Ad Space Available here

கேள்விக் குறியாகவும், விழிப்புக் குறியாகவும் மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டம்


எஸ். ஸஜாத் முஹம்மத் (இஸ்லாஹி)
 
முஸ்லிம் சமூக அரங்கில் இன்று  பேசு பொருளாக முஸ்லிம் தனியார் சட்டம் மாறியுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சரவையின் உப குழு நியமனமும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜீன் லம்பெர்ட்  தலைமையிலான ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் வெளிப்பாடும் இதன் மீதான கதையாடலின் கனதியை அதிகரித்துள்ளது.
 
கடந்த மாதம்  25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ முஸ்லிம் விவாக  மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.அவர்  சமர்பித்த அந்த பத்திரத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. 

அந்த சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.
 
முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை மற்றும் அச்சட்டத்தின் கீழ் காணப்படும் வேறு காரணங்கள் தொடர்பில் காணப்படும் சட்ட விதப்புரைகள், இலங்கை அங்கம் வகிக்கும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஒழுக்கங்களுடன் ஒத்திசையாத காரணத்தினால், குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்பது இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பரிசீலனை மேற்கொண்டு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது  என கடந்த 26 ஆம் திகதி வெளியாகிய அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை சமூகம் மீதான அடக்குமுறைகள், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் உள்ள பலவீனம் போன்ற காரங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு வழங்கியிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நீக்கிக் கொண்டது. 
 
ஜரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து பரந்து வாழ்கின்ற தமிழ் டயஸ் போராக்களினால் அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நீக்கிக் கொண்டதாக தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
சிறுபான்பை சமூகங்களின் கணிசமான வாக்கு வங்கிகளை தமதாக்கி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெருவதற்கான முயற்சியில் மும்முரமாக  ஈடுபட்டு வருகின்றது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர்  மலிக் சமரவிக்ரம ஆகியோர்  இந்த சலுகையை மீளப் பெறுவதற்காக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்தவன்னமுள்ளனர்.
 
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதாக இருந்தால் இலங்கை  58 நிபந்தனைகளுக்கு தலைசாய்க்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பலமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி சர்வதேச தரத்திலான சட்டமொன்றை இலங்கை அமுல்படுத்த வேண்டும், சர்­வ­தேச சம­வா­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும், சட்டத்தின் ஆட்சியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன  போன்ற பல விடயங்களும் உள்ளடங்கியுள்ளன.
 
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் ஆய்வு அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்படுமா? பாராளுமன்றக் குழுவின் ஆய்வு அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்படுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆரம்ப சமிக்ஞைகள் தென்படும் என கடந்த செவ்வாய் கிழமை(01) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டொங் லாய் மார்க் தெரிவித்தார். மேலும் மே மாதம் 12ஆம் திகதி இச்சலுகையை வழங்குவதா? இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
 
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு 27 சர்வதேச சமவாயங்களை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு சர்வதேச தரத்திலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், பெண்களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழுவுக்குத் தலைமைவகித்த ஜீன் லம்பெர்ட் இச் சந்திப்பின் போது கூறியுள்ளார்
 
இவர்களின் நிபந்தனைகளில் உள்ளடங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திலான சட்டம் கொண்டுவருதல், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருதல் போன்ற நிபந்தனைகள் இலங்கை முஸ்லிம் சமூகம் மத்தியில் அரசாங்கம் மீதான பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் யுனெஸ்கோ வாக்கெடுப்பின் போது இலங்கை விலகிக் கொண்டமையை, எல்லை நிர்ணயம், அரசியலமைப்பு சீர்தி;;ருத்தம், வடக்கு, கிழங்கு இணைப்பு போன்ற விடயங்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும், ஐரோப்பிய நாடுகளையும் முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்கு வங்கியின் ஊடாக சிம்மாசனத்தில் அமர்ந்த நல்லாட்சி அரசாங்கம் திருப்திப்படுத்த முயற்சிப்பதாக முஸ்லிம் சமூம் அங்கலாய்க்கின்றது.
 
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்றை கொண்டுவருதல் என்பதை செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னராக அமெரிக்காவால் சோடிக்கப்பட்ட முஸ்லிம் தீவிரவாதம் என்ற தோரனையில் இஸ்லாமிய செயற்பாட்டாலர்களை கண்கானிக்கும் மற்றும் முடக்கும் கயிங்கரியமாக முஸ்லிம்கள் பார்க்;கின்றனர். 

இந்த சட்டத்தின் ஊடாக அமெரிக்கா, பிரித்தானிய போன்ற ஜரோப்பிய நாடுகளிலும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் அரங்கேறுகின்ற இஸ்லாமியவாதிகள் மீதான அடக்;கு முறைகள், படுகொலை மற்றும் சித்திரவதைகள் பேரினவாத அரசியலை நோக்கி நகர்கின்ற இலங்கையிலும் அரங்கேறும் என அச்சம் கொள்கின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் சீனா போன்ற கம்யூனிச நாடுகளையும் பேரினவாத வெறியர்களையும் திருப்திப்படுத்த முயற்சித்ததைப் போல் நல்லாட்சி அரசாங்கம் சியோனிச, முதலாலித்துவ மேற்கு சதிகார சக்திகளின் ஆதிக்கப் பொறிக்குள் சிக்கிக் கொண்டதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை பெரும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இசைவாக  அந்த ஒன்றியத்தை திருப்திப்படுத்துவதற்காக இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புக்களை அனுமதிக்க முடியாது. இந்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவால் மாத்திரம் அதனை மேற்கொள்ள முடியாது. இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தில் பான்டித்தியம் பெற்ற உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், தேசிய ஷூரா சபை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா போன்றவற்றுடன்  கலந்தாலோசனை செய்து அல்குர்ஆன்,  சுன்னா அடிப்படைகளுக்கு மாற்றமில்லாத வகையில் இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
 
இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துடன் இசைவாகும் விதத்தில் தற்போது இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்திலும் தற்போது நடைமுறையில் உள்ள கண்டிச் சிங்களச் சட்டத்திலும், யாழ் தேசவழமைச் சட்டத்திலும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.
 
1986ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்தில் கண்டிச் சிங்களச் சட்டம், யாழ் தேசவழமைச் சட்டம் முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் ஒரு குழுவை அன்றைய அரசாங்கம் நியமித்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கூட அமைச்சர் மிலிந்த மொரகொடவால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டார். 
 
இறை கட்டளைகளின் அடிப்படையில் உள்ள இஸ்லாமிய சட்டங்களில் உள்நாட்டு சூழலுக்கு ஏற்றவாரு சில சிறிய மாற்றங்களை மேற்கொள்வதென்பது மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய தேவை இருக்கின்றது. அந்த மாற்றங்கள் வெளி நபர்களால் மேற்கொள்ளப்பட முடியாது. சர்வதேச அமைப்புகளினதும் நிகழ்ச்சி நிரலின் தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் செய்வதை இடமளிக்க முடியாது. 
 
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் வெளிப்பாடும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வெளிப்பாடும் முன்னுக்கு முறனான நிலைப்பாட்டில் உள்ளது.
 
கடந்த மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஷ ராஜபக்ஷவின் யோசனையில் “இலங்கை அங்கம் வகிக்கும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஒழுக்கங்களுடன் ஒத்திசையாத காரணத்தினால் திருத்தங்கள் செய்யவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதில் இலங்கை அங்கம் வகிக்கும் சில சர்வதேச சமவாயங்கள்” என்பதில் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் உள்ளடங்குவதாகவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலு­கையை மீள வழங்குவதாக இருந்தால் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் அர­சாங்கம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்­பிய ஒன்­றி­யம் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் கூட ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலு­கையை பெற வேண்­டு­மானால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும் என நிபந்­தனை விதித்­துள்­ள­தாக வெளி­யான செய்­தி­ போலியானது. சர்வதேச சம­வா­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்­பதே எமது நிபந்­த­னை­யாகும். தனியார் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றாமல் விடு­வதும் உங்­க­ளது உள்­ளக விடயமாகும். அதில் நாம் ஒரு ­போதும் தலை­யி­ட­மாட்டோம் என இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் மார்க் தெரி­வித்திருந்தார்.
இந்நிலையில் கண்டிச் சிங்களச் சட்டம், யாழ் தேச வழமைச் சட்டம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதற்கு தழிழ், கண்டி சிங்களத் தலைமைகள் உடன்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டிச் சிங்களச் சட்டம் கண்டியின் சம்பிரதாயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியர்கள் காலத்தில் இதன் தேவை அதிகமாக உணரப்பட்டது. இன்று இதனை பெரிதாக கண்டி சிங்களவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.  யாழ் தேச வழமைச் சட்டத்தைப் பொருத்த வரையில் அதில் காணி உரிமை ஆண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் தனது கணவனை இழந்த பெண்களுக்கு, ஆண் வாரிசு இல்லாத குடும்பத்திற்கும் காணிகளை வழங்குவதில் சிக்கல் நிலையுள்ளது. இதனால் இதனை கைவிட்டு பொதுசட்டத்தின் கீழ் வருவதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. 

முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அதை மாற்றியமைப்பதற்கு முஸ்லிம் சமூகம் உடன்படாது என்பதற்காக இதில் உள்ள ஷரத்துக்களை மேற்கின் தேவைகளுக்கு ஏற்றாற் போல் மாற்றியமைக்க அரசாங்கம் முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லிம் தனியார் சட்டம் பரிபோகும் நிலையில் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகம் வரும் பட்சத்தில் காழி நீதிமன்றம், வக்பு சபை மற்றும் திருமண பதிவார் போன்ற பிரத்தியேக ஏற்பாடுகள் இல்லாமல் செய்யப்படும் சூழ்நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்படும்.

தமது மார்க்கத்தின் அடிப்படைகளுக்கு அடிப்படையில் செயற்படும் சுதந்திரம் காலனித்துவ ஆட்சிக்கும் முன்பிருந்தே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இஸ்லாமிய சட்டமும் தனிநபர் சட்டமும் நம் நாட்டில் ஒரே சட்டக் கோவையில் இடம் பெற்றுள்ளமையானது, இன பன்முகத்தன்மை இலங்கையின் அரசியல் சாசனம் மூலமே ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளமைக்கான சிறந்த ஒரு உதாரணமாகும். அத்துடன் பல இனங்கள் சம உரிமையுடன் வாழும் ஒரு தேசம் என்ற வகையில் நாம் பெருமைப்படக் கூடிய ஒரு விடயமாகவுள்ளது. இதை பலவீனப்படுத்துவதானது அரசாங்கம் தற்சமயம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளையும் பாரிய விதத்தில் பின்னடையச் செய்துவிடும்.

முஸ்லிம் தனியர் சட்டத்தை பொருத்தவரை கைகூலி, மதா, காழி நீதிபதி நியமனம், திருமணப் பதிவாளர், சாட்சிகள் போன்றவற்றில் குறைபாடுகள் மாற்றப்பட்டு திருத்தியமைக்க வேண்டும் என்பன முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.

காழி நீதிபதிகள் தொடர்பாக தற்போது உள்ள தனியார் சட்டத்தில் தெளிவு இன்மையினால் பல குலறுபடிகள் ஆங்காங்கே இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சில காழி நீதிபதிகளின் அறிவீனப் பொருத்தப்பாடின்மையின் காரணமாக பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே இது தொடர்பாக தெளிவான திருத்தங்கள் தேவையுடையதாகவுள்ளது. 

காதி நீதிபதிகளின் வயது, அவர்களின் தகைமை, ஷரிஆ பின்புலம், நியமன முறை, அதிகாரம், ஒழுக்கக் கோவை, மேல் விசாரனை, சம்பளம், காழி நீதிமன்றங்களுக்கான இடம், அதற்குரிய அமைச்சு, பெண் காதி நியமனம் போன்றவை மாற்றியமைக்க வேண்டும் என வாதப் பிரதி வாதங்கள் நிகழ்ந்த வன்னமுள்ளன. பெண்கள் தொடர்பான வழக்கு விசாரனையின் போது அவர்கள் சில விடயங்களை ஆண் காழியிடம் தெளிவாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்திற் கொண்டு பெண்களை பிரத்தியேகமாக விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் இயங்கும் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பான தேசிய ஷுரா சபையினதும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடும் முஸ்லிம் தனியார் சட்டம் இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தில் பான்டித்தியம் பெற்ற உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் போன்றவற்றுடன்  கலந்தாலோசனை செய்து திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதே ஆகும். எனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உப குழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மேற்குறிப்பிட்டவர்களின் வகிபாகம் இன்றியமையாதது ஆகும்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப்  தலைமையிலான குழுவின் அறிக்கை எதிர்வரும் 6 ஆம் திகதி வெளிவர இருப்பதாகவும் இந்த யோசனைகள் இம் மாதம் இறுதியில் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த குழு 20 இற்கும் மேற்பட்ட அமர்வுகளை நடத்தியுள்ளது. இந்த குழுவின் அறிக்கையில் இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் 17 திருத்தங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறிக்கையை குறித்த குழு வெளியிட்ட பின்னர் அதில் திருத்தங்கள் இருந்தால் செய்த பின்னர் தான் அதை அரசாங்கத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பது முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

2015 ஆண்டு ஜனவரி மாதம் பேரினவாத்தையும் சர்வதிகாரத்தையும் வாக்குப் பெட்டிக்குள் புதைத்து நாட்டில் நல்லாட்சி உருவாக்குவதற்காக அர்பணிப்புடன் செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை அமெரிக்க, இஸ்ரேல், மேற்குலக ஆசைகளுக்கும் எலும்புகளுக்கும் அரசாங்கம் பலியாக்கக் கூடாது.

கேள்விக் குறியாகவும், விழிப்புக் குறியாகவும் மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் கேள்விக் குறியாகவும், விழிப்புக் குறியாகவும் மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் Reviewed by Madawala News on 11/04/2016 05:57:00 PM Rating: 5