ஆபத்தின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் ஜும்ஆ மிம்பரில் இமாம் நகைச்சுவையோடு அவருடைய சொந்த குடும்ப வாழ்வியல் பற்றி பயான் செய்துகொண்டிருக்கிறார். கேட்டால் நகைச்சுவை உணர்வு கலந்த பயான்தான் அனைவருக்கும் பிடிக்கின்றதாம். இதுதான் லேட்டஸ்ட் வேர்சனாம். அருவருப்பாக இருக்கின்றது.


பலஸ்தீனில் அப்பாவி சிறுவர்களும் பெண்களும் என பலர் கொல்லப்படுகின்றனர், பர்மாவில் இஸ்லாமும்  முஸ்லிம்களும் அழித்தெடுக்கப்படுகின்றனர், சிரியா மற்றும் அரபு நாடுகளில் முஸ்லிம் சமூகம் சொல்லெனா துயரங்களை அனுபவிக்கின்றனர், சோமாலியாவில் வறுமையாலும், வறட்சியாலும் தீவிரவாதிளாலும் கொல்லப்படுகின்றனர், சீனாவில் நோன்பு பிடிக்க தடைவிதிக்கப்படுகிரார்கள், காஷ்மீரில் இந்திய இராணுவத்தினாலும் இந்தியா முழுவதும் RSS இனாலும் அநியாயமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றனர்.இவ்வாறு உலகிலுள்ள எத்தனை எத்தனையோ முஸ்லிம்கள் என்னென்னவோ பிரச்சனைகளை எதிர்கொண்டு, தாம் வாழும் நிமிடங்களைக் கூட எண்ணிக் கொண்டு வாழ்கின்றனர்.

 அதனை சிந்திப்பதற்கு நேரமில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுயநலமும் சொகுசு எமது வாழ்க்கையும் கண்ணையும் சிந்தனையையும் மறைத்து விடுகின்றது.


உலக அரங்கில் இஸ்லாத்திற்கு எதிர்மறையான பல சவால்கள் பரவிக்கொண்டிருக்கின்றது. ஆனால் நாமோ முகநூலில் புகைப்படம் போட்டுக் கொண்டும் லைக்குகளை எண்ணிக்கொண்டும் மனநோயாளிகளைப்போல் அலைந்து திரிகின்றோம். மேற்குறிப்பிட்ட நாடுகளில் முஸ்லிம்கள் படும் துன்பங்கள் பற்றியும் பிரச்சினைகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதி பரப்பிக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றோம், தவிர ஒரு நாள் தொழுகையில் சரி அவர்களுக்காக எமது கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்திருக்கின்றதா?


ஒரு அமைச்சரின் மகனோ அல்லது ஓர் உஸ்தாதின் மனைவியோ இறந்தால் கவலை தெரிவிக்கவும் கண்ணீர் சிந்தவும் கூட்டம்சேரும் சமூகம் ஏன் முழு சமூகத்தின் மீதும் காட்டுவதில்லை? இறப்பு என்பது அவர் சார்ந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான் ஆனால் ஒரு கணவன் இறந்தால் மனைவிக்கே அதி கூடியது மூன்று நாட்களே துக்கம் அனுஷ்டிக்க முடியும். என்றிருக்க பலர் இறந்தவர்களுக்காக வாரம் மாதம் கழித்தும் கூட கட்டுரை எழுதுவதும் கண்ணீர்க் கவிதை எழுதுவதுமாக இருக்கின்றனர். அளுத்கம, பேருவளை கலவரத்தின் போது சில சகோதரர்கள் கொல்லப்பட்டார்கள், காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், பொலநறுவை அழுஞ்சிப்பபொத்தனை கிராமத்தில் பல உயிர்கள் கொல்லப்பட்டன இவ்வாறு இலங்கை வரலாற்றில் அநியாமான உயிரிழப்புகள் எண்ணிலங்கா வண்ணம் இடம்பெற்றுள்ளன. இவர்களுடைய குடும்பத்திற்காக எம்மால் செய்யப்பட்ட பரிகாரம், உதவிகள் என்ன?


இலங்கையில் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஏழைக் குடும்பத் தலைவன் தனது குடும்ப வறுமையைப் போக்க வெளிநாட்டிற்கு வேலைவைப்பிற்காக செல்கிறான். அவன் வேலைத்தளத்தில் ஒரு விபத்தில் இறந்து விடுகின்றான். இந்த செய்தி எமதுகாதுகளுக்கு எட்டுகின்றது. ஆனால் நாம் அந்தச் செய்தியை வலது காதினால் வாங்கி இடது காதினால் விட்டு விடுகின்றோம். காரணம்  பிரபலங்களின் குடும்பங்களிற்கு மாத்திரமே நாம் எமது உணர்ச்சி எல்லைக்குள் இடம் ஒதுக்கியுள்ளோம். இவ்வாறு வரலாற்றிலும் இன்றைய வாழ்விலும் எமைச்சுற்றி எத்தனையோ உயிரிழப்புகள் நடந்தாலும் அது வேடிக்கையும் வெறும் அன்றாட காட்சியுமாகவுமே நாம் பழக்கிக் கொண்டோம்.


எங்கே செல்கிறது சமூகம்? உள்நாட்டில் நாம் அறிந்தவர் தெரிந்தவர்பிரபலங்கள் இறந்தால்தான் இறப்பா? பிற முஸ்லிம்களது, சகோதரர்களது, குடுமபங்களிற்கு உயிர்களுக்கு இவ்வுலகில் நாம் வழங்கும் மதிப்பு இவ்வளவுதானா? பிறநாடுகளில் வாழ்ந்தால் அவர்கள் எமது உறவுகளில்லையா? இஸ்லாம் காட்டித் தந்த சகோதரத்துவம் இதுதானா? எமது சிந்தனை ஊற்றுகளுக்கு பிறப்பு எப்போது?


முகநூலிலும் முட்டு சந்திகளிலும் மூலை முடுக்குகளிலும் வீரர்களாக இருந்து என்ன அபயனைக் கண்டோம்? ஒரு நாள் தொழுகையின் பிற்பாடு எமது சமூகத்தின் நிலைப்பாட்டையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எண்ணி பிரார்த்தனை செய்திருக்கின்றோமா? தாய், தந்தை, கணவன், மனைவி, மற்றும் பிள்ளைகளையும் தாண்டி இஸ்லாமிய சமூகமெனும் அழகிய அருட்கொடையை இறைவன் எமக்கு அன்பளிப்பாக்கியுள்ளான். இந்த அன்பளிப்பு இன்று சின்னாபின்மாகின்றது. இதனை சற்றுமே அறியாத சமூகமாக எமது சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது.


ஒரு பிரச்சினை பூகம்பமாக உருவெடுத்த பின்புதான் எமது சமூகத்திலுள்ள சிலருக்கு அப்பிரச்சினை பற்றிய தேடலே ஆரம்பிக்கின்றது. தேடலில் அரைகுறை அறிவுடன் உடனே உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு முகநூலில் அறிக்கை விடுவது முகநூல் படத்தை மாற்றுவது  போன்ற விடயங்களை செய்கிறார்கள். ஓரிருவரின் உந்துதலினால் உணர்ச்சிவசபட்டு போராட்டம் செய்கிறார்கள். அக்கணமே அதனை மறந்து விடுகிறார்கள்.  பிரச்சினை முடிந்து விட்டது என அறிந்ததும் பழைய குருடி கதவ திறடி என்று மறுபடியும் பழைய நிலைக்கு உள்வாங்கப்படுகிறார்கள். அப்பச்சோடா இட்ட உணவு போல பெரிதாகி புஷ்வானமாகிரார்கள்.


பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான இந்த வாழ்க்கையில் என்னதான் இருக்கின்றது? பிரச்சினை ஆயிரம் ஆயிரம் எம்மையும் எமது சமூகத்தையும் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அருகிலுள்ளவைகளை மாத்திரம் ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் தூரநோக்கோடு ஆராய்ந்து அறிவுக்கு வேலை கொடுபோம்.


சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மாத்திரம் வெடித்துப் பொங்கும் கேவலமான சமூகமாக இறைவன் எம்மை மாற்றமலிருக்கவும் நாம் மாறாதிருக்கவும்துணை செய்ய வேண்டும்.


உணர்ச்சிகளின் அடிமைச் சமூகம். (எவருடைய மனதையும் புண்படுத்தவல்ல) உணர்ச்சிகளின் அடிமைச் சமூகம்.  (எவருடைய மனதையும் புண்படுத்தவல்ல) Reviewed by Madawala News on 11/08/2016 12:27:00 PM Rating: 5