Ad Space Available here

மொசூலைக் காக்க இறுதி மூச்சு வரை போராடுங்கள்! ஐ.எஸ். உறுப்பினர்களுக்கு தலைவர் அல்-பாக்தாதி உத்தரவு.


இராக் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள மொசூல் நகரைப் பாதுகாக்க, இறுதி மூச்சுள்ளவரை போரிடும்படி இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு அதன் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி உத்தரவிட்டுள்ளார்.

வியாழக்கிழமை ஒலி வடிவில் வெளியிட்டப்பட்ட அவரது உரையில், இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

அந்த ஒலிப்பதிவு உண்மையானது என்று உறுதி செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அவரது உரை பகிங்கிரமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதுடன், அவர் உயிருடன் இருப்பதும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசூலை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, மிகவும் அரிதான வகையில் அந்த நகரிலுள்ள ஒரு மசூதியில் அல்-பாக்தாதி தோன்றி உரையாற்றினார்.


அப்போதுதான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் "இஸ்லாமியப் பேரரசை' நிறுவியிருப்பதாக அறிவித்து உலகை அதிர்ச்சியடைய வைத்தார்.
மேலும், தன்னை "இஸ்லாமியப் பேரரசராக'ப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
மிகவும் புனிதத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது, உலக அளவில் மத அடிப்படைவாதிகளை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின்பால் ஈர்த்தது என்று கூறப்படுகிறது.


இதையடுத்து, ஐ.எஸ். அமைப்பு உலகையே அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்தது.

எனினும், அமெரிக்கக் கூட்டுப் படையின் உதவியுடன் இராக் ராணுவமும், ரஷியாவின் உதவியுடன் சிரியா அதிபர் அல்-அஸாதின் ராணுவமும் மேற்கொண்ட வரும் கடுமையான முயற்சிகளால், அல்-பாக்தாதி அறிவித்த "இஸ்லாமியப் பேரரசு' கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது.


தற்போது இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசூலும், சிரியாவில் ரக்காவும்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களாகும்.

இந்தச் சூழலில், மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த மாதம் 17-ஆம் தேதி தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கிய இராக் ராணுவம், அந்த நகரை சுற்றி வளைத்து முன்னேறி வருகிறது.

மொசூலின் கிழக்கு எல்லைக் கிராமமான கோக்ஜாலிவரை சென்று இராக் படைகள் நிலை கொண்டுள்ளன.

இதையடுத்து, மொசூல் நகரமும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், ஐ.எஸ். பயங்கரவாதத் தலைவர் அல்-பாக்தாதியின் ஒலிவடிவ உரை வெளியிடப்பட்டுள்ளது.

மொசூல் நகரைக் கைப்பற்றிய கையோடு பொது உரையாற்றிய அல்-பாக்தாதி, தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த நகரம் வீழும் நிலையில் மீண்டும் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உரையில் அல்-பாக்தாதி கூறியுள்ளதாவது: மொசூல் நகரைவிட்டு ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.

அவமானகரமாக தப்பியோடுவதைவிட, இறுதி மூச்சுவரை வீரமுடன் போராடுவதுதான் மிகவும் எளிமையான செயலாகும்.

இதைத்தான் இறைவனும், அவரது தூதரும் நமக்குப் போதித்துள்ளார்கள் என்று தனது உரையில் அல்-பாக்தாதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஷியா பிரிவினருக்கு எதிராகவும், தங்களுக்கு எதிராக செயல்படும் சன்னி குழுவினருக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்ட அவர், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளை எதிர்த்துப் போரிடுமாறு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

சிரியா, இராக் நாடுகளுக்குச் சென்று போரிட இயலாதவர்கள், லிபியா சென்று ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்காகப் போரிடலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

எதிரிகளுடன் போரிடும்போது, உயிரச்சம், ஈவிரக்கம் ஆகியவை எதுவுமின்றி இறுதிவரை ஆக்ரோஷமாகச் சண்டையிடும் வழக்கமுடைய ஐ.எஸ். பயங்கரவாதிகள், இராக்கின் ஃபலூஜாவிலிருந்தும், சிரியாவின் தபீக் நகரிலிருந்தும் வழக்கத்துக்கு மாறாக பின்வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில், அல்-பாக்தாதியின் இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது, மொசூல் நகரை இராக் ராணுவம் கைப்பற்றுவதை மேலும் சிக்கலாக்கக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மொசூல் நகரில் 3,000 முதல் 5,000 வரையிலான ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மொசூலைக் காக்க இறுதி மூச்சு வரை போராடுங்கள்! ஐ.எஸ். உறுப்பினர்களுக்கு தலைவர் அல்-பாக்தாதி உத்தரவு. மொசூலைக் காக்க இறுதி மூச்சு வரை போராடுங்கள்! ஐ.எஸ். உறுப்பினர்களுக்கு தலைவர் அல்-பாக்தாதி உத்தரவு. Reviewed by Madawala News on 11/04/2016 02:32:00 PM Rating: 5